ரா. சங்கர், திருவனந்தபுரம்.
கேள்வி.
மகளின் ஜாதகத்தில் லக்னத்தில் குருவும், ராகுவும் உள்ளனர். இரண்டில் செவ்வாய், ஏழில் கேது உள்ளது. ஜோதிடர் ஒருவர் ஏழாமிடத்தில் உள்ள கேதுவை குரு பார்ப்பதால், ராகு-கேது தோஷம் இல்லை, அதேபோல இரண்டில் செவ்வாய் ஆட்சியாக இருப்பதால் அதுவும் தோஷமில்லை என்று கூறுகிறார். ஆனால் வேறு ஒரு ஜோதிடர் உங்கள் மகளுக்கு செவ்வாய் தோஷமும், ராகு-கேது தோஷமும் இருக்கிறது. வரன் பார்க்கும் பொழுது இதே போன்று ராகு-கேது மற்றும் செவ்வாய் தோஷமுள்ள மணமகனைத்தான் பார்க்க வேண்டும் என்றும், தோஷமில்லாத மணமகனை சேர்க்கக்கூடாது என்றும் சொல்கிறார். இதில் எதை ஏற்றுக் கொள்வது என்று அறிவுரை கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். மகளுக்கு எப்போது கல்யாணம் நடக்கும்?
பதில்
(மீன லக்னம், சிம்ம ராசி. 1ல் குரு, ராகு. 2ல் செவ், 6ல் சந், 7ல் கேது, 9ல் சனி, 10ல் சுக், 12ல் சூரி, புத, 6-2-1987 காலை 9-5 திருவனந்தபுரம்)
ஜோதிடத்தின் மேல் மக்களுக்கு அவநம்பிக்கையை உண்டாக்கும் சில விஷயங்களில் மிகைப்படுத்தி சொல்லப்படும் இந்த சர்ப்ப தோஷம், நாகதோஷம் எனப்படும் ராகு-கேது தோஷமும், செவ்வாய் தோஷமும் முக்கியமான ஒன்று. அனுபவமற்ற ஜோதிடர்களால் மனதில் தோன்றும் வகையில் சொல்லப்படும் இந்த ராகு-கேது, செவ்வாய் தோஷம் பெண்களின் திருமண வாழ்விற்கு மிகப்பெரும் தடையாக வந்து நிற்கிறது.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் திருமண தகவல் மையங்கள் கூட தற்போது ராகு-கேது, செவ்வாய் தோஷம் என்று ஜாதகங்களை அவர்களே நிராகரித்து, இந்த நட்சத்திரத்திற்கு இது பொருந்தாது என்று அவர்களே ஜோதிடரின் வேலையை பார்த்து வடிகட்டி, வருபவர்களுக்கு ஜாதகங்களை கொடுக்கின்ற அளவிற்கு ஜோதிடத்தின் நிலைமை ஆகிவிட்டது.
உண்மையில் பத்துப் பொருத்தம், நாகதோஷம், செவ்வாய் தோஷம் போன்றவைகள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான் அதிகப்படியாக பெண்ணைப் பெற்றவர்களை பயமுறுத்தும் அளவிற்கு சொல்லப்படுகின்றன. மூல நூல்களில் இதுபோன்ற தோஷ அமைப்புகள் அச்சப்படுத்தும் அளவிற்கு சொல்லப்படவில்லை. நாகதோஷம், செவ்வாய் தோஷம் பற்றி சொல்லப்பட்டிருக்கும் சில இடங்களில் கூட ஆயிரம் விதிவிலக்குகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
தற்போது தமிழ்நாட்டில் பெரும்பாலான ஜோதிடர்கள் செவ்வாய் தோஷத்தையும், ராகு-கேது தோஷத்தையும் ஒரு நிலையான தோஷமாக வைத்து விட்டார்கள். ஏழு, எட்டில் ராகு-கேது இருக்கிறதா அது தோஷம்தான், அதைப் போலவே ஏழு எட்டில் ராகு-கேது இருந்தால்தான் இன்னொரு வரனைச் சேர்க்க முடியும். இல்லையென்றால் இருவருக்கும் பொருந்தாது. இவர்கள் இருவரும் திருமணம் செய்தால் நன்றாக இருக்க மாட்டார்கள் என்று தவறாகச் சொல்லி வருகிறார்கள்.
அதேபோல இரண்டில் செவ்வாய் என்றால் வேறு எங்காவது 2, 7, 8, 12 போன்ற இடங்களில் செவ்வாய் இருந்தால்தான் பொருந்தும். செவ்வாய் தோஷத்திற்கு செவ்வாய் தோஷம் உள்ளவரைத்தான் பொருத்த வேண்டும் என்று கண்மூடித்தனமாகவும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இது மாபெரும் தவறு. மேலும் இந்த தோஷ அமைப்புகள் அனைத்தும் சமீபகாலமாக ஒரு முப்பது, நாற்பது ஆண்டுகளாகத்தான் பார்க்கப்படுகிறது. சென்ற தலைமுறை ஜோதிடர்களால் இதுபோல பார்க்கப்படவில்லை.
ஜோதிடத்தில் எந்த ஒரு தோஷத்திற்கும் அநேக விதிவிலக்குகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அதை யாரும் பார்ப்பது இல்லை, அல்லது பார்க்கத் தெரியாது. இங்கே பெரும்பாலான ஜோதிடர்களுக்கு லக்னத்திலிருந்து ஏழு, எட்டில் ராகு இருக்கிறது, 2, 7, 8-ல் செவ்வாய் இருக்கிறது, இது நாகதோஷம், செவ்வாய் தோஷம் என்று பார்க்க முடிகிறதே தவிர, அந்த பாவகங்களில் இருக்கும் இந்த கிரகங்களால் ஜாதகருக்கு என்ன பலன் நடக்கும் என்பதை கணிப்பதில் சிரமம் இருக்கிறது.
அதைவிட மேலாக செவ்வாய், ராகு-கேது தசை இளமையில் வருகிறதா அல்லது வந்து முடிந்து விட்டதா அல்லது வரவே வராதா என்பதைக் கூட பெரும்பாலான ஜோதிடர்கள் பார்ப்பதில்லை. உண்மையில் ஒரு பாபக்கிரகம் கெடுக்கின்ற நிலைமையில் இருந்தால் கூட அதனுடைய தசையில்தான் அந்தக் கெடுதலைச் செய்யும். தசை வராத நிலையில் அது தோஷமாகாது.
செவ்வாய் தோஷம், நாக தோஷம் பற்றிய விதியைத்தான் ஜோதிடர்கள் சொல்கிறார்களே தவிர விதிவிலக்குகளை அவர்கள் பார்க்க விரும்புவதே இல்லை. வெளிப்படையாகச் சொல்லப் போனால் இதுதான் உண்மை. அனைத்து ஜோதிடர்களும் இப்படிப்பட்டவர்கள் இல்லை என்றாலும், பெரும்பாலான அனுபவமற்ற ஜோதிடர்கள் ஒரே வார்த்தையில் ஏழில் ராகு என்றால் அதேபோன்ற ஏழில் ராகு உள்ள ஜாதகத்தை தான் சேர்க்க வேண்டும் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள். இது மிகப்பெரிய தவறு.
மகளின் ஜாதகப்படி முதல் ஜோதிடர் சொன்னதைப்போல ஏழாமிடத்தை குரு பார்ப்பதால், மகளுக்கு ராகு-கேது தோஷம் இல்லை. ஆகவே ராகு-கேது இருக்கும் ஜாதகத்தைதான் சேர்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ராகு-கேது தோஷமில்லாத வரனை சேர்க்கலாம். அதேபோல இரண்டில் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். ஆனால் அவர் சுப கிரக தொடர்புகள் இன்றி சுபத்துவமாக இல்லாமல் இருக்கிறார். இது செவ்வாய் தோஷம்தான் என்றாலும் செவ்வாய் தசை முடிந்துவிட்டதால், செவ்வாய் தோஷம் இல்லாத வரனையும் இணைக்கலாம். மகளுக்கு அடுத்த வருடம் ஜூன் மாதம் ஆரம்பிக்கும் கேது புக்தியில், இருக்கும் வீட்டின் அதிபதி போல பலன் தருவார் கேது எனும் விதிப்படி திருமணம் நடக்கும்.
பெருமதிப்பிற்குரிய ஜோதிட ஆசான் எனது மானசீக குரு ஆதித்யகுருஜி அவர்களுக்கு வணக்கம்…பலரும் குழப்பும் இந்த செவ்வாய் தோஷம்.. ராகு கேது தோஷம் குறித்து தெளிவான விளக்கம் கொடுத்து பலரது சந்தேகம் தீர்க்க உதவியமைக்கு நன்றி… ஐயா…