சங்கீதா, நாவலூர்
கேள்வி :
அண்ணனுக்கு 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. கல்யாண நாள் முதல் அண்ணனுக்கும் அண்ணிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அண்ணி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ஒன்றரை ஆண்டுகள் பிரிந்திருந்த நிலையில், ஒருநாள் தன்னைத் தானே எரித்துக் கொண்டு துர்மரணம் அடைந்தார்.
அண்ணியின் வீட்டார் அண்ணன் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். 10 ஆண்டுகள் ஆகியும் வழக்கு முடிந்தபாடில்லை. பலமுறை எடுத்துச் சொல்லியும் மறுமணத்திற்கு அண்ணன் சம்மதிக்கவில்லை. வழக்கு எப்போது முடிவுக்கு வரும்? அண்ணனுக்கு இன்னொரு திருமணம் உண்டா? அவரது எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில் :
குரு கே | |||
சுக் |
8-1-1977
அதிகாலை
5-30
விளாத்திகுளம்
|
சந் சனி | |
ல சூ பு செ | ரா |
தனுசு லக்கினத்திற்கு சுக்கிரதசை நன்மைகளைச் செய்வதில்லை. அதே நேரத்தில் ஒரு கிரகம் நன்மையைச் செய்யாது என்றாலும் அது தரவேண்டிய செயல்பாடுகளை அந்தக் கிரகம்தான் கொடுத்தாக வேண்டும். சுக்கிரன் ஒரு மனிதனுக்கு காமம், மனைவி, வீடு, வாகனம் போன்றவற்றை தருவார். அவர் நல்லவர் ஆகாத நிலையிலும் அந்த ஜாதகருக்கு அவர்தான் அவரது செயல்களை தரவேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு கிரகம் தன்னுடைய காரகங்களைக் கொடுத்து ஆதிபத்தியங்களின் மூலம் தொல்லைகளைத் தரும். அதனால்தான் தாம்பத்திய சுகத்தைக் கொடுத்த பெண்ணின் மூலமாகவே உன் அண்ணனுக்கு சுக்கிரனின் ஆறாமிட ஆதிபத்தியங்களான வம்பு, வழக்கு வந்தது.
தசாநாதனும், புக்தி நாதனும் ஆறுக்கு, எட்டாக அமர்ந்திருக்கும் சஷ்டாஷ்டக நிலையில் ஒரு மனிதனுக்கு நல்லது நடக்கிறது என்றால் பின்னால் பிரச்சினை வரப் போகிறது என்று அர்த்தம். அண்ணனுக்கு சஷ்டாஷ்டகமாக அமைந்த சுக்கிரதசை, சனி புக்தியில் திருமணம் நடந்தது தவறு. அதிலும் சனி எட்டில் அவருக்கு ஆகாத அஷ்டமாதிபதியுடன் இருக்கும் நிலையில் திருமணத்தின் மூலமாக கடுமையான பிரச்சினைகளை தருவார் என்பதை சாதாரண அனுபவம் உள்ள எந்த ஒரு ஜோதிடராலும் சொல்லிவிட முடியும்.
நடப்பது அனைத்தும் நம்முடைய கர்மா என்பதால் நடப்பவற்றை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அண்ணனின் ஜாதகப்படி தற்போது அவருக்கு 8-க்குடைய சந்திர தசை ஆறு மாதமாக நடந்து கொண்டிருக்கிறது. சந்திரன் ஏழாம் அதிபதி புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் சனியுடன் நெருங்கி இணைந்து பாபத்துவமாகி எட்டிலேயே இருக்கிறார். இந்த தசை அண்ணனுக்கு நன்மை செய்யாது. எட்டுக்குடையவன் தசையில் வழக்கு முடிவது சாதக பலனைத் தராது. சிக்கல்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீடிக்கும்.
லக்னாதிபதி குரு, கேதுவுடன் இணைந்து, சனியின் பார்வையும் பெற்று இருப்பதால் ஒருமுறை ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலையே ஸ்ரீகாளஹஸ்தி சென்று தங்கி வழிபட்டு வரச் சொல்லுங்கள். குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும் செய்து கொள்ளுங்கள். அவற்றை மாலைமலரில் முன்பே எழுதியிருக்கிறேன். இறைவழிபாட்டின் மூலம் அண்ணனின் இன்னல்கள் தீரும். வாழ்த்துக்கள்.
(11.09.2018 மாலை மலரில் வெளிவந்தது.)