adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சட்டத் துறையில் சாதிப்பவர் யார்..?- D-024 – Sattathuraiyil Sathippavar Yar?

ஒருவர் சட்டத்துறையில், வழக்கறிஞராக பணியாற்ற என்னவிதமான ஜாதக அமைப்பு இருக்க வேண்டும் என்பதை கடந்த இரண்டு வாரங்களாகப் பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியாக இந்த வாரமும் இரண்டு வழக்கறிஞர்களின் ஜாதக விளக்கங்களை கொடுத்திருக்கிறேன்.

உதாரணமாகக் காட்டப்படுபவர்கள் சட்டத்துறையில் நல்ல அனுபவங்களை கொண்டிருக்க வேண்டும் மற்றும் நீடித்து தொழில் செய்பவராக இருக்க வேண்டும் என்ற காரணத்தால், இங்கே 50 வயதுக்கு மேற்பட்ட இரண்டு வழக்கறிஞர்களின் ஜாதகத்தை விளக்கியிருக்கிறேன்.

இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் வெவ்வேறு நகரங்களில் தற்போதும் சட்டத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள். தன் வாழ்நாள் முழுவதும் சட்டத்துறையில் இருப்பவர்கள். இவர்களில் கோவையில் பிறந்திருப்பவரின் ஜாதக அமைப்பினை முதலில் பார்க்கலாம்.

இவருக்கு தனுசு லக்னம், துலாம் ராசியாகி வழக்கறிஞர் தொழிலைக் குறிக்கும் முதன்மைக் கிரகமான சனி, இரண்டாம் வீட்டில் பாக்கியாதிபதி எனப்படும் ஒன்பதாம் அதிபதி சூரியனின் நட்சத்திரத்தில், ராசி, நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தம நிலையில் அமர்ந்திருக்கிறார்.

மேலும் சந்திர கேந்திரத்தில் நீசபங்க அமைப்பில் இருக்கும் குருவுடன், ஆறு டிகிரிக்குள் இணைந்து சுபத்துவ அமைப்பிலும், கேதுவுடன் டிகிரி அளவில் அதிக தூரத்தில் இணைந்து சூட்சும வலுவோடும் இருக்கிறார். பொய் சொல்ல வைக்கும் கிரகமான சனி, சுப, சூட்சும வலு அமைப்போடு வாக்கு ஸ்தானத்திற்கும் அதிபதியுமாகி, லக்னத்திற்கு இரண்டில் அமர்ந்து, ராசிக்கு பத்தாம் வீட்டை பார்க்கிறார்.

வழக்கறிஞர் தொழிலின் இரண்டாம் நிலை கிரகமான குருவும் இங்கே சனியுடன் இணைந்து நீசபங்க வலுப்பெற்று, லக்னம், ராசி இரண்டின் பத்தாமிடங்களையும் பார்க்கிறார். ஆக இவரது ஜாதகம் பார்த்தவுடனேயே தெளிவாக வழக்கறிஞர் என்று சொல்லி விடக் கூடிய ஒரு அமைப்பு. ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிகமான சுப, சூட்சும வலு அமைப்பில் இருக்கிறதோ அந்தக் கிரகத்தின் தொழில் அமையும் என்பதை நான் அடிக்கடி குறிப்பிடுகிறேன். அந்த அமைப்பில் இங்கே சனி ஒருவர் மட்டுமே இருப்பதால் மேற்படி ஜாதகருக்கு சனியின் சட்டத் தொழில் மட்டுமே அமையும் என்பதை இளமையிலேயே சொல்லி விட முடியும்.

ஒருவர் எந்தத் துறையில் சம்பாதிப்பார், மற்றும் தொழில் செய்வார், வேலையில் இருப்பார் என்பதை அவருடைய 2, 6, 9, 10, 11-ம் பாவகங்கள் குறிப்பிடும் என்பதை வேத ஜோதிடம் தெளிவாக எடுத்துரைக்கிறது. அதன்படி இந்த ஜாதகத்திற்கு தனத்தைக் கொடுப்பவர் சனி மட்டுமே ஆவார்.

ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிக சுபத்துவ வலிமையுடன் இருக்கிறதோ, அந்தக் கிரகத்தின் தொழில் ஒருவருக்கு லாபத்தைத் தரும். இதோடு மேலே சொல்லப்பட்ட தன, பாக்கிய, லாப ஸ்தானங்களின் சுப வலிமையையும் கணிக்க வேண்டும்.

உதாரணமாக இரண்டாம் வீட்டை விட, ஒன்பதாம் அதிபதி வலுத்திருந்தால் பாக்கியாதிபதியின் காரகத்துவங்களில் ஜாதகர் சம்பாதிப்பார். அவரை விட பதினொன்றாம் அதிபதி வலுத்திருந்தால் அவரின் மூலமாக பணம் வரும். இதில் யார் அதிக சுபத்துவ வலுவோடு இருக்கிறார்கள் என்பது மிகவும் நுணுக்கமாக கணிக்க வேண்டிய ஒன்று.

ஒரு மனிதன் 2, 10-ம் பாவகங்களின் வழியாக மட்டும்தான் பொருள் சம்பாதிக்க முடியும். இது ஒரு நிச்சயமான விதி. அவர் எப்படி, எந்த நிலையில் பணத்தைச் சம்பாதிப்பார் என்பதை 6. 9, 11-ம் பாவகங்கள் குறிப்பிடுகின்றன. லக்னம் வலுத்திருக்கும் நிலையில் இது லக்னப்படி 2, 10-ம் பாவகங்களாகவும், ராசி வலுத்திருக்கும் நிலையில் இது ராசிப்படி 2, 10-ம் வீடுகளாகவும் அமையும்.

தனத்தைக் குறிக்கக் கூடிய 2, 9, 11-ஆம் பாவகங்களையும், செயல்திறன், தொழில், மற்றும் வேலையைக் குறிக்கக் கூடிய ஆறு, பத்தாம் பாவகங்களின் வலிமையையும் கணக்கிட்டு ஒருவரின் தொழில் அமைப்பை அல்லது அவருக்கு ஏற்ற தொழில் என்பதையும், அல்லது அவர் எதில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் உறுதியாகச் சொல்லலாம்.

ஒரு கிரகத்திற்கு காரகத்துவங்கள் எனும் ஏராளமான தொழில் அமைப்புகள் இருக்கும் நிலையில், அது தனது காரகத்துவங்களில் எந்தத் தொழிலைத் தரும் என்பது சில நேரங்களில் குழப்பத்தைத் தரும்.

உதாரணமாக மேலே குறிப்பிட்டிருக்கும் வழக்கறிஞரின் ஜாதகத்தில் சனி வலுத்திருக்கும் நிலையில் சனியின் காரகத்துவங்களில் ஒன்றான வழக்கறிஞர் தொழிலில் இவர் இருக்கிறார். சனிக்கு இன்னும் ஏராளமான தொழில் காரகத்துவங்கள் இருக்கின்றன எனும் நிலையில் சனியின் இந்தத் தொழில்தான் அமையும் என்பதை எப்படி கணிப்பது?

இரும்பு, பழைய பேப்பர், வீணாகும் பொருட்கள், கழிவுகள், பெட்ரோல். கெமிக்கல், மது போன்ற நீசத்திரவங்கள், சொல்லக் கூச்சப்படும் தொழில்கள், மெக்கானிக், ஆன்மீக விஷயங்கள் போன்றவைகளும் சனியின் தொழில்கள்தான். இவைகளில் எவை அமையும் என்பதை எப்படிக் கணிப்பது?

இதுபோன்ற குழப்பங்களுக்குத்தான் கிரகச் சேர்க்கைகளும், ஒரு தொழிலின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைக் கிரகங்கள் எனும் அமைப்புகளும் பயன் படுகின்றன. மேற்கண்ட கேள்விக்கு, தொழிலின் இரண்டாம் நிலை கிரகத்தின் துணை கொண்டு பதில் சொல்லி விடலாம்.

இங்கே சுபத்துவ சனி கேதுவுடனும், குருவுடனும் இருப்பதால் ஜாதகர் வழக்கறிஞராக இருக்கிறார். இதே சனி இன்னொரு பாப கிரகமான ராகுவுடன் இணைந்திருந்தால், சனி இருள் நிலை பெற்று வேஸ்ட் பேப்பர், போன்ற அழுக்குத் தொழிலில் ஜாதகர் இருப்பார்.

தேய்பிறைச் சந்திரனும் இதில் இணைந்து சனி, ராகு, சந்திரன் இணைவு இருக்குமாயின் இணையும் தூரத்தையும், பத்தாம் வீட்டோனின் வலுவையும் பொருத்து ஜாதகர் மது சம்பந்தப்பட்ட நீசத் தொழில்களில் முதலாளியாகவோ. அல்லது மதுக்கடை பாரில் டேபிள் துடைக்கும் தொழிலாளியாகவோ இருப்பார்.

சுபத்துவ, சூட்சும வலுப்பெற்ற சனி, குருவுடன் இணைந்த நிலையில் ஜாதகர் இங்கே சட்டத் துறையில் இருக்கிறார். ராசி, மற்றும் லக்னத்தின் பத்தாமிடங்களோடு குருவின் தொடர்பு அதிகமாக இருப்பதால் இவருக்கு குருவின் காரகத்துவமான நீதித்துறையின் இரண்டாம் நிலையான வக்கீல் தொழில் அமைந்தது.

இங்கே குரு நீசமாகாமல் ஆட்சி பெற்று அவருடன் சனி இணைந்திருப்பாராயின் இவர் வக்கீலாக இல்லாமல் நீதிபதியாக இருந்திருப்பார்.

இதையே இன்னும் சற்று வேறுவிதமாக விளக்குவதாக இருந்தால், இதே அமைப்பு வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் இருப்பதால் ஜாதகருக்கு சட்டத் துறை அமைந்தது. இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து ஜாதகர் பிறந்திருந்து, குரு, சனி, கேது இணைவு இரண்டாமிடமாக இல்லாமல், லக்னமாக அமைந்திருந்தால் ஜாதகர் ஆன்மீகத் துறையில் இருந்திருப்பார். லக்ன குரு, சனி, கேது இணைவு ஜீவனாதிபதியின் வலுவைப் பொருத்து பூசாரி, சாமியார் போன்ற ஆன்மீகச் சூழல்களைத் தரும்.

மேலும் ஒரு சிறப்பாக இந்த ஜாதகத்தில் சுபத்துவச் சனி, செவ்வாயைத் தவிர அனைத்துக் கிரகங்களோடும் தொடர்பு கொள்கிறார். அதாவது சனி, குரு மற்றும் கேதுவுடன் இணைந்து, சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், ராகு ஆகிய கிரகங்களைப் பார்க்கிறார். ஜாதகத்தின் ஒட்டு மொத்த நிலையும் சனியின் ஆளுகைக்குள் வந்து விட்டது. இது ஒரு சிறப்பான நிலை.

இன்னும் நுணுக்கமாக பார்த்தோமேயானால் சனி, சுபத்துவ, சூட்சும வலுப் பெற்றதால் மட்டுமே இது வக்கீல் தொழில் செய்யும் யோக ஜாதகம். சனி தனித்து, குருவுடன் இணையாமல் பாபத்துவ அமைப்பில் இருந்திருந்தாரேயானால் மொத்த ஜாதகத்தையும் தனது பார்வை மற்றும் இணைவினால் கெடுத்திருப்பார். ஜாதகரை தரித்திரன் ஆக்கியிருப்பார். சுபத்துவ, சூட்சும வலுப்பெறாமல் நேர்வலு மட்டும் அடைந்த சனியின் பார்வை மிகவும் கடுமையான பலனைத் தரும். மற்றும் அனைத்துக் கிரகங்களையும் கெடுக்கும்.

கிரகங்களின் இணைவுகளோடு தசாபுக்தி அமைப்புகளும் ஒரு மனிதனின் தொழிலை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஜாதகர் விசாக நட்சத்திரம் முதலாம் பாதத்தில் பிறந்திருக்கிறார். இவரது முதல் பதினாறு வருடங்கள் நீதித்துறைக் கிரகமான குருவின் ஆதிக்கத்திலும், அதன்பிறகு பத்தொன்பது வருடங்கள் முப்பத்தி ஐந்து வயது வரை சட்டத்துறைக் கிரகமான சனியின் ஆதிக்கத்திலும் கழிந்திருக்கின்றன.

எனவே இளமை முழுவதும் இவர் குரு, சனி ஆதிக்கத்தில் இருந்திருப்பதால் இவரது வக்கீல் அமைப்பு உறுதியாகிறது. இதே அமைப்பினை சென்ற வாரம் எடுத்துக் காட்டியிருந்த சேலம் வழக்கறிஞரின் ஜாதகத்திலும் பார்த்தோம்.

சிலர் இளமையில் வேறு படிப்போ, துறையோ படித்து விட்டு நடுத்தர வயதில் சட்டத் துறைக்கு வருவார்கள். அப்படிப்பட்டவர்களின் ஜாதகங்களைப் பார்த்தால் குரு, சனி போன்ற கிரகங்களின் ஆதிக்கம் அவர்களுக்கு நடுத்தர அல்லது முதுமை வயதில் வந்திருக்கும்.

அடுத்து இன்னொரு வழக்கறிஞரின் ஜாதகத்தை கீழே பார்க்கலாம்.

இந்த ஜாதகருக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசியாகி, சட்டத்துறையின் முதன்மைக் கிரகமான சனி, வளர்பிறைச் சந்திரனின் இணைவோடு, ராசி, நவாம்சம் இரண்டிலும் வர்கோத்தம நிலை பெற்று சுபத்துவ அமைப்பில் இருக்கிறார்.

(இங்கே சந்திரன் நீசம் பெற்று இருக்கிறாரே, அது வலுவிழந்த நிலை இல்லையா? மேலும் சந்திரன்தான் அனைவருக்கும் நீசபங்கம் அளிக்கிறார், சந்திரனே நீசம் அடையும் போது அவரது நீசபங்க அமைப்புகள் என்ன என்று பலர் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறீர்கள். வேறொரு சந்தர்ப்பத்தில் இது பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகிறேன்.)

இங்கே சனி எட்டில் மறைந்திருக்கிறாரே, நீச சந்திரனுடனும் இணைந்திருக்கிறாரே எப்படி வலுவாவார் என்ற சந்தேகம் எழுமாயின் நீங்கள் வேத ஜோதிடத்தின் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

வேத ஜோதிடத்தின் உயர்நிலை புரிதலான ஒரு கிரகத்தின் சுப, பாபத்துவ நிலைகளே பலன் சொல்வதற்கு மிகவும் முக்கியமானது. பாபக் கிரகமாக இருந்தால் சூட்சும வலுவும் அவசியமானது. இங்கே சனி எட்டில் மறைந்திருப்பதன் மூலம் சூட்சும வலுவினை அடைந்திருக்கிறார்.

எட்டில் சுப, சூட்சும வலுவோடு மறைந்திருக்கும் சனி, தனது வீடும், தொழில் ஸ்தானமுமான லக்னத்திற்கு பத்தாம் வீட்டை மூன்றாம் பார்வையாகவும், ராசிக்கு பத்தாம் வீட்டை தனது பத்தாம் பார்வையாகவும் பார்க்கிறார். அவரது நேர் ஏழாம் பார்வை வாக்குஸ்தானமான இரண்டாம் வீட்டில் படுகிறது. இது வக்கீல் தொழிலுக்கான பூரணமான அமைப்பு.

இரண்டாம் நிலையாக நீசபங்க சுக்கிரன், உச்ச புதனுடன் இணைந்த குருவும் தனது ஐந்தாம் பார்வையால் லக்னத்திற்கு பத்தாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையால், இரண்டாம் வீட்டையும் பார்க்கிறார். ஆக ராசி, லக்னத்தின் இரண்டு, பத்தாம் வீடுகளுக்கு குரு, சனி இரண்டின் சுபத்துவ தொடர்புகள் கிடைக்கின்றன. எனவே இவர் வழக்கறிஞராக இருக்கிறார். மேலும் வாக்கு ஸ்தானதிபதியான சுக்கிரன் நீசபங்க அமைப்பில் குருவுடன் இணைந்திருப்பதும் இதனை உறுதி செய்கிறது.

இன்னும் சில விளக்கங்களை அடுத்த வெள்ளி தொடருவோம்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

One thought on “சட்டத் துறையில் சாதிப்பவர் யார்..?- D-024 – Sattathuraiyil Sathippavar Yar?

  1. பெருமதிப்பிற்குரிய ஜோதிட ஆசான் எனது மானசீக குரு அவர்களுக்கு வணக்கம்…அருமையான அற்புதமான விளக்கம் ஐயா.. மிகத்தெளிவாக அழகாக புரிய வைக்கிறீர்கள் ஐயா… மிக்க மகிழ்ச்சி..நன்றி ஐயா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *