adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கோடிகளைக் கொட்டும் “மகா தனயோகம்” என்பது என்ன..? -D-027-Kodigalai Kottum “Maha Dhana Yogam..

சென்ற வாரம் எழுதிய “ஆயிரம் கோடிக்கு அதிபதி யார்” கட்டுரையில் ஒருவரை மிகப் பெரிய கோடீஸ்வரனாக்கும் அமைப்பு என்று நீங்கள் குறிப்பிடும் மகா தன யோகம் இந்த ஜாதகத்தில் இல்லையே என்ற சந்தேகம் பலருக்கு வந்திருப்பதை உங்களின் பின்னூட்டங்களின் மூலம் அறிகிறேன்.

மகா தனயோகம் என்பது ஒரு ஜாதகத்தில் 2, 9, 11-ம் அதிபதிகள் சுப வலுப் பெறுவதால் உண்டாவது. இவர்கள் மூவரும் இணைந்திருப்பதால் மட்டும் பலன் தருவது அல்ல. உண்மையில் 2, 9, 11-ம் அதிபதிகள் தனித்தனியே வலுப்பெற்று இருந்தாலும் மகா தனயோகம்தான்.

மேற்கண்ட இம்மூவரும் சுபத்துவமாக 2, 9, 11-ம் பாவகங்களிலேயே இணைந்திருப்பது முதல்தரமான அசைக்க முடியாத யோகம். இவர்கள் மூவரும் வேறு ஒரு நல்ல பாவகத்தில் சுபத்துவமாக இணைந்திருப்பதும், ஒருவருக்கு ஒருவர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொள்வதும் யோகம்தான்.

தனித்தனியே இவர்கள் மூவரும் வலுப்பெற்று இருக்கும் நிலையில் யோகத்தின் தர நிலைகள் மாறுமே தவிர, ஒருவருக்கு மிகப்பெரும் வருமானத்தைத் தரக்கூடிய தன, பாக்கிய, லாபாதிபதிகள் வலுப்பெற்று இருந்தால் அவர் பணக்கார யோகத்தை அடைந்தே தீருவார். எவ்வளவு பணத்தை அவர் வைத்திருக்கிறார் என்பது இந்தக் கிரகங்கள் தங்களுக்குள் இணைவு, பார்வை போன்ற தொடர்புகளைப் பெறுவதைப் பொருத்தது.

சென்றவாரம் நான் குறிப்பிட்டிருந்த வி.ஐ.பியின் ஜாதகத்தில் தனாதிபதியான குரு, நீசனை நீசன் பார்க்கும் அமைப்பில், மறைமுக உச்சநிலையை அடைந்திருக்கிறார். பாக்கியாதிபதியான 9-க்குடைய சந்திரன் பரிவர்த்தனை மூலம் ஒன்பதாமிடத்தில் இருக்கும் நிலை பெறுகிறார். லாபாதிபதி புதன் தன்னுடைய 11- ம் பாவகத்திற்கு, ஒன்பதாம் வீட்டில், அதாவது அவரது நண்பரான சுக்கிரனின் சுப வீடான ரிஷபத்தில் தனித்து அமர்ந்து குருவின் பார்வையைப் பெற்றிருக்கிறார்.

முக்கூட்டுக் கிரகங்களில் ஒன்றான புதன், மற்ற இரண்டு கிரகங்களான சூரியன், சுக்கிரனின் தொடர்பின்றி தனித்து அமர்வது மிகவும் அரிது. இதுபோன்று சுபத்துவமாக, தனித்திருக்கும் நிலைகளில் புதன், குருவுக்கு நிகரான சுபர் என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆகவே சென்றவாரம் நான் குறிப்பிட்ட வி.ஐ.பி.யின் ஜாதகத்தில் 2, 9, 11-ம் பாவக அதிபதிகள் வலுத்ததால் உண்டாகும் மகா தனயோகம் இருக்கவே செய்கிறது.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதைப் போல, ஒரே ஒரு விதியை மட்டும் வைத்து இதுபோன்ற நிலைகளை கணக்கிடக் கூடாது. ஒரு விதியின் சூட்சும அமைப்புகளை ஆராயும்போது நிச்சயமாக அங்கு, அந்த ஜாதகரின் நிலைக்கு காரணமும், யோகமும் கிடைத்தே தீரும்.

ஒருவர் அதிகமான வருமானத்தை சம்பாதிக்க வேண்டுமெனில், சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில், 2, 9, 11-ம் அதிபதிகள் தனிப்பட்டு வலுத்த நிலையில் இருக்க வேண்டும் என்பதே ஆதார விதி. அவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு இணைந்திருப்பது இந்த யோகத்தை மேலும் மெருகூட்டும். தொடர்பு அடையாவிட்டாலும் அது யோக நிலைதான்.

மேற்கண்ட ஜாதகத்தில் மகாதன யோகத்தை துல்லியமாக பார்க்கப் போனால், இரண்டாம் அதிபதி குரு உச்சநிலை பெற்று, பதினொன்றாம் அதிபதி புதனைப் பார்க்கிறார். இங்கே குரு ஒரு சூட்சும நிலையில் பரிவர்த்தனை பெற்ற சந்திரனையும் மறைமுகமாக பார்ப்பதாக எடுத்துக் கொள்ளலாம். எனவே இந்த ஜாதகத்தில் மகா தனயோகம் முழுமையாகவே இருக்கிறது.

ஆயினும் இந்த மறைமுகமான யோகத்தின் மூலம் இவர் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார் எனும்போது, பத்தாயிரம் கோடியை வைத்திருப்பவரின் யோக அமைப்பு எவ்வாறு இருக்கும், ஒரு லட்சம் கோடியைக் கொண்டவரின் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதையும் நாம் பிரித்து உணர வேண்டும்.

“ஜோதிடம் எனும் மகா அற்புதம்” தொடரின் ஆறாவது கட்டுரையில், இந்து லக்னத்தை பற்றி விளக்கும்போது, பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் சொந்தக்காரரான ஒரு மிகப்பெரிய பணக்காரரின் ஜாதகத்தை விளக்கி இருந்தேன்.

அதில் அவருக்கு துலாம் லக்னமாகி, பத்தில் சூரியன், புதன், செவ்வாய் இணைந்து மகா தனயோகம் உண்டாகி இருந்தது. (துலாம் லக்னம், கன்னி ராசி, 6-ல் ராகு, 7-ல் சனி, 10-ல் சூரி, சுக், புத, செவ். 11-ல் குரு, 12-ல் சனி, கேது) இந்த அமைப்புப்படி துலாம் லக்னத்திற்கு 2, 9, 11-ம் அதிபதிகளான சூரியன், புதன், செவ்வாய் ஆகியோர் இணைந்து, அதில் சூரியனும், செவ்வாயும் திக்பலம் பெற்றது பூரண மகாதன யோகம். எனவே அவர் பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

உண்மையில் பத்துக் கோடிக்கு அதிபதியும் கோடீஸ்வரன்தான், நூறு கோடிக்கு அதிபதியும் கோடீஸ்வரன்தான். ஆயிரம், பத்தாயிரம் கோடிகளுக்கு அதிபதியும்  கோடீஸ்வரன் என்றுதான் அழைக்கப்படுவார். மகாதன யோக அமைப்புகளின் சுபத்துவ கூடுதல், குறைவு நிலையைப் பொருத்து ஒருவரின் செல்வநிலை பத்து  முதல் 10,000 கோடி வரையும், அதற்கு மேலும் அமையும்.

கீழே இன்னுமொரு பெரும் பணக்காரரின் உதாரண ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். இவரும் பத்தாயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்ட ஒரு பெரும் கோடீஸ்வரர்தான்.

இவரும் துலாம் லக்னத்தில் பிறந்திருக்கிறார். பொதுவாகவே துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் வேலை செய்வதைவிட தொழில் செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். இந்த லக்னத்தின் குறியீடு வியாபாரிகளின் கையில் இருக்கும் தராசு என்பது குறிப்பிடத்தக்கது.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, தொழில் ஸ்தானமான கடகம் ஒரு ஜல ராசியாகும். மேலும் நீரைக் குறிக்கக் கூடிய சந்திரன் தொழில் ஸ்தானாதிபதியும்  ஆவார். சந்திரன் இவர்களுக்கு சுபத்துவ, சூட்சும வலுவோடு இருக்கும் நிலைகளில், தனது காரகத்துவமான திரவத்தொழிலில் மிகப் பெரிய முன்னேற்றத்திற்கு கொண்டு செல்வார். பத்தாமிடத்திற்கு கிடைக்கும் வேறு கிரகங்களின் தொடர்பையும், தசா, புக்தி அமைப்புகளையும் பொருத்து இந்த பலன் வேறுபடும்.

இந்தவார உதாரணமாக காட்டியிருக்கும் இந்த தொழிலதிபர் தன்னுடைய இளமைக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர். வாழ்வின் ஆரம்ப காலத்தில் டீக்கடை வைத்திருந்து, (திரவத் தொழில்) பின்னர் ஓட்டல் முதலாளியாக மாறி தொழிலில் காலூன்றியவர். தனது சுக்கிரதசை, சந்திர புக்தியில் அன்றைய முதலமைச்சரிடம் அறிமுகமாகி, அவர் மூலமாக மதுபானத் தொழிலுக்கு வந்தவர்.

ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் இவருக்கு மதுபான தொழில் மிகவும் ஏற்றத்தையும், மிகப்பெரிய லாபத்தையும் கொடுத்தது. தற்போதும் இவர் ஹோட்டல், மதுபானத் தொழில் இரண்டிலும் நீடித்திருக்கிறார்.

இவரது ஜாதகத்தில் 2, 9, 11-ம் அதிபதிகளான சூரியன், புதன், செவ்வாய் ஆகியோர் ஒன்பதாமிடத்திலேயே இணைந்திருக்கிறார்கள். யோகத்தின் மிக முக்கிய அமைப்பாக பாக்கியாதிபதி புதன் ஆட்சியாக இருக்கிறார். கூடுதலாக இவர்களுடன் லக்னாதிபதி சுக்கிரனும் இணைந்து இவர்கள் அனைவரையும் சுபத்துவப் படுத்துகிறார்.

முக்கியமாக லாபாதிபதி சூரியனுடன் பாக்கியாதியான புதன் இணைந்திருந்தாலும் புதன் அஸ்தங்கம் அடையவில்லை. அதேநேரத்தில் இவர்களுடன் இணைந்திருக்கும் லக்னாதிபதி சுக்கிரனும், செவ்வாயும் அஸ்தங்க நிலையில் இருக்கிறார்கள். சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்திருந்தாலும் புனர்பூசம் மூன்றாம் பாதத்தில் வர்கோத்தமம் அடைந்திருக்கிறார். இது ஒருவகையில் லக்னாதிபதியை வலுப் பெறச் செய்கிறது.

ஜாதகம் யோகமாக இருந்தாலும் வலுவான தசா, புக்தி அமைப்புகளே ஒரு மனிதனை கை தூக்கி விடும் என்பதன்படி, சுபத்துவமும் சூட்சும வலுவும் பெறாமல், பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்தில், மூலத்திரிகோண வலுப் பெற்ற ராஜயோகாதிபதி சனி தசையில் பதினான்கு வருடங்கள் இவருக்கு வறுமையில்தான் கழிந்தது.

அடுத்து, மகாதன யோக அமைப்பில் இருக்கும் பாக்கியாதிபதி புதனின் தசையில், சுயபுக்தி முடிந்த ஏறத்தாழ பதினெட்டு வயது முதல்தான் இவரது அதிர்ஷ்டம் செயல்பட ஆரம்பித்தது. டீக்கடை, ஹோட்டல் என கடுமையாக உழைத்து முன்னேறும் அளவிற்கு ஒரு அஸ்திவாரத்தை முப்பத்தியொரு வயதிற்குள் பாக்கியாதிபதி புதன் கொடுத்து விட்டார்.

அடுத்து நடைபெற்ற கேதுதசையும் இவருக்கு குறிப்பிடத்தக்க நன்மையைச் செய்தது. ராகு,கேதுக்கள் தாங்கள் இருக்கும் வீட்டின் அதிபதியைப் போலவும், தங்களோடு இணைந்திருக்கும் கிரகங்களைப் போலவும் பலன் தருவார்கள் என்ற விதிப்படி தன, பாக்கிய லாபாதிபதிகளின் இணைவைப் பெற்று, பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேதுவும் மகா தனயோகத்தை தரும் அமைப்பைப் பெற்றார். எனவே கேதுதசையும் புதன் தசையின் நீட்சியாகவே இருந்ததோடு ஹோட்டல் தொழிலில் நல்ல மேன்மையைக் கொடுத்தது.

முப்பத்தி எட்டு வயதிற்கு மேல் ஆரம்பித்த லக்னாதிபதி சுக்கிரனின் தசை, சுக்கிரனும் யோகத்தில் சம்பந்தப்பட்டு, வர்க்கோத்தம நிலையில், சுப கிரகங்களுக்கு மட்டுமே உரித்தான திரிகோணத்தில் இருப்பதால் இவரை வாழ்வின் உயரத்திற்கு செல்லும் அமைப்புகளை உருவாக்கிக் கொடுத்தார்.

அதேநேரத்தில் சுக்கிரன், சுபரான ஆறாம் அதிபதி குருவின் சாரத்தில் இருப்பதால் முன்னேற்றத்திற்குத் தேவையான சுபக் கடன்களை உருவாக்கி இவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றார்.

நமது கிரந்தங்களில் சுக்கிர தசை ஒருவருக்கு முப்பத்தி இரண்டு வயதிற்கு மேல்தான் வர வேண்டும் என்று சொல்லப்ப்பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது, குட்டிச் சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும் என்பதன் அடிப்படையில் மனம் காமத்தால் அலைபாய்ந்து பாதிக்கப்படாத முப்பத்தி இரண்டு வயதிற்கு மேல்தான் ஒருவருக்கு சுக்கிரதசை வரவேண்டும் என்று நமது மூல நூல்கள் உணர்த்துகின்றன.

இவரது முப்பத்தி எட்டு வயது முதல் நடைபெற ஆரம்பித்த சுக்கிர தசையில் தொழில் ஸ்தானாதிபதியும், திரவத் தொழிலுக்கு காரகனுமான சந்திரனின் புக்தியில் அப்போதைய முதல்வரின் அறிமுகம் மூலம் இவருக்கு மதுபான உற்பத்தி அனுமதி கிடைத்து, அதுமுதல் இவரது யோகம் ஆரம்பித்தது.

அஸ்தங்கம் செய்த கிரகங்களின் பலனை சூரியனே தனது தசையில் தருவார் எனும் விதிப்படி, செவ்வாய், சுக்கிரன் இருவரையும் அஸ்தங்கம் செய்த லாபாதிபதி சூரிய தசையில்தான், இவரது மகா தனயோகம் பூரணமாக செயல்பட ஆரம்பித்தது. சூரியதசை ஆறுவருட காலமும் இவர் தொழிலில் முதல் இடத்தில் புகழுடன் இருந்தார். அடுத்த ஜீவனாதிபதி சந்திர தசையிலும் இது நீடித்து பதினாறு வருடங்கள் நீடித்த பெரும் வருமானத்தை இவர் அடைந்தார்.

அடுத்து வந்த செவ்வாய் தசை அஸ்தங்கமடைந்த தசை என்பதால் பெருத்த நற்பலனை தரவில்லை. சிக்கல்கள் தந்தது. செவ்வாய் தசை இவருக்கு சரிவுதான். செவ்வாய் தசையின் நடுப்பகுதி முழுவுதும் அஷ்டமச் சனி நடந்ததும் ஒரு காரணம். தற்போது இவருக்கு ராகுதசை நடந்து வருகிறது. ராகுவும் சுபரான குருவின் வீட்டில் அமர்ந்து தான, பாக்கிய, லாப, லக்னாதிபதிகளின் பார்வையை பெற்றிருப்பதால் சோதனைகள் எதையும் தர மாட்டார்.

மகாதன யோகத்தின் மூலம் மிகவும் சாதாரண நிலையில் இருந்து பெரும் பணக்கார நிலையை அடைந்திருக்கும் உன்னத ஜாதகம் இது.

அடுத்த வெள்ளி தொடருவோம்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *