கா. பாரதி, திருவாரூர்.
கேள்வி.
தங்கைக்கு ஐந்து வருடம் முன்பு திருமணம் நடந்தது. கணவன் வீட்டில் பல இன்னல்களின் காரணங்களால் இருவரும் பிரிந்து தற்சமயம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. தங்கைக்கு திருமணத்தின்போது சித்தப்பா சரியான ஜோதிடரிடம் சென்று பொருத்தம் பார்க்கவில்லை. மாப்பிள்ளை குடும்பத்தையும் விசாரிக்காமல் ஒரு குடிகாரனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். தங்கையின் வாழ்க்கை இவ்வாறு சீரழிந்ததற்கு காரணம் எனது சித்தப்பாதானா? நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு எப்போது முடியும்? மறு திருமணம் வேண்டாம் என்று தங்கை கூறுகிறாள். அவளுக்கு இன்னொரு திருமணம் நடக்குமா? மறு திருமணம் விரைவாக நடக்க தகுந்த பரிகாரங்கள் சொல்லுங்கள்.
பதில்.
(கன்னி லக்னம், மீன ராசி. 3ல் புத, சனி, கேது. 4ல் சூரி, குரு, 6ல் சுக், செவ், 7ல் சந், 9ல் ராகு, 31-12-1984 அதிகாலை 12-58 திருவாரூர்)
பெற்ற தகப்பனே பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு அலைபாயும் இந்தக் காலத்தில் உங்கள் சித்தப்பா தங்கைக்கு முயற்சி எடுத்து திருமணம் செய்து வைத்ததை பாராட்டாவிட்டாலும் குறை சொல்லாமல் இருப்பது நல்லது. நடப்பவை அனைத்தும் நம்முடைய கர்மா என்பதுதான் உண்மை. உங்கள் சித்தப்பாவிற்கு பதில் நீங்களே மாப்பிள்ளை பார்த்து வைத்திருந்தாலும் தங்கையின் ஜாதகப்படி திருமண வாழ்க்கை சிக்கலாகித்தான் இருக்கும்.
தங்கைக்கு தற்போது சுக்கிர தசை நடந்து கொண்டிருக்கிறது சுக்கிரன் வம்பு, வழக்குகளைக் குறிக்கும் ஆறாமிடத்தில், கன்னி லக்னத்திற்கு கடுமையான கெடுபலன்களைத் தரக்கூடிய அஷ்டமாதிபதியான செவ்வாயுடன் இணைந்து, செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் சனியுடன் பரிவர்த்தனையால் அமைப்பில் இருக்கிறார்.
கன்னி லக்னத்திற்கு செவ்வாய் சம்பந்தப்படும் அனைத்துக் கிரகங்களும் நன்மைகளைச் செய்யாது. ஒரு ஜாதகத்தின் பலவீனங்களைச் சரி செய்து வழி நடத்தக்கூடிய லக்னாதிபதி புதனும் செவ்வாயின் வீட்டில், சனியுடன் இணைந்து, ராகு-கேதுக்களுடன் சேர்ந்து மிகவும் பலவீனமாக இருக்கிறார் தற்போது நடந்து வரும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உங்கள் தங்கையும் ஒருவகையில் காரணமாக இருப்பார்.
பதினொன்றாம் அதிபதி ஏழாம் வீட்டில் இருப்பதால், தங்கைக்கு இரண்டாவது திருமண அமைப்பு இருக்கிறது. அஷ்டமச்சனி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தங்கைக்கு திருமணம் செய்ததும் தவறு. தங்கை கணவருக்கும் இதேபோன்ற சனி அமைப்புகள் இருக்கலாம்.
அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வழக்கு தங்கைக்கு சாதகமாக முடியும். 2020 ஆம் வருடம் மறு திருமணம் உண்டு. இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக இருக்கும். ஒரு முறை ஸ்ரீகாளஹஸ்தி சென்று வரவும். லக்னாதிபதி புதன் வலுவிழந்து இருப்பதால், புதனுக்குரிய முறையான பரிகாரங்களை செய்து கொள்ளவும். அவற்றை ஏற்கனவே மாலைமலரில் தெளிவாக எழுதி இருக்கிறேன்.
(18.12.2018 மாலை மலரில் வெளிவந்தது)