ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கேள்வி – பதில்கள் (4-12-18)
எம். எம். யாசின், மதுரை-625301.
கேள்வி.
ஜோதிடம் பற்றிய அடிப்படை அறிவை கற்றுக்கொடுத்த குருவிற்கு வணக்கம். என் தந்தை கிறிஸ்துவ சமூகத்தையும், தாயார் இஸ்லாமிய சமூகத்தையும் சார்ந்தவர்கள். இருவரும் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். 2002-ம் ஆண்டிற்கு முன் கிறிஸ்தவ மதத்திலும், பின் இஸ்லாமிய மதத்திலும் வாழ்ந்து வருகிறோம். ஏழாம் இடம், ஏழுக்குடையவனோடு ராகு-கேது தொடர்பு கொள்ளும்போது கலப்புத் திருமணம் என ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். எனக்கும் கலப்புத் திருமணம்தானா? என்னுடைய ஜாதகத்தில் கல்விக்காரகன் புதன், பாதகாதிபதியாகவும், மாரக, கேந்திராதிபதி யாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் அமைந்து உச்சம் பெற்றிருக்கிறார். இது எனக்கு கல்வி, வேலை, தொழில் விஷயங்களில் என்னவ பலனைத் தரும்? தற்போது கல்வி முழுமையடையாமல் தடங்கலாகி வருகிறது. முடியுமா? விரைவில் வேலை கிடைக்குமா? வெளிநாட்டுக்கு செல்ல முடியுமா? கடந்த ஐந்து வருடமாக வீடு, வாசல் அனைத்தையும் இழந்து வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். எதிர்காலம் குறித்து கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதில்.
(தனுசு லக்னம், விருச்சிக ராசி. 1ல் குரு, 4ல் சனி, கேது, 7ல் சுக், செவ், 9ல் சூரி, 10ல் புத, ராகு, 12ல் சந், 23-8-1996 மதியம் 3-15 மதுரை)
இன்னும் எத்தனை வாரங்களுக்கு விருச்சிக ராசிக்காரர்களின் வேதனைகள் தொடரும் என்று தெரியவில்லை. வரும் கடிதங்களில் பாதி கேட்டை நட்சத்திரமாகவே இருந்தால் எதைத் தேர்ந்தெடுப்பது, எதை விடுவது என்றே புரிவதில்லை.
உங்கள் ஜாதகப்படி ஏழாமிடத்தோடு சனி, செவ்வாய், ராகு-கேதுக்கள் தொடர்பு கொள்வதால் உங்களுக்கும் பெற்றோர்களைப் போலவே கலப்புத் திருமணம்தான் அமையும். சுக்கிர தசை நடப்பதால் அது நீங்களே இஷ்டப்பட்டு தேடிக்கொள்ளும் அமைப்பாகவும் இருக்கும். தனுசு லக்னத்திற்கு சுக்கிர தசை நல்ல பலன்களைத் தராது என்றாலும், உங்கள் ஜாதகப்படி சுக்கிரன் குருவின் பார்வையுடன், குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்து, செவ்வாயுடன் இணைந்திருப்பதால் கெடுபலன்களை தராமல் நல்லபலன்களை தர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார். எனவே சுக்கிர தசை உங்களுக்கு ஓரளவிற்கு நன்மைகளையே தரும்.
சூரிய தசை ஆரம்பித்த பிறகு வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் வலுவாக இருந்தால் மட்டுமே அல்லது பாதக வீட்டோடு தொடர்பு கொள்ளும் நிலையில் மட்டுமே கடுமையான விஷயங்களை செய்வார். மேலும் பாதகாதிபதிக்கு செவ்வாய், சனியின் தொடர்புகள் கிடைத்து விட்டால் பாதகம் இருக்காது. உங்கள் ஜாதகப்படி புதன் பாதக, மாரக வேலைகளைச் செய்யாமல், பத்துக்குடையவனாகவே பலன் தருவார்.
கடுமையான ஏழரைச்சனி நடப்பதால் படிப்பை முடிக்க முடியாமல் இருக்கிறீர்கள். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு படிப்பு முழுமையாகும். வரும் ராகு புத்தியில் வெளிநாட்டிற்கு செல்ல முடியும். ராசிக்கு பத்தில் சூரியன் குரு பார்வையுடன் வலுவாக இருப்பதால் அரசு மற்றும் அரசு சார்ந்த துறையில் வேலை செய்வீர்கள். லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி மற்றும் திக்பலமாக இருப்பதால் எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
ஜெ. ஸ்ரீதர், திருச்சுழி.
கேள்வி.
கடந்தமுறை தங்கையின் திருமண வாழ்வு எப்போது அமையும் என்று கேட்டிருந்தேன். 2018 பிப்ரவரிக்குள் திருமண வாழ்வு, நல்ல குடும்பத்தில் வாழ்க்கை என்று பதில் கூறி இருந்தீர்கள். தங்கள் பதில் அப்படியே நிஜமாகியுள்ளது. ஜனவரி மாதம் திருமணம் நிறைவாகி மகிழ்ச்சியாக இருக்கிறாள். தங்கைக்கு வழிகாட்டிய நீங்கள் எனக்கும் வழிகாட்ட வேண்டுகிறேன். 30 வயதாகியும் இன்றுவரை கஷ்டமான சூழ்நிலையில்தான் இருக்கிறேன். தங்கையின் திருமணச் செலவு, கடன் அதிகமாக உள்ளது. வயதான தாய், தந்தை என்னை நம்பித்தான் இருக்கிறார்கள். கடுமையான மன அழுத்தம், மன உளைச்சலினால் பைத்தியம் பிடித்ததுபோல் இருக்கிறது. தற்கொலை எண்ணமும் தலைதூக்குகிறது. பல இடங்களில் வேலை பார்த்து விட்டேன். எதிலும் நிரந்தரமில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. எனக்கே தெரியாமல் விட்டுவிடுகிறேன். வெற்றியை அடைய மனம் ஏங்கி போராடுகிறது. ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுப்பது போல உணர்கிறேன். தாங்கள்தான் எனக்கு நம்பிக்கை, தைரியம் மற்றும் பரிகாரம் சொல்ல பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பதில்
(மிதுன லக்னம், மகரராசி. 1ல் சுக், 3ல் சூரி, புத, கேது, 7ல் சனி, 8ல் சந், 9ல் ராகு, 10ல் செவ், 12ல் குரு, 25-8-1988 அதிகாலை 2-50 தூத்துக்குடி)
ஜாதகப்படி உங்களுக்கு தற்போது சுபத்துவமற்ற ராகுதசை நடந்து வருகிறது. பாபத்துவ ராகுதசையும், ஏழரைச்சனியும் இணைந்து நடக்கும்போது நல்ல பலன்கள் நடப்பதில்லை. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று என்னைத் தடுத்துக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் சொல்வதும் இதைத்தான். அவ்வப்போது தற்கொலை எண்ணத்தை தருபவரும் இந்த ராகுதான்.
மிதுன லக்னத்திற்கு ராகு யோகர் என்றாலும் அவர் சுபத்துவமாக இருக்கின்ற நிலையில்தான் நன்மைகளைச் செய்வார். இங்கே ராகு ராசியில் எவ்விதமான சுபத்தொடர்புகளும் இல்லாமல், சனியின் பார்வையில் இருக்கிறார். அதேநேரத்தில் அம்சத்தில் குரு, சுக்ர இணைவுடன் இருப்பது தசையின் பிற்பகுதியில் நன்மைகளைத் தரும். இன்னும் மூன்று வருடங்களுக்கு உங்களுக்கு நல்லது நடக்க தடை இருக்கிறது.
ஏழுக்குடையவன் பனிரெண்டில் மறைந்து, ஏழில் சனி அமர்ந்து, ராசிக்கு இரண்டில் செவ்வாய் இருப்பதால் 33 வயதிற்குப் பிறகு ராகுதசை, சுக்கிர புக்தியில் திருமணம் நடைபெறும். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும். ஒருமுறை ஸ்ரீகாளஹஸ்தி போய் வாருங்கள். புதனை வலுப்படுத்தும் பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். அடுத்தடுத்து யோகதசைகள் வருவதால் வாழ்க்கையின் பிற்பகுதியில் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
ப. ரமேஷ் கிருஷ்ணன், சேலம்.
கேள்வி.
ஜோதிட சிம்மத்திற்கு வணக்கம். அட்டமச்சனி முடிந்தும் இன்னும் ஆசை நிறைவேறவில்லை. எச்1பி விசாவிற்கு விண்ணப்பித்தேன். அது தேர்ந்தெடுக்கப்படவில்லை. லாட்டரியில் தற்போது கனடாவிற்கு முயற்சிக்கிறேன். கனவு நிறைவேறுமா? திருமணம் எப்போது? எப்படிப்பட்ட மனைவி அமைவார்? உச்சனை உச்சன் பார்க்கக்கூடாது என்பீர்கள். எனது ஜாதகத்தில் உச்சம் பெற்ற குரு உச்ச சுக்கிரனைப் பார்க்கிறார். இதனால் தாம்பத்தியத்தில் ஆர்வக்குறைவு ஏற்படுமா அல்லது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதில் தடை இருக்குமா? மனைவிக்கு உண்மையாக நீடித்த, திகட்ட திகட்ட தாம்பத்தியத்துடன் வாழ வேண்டுமென்று ஆசை. தயவுசெய்து விளக்கும்படி பாதம் பணிகிறேன்.
பதில்
(மீனலக்னம், மேஷராசி. 1ல் சுக், 2ல் சந், 3ல் செவ், 5ல் குரு,கேது, 11ல் சனி, ராகு, 12ல் சூரி, புத, 21-2-1991 காலை 8-15 ஆத்தூர்,சேலம்)
உச்சனை உச்சன் பார்த்தால் நீசபலன் என்று நம்முடைய மூலநூல்கள் சொல்லுகின்றன. அதேநேரத்தில் நேரடியாக ஒரு கிரகம் நீசமடைவதற்கும், இதுபோன்ற மாறுபட்ட உச்ச வக்கிரம் போன்ற சூழ்நிலைகளில் வலு இழப்பதற்கும் உள்ள வித்தியாசங்களை நுணுக்கமாக புரிந்து கொள்ள வேண்டும்.
சுக்கிரன் நேரடியாக நீசமடைந்து சனி, செவ்வாய், ராகு போன்ற பாபக் கிரகங்களுடன் இணைந்து, அதிகமாக பலவீனமாக இருக்கும் நிலைகளில் மட்டுமே ஒருவருக்கு தாம்பத்திய சுக ஆர்வம் இல்லாமல் அல்லது இயலாமை இருக்கும். இதுபோன்ற அமைப்பிலும் சில நிலைகளில் சுக்கிரன் இருக்கும் இடங்களைப் பொருத்து அவர் முரண்பாடான காமநாட்டம் உள்ளவராகவும் இருப்பார்.
உன்னுடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சனாகி, அதன் பிறகு லக்னாதிபதியான உச்சகிரகத்தின் பார்வையைப் பெற்றிருப்பதால் தாம்பத்ய சுக குறைபாடுகளைக் கொடுக்க மாட்டார். அதைவிட மேலாக ஒரு கிரகம் அதனுடைய நல்ல, கெட்ட பலன்களை முழுமையாக கொடுக்க வேண்டுமாயின் சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசை வரவேண்டும். உன் வாழ்நாளில் சுக்கிரதசை வரப்போவதில்லை. சுக்கிரனை பார்த்த குருவின் தசை தான் அடுத்து வரப் போகிறது.
குருவே உன் லக்னாதிபதி என்பதாலும், வாழ்க்கையின் மிக முக்கிய தருணத்தில் 16 வருடங்கள் உச்சகுருவின் தசை நடக்கப் போவதாலும், மனித வாழ்க்கையின் நியாயமான சந்தோஷங்களான தாம்பத்திய சுகம், திருமணம், புத்திரபாக்கியம் போன்றவற்றை நீ நல்லபடியாக அனுபவிக்க முடியும். எட்டுக்குடையவன் உச்சம், 12க்குடையவன் ஆட்சியாகி இருவரும் குருவின் பார்வையில் இருப்பதால் நீ நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேற முடியும்.
வரும் டிசம்பர் மாதம் 28-ம் தேதிக்கு பிறகு ஆரம்பிக்க இருக்கும் பன்னிரெண்டாம் அதிபதி சனியின் புத்தியில், உன்னுடைய வெளிநாட்டுக் கனவு பலிக்கும். திருமணம் தாமதமாக 30 வயதில் நடக்கும். எதிர்காலத்தில் வெளிநாட்டில் மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பாய். வாழ்த்துக்கள்.