adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
உயிரையே வைத்திருக்கும் கணவருடன் சேருவேனா? – குருஜியின் விளக்கம்.
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888

காயத்ரி, புதுச்சேரி.

கேள்வி.

2016-ல் நடந்த திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையே தடுமாறிப் போனது. என் கணவருக்கு இது இரண்டாவது திருமணம். ஆரம்பத்தில் கணவர் அன்பாகத்தான் நடந்து கொண்டார். சில பிரச்சினைகளால் உன் பெற்றோரை ஒரேடியாக தலைமுழுகிவிட்டு வா என்று கூறினார். என் மேல் உயிரையே வைத்திருக்கும் என் பெற்றோரையும் விட முடியாமல், என்னைப் புரிந்து கொள்ளாத என் கணவரையும் நிரந்தரமாக பிரிய முடியாமல் தர்மசங்கடத்துடன் அம்மா வீட்டில் வாழ்ந்து வருகிறேன். என் மாமனாரும் என் பெற்றோர்களை பலவகையில் அவமானப்படுத்தி மனச் சித்திரவதைக்கு ஆளாக்கி வருகிறார். இங்குள்ள ஜோதிடர்கள், ஜாதகப்படி உன் கணவன் ஆண்மை இல்லாதவன், எத்தனை மனைவி வந்தாலும் அவனிடம் நீடிக்க முடியாது, விவாகரத்து செய்து விட்டு வேறு திருமணம் செய்து கொள் என்று சொல்கிறார்கள். வேறு சிலர் கணவன் நல்லவன்தான், அவன் பெற்றோர்தான் சரியில்லை, பெற்றோரை பிரிந்து வந்து உன்னுடன் வாழ்ந்தால் மட்டுமே உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று சொல்கிறார்கள். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. கணவர் மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன். எப்போது என்னை அவர் புரிந்து கொள்வார்?. மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த நான் எந்த முடிவும் எடுக்கத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன். என் எதிர்காலம் என்ன ஆகும்? நானும் கணவரும் இணைவோமா? அல்லது என் கணவருக்கு வேறு திருமணம் உள்ளதா? தாங்கள்தான் ஒரு தந்தை போல எனக்கு நல்ல வழிகாட்ட வேண்டும்.

பதில்.

(கணவர் 7-4-1982 மாலை 6-30 அரூர், மனைவி 23-2-1991 மாலை 4-5 புதுச்சேரி)

மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்து வைத்த பிறகு, பெற்றவர்கள் அதே நாளில் ஒரு கிணற்றில் குதித்து விட்டால் இதுபோன்ற பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடும். இது உன்னைப் பெற்றவர்களுக்கும் உன் மாமனார் மாமியாருக்கும் பொருந்தும்.

இங்கே தொண்ணூறு சதவிகித விவாகரத்து வழக்குகள் மாமனார், மாமியாரிடம் பிரச்சினை என்று வருவதுதான். ஒரு குழந்தை போதும் என்று சந்ததியைச் சுருக்கிக் கொண்டு விட்ட சமூகத்தில், வயதான காலத்தில் மகன், மகள் ஆதரவு தேவை என்று நினைப்பதால்தான் இது போன்ற பிரச்சனைகள் வருகிறது. இதனை நீங்கள் திருமணத்திற்கு முன்பே பேசியிருக்க வேண்டும். ஏற்கனவே நீ இரண்டாவது மனைவி எனும் போது எதற்காக முதல் திருமணம் சரியில்லாமல் போனது என்பதையும் விசாரித்திருக்க வேண்டும். அந்த திருமணத்திலும் உன்னுடைய மாமனார், மாமியார் தலையீடு இருந்திருக்கலாம்.

உண்மை என்பது இரண்டு பக்கத்திலும் இருக்கும். ஒருவரிடம் உன் பக்கத்து நியாயத்தை முறையிடும்போது உன் தரப்பு தவறுகளை மறைத்துத்தான் பேசுவாய். மாமனார் உன்னுடைய பெற்றோரை அவமானப்படுத்துகிறார் என்றால் உன் பெற்றோர் என்ன செய்தார்கள் என்று கேள்வி நிச்சயமாக வரும். நெருப்பில்லாமல் எதுவும் புகையாது அல்லவா?

