adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
எனது விடுதலை எப்போது? -குருஜியின் விளக்கம்…

ஒரு வாசகர், கன்னங்குறிச்சி.

கேள்வி.

அறுபத்தி ஆறு வயதாகிறது. குடும்பக் கடமைகள் அனைத்தையும் சிறப்பாக இல்லாவிட்டாலும் முழுமையாக முடித்து விட்டேன். இனி யாருக்கும் என்னுடைய உதவிகள், சேவைகள் தேவையில்லை. விடை பெறுவது என்று தீர்மானித்துள்ளேன். என்னுடைய முடிவு சரிதானா? வாழ்க்கையில் அதிகமான தாக்குதலுக்கு உள்ளானவன் நான். பசி, பட்டினியால் தவிக்கும் என்னை கடவுளின் பிழையான படைப்பு என்றே கூறலாம். ஒதுக்கப்பட்டவனுக்குத்தான்லி என்ன என்று தெரியும். என் வாழ்க்கையை நான் அமைத்துக் கொள்ள நினைத்த விதம் வேறு. ஆனால் அது அமைந்த விதம் வேறு. என்னுடைய செயலையும், விருப்பத்தையும் மற்றவர்களே தேர்ந்தெடுத்து நிர்ணயித்தார்கள். விழுந்தது தெரியாமலேயே விழுந்துவிட்டேன். ஏன் இப்படி என்பது என் கேள்வி அல்ல. காரணம் இல்லாமல் எந்தக் காரியமும் நிகழாது. எனது கேள்வி என் விடுதலை, முடிவு எப்போது? எப்படி? ஜாதகப்படி எனக்கு மறுபிறவி உண்டா? இதற்கு பதில் சொன்னால் உங்களுக்கு புண்ணியம், எனக்கு நிம்மதி...

பதில்.
(மேஷ லக்னம், சிம்ம ராசி, 2ல் குரு, 4ல் கேது, 5ல் சந், 7ல் செவ், சனி, 10ல் சூரி, புத, சுக், ராகு, 22-1-1954 மதியம் 12-30 சேலம்)

சக மனிதர்களுடன் ஒத்துப் போகாமல் வாழ்க்கையை தொலைத்தவர்கள் எல்லோரும் இப்படி 60 வயதிற்கு மேல், கதைதான் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். ஜாதகப்படி மேஷம் லக்னமாகி பாபத்துவம் பெற்ற செவ்வாய், சனி இருவரும் இணைந்து லக்னத்தைப் பார்த்து, லக்னம், ராசி இரண்டிற்கும் எவ்வித சுபத் தொடர்புகளும் கிடைக்காததால் நீங்கள் அடுத்தவரைப் புரிந்து கொள்ளாத, கோபம் மற்றும் சுயநலம் கொண்ட ஒரு நபராக இருப்பீர்கள். யாருடனும் ஒத்துப் போய் இருக்க மாட்டீர்கள்.

எப்போதும் அடுத்தவருடன் முரண்படுவதுதான் உங்களுடைய நோக்கமாகவும் சந்தோஷமாகவும் இருந்திருக்கும். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை அந்திம காலத்தில் தனியாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் கூட இளமையில் நான் செய்தது தவறு என்று ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். அனைத்திற்கும் ஏதாவது ஒரு காரணம் காட்டி காட்டுவீர்கள்.

மனிதப்பிறவி என்பதே ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதுதான். அடுத்தவரை நம்பாமல் அல்லது இன்னொருவரின் உதவி தேவை இல்லாமல் இங்கே ஒரு உயிரும் இருக்க முடியாது. எல்லா உயிர்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவைதான். ஒரு மனிதனுக்கு சகமனிதன் எல்லா நிலையிலும் தேவைப்படுவான். இதை உணராதவர்கள் வாழ்க்கையில் தோற்றுப் போய் பின்னால் வருந்துகிறீர்கள். எனது முடிவு எப்போது என்று ஏக்கம் கொள்ள ஆரம்பிக்கிறீர்கள்.

ஜாதகப்படி எட்டாமிடத்தை குரு பார்த்து, ஆயுள்காரகன் சனி உச்சமாகி, லக்னத்தை லக்னாதிபதியும் பார்த்ததால் நீங்கள் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து உங்களுடைய கடந்த கால வாழ்க்கையை அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஜோதிடப்படி உங்களுக்கு மறுபிறவி இருக்கிறது. அடுத்த பிறவியிலாவது சக மனிதனோடு இணைந்து வாழ வாழ்த்துக்கள்.

(06.11.2018 மாலை மலரில் வெளிவந்தது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *