adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 217 (11.12.18)
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888

. முனியாண்டி, சென்னை.

கேள்வி.

என் மகள் கடந்த 5 வருடங்களாக மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார். சேலை வியாபாரம் செய்து பல லட்சம் கடனை உறவினர்களிடம் வாங்கி கடும் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறாள். தொலைத்துவிட்ட சந்தோஷத்தை அவள் மீண்டும் பெறுவாளா என்பதை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பதில்.

(கடக லக்னம், விருச்சிக ராசி, 1ல் செவ், 2ல் குரு, சனி, ராகு, 4ல் சூரி, புத, சுக், 5ல் சந், 8ல் கேது, 24-10-1979 அதிகாலை 12-24 திருப்புவனம்)

சனியின் வீடாகிய எட்டாமிடத்தில், சனியின் பார்வையுடன், சனியோடு இணைந்த ராகுவின் சதய நட்சத்திரத்தில் அமர்ந்த கேதுவின் தசையில் உங்கள் மகள் சொந்தத் தொழில் செய்தது தவறு. கடக லக்னத்திற்கு சனியின் தொடர்புகளைப் பெறும் எந்தக் கிரகமும் நன்மைகளைச் செய்யாது. அப்படி செய்யவேண்டுமாயின் சனி பூரண சுபத்துவம் அடைந்திருக்க வேண்டும். மகள் ஜாதகப்படி முன்பு நடந்த கேதுவின் தசையில் அஷ்டமாதிபதி சனியின் பலன்தான் நடந்திருக்கும்.

கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு விருச்சிக ராசிக்காரரும் வயதுக்கேற்ற வகையில் நன்றாக இல்லை என்பதை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் பேரனுக்கும் மேஷராசியாகி கடந்த ஆண்டுகளில் அஷ்டமச்சனி நடந்து கொண்டிருந்தது. விருச்சிகராசியும், மேஷராசியும் ஒரே குடும்பத்தில் இருந்தவர்கள் 2015, 16, 17 ஆம் ஆண்டுகளில் நிம்மதியாக இல்லை.

தற்போது மகளுக்கு சுக்கிர தசை ஆரம்பித்து விட்டபடியால், சுயபுத்தி முடிந்த 2020-ம் ஆண்டிற்குப் பிறகு, கடன்கள் அடைவதற்கான வழி பிறக்கும். சுக்கிரன் குருவின் நட்சத்திரத்தில் திக்பலமாக அமர்ந்து, பத்தாம் வீட்டுடன் தொடர்பு கொள்வதால், சேலை வியாபாரத்திலேயே கடனை அடைக்க முடியும். கஷ்டங்கள் முடியும் காலம் வந்துவிட்டதால் பரிகாரம் எதுவும் தேவையில்லை.

பாண்டியன், மதுரை.

கேள்வி

தங்களுடைய எழுத்துக்களைப் படித்த பிறகுதான் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை வந்தது. ஆபரேஷன் செய்வதற்கு பயன்படும் கவுன், கேப் போன்றவற்றை சிறிய அளவில் தயாரித்து விற்கிறேன். எனக்கு இப்போது வெளிநாட்டு ஆர்டர் கிடைப்பது போல் இருக்கிறது. அதைச் செய்வதற்கு எனக்கு ஒரு இடம் வேண்டும். எனவே லோன் போட்டு ஒரு இடத்தை வாங்கி அதில் தொழில் செய்யலாம் என்று கடனுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். தங்களைப் படித்துப், படித்து ஜோதிடம் பற்றிய சிறிய அறிவு வந்திருப்பதால், 6-க்குடைய குருதசையில் கடன் வாங்கி கட்டிடம் எழுப்பலாமா என்று யோசனையாக இருக்கிறது. என்னுடைய ஜோதிட ஞானம் குறைவானது என்பதால் குருவாகிய நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும். கடன் வாங்கலாமா?

பதில்.

(துலாம் லக்னம், கன்னி ராசி. 1ல் புத, 2ல் சனி, 6ல் ராகு, 7ல் குரு, 11ல் செவ், 12ல் சூரி, சந், சுக், கேது. 24-9-1987 காலை 8-42 மதுரை)

எல்லா விதிகளுக்கும் விதிவிலக்குகள் இருக்கின்றன. விதியை விட விதி விலக்குகளை அதிகம் புரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி எழுதுகிறேன்.

துலாம் லக்னத்திற்கு குருவின்  தசை கடன்களைக் கொடுக்கக் கூடியதுதான். அது தொழிலை வளர்ப்பதற்காக வாங்கப்படும் சுபக் கடனா அல்லது ஊரைவிட்டு ஓட வைக்கும் விரைய அசுபக் கடனா என்பது குரு இருக்கும் நிலையையும், ஆறாம் இடத்தின் சுப, அசுப நிலையையும் பொருத்தது.

உங்கள் விஷயத்தில் குரு ஆறாம் அதிபதியாக இருந்தாலும் எந்த வகையிலும் ஆறாமிடத்தோடு தொடர்பு கொள்ளவில்லை மேலும் ஆறாமிடத்தின் தீய பலன்களைக் குறைக்கின்ற விதமாக அங்கே ராகு அமர்ந்து செவ்வாயின் பார்வையும் அவருக்கு இருக்கிறது. இந்த அமைப்பு கடன் வாங்கினாலும் அது உங்களுக்கு தீருகின்ற சுபக்கடனாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

துலாம் லக்னத்திற்கு 12ம் வீட்டில் சுக்கிரன் இருப்பது நீச நிலையாக இருக்காது. 12-மிடம் சுக்கிரனுக்கு சிறப்பாக சொல்லப்படுவதால், பனிரெண்டில் சுக்கிரன் நீசமாகவே இருந்தாலும் துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் நன்றாகவே இருப்பார்கள். உங்கள் விஷயத்தில் புதனும், சுக்கிரனும் பரிவர்த்தனையாகி இருப்பதால் லக்னாதிபதி லக்னத்தில் அமரும் நிலை இருக்கிறது. ஆறாம் அதிபதியை விட லக்னாதிபதி வலுவாக இருந்தாலே கடனை அடைத்து விட முடியும்.

நடப்பு தசாநாதன் குரு, 12-ம் இடத்தில் இருக்கும் வளர்பிறை சந்திரன், சுக்கிரனுடன் இணைந்த சுபமான கன்யா கேதுவின் சாரத்தில் இருப்பதால், உங்களுக்கு குரு தசையில் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நன்மை கிடைக்க வேண்டும் என்பது விதி. அதற்கான அஸ்திவாரம் தற்போது உங்களுக்கு கிடைக்கும். தைரியமாக நம்பி கடன் வாங்கலாம். கடனை அடைப்பதற்கு கொஞ்ச நாள் கஷ்டப்பட வேண்டியதாகத்தான் இருக்கும்.

வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்காவிட்டால் முன்னேற்றம் இல்லை. தைரியமாக கடன் வாங்குங்கள். அடுத்து வரும் சனி, புதன், கேது, சுக்கிர புக்திக்குள் உங்களால் முழுக்கடனையும் அடைத்து தொழிலையும் பெரிய அளவில் நிர்ணயித்துக் கொள்ள முடியும். குருவிற்கு அடுத்து வர இருக்கும் சனிதசை, யோகாதிபதியான திக்பலம் பெற்ற புதனின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்காலம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.

ஜெ. சுரேஷ்குமார், மாதவரம்.

கேள்வி.

இரண்டு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் சேர்த்துக்கொண்டு அவருக்காகவே வாழ்ந்து வருகிறேன். எலக்ட்ரிக்கல், பிளம்பிங் வேலை செய்கிறேன். தற்போது வேலையும், வருமானமும் சரியாக இல்லை. இதுவரை நன்றாக உடனிருந்தவர்கள் தற்போது என்னை கேவலப்படுத்துகிறார்கள். நான் இப்படி இருப்பதால் ஏற்கனவே அம்மா, அப்பா, தம்பி, சொந்தம் என எல்லோரும் புறக்கணித்து விட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு நல்ல காலம் பிறக்குமா?

பதில்.

(கும்ப லக்னம், மேஷ ராசி, 2ல் குரு, 3ல் சந், கேது. 5ல் செவ், 6ல் சனி, 8ல் சுக், 9ல் புத, ராகு. 10ல் சூரி, 18-11-1975 மதியம் 1-20 சென்னை)

ஒருவருக்கு சுக்கிரன் பலவீனமாகி, கடுமையான பாபத்துவமும் அடைந்து, சுக்கிர தசையோ, சுக்கிரனின் வீடுகளில் அமர்ந்த கிரகங்களின் தசா, புக்தியோ நடக்குமாயின் நீங்கள் இப்போது சொன்ன முறையற்ற, நீசத் தொடர்புகளின் மூலம் அவமானமும். கேவலமும் வரும்.

உங்களுக்கு கும்ப லக்னமாகி, எட்டில் சுக்கிரன் மறைந்து நீசம் பெற்ற நிலையில். சனி, செவ்வாய் இருவரும் சுக்கிரனைப் பார்க்கிறார்கள். குருவின் பார்வையும்  சுக்கிரனுக்கு இருக்கிறது. சரியான இளமைப் பருவத்தில் உங்களுக்கு பாபத்துவ  சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த ராகுதசை நடந்ததால் நீங்கள் மேலே சொன்ன, இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு நீசப் பெண்மணியின் தொடர்பு கிடைத்து விட்டது.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக உங்கள் ராசிக்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருந்ததால் இந்தப் பெண்ணின் தொடர்பு மூலமாக மிகுந்த அவமானங்கள் ஏற்பட்டிருக்கும். நீச சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த ராகுவின் தசை வரும் ஜூலை மாதத்தோடு முடிவடைவதால், உங்களுக்கு மனமாற்றம் ஏற்படும். அந்தப் பெண்ணை விட்டு விலகுவதற்கான சூழ்நிலைகளும் அமையும்.

ராகு தசை முடிந்த பிறகு, அடுத்த வருடம் ஜூலைக்கு பிறகு உங்களால் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருக்க முடியாது. எப்படி இந்தத் தொடர்பு வந்ததோ அப்படியே அது விலகும். அடுத்து ஆரம்பிக்க இருக்கும் தசாநாதன் குரு, குடும்பாதிபதியாகி ஆட்சி பெற்ற நிலையில் அமர்ந்து, ஐந்திற்குடைய புதனின் ரேவதி நட்சத்திரத்தில் இருப்பதால், உங்களுக்கு முறையான குடும்பம் அமையும். பெற்றோர்களின் பேச்சை கேட்கவும். குருதசை முதல் நிரந்தர வருமானம் வரும்.

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 217 (11.12.18)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *