வேத ஜோதிடத்தின் விதிகள் என்றும் மாறாதவை. இந்த விதிகளை எந்த ஒரு நிலையிலும் நம் இஷ்டம் போல வளைத்துக் கொள்ள முடியாது. ஒருவர் இப்படிப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் எனில் அதற்கான மூல விதிகள் இந்த தெய்வீக சாஸ்திரத்தில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக ஒருவர் டாக்டராக வேண்டுமெனில், அவரது ஜாதகத்தில் முதன்மை நிலையில் செவ்வாய் சுபத்துவமாகவும், ஒருவர் வக்கீலாக வேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் சனி அதிக சுபத்துவமாகவும், சொல்லிக் கொடுக்கும் நிலையில் ஒருவர் இருக்க வேண்டுமெனில் குரு உயர்நிலையிலும், ஜோதிடராக வேண்டுமெனில் புதன் வலுத்தும் இருக்க வேண்டும் என்பது விதி.
அதைப் போலவே ஒருவர் அரசியலில் பிழைக்க வேண்டுமெனில், அவரது ஜாதகத்தில் அதிகாரத்தைத் தரும் ஒளிக் கிரகமான சூரியன் மிக உயர்நிலையிலும் அடுத்து சந்திரன் சுபத்துவ நிலையில் இருக்க வேண்டும்.
அதிலும் அரசனுக்கு நிகரான மிக உயர்வான அதிகாரப் பதவியில் இருப்பவருக்கென மிகத் தெளிவான விதிகள் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ளன. இந்த விதிகள் அனைத்தும் அதிகாரம் உள்ளோரின் ஜாதகங்களில் திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகின்றன. இதற்கு பிரதமரும் விதிவிலக்காக இருக்க முடியாது.
ஜோதிடம் அறிந்தோரால் பலவிதமான பிறந்த நேரங்களோடு, விதம் விதமாக சொல்லப்படும் மோடி அவர்களின் ஜாதகத்தில் எது உண்மையானது என்பதை உறுதி செய்யும் முன், வேறு சில அரசியல்வாதிகளின் ஜாதகங்களை பார்த்து அவற்றோடு பிரதமரின் ஜோதிட அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்போம்..
கீழே முன்னாள், மற்றும் இந்நாள் மத்திய மந்திரிகள் இருவரின் ஜாதகங்களைக் கொடுத்திருக்கிறேன்.
இதில் முதலாவதாக உள்ள ஜாதகத்தைக் கொண்டவர் தற்போது பிரதமரின் அமைச்சரவையில் மந்திரியாக இருக்கிறார். பிரதமருக்கு பல படிகள் கீழே இருக்கும் இணை அமைச்சர் இவர். இளம் வயதில் இருந்தே அரசியலோடு தொடர்பு கொண்ட இந்த அமைச்சரும், பிரதமரைப் போலவே திருமண பந்தத்தில் இல்லாதவர். மிக இளம் வயதில் இருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டதால் இவருக்கு திருமணம், குழந்தைகள் எனும் குடும்ப அமைப்பு இல்லை.
நவீனகால அரசியல்வாதிகளைப் போல அல்லாமல், யாரும் சுலபமாக அணுகி பார்க்கக் கூடிய வகையில் இருப்பவர் இவர். அதிகாரத்தில் இருந்தாலும், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் கொடாமல், மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்பவர். சென்ற தலைமுறை தியாக அரசியல்வாதிகளைப் பிரதிபலிக்கும் எஞ்சியிருக்கும் இன்னும் சிலரில் இவரும் ஒருவர்.
இந்த மத்திய அமைச்சரின் ஜாதகத்தில் கன்னி லக்னம், மிதுன ராசியாகி லக்னத்தையும், லக்னாதிபதி புதனையும், சுப கிரகங்களுக்கே உரிய நல்ல இடமான திரிகோண, ஒன்பதாம் வீட்டில் இருக்கும் குரு பார்க்கிறார்.
ஜோதிடப்படியான பவுர்ணமி யோகம் இந்த ஜாதகத்தில் இருக்கிறது. தேய்பிறை ஆனாலும் பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் ஒளி பொருந்திய சந்திரன் பத்தாமிடத்தில் இருக்க, அந்த பத்தாமிடத்தை சுபச் சந்திரனின் பார்வை பெற்ற சூரியன் பார்க்கிறார். இந்த சூரியன் குருவின் வீட்டில் இருக்கிறார்.
சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களில் அமர்ந்திருக்கும் நிலையில், இருவரும் லக்ன கேந்திரங்களிலும் இருக்கிறார்கள். மேலும் நமது கிரந்தங்களில் மிக உயர்வாக சொல்லப்படும் தர்மகர்மாதிபதி யோகமும், மிகுந்த சுபத்துவத்துடன் இந்த ஜாதகத்தில் அமைந்திருக்கிறது.
தர்மகர்மாதிபதிகளான புதனும், சுக்கிரனும் பகைவீட்டில் இருந்தாலும் சந்திர அதி யோக அமைப்பில் ஒளிபொருந்திய சந்திரனுக்கு ஆறில் அமர்ந்து, இன்னொரு ஒளிக்கிரகமான குருவின் நேர்பார்வையில் இருக்கிறார்கள். இது ஒரு மிகச் சிறப்பான அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் சுபக்கிரகங்கள் ஒருவருக்கொருவர் இங்கே தொடர்பு கொள்கிறார்கள். இங்கே புதன் லக்னாதிபதி என்பதும் அதி விசேஷம்.
மிக மிக முக்கியமாக, அதிகாரத்தை தரும் ராஜ ராசியான சிம்மம், இந்த ஜாதகத்தில் எவ்வித பாபத் தொடர்புகளும் இன்றி சுத்தமாக இருக்கிறது. சிம்மாதிபதியான சூரியன், குருவின் வீட்டில் சுபத்துவமாக அமர்ந்த நிலையில், குருவுக்கு நிகரான பவுர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனின் பார்வையோடு, பத்தாமிடத்தை மிகுந்த வலுப்பெற்று தொடர்பு கொள்கிறார். பவுர்ணமி யோக அமைப்பால் இங்கே சூரியனுக்கும், சந்திரனுக்கும் திக்பலம் இல்லாத நிலை சரி செய்யப்படுகிறது.
திக்பலம் என்பதே ஒரு கிரகம் ஸ்தான பலம் எனப்படும் ஆட்சி, உச்சம் இல்லாத நிலையில் வேறுவகையில் பலம் பெறுவதுதான். அதன்படி இங்கே சந்திரன் திக்பலம் இழந்தாலும், அப்போதுதான் பவுர்ணமியை விட்டு விலகிய நிலையில் ஒளியுடனேயே இருக்கிறார். சூரியனும் திக்பலத்தை இழந்திருந்தாலும், பவுர்ணமிச் சந்திரனின் சுப ஒளி பொருந்திய பார்வையில் இருக்கிறார். எனவே இங்கே அதிகாரத்தைக் குறிக்கும், ஒருவரை அரசாள வைக்கும் சூரிய, சந்திரர்களின் திக்பலம் இல்லாத நிலை ஈடு செய்யப்பட்டு விட்டது.
ஜோதிடம் என்பதே சுப ஒளி நிலைகளைப் பற்றிச் சொல்வதுதான். ஒரு ஜாதகத்தின் உயர்நிலைகளைப் பற்றிக் கணிக்கும்போது, இப்போது நான் சொல்வதைப் போன்ற ஒளிநிலை அளவுகளையும், சுபத்துவ, பாபத்துவ அமைப்புகளையும் மட்டும்தான் கணக்கிட வேண்டுமே தவிர மேம்போக்காக சொல்லப்படும், கிரகங்களின் ஆட்சி, உச்சம், ஆறு, எட்டு, பனிரெண்டு போன்ற மறைவு ஸ்தான நிலைகளை அல்ல.
ஒரு ஜாதகத்தின் மேம்போக்கான நிலைகளைத் தாண்டி, இப்போது நான் தரும் சூட்சும விஷயங்களை உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமாயின் வேத ஜோதிடத்தின் மிக உயர்நிலைப் புரிதலுக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
அடுத்து கீழே முன்னாள் மத்திய மந்திரி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.
ஒரு மிகப்பெரிய மாநிலத் தலைவரின் மூத்த வாரிசு இவர். அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர். தனது தந்தையால் மத்திய அரசின் பிரதிநிதியாக, மந்திரியாக்கப்பட்டு, தற்போது அரசியல் சூழ்நிலைகள் சரியில்லாத காரணத்தால், “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு” எனும் பழமொழிக்கேற்ப சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த முன்னாள் அமைச்சரின் ஜாதகத்தில் கடக லக்னம், சிம்ம ராசியாகி, லக்னாதிபதி சந்திரன் தேய்பிறையாக இருந்தாலும், நான்காமிடத்தில் திக்பல அமைப்பில் குருவின் பார்வையில் இருக்கிறார்.
வேதஜோதிட விதிகளின்படி ஒருவர் அதிகாரத்தை அனுபவிக்க வேண்டுமெனில், சூரியனும் சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களாக இருக்க வேண்டும், அல்லது சிம்மம் சுபத்துவமாக இருக்க வேண்டும். இவைகள் இல்லாத நிலையில் சூரியன் பத்தாமிடத்திலோ அல்லது அதற்கு அருகிலோ இருக்க வேண்டும். அல்லது சூரியன் சுபத்துவமாகி வலுத்து ராசி, லக்னம் இவற்றின் பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரத்திலும், லக்னத்திற்கு கேந்திரங்களிலும் இருக்கிறார்கள். குறிப்பாக ராசிக்கு 10-ஆம் இடமாகிய லக்னத்தை சூரியன் பார்க்கிறார். அடுத்து ராஜ ராசியாகிய சிம்மம் குரு மற்றும் சுக்கிரன் பார்க்கப்படுகிறது.
கேது சிம்மத்தில் இருந்தாலும், ராகுவை போல கெடுக்கும் தன்மை கொண்டதல்ல. ஆகவே சிம்மத்தில் கேது இருப்பது குறை அல்ல. மேலும் இங்கே அதிகாரத்தை தரும் சூரியனின் நண்பரான செவ்வாயும் சிம்மத்தை தன்னுடைய ஏழாம் பார்வையால் பார்க்கிறார். சிம்மத்தோடு சுபத்துவ செவ்வாய் தொடர்பு கொள்வது அதிகாரம் செய்வதற்கு வெகு சிறப்பு.
எட்டாமிடமான குமபத்தில் கூடியிருக்கும் குரு, சுக்ர, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களுடன் ராகு இணைந்திருந்தாலும், இந்த மூன்று கிரகங்களும் ராகுவை விட்டு பனிரெண்டு டிகிரிக்கு மேல் விலகியே இருக்கின்றன. ராகுவே இங்கு கும்பத்திற்குள் இரண்டு டிகிரிக்குள் அப்போதுதான் உள்ளே நுழைந்த நிலையில் இருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் ஆறு, எட்டு, பனிரெண்டாம் இடங்களில் கிரகங்கள் மறைவது சுபத்துவத்தின் முன் எடுபடாது என்று நான் சொன்னதற்கு முக்கிய உதாரண ஜாதகம் இது. இங்கே மூன்று கிரகங்கள் சிம்மத்தை வலுப்படுத்துவதுதான் முன் நிற்குமே தவிர அவை எட்டில் மறைந்தது அல்ல.
அதேநேரத்தில் இந்தக் கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் உள்ளது ஜாதகரை பாதிக்கவே செய்யும். பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது. என்னதான் இவர் மத்திய மந்திரியாக சில காலம் இருந்திருந்தாலும், அவர் மிகவும் விரும்பும் மாநில அரசியலில் இதுவரை இவரால் சோபிக்க முடியவில்லை.
அரசியலில் இவருக்கு ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இவரது தந்தையைப் போல ஒரு நீடித்த புகழ், அதிகார வாழ்க்கை இவருக்கு அமையவில்லை. அதற்கு இந்த லக்னத்தின் தர்ம,கர்மாதிபதி கிரகங்களான செவ்வாயும், குருவும் எட்டில் மறைந்தது ஒரு காரணம்.
வேத ஜோதிடம் உயர்வாக குறிப்பிடும் தர்ம, கர்மாதிபதி யோகம் இந்த ஜாதகத்தில் குரு, செவ்வாய் இணைவால் இருந்தாலும், அந்த யோகம் எட்டில் அமைவதால் பங்கப்பட்டிருக்கிறது. மேலும் யோகாதிபதிகள் இருவருடனும் ராகு இணைவது குற்றம். எந்த ஒரு யோகமும் மறைவிடங்களில் முழுபயனைத் தராது. இந்த அமைப்புகளை கணிக்கும்போதுதான் ஆறு, எட்டு போன்ற மறைவிடங்கள் கவனிக்கப் பட வேண்டும்.
இந்த ஜாதகத்தில் லக்னத்தை குரு பார்க்கவில்லை என்றாலும், லக்னாதிபதி சந்திரன் திக்பல வலுவோடு அமைந்துள்ள நிலையில் அவரைக் குரு பார்ப்பது குறிப்பிடத்தக்கது.
வேத ஜோதிடம் குறிப்பிடும் விதிகள் அனைத்தும் முழுமையாக இருக்கும் பட்சத்தில் ஒருவர் நமது துறையில் மிக உயர்நிலையில் இருக்க முடியும். விதிகள் சற்று குறைவாக, பழுதான நிலையில் அமைந்த அமைந்தவர்கள் அதைவிட குறைவான நிலையில் இருப்பதோடு, அந்தத் துறையில் அதி உச்ச நிலையில், நீடித்த புகழுடன் இருப்பதற்கு தடை இருக்கும்.
இவரது தந்தையின் ஜாதகம் ஒரு முழுமையான அரசியல்வாதி மற்றும் ஆளுமை திறனுக்கு எடுத்துக்காட்டாக ஜோதிடர்களால் அடிக்கடி சொல்லப்படுகிறது. தந்தையின் ஜாதக அளவிற்கு இவரது அமைப்பு இல்லாத காரணத்தினால், இவரது அரசியல் வாழ்க்கை அவ்வப்போது ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது.
ஆயினும் ஒரு மத்திய மந்திரியாக இருந்தவரின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக காட்டக்கூடிய வகையில்தான் இந்த ஜாதகம் அமைந்திருக்கிறது.
பிரதமர் மோடி அவர்களின் ஜாதகத்தை விளக்கும்போது, மிக உயர்நிலை அதிகாரத்தில் இருப்போருக்கு சொன்ன விதிகள் தற்போது காட்டியிருக்கும் இரண்டு ஜாதகங்களிலும் மிகப்பொருத்தமாக இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.
பொதுவாக நன்கு அறியாத, உறுதிப்படுத்திக் கொள்ளாத ஜாதகங்களை பற்றி எழுதும் வழக்கம் இல்லாதவன் நான். வேதஜோதிடத்தை மேம்போக்காக அணுகும் வழக்கம் என்னிடம் இல்லை. ஒருவரின் ஜாதகம் இதுதான் என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே அதை விளக்க வேண்டும் என்ற கருத்துடையவன் நான். என்னுடைய எழுத்துக்களை படிப்பவர்களுக்கு மிகச் சரியான தகவல்களை மட்டுமே தரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அதன்படியே தமிழகத்தைச் சேர்ந்த, நான் அறிந்த மேலே கண்ட இரண்டு மந்திரிகளின் ஜாதகத்தை விளக்கியிருக்கிறேன். இந்த ஜாதகங்களை பார்க்கும்போதே இதில் பளிச்சென்ற அதிகார அமைப்பு மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது சூரிய, சந்திரர்கள் வலுப்பெற்று, சிம்மம் வலுவாகி, ராசி லக்னத்திற்கு பத்தாம் அதிபதிகள் சுப அமைப்பில் இருக்கிறார்கள். லக்னமும் லக்னாதிபதிகளும் வலுத்து சுபத்துவ அமைப்பில் இருக்கிறார்கள். இதுவே ஒருவரை மிக உயர்நிலையில் வைத்திருக்கக் கூடிய ஜோதிட அமைப்பு
இதுபோன்ற விதிகள் எதுவும் ஒத்து வராத நிலையில் ஒருவர் மிக உயர் நிலையில் இருக்கிறார் என்பது வேத ஜோதிடத்தின்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் நிச்சயமாக நடக்காது. அப்படி ஒரு ஜாதகம் விளக்கப்படுமாயின் அது முழுமையான ஜோதிட அறிவுடன் இருக்காது. இதுபோன்ற விளக்கங்கள் காலுக்காக செருப்பின்றி செருப்புக்காகக் காலை வெட்டக் கூடிய நிலையில்தான் அமையும்.
அடுத்த வெள்ளி தொடருவோம்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
அய்யா வணக்கம் என் பெயர் திருமுருகன் நான் ராஜமன்னார்குடி யில் வசிக்கிறேன் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை நான் பார்க்காத ஜாதகம் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை போகாத சாமியார் இல்லை ஆனால் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஆனால் அனைவர்க்கும் அவர்கள் சொல்லியது நடந்து இருக்கிறது என்னை தவிர vip ஜோதிடர் சிலர் திருமணம் ஆனவுடன் நல்ல வாழ்க்கை இருக்குது பிற்காலங்களில் என்று நேரம் சொல்ல மாட்டார்கள் அய்யா என்னுடைய பிறந்த நாள் நேரத்தை குடுக்கிறேன் 09/15/1981 செவ்வாய் கிழமை 4:3pm orathanadu thanjavur(DT)
ஐயா வணக்கம் எனது பெயர்
பு. திருநாவுக்கரசு, பிறந்த தேதி 1/5/1976, சனிக்கிழமை, நேரம் பகல் 12.40 p.m , இடம் நாகமங்கலம், அரியலூர் மாவட்டம் ஐயா தற்போது எனக்கு குரு திசை நடைபெறுகிறது, மிகுந்த மன உளைச்சல், கடன், நிம்மதியற்ற வாழ்க்கை…. எனது எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? எனக்கு ஏற்ற தொழில் எது? இல்லை வேலைக்கு செல்ல வேண்டுமா? அரசியல் எதிர்காலம் உண்டா? எதிர்காலத்தில் நல்லதொரு சிறப்பான வாழ்க்கை அமையுமா?
தங்களின் மேலான பதில் வேண்டி
அன்புடன்
பு.திருநாவுக்கரசு