ஒரு வாசகர், திண்டுக்கல்.
கேள்வி :
தந்தைக்கு நிகரான குருஜி அவர்களுக்கு என் தாழ்மையான வணக்கம். ஒரு மகனாக என் துயரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்வில் இதுவரை பணமும், சொத்தும் சேர்க்கவில்லை என்றாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக, திருமணம் ஆனதிலிருந்து குடும்பத்தில் தினந்தோறும் சண்டை, சச்சரவு, அவமானம், அசிங்கம், கடன் ஆகியவற்றை என் மனைவியால் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். திருமண நாளிலிருந்து எங்கள் இருவருக்கும் தாம்பத்தியம், சந்தோஷம் என்பதே கிடையாது.
என் மீதுதான் குறைபாடு உள்ளது. ஒரு மாத சிகிச்சைக்குப் பின் தெய்வஅருளால் மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். பிறகு சிகிச்சைக்கு செல்லாததால் மறுபடியும் தாம்பத்தியம் கொள்ள முடியவில்லை. வாழ்க்கையே வெறுப்பாக உள்ளது. என் மனைவி ஒரு கோபக்காரி, பிடிவாதக்காரி, சுயநலவாதியாக இருக்கிறார். வாழ்க்கையில் சந்தோஷம், நிம்மதி, முன்னேற்றம் எப்போது வரும்? மருத்துவ சிகிச்சை மீண்டும் எடுத்துக் கொண்டால் தாம்பத்திய சந்தோஷம் கிடைக்குமா? அலோபதி, சித்தா இரண்டில் எதில் தீர்வு கிடைக்கும்? உண்மை எதுவானாலும் மறைக்காமல் கூறுங்கள். எதையும் தாங்கும் சக்தியோடு நான் காத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் கூறும் பதிலை தெளிவாக எடுத்துக் கொள்வேன்.
பதில் :
ல சு செ | ரா | ||
சூ |
28-2-1983
காலை
8-10
திண்டுக்கல்
|
||
பு | சந் | ||
கே | கு | சனி |
உண்மை எதுவானாலும் மறைக்காமல் கூறுங்கள். எதையும் தாங்கும் சக்தியோடு நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று எழுதினால் என்ன அர்த்தம்? உன்னால் ஒன்றுமே முடியாது. ஜாதகப்படி நீ ஆண்மகனே இல்லை என்று நான் பதில் சொல்லுவேன் என்று உன் மனதை தயார்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறாயா? முட்டாள். வாழத் தெரியாத முட்டாள்.
ராசிக்கு எட்டில் செவ்வாய், லக்னத்திற்கு எட்டில் சனி என்ற அமைப்பு கொண்ட உனக்கு சில காலம் வரை திருமண வாழ்க்கை சிக்கலாகத்தான் இருக்கும். அதைவிட மேலாக தாம்பத்திய சுகத்தை கொடுக்க கூடிய சுக்கிரன் உச்சமாகி, ஒரு பெண்ணை முழுமையாக திருப்திப் படுத்தக் கூடிய தகுதி பெற்ற பூரண ஆண்மகனாகிய உனக்கு, சுக்கிரன் செவ்வாயுடன் நெருக்கமாக இணைந்துள்ளதால் இதுபோன்ற மனக் குழப்பங்கள் வந்து விட்டன.
சுக்கிரன் உச்சம் பெற்று விட்டாலே ஒருவன், ஒரு பெண்ணிற்கு முழு சுகத்தை தரவல்ல ஆண்மகன்தான். அந்த சுக்கிரன் ராகுவோடு இணையும்போது மட்டுமே இந்த பலன் மாறும். சுக்கிரன் செவ்வாயுடன் இணைவது உன்னைப் போன்ற தகுதி இருந்தும், இல்லை என்று நினைப்பது போன்ற குழப்பங்களையும், மாற்று முறை தாம்பத்திய ஆர்வங்களையும் தரும்.
சரியான இளம்பருவத்தில் 24 வயது முதல், தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் பாபத்துவத்துடன் அமர்ந்து, செவ்வாயின் பார்வை பெற்ற ராகு தசை நடக்கிறது. தனித்து சுபர் பார்வை, தொடர்பு இல்லாத மிதுன ராகு நன்மைகளைத் தர மாட்டார். மேலும் ராகுவிற்கு வீடு கொடுத்த புதன் சனியின் வீட்டில் இருக்கிறார். என்னுடைய கணிப்பின்படி 24 வயது வரை நீ நன்றாகத்தான் இருந்திருப்பாய். அதன்பிறகுதான் உனக்கு தாம்பத்திய விஷயத்தில் இதுபோன்ற தாழ்வு மனப்பான்மையும், கூடுதலாக அதிகமான ஆன்மீக ஈடுபாடும் வந்திருக்கும்.
தாம்பத்திய உறவு என்பது பசி, தாகம் போல ஒரு ஜீவனுக்கு மிகவும் தேவையான ஒன்று. மனிதன் பிறந்ததே வம்ச விருத்திக்காகத்தான். அதற்குத் தேவையான புத்திர பாக்கியத்தை தாம்பத்திய சுகத்தின் மூலமாகவே அவன் பெறுகிறான். அதற்காகவே ஒரு ஆணையும், பெண்ணையும் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் இணைக்கிறோம்.
மனைவி சுயநலக்காரி, கோபக்காரி என்று குற்றம் சாட்டும் நீ, திருமணத்திற்கு முன்பே உன்னுடைய தாழ்வு மனப்பான்மையை நீக்கி, உன்னை தகுதி உள்ளவனாக ஆக்கிக் கொண்டு இருக்க வேண்டும். திருமண வாழ்வின் ஆதாரமான தாம்பத்திய சுகமே கிடைக்கவில்லை என்றால் ஒரு பெண், உன் மீது கோபப்படாமல் உன்னை மடியில் போட்டு கொஞ்சிக் கொண்டு இருப்பாளா? உண்மையைச் சொன்னால் உன் மனைவிக்கு நீ கோவில் கட்டி கும்பிட வேண்டும்.
ஒரு சிறு குறை என்றாலும் விவாகரத்துக்கே செல்லும் பொறுமை என்பது சிறிதளவும் இல்லாத இக்காலத்துப் பெண்கள் மத்தியில், உன்னை சமாளித்து மருத்துவத்திற்கும் அனுப்பி தாய்மைப் பேறும் அடைந்திருக்கிறாள் என்றால் அவள்தான் உன்னுடைய தெய்வம். அவளைப் போய் சுயநலக்காரி என்கிறாய். என் கணவன், என் குழந்தைகள் என்று நம்முடைய பெண்கள் சுயநலமாக இருக்கும் ஒரே காரணத்தால்தான், உலகின் மிக உன்னத நம்முடைய கலாச்சாரம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
ஜாதகப்படி உடல்ரீதியிலான குறை உனக்கு இல்லவே இல்லை. ஆனால் மனரீதியிலான குறைபாடு இருக்கிறது. ஆங்கில மருத்துவமாக இருந்தாலும், சித்தாவாக இருந்தாலும் உன் மனதை தெம்பூட்டி வைத்தியம் பார்க்கக் கூடிய மருத்துவர் மட்டுமே இப்போது உனக்குத் தேவை. ஜாதகத்தில் பௌர்ணமி யோகம் உள்ளதாலும், லக்னாதிபதி குரு லக்னத்தைப் பார்ப்பதாலும் குழந்தை பிறந்த பிறகு உன்னுடைய மனப்போக்கு ஓரளவுக்கு மாறி தன்னம்பிக்கையை பெறுவாய். 42 வயதில் ராகுதசை முடியும் வரை இதுபோன்ற மனச்சிக்கல்கள் உனக்கு நீடிக்கத்தான் செய்யும்.
ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவே ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி மறுநாள் அதிகாலை எப்பெருமான் காளத்திநாதனின் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொள். வருடம் ஒருமுறை ராகுதசை முடியும் வரை காளஹஸ்தி சென்று வா. வியாழக்கிழமைதோறும் அருகில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி பெருமானை வழிபடு.
ஜாதகப்படி தற்போது வெள்ளை நிற ஆடைகளை விரும்பி அணிந்து கொண்டிருப்பாய். வெள்ளை நிறம் உனக்கு ஏற்றதல்ல. முழுக்க முழுக்க மஞ்சள் நிற ஆடைகளுக்கு மாறு. மஞ்சள் நிறத்தை அதிகமாக உபயோகப்படுத்துவது உனது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குருதசை முதல் மனைவி, குழந்தைகளோடு, கவனி, “குழந்தைகளோடு” நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள்.
(18.09.2018 மாலை மலரில் வெளிவந்தது)