ஆர். கிருஷ்ண தேவி, சென்னை-41.
கேள்வி.
ஆசானுக்கு கோடி வணக்கங்கள். மூத்தமகன் மிகவும் மோசமான குடிபோதைக்கு அடிமையாகி, சதாசர்வகாலமும் மயக்கநிலையிலேயே இருந்து வருகிறார். பெற்றோர்களான நாங்கள் அவனுடைய சாப்பாட்டிற்கும், செலவுக்கும் கொடுத்துக், கொடுத்து படும்பாடு சொல்லி மாளாது, எழுத ஏடு போதாது. பெற்ற வயிறு பற்றி எரிகிறது. பார்க்காத வைத்தியமில்லை, போகாத ஜோதிடர் இல்லை. அவன் எங்கள் வயிற்றில் பால் கூட வார்க்க வேண்டாம். வதைக்காமல் இருந்தாலே போதும். அவனுக்கு நிரந்தர வேலை அமையுமா? திருமணம் எப்பொழுது? திருந்தி வாழ்வது எக்காலம்? வெளிநாடு யோகம் உள்ளதா?
பதில்.
(மகர லக்னம், விருச்சிகராசி. 5-ல் ராகு, 9ல் செவ், 10ல் சுக், சனி, 11-ல் சூரி, சந், குரு, கேது, 12-ல் புத. 5-12-1983, காலை 11-13 தஞ்சை)
மகனின் பிறந்தநேரம் காலை 11-15 என கொடுத்திருக்கிறீர்கள். என்னுடைய யூகப்படி அவர் இரண்டு நிமிடங்களாவது முன்னதாக பிறந்திருக்க வேண்டும். கொடுத்துள்ள பிறந்த நேரத்திற்கு ஒரு நிமிடம் முன்னதாக லக்னம் மாறுகிறது. நீங்கள் குறிப்பிடும் நேரப்படி அவர் கும்ப லக்கினத்தில் பிறந்திருந்தால் இத்தனை மோசமான நிலையில் இருக்க வாய்ப்பில்லை.
மகர லக்னத்தில் பிறந்திருந்தால் அவருக்கு விருச்சிகராசி, கேட்டை நட்சத்திரமாகி நீங்கள் குறிப்பிடும் கடந்த ஐந்து வருடங்களாக, அஷ்டமாதிபதி சூரியனின் தசையும், ஏழரைச் சனியும் நடந்ததால் கடுமையான மதுமயக்கத்தில் இருந்திருப்பார். ஒருவர் தாய், தந்தையால் மனம் வெதும்பி சபிக்கப்படும் அளவிற்கு குடிகாரனாக இருக்கவேண்டுமெனில் ஜாதகம் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். மகர லக்னம் என்றால் ஐந்தில் ராகு, ஒன்பதில் செவ்வாய் என்றாகி மனதை குறிக்கக்கூடிய சந்திரனும் நீசமாகி, மனக்கட்டுப்பாடு முற்றிலும் இல்லாமல் இப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார்.
எந்த ஒரு சோதிடருக்கும் இதுபோன்ற லக்ன சந்தியில் பிறந்த ஜாதகங்களுக்கு பலன் சொல்வதற்கு தடுமாற்றம் இருக்கும். நீங்கள் குறிப்பிட்டிருந்த 11-15 மணிக்கு மகன் பிறந்திருந்தால் அடுத்த வருடம் ஆரம்பிக்கக்கூடிய சந்திரதசையிலும் குடிப்பழக்கத்தை கைவிட முடியாத நிலை இருக்கும். இவர் திருந்த மாட்டார். சில நிமிடம் முன்னதாக மகர லக்னத்தில் பிறந்திருந்தால் 2020-ம் ஆண்டுக்கு பிறகு மதுப்பழக்கத்தில் மாற்றம் உண்டாகி, சந்திர தசையில் ஓரளவு நன்றாக இருப்பார். அடுத்து வர இருக்கும் சந்திரன் பதினொன்றாம் இடத்தில் ஓரளவு சுபத்துவமாகியிருப்பதால் திருமணம், வேலை போன்றவைகளைத் தருவார். கும்ப லக்னம் என்றால் அடுத்து வரக்கூடிய சந்திரதசை தற்போது நடந்து கொண்டிருக்கும் கெடுபலன்களின் நீட்சியாகவே இருக்கும்.
ஜோதிடமே ஒருவகையில் கணிப்பதற்கு குழப்பமான, ஒரு சிக்கலான கலைதான். அதிலும் இதுபோன்ற லக்ன சந்தியில் பிறக்கும் ஜாதகங்களில் துல்லியமான பிறந்த நேரத்தை நாம் அறிந்துகொள்ள இயலாதபோது அவரது வாழ்க்கையில் நடக்கும் பலன்களையும், அவரது குணத்தையும் வைத்துத்தான் அவரது லக்னத்தை நிச்சயிக்க முடியும். மகனைப் பற்றிய கடும் வேதனையில் இருக்கும் உங்களுக்கு, கூடுமானவரை நல்ல பதில் சொல்லத்தான் என்னுடைய மனம் விழைகிறது. மகன் மகர லக்னத்திலேயே பிறந்திருப்பார் என்று நம்புவோம். 2020-ம் ஆண்டிற்குப் பிறகு மகனிடம் மாற்றங்கள் தெரியும். அதுவரை பொறுத்துத்தான் ஆக வேண்டும். வாழ்த்துக்கள்.
(04.12.2018 மாலை மலரில் வெளிவந்தது)