வாழ்க்கை என்பது சகலத்தையும் அனுசரித்து, அனைவரையும் அரவணைத்து செல்வதுதான். இங்கே எல்லோரும் நமக்குத் தேவை. நீ உன்னுடைய பெற்றோரைப் பிரிய முடியாது எனும்போது உன் கணவனும் அவனது தாய், தந்தையை பிரிய முடியாதல்லவா?

இன்றைய அவசர உலகில் எவருமே அடுத்தவருடைய மனநிலையை புரிந்து கொள்வதில்லை. என் காரியம் ஆனால் போதும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம். பிரச்சனை என்று வந்து விட்ட பிறகு, அதிலிருந்து விலகி நின்று ஒரு மூன்றாவது மனிதனைப் போல் சிந்தித்து, தன்மீது இதில் எங்கே குற்றம் இருக்கிறது என்று யோசித்து, தவறு இருந்தால் மாற்றிக் கொள்பவனே நல்ல வாழ்க்கை வாழ்கிறான். இதைவிட வேறு எதுவும் என்னால் சொல்ல முடியாது.

கணவர் மீது உயிரையே வைத்திருக்கிறேன் என்று எனக்கு லெட்டரில் எழுதினால் மட்டும் போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். கணவரின் மீது உயிரை வைத்திருக்கும் பெண், ஒரு இரவு கூட பெற்றவர்களின் வீட்டில் இருக்க மாட்டாள். வார்த்தை செயலாகும்போது வருத்தங்கள் வருவதில்லை. இங்கே எல்லோரும் போலியாகவே வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம்.

உனக்கு கடக லக்னம், மிதுன ராசியாகி, லக்னத்திற்கு ஏழில் சனி, ராகு ஆறு டிகிரிக்குள் இணைந்து அதுவே ராசிக்கு எட்டு என்றான ஜாதகம். சனி, ராகு இருவருக்கும் குருவின் பார்வை இருக்கிறது. தற்போது நடக்கும் குருதசை, புதன் புக்தியின் நாதர்கள் சஷ்டாஷ்டகமாக இருப்பதால் உன் பிரச்சனை இப்போது தீர்வதற்கு வாய்ப்பில்லை. வரும் 2020-ம் ஆண்டு முதல் உன்னுடைய மிதுன ராசிக்கு அஷ்டமச்சனி ஆரம்பிக்க போவதும் நல்ல நிலை அல்ல.

கணவரின் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், சனி இணைந்து ஏழாமிடத்தைப் பார்ப்பதும், லக்னாதிபதி சுபத்துவமின்றி இருப்பதும் நல்ல திருமண வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை. அடுத்த வருடம் ஜூலைக்குப் பிறகு உன் கணவருக்கு ஆரம்பிக்க இருக்கும் குருதசை, புதன் புத்தியில் நீசமான லக்னாதிபதி புதனும்,  குருவும் ஆறு, எட்டாக இருப்பதால் உங்கள் இருவருக்கும் இன்னும் மூன்று வருடங்களுக்கு நல்ல பலன் எதுவும் சொல்வதற்கு இல்லை. முப்பது வயதிற்கு பிறகே வாழ்க்கையில் நிம்மதியாக,  நன்றாக இருக்கும் ஜாதகம் உன்னுடையது. அதுவரை பலவிதமான உலக அனுபவங்களை நீ கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். பொறுமையாக இரு. வாழ்த்துக்கள்.

(11.12.2018 மாலை மலரில் வெளிவந்தது)

2 thoughts on “உயிரையே வைத்திருக்கும் கணவருடன் சேருவேனா? – குருஜியின் விளக்கம்.

  1. ஐயா
    தங்களின் வார்த்தைகள் அனைத்தும் ஒரு சகோதரன் சகோதரிக்கு கூறுவது போல் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *