adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பெரும்பணம் கிடைக்குமா? – குருஜியின் விளக்கம்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ம.ப. மாணிக்கம், கோவை.

கேள்வி.

உற்றார், உறவினர், நட்பு, குடும்பம், மனைவி, மகன்கள், சகோதரி இவர்களிடமிருந்து விலகி 18 ஆண்டுகள் தனிமையில் வனவாசம் இருக்கிறேன். இந்த நிலைமை மாறி என் எதிர்காலம் பிரகாசிக்குமா அல்லது இந்த மாணிக்கம் இருளடைந்து வெறும் கல்லாகவே மடிந்து விடுமா? வீடு, வாகனம், சொத்து, சுகம் ஏதுமின்றி உத்தியோகத்தில் வரும் சொற்பத் தொகையில் காலம் கழிந்து வருகிறது. கடன் என்று எதுவுமில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு கையிருப்பு சிறிய தொகை மட்டுமே உள்ளது. குடும்பத்துடன் இனி சேர்ந்து வாழ துளியும் எண்ணம் இல்லை. குரு-கேது ஒரே கட்டத்தில் இருந்தால் பெருத்த தனயோகம் உண்டாகும் என்று 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோதிடர் கூறியிருந்தார். அப்படி ஒரு யோகம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ஜோதிடர், குரு தசையில் கேது புக்தி நடக்கும் போது அது போல அளவற்ற தனம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுவரை பொறுமையாக இருக்கவும் என்று கூறியிருக்கிறார். எனக்கு இதுபோல பெரும் பணம் கிடைக்குமா? அல்லது வாழ்நாள் முழுவதும் இதே நிலைதானா? என்னிடம் சொத்து, சுகம் இரண்டும் இல்லாததால் அனைவரும் ஒதுக்கி விட்டனர். நானும் ஒதுங்கிய நிலையில் தனிமையில் வாடி வாழ்ந்து வருகிறேன். மாலைமலரில் நேரடியாக, வெளிப்படையாக தாங்கள் தரும் பதில்களில் உண்மைத்தன்மை இருப்பதால் உங்களிடம் கேட்கிறேன்.  

பதில்.

(மகர லக்னம், சிம்ம ராசி. 6-ல் புத, குரு, கேது. 7-ல் சூரி, 8-ல் சந், சுக், 10-ல் சனி, 12-ல் செவ், ராகு 1-8-1954 மாலை 6-12 சேலம்)

பத்து லட்சம் பேர் லாட்டரி டிக்கெட் வாங்கினாலும் ஒரே ஒருவருக்குத்தான் பத்து லட்ச ரூபாய் முதல் பரிசு விழுகிறது. மீதியுள்ள அனைவரும் ஏமாந்துதான் போகிறோம். அதுபோலத்தான் இப்போது நீங்கள் சொல்லும் குருவும், கேதுவும் சேர்ந்த பெரும்பணம் தரும் கோடீஸ்வர யோகத்தின் நிலை.

சனியின் லக்னங்களில் பிறந்து, லக்னமோ, லக்னாதிபதியோ சுபத்துவ, சூட்சும வலு அடையாதவர்கள் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். உங்களுடைய ஜாதகப்படி லக்னாதிபதி சனி உச்சம் பெற்று, குரு பார்வையில் இருப்பது போல தோன்றினாலும் அவர் ராகு-கேதுக்களுடன் மிக நெருங்கி ஒரே டிகிரியில் இணைந்து செவ்வாயின் பார்வையில் இருப்பதால் அவரது பார்வைக்கு வலிமையில்லை. சனி பத்தாமிடத்தில் உச்சமாக பாபத்துவ அமைப்பில் இருப்பதால் சொற்ப சம்பளத்தில் வேலைக்கு இருப்பீர்கள்.

ஐந்துக்குடைய சுக்கிரன் எட்டில் மறைந்து, 9-க்குடைய புதன் 6-ல் அமர்ந்து, மனைவியைக் குறிக்கும் ஏழுக்குடைய சந்திரனும் எட்டில் மறைந்த சன்னியாசி யோக ஜாதகம் உங்களுடையது. இதுபோன்ற ஜாதக அமைப்பினால்தான் உங்களுக்கு குடும்பத்தின் மேல் பற்று இல்லாமல் போனது.

14 வயதிற்கு பிறகு கிட்டத்தட்ட 40 வருட காலம் உங்களுக்கு நடந்து வரும் சூரிய, சந்திர, செவ்வாய், ராகு தசைகளும் நன்மை செய்யும் தசைகள் அல்ல. தற்போது நடந்து வரும்  குரு தசையும் ஆறில் மறைந்துள்ளதால் முழுமையான பலன்களை தராது. அதோடு எந்த ஒரு யோகமும் மறைவிடங்களில் அமையக் கூடாது. அதன்படி குரு தசை, கேதுவுடன் இணைந்து பெரும்பணம் தரும் கேள யோக அமைப்பில் இருந்தாலும் முழுமையான பலன்களை தராது.

ஒரு ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி வலுவாக இருக்கும் நிலையில்தான் யோகங்கள் செயல்பட ஆரம்பிக்கும்.  கோடீஸ்வர யோகம் இருந்தாலும் அதை அனுபவிப்பதற்கு லக்னாதிபதி வலுவாக இருக்கவேண்டும். அரைகுறை அமைப்பில் யோகம் அமைந்தால் இரண்டாவது ஜோதிடர் சொன்ன குருதசை, கேது புக்தியில் ஆயிரம் ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட்டில் பரிசு விழும். அவ்வளவுதான்.

ஜோதிடர் சொல்லும் இதுபோல யோகங்களை எதிர்பார்க்கும் இலவு காத்த கிளிகள்தான் இங்கே அதிகம். நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் சொல்லும் யோகங்கள் முழுமையாக கிடைக்க லக்னம், லக்னாதிபதி உள்ளிட்ட சகல அமைப்புகளும் பங்கமின்றி அமைந்திருக்க வேண்டும். சனி வலுத்துப் பிறந்த, யாரோடும் ஒத்துப் போகாத, பிடிவாதக்காரராகிய நீங்கள் இதையும் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்.

(27.11.2018 மாலை மலரில் வெளிவந்தது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *