ஒருவர் வழக்கறிஞராவதற்கான ஜாதக அமைப்பு பற்றி எழுதிய கட்டுரைக்கு உங்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்திருப்பதை அறிகிறேன். தொலைபேசி, முகநூல், யூடியூப் வாயிலாக இதுபற்றி அதிகம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறீர்கள்.
ஜோதிடம் என்பது எதையும் மிகத் துல்லியமாகச் சொல்லும் ஒரு குழப்பமற்ற கலை. ஆனால் இங்கே நடைபெறுவது, யானையைக் குருடர்கள் பார்த்த கதைதான், இந்த மாபெரும் கலையை தங்களுடைய ஞானத்திற்கேற்ப ஜோதிடர்கள் பார்க்கும் விதம்தான் தெளிவற்ற நிலையில் இருக்கிறது. அதற்கு ஜோதிடத்தைக் குறை சொல்லக் கூடாது.
ஒரே நிலையில் இருக்கும் ஜோதிடத்தை, ஜோதிடர்கள்தான் தங்களுடைய அனுபவத்திற்கேற்ப பலவித கோணங்களில் அணுகுகிறார்கள். அது அவர்களுக்கு பலவிதமான பலன்களைச் சொல்கிறது. அது ஜோதிடத்தின் தவறல்ல. ஜோதிடரின் தவறு. தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் எந்த விதிகளும் மூல அமைப்புகளில் இல்லை. ஜோதிடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் தங்களுடைய குறைந்த அனுபவங்களைக் கொண்டு விதிகளைப் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.
ஒருவரின் தொழில் அமைப்புகளுக்கோ அல்லது ஏதேனும் ஒரு நிலை மற்றும் சம்பவத்திற்கோ, இங்கே சொல்லப்படும் ஏராளமான விதிகளை, ஒரு நேர்கோட்டில் அமைத்து விடலாம். அந்த நேர்கோட்டை அமைப்பதற்கு அபாரமான ஞானம் தேவைப்படும், அவ்வளவுதான்.
துரதிர்ஷ்டவசமாக ஜோதிடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அனைவரும் முழுமையான ஞானம் பெற்றவர்கள் இல்லை. ஜோதிடத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு தொழில் செய்பவர்கள்தான் இங்கே அதிகம். இது எல்லாத் துறைக்கும் பொருந்தும்.
அனைத்துத் துறையிலும் முன்னோடிகள், சராசரியானவர்கள், அனுபவம் உள்ளவர்கள், அது இல்லாதவர்கள், ஞானம் கைவரப் பெற்றவர்கள், ஞானம் இருப்பது போல நடிப்பவர்கள் என்று பலவகைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஜோதிடத் துறையும் அதற்கு விலக்கல்ல. வயதைக் காரணம் காட்டியோ, ஆடை அலங்காரத்தின் மூலமோ ஒருவர் தன்னை ஜோதிடராக காட்டிக் கொண்டு பிழைப்பை ஓட்டி விடலாம். இதற்கு ஜோதிடக்கலை பொறுப்பாகாது. வழக்கறிஞர் பற்றிய கட்டுரை பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது உங்களின் கருத்துக்களில் இருந்து தெரிகிறது. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. பார்ப்பதற்கு ஜோதிடம் முரட்டுக் காளையாக தெரிந்தாலும், பிடிபட்டு விட்டால் கட்டின பசுவாக இருக்கும். நீங்கள் பழக வேண்டும். அவ்வளவுதான்.
சென்ற வாரக் கட்டுரையில் பொய் சொல்ல வைக்கும் முதன்மைக் கிரகமான சனி, குருவின் தொடர்போடு சுபத்துவமாகி, லக்னம் மற்றும் ராசியின் இரண்டு மற்றும் பத்தாம் பாவகங்களை தொடர்பு கொள்ளும் நிலையில், ஒருவர் வழக்கறிஞராக முடியும் என்று குறிப்பிட்டிருந்தேன். இதுபோலவே ஒரு தொழிலின் அனைத்து விதிகளையும் இரண்டே வரிகளில் அடக்கிவிட முடியும்.
ஆய்வுநோக்கில் ஆயிரக்கணக்கான ஜாதகங்களை பார்த்திருக்கும் நான், ஒவ்வொரு தொழிலுக்கும் அது சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஜாதகங்களை துல்லியமாக ஆராய்ந்திருக்கிறேன். அவற்றைப் பாதுகாத்தும் வைத்திருக்கிறேன்.
ஒவ்வொரு கிரகத்தின் காரகத்துவங்களையும், ராசிகளின் ஆதிபத்தியங்களையும் விளக்கும் மூலநூல்களின் கருத்துக்களை சரியாகப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்லது புரிந்து கொள்ளும் அளவிற்கு ஞானம் இல்லாதவர்களே விதிகளில் குழப்பங்களை அடைகிறார்கள். அரைகுறை ஞானம் உள்ளவர்கள்தான் ஜோதிடத்தின் சூட்சும விதிகளைப் புரிந்து கொள்ள முடியாமல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.
சமீபத்தில் ஒரு வீடியோவை பார்க்க நேர்ந்தது. அதில் ஒருவர் பாரம்பரிய ஜோதிடத்தின் சில விதிகளை குறை சொல்லி, முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து சமர்ப்பித்த ஐம்பது அரசு ஆசிரியர்களின் ஜாதகங்களை காட்டிக் கொண்டிருந்தார். அதில் ஆறு, எட்டு, பன்னிரெண்டில் சூரியன் மறைந்தால் அரசு உத்தியோகம் இல்லை என்ற விதியை கஷ்டப்பட்டு குறை சொல்லிக் கொண்டிருந்தார்.
உண்மையில் சூரியன் மறைந்தால் அரசு வேலை இல்லை என்றெல்லாம் மூல விதிகளில் சொல்லப்படவில்லை. இடையில் வந்தவர்கள் உருவாக்கியது அது. அவர் காட்டிய அத்தனை ஜாதகங்களிலும் சிம்மம் வலுவாகி, சூரியன் சுபத்துவம் பெற்று, ராசி, லக்னத்திற்கு பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டால் அரசு வேலை என்று நான் அடிக்கடி சொல்லும் விதி பொருந்தி இருந்தது. இதோடு கூடுதலாக ஆசிரியர் வேலைக்கு ராசி, லக்னத்தின் இரண்டு, பத்தாமிடங்களை குரு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
இந்த எளிய விதியைக் கூட உணர இயலாமல், வேறு எதை,எதையோ காரணம் காட்டி, அவர் பாரம்பரிய ஜோதிடத்தைக் குறை சொல்லிக் கொண்டு இருந்தார். இது போன்று ஜோதிடத்தை தவறாகப் புரிந்து கொண்டவர்கள்தான் இங்கே அதிகம். சென்ற வார கட்டுரைக்கு கருத்து தெரிவித்தவர்களில் அறுபத்தி மூன்று வயதாகும் திரு. வேலுமணி எனும் சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய ஜாதகம் இந்த விதிகளுக்கு மிகவும் பொருந்தி வருவதாகவும், தான் 28 வருடங்களாக வங்கிகளுக்கான வழக்கறிஞர் தொழிலில் இருந்து வருவதாகவும் பதிவிட்டு, அவரது பிறந்த விபரங்களையும் குறிப்பிட்டு இருந்தார். வக்கீல் நிலைக்கு அவருடைய ஜாதகத்தையே உதாரணமாக இப்போது பார்க்கலாம்.
கீழே நான் குறிப்பிட்டிருக்கும் சேலம் வழக்கறிஞரின் ஜாதகத்தில், துலாம் லக்னமாகி, வழக்கறிஞர் தொழிலுக்குரிய முதன்மை கிரகமான சனி, எனது பாபக் கிரகங்களின் சூட்சும வலுத் தியரிப்படி, லக்னத்தில் உச்சமடைந்த நிலையில், திக்பலத்தை இழந்து சூன்ய பலத்தை அடைந்திருக்கிறார். (பாபக் கிரகங்கள் எனப்படும் சனி, செவ்வாய் இருவரும் உச்சம், ஆட்சி எனும் நேர்வலுவையும், திக்பலத்தையும் ஒருசேர அடையக் கூடாது.)
லக்ன சனி, குருவின் பார்வையோடு சுபத்துவமாகி, லக்னத்திற்கு இரண்டுக்குடைய வாக்குஸ்தானாதிபதி செவ்வாயையும், தொழில் ஸ்தானமான 10-மிடத்தையும் பார்க்கிறார். அதே நிலையில் சனி, ராசிக்கு பத்தாம் அதிபதியாகி இருக்கிறார். இந்த நிலைப்படி பொய் சொல்லிப் பிழைக்க வைக்கும் முதன்மை கிரகமான சனி இங்கே ராசி, லக்னம் இரண்டின் ஜீவன ஸ்தானத்திற்கும் சுபத்துவமாக, சூட்சும வலுவுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவமும், சூட்சும வலுவும் அடையும் கிரகத்தின் அமைப்பில் தொழில் அமையும் என்று நான் ஏற்கனவே விளக்கியுள்ளபடி இந்த ஜாதகத்தில் சனி மட்டுமே அதிக வலுவுடன் இந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்து சட்டத் துறைக்கு இரண்டாம் நிலை கிரகமான குரு, (சட்டத் துறைக்கு முதல் நிலை கிரகம் சனி, நீதித்துறைக்கு முதல் நிலைக் கிரகம் குரு) ராசிக்கு வாக்கு ஸ்தானமான ராசிக்கு 2ல் இருந்து சனியை பார்த்து சுபத்துவப் படுத்துகிறார். நிறைவாக ராசிக்கு பத்தில் சூரியன், குரு பார்வையில் இருக்கிறார். ஆக ராசி, லக்னத்தின் இரண்டு, பத்தாமிடங்கள் குரு, சனியின் தொடர்புகளை கொண்டிருக்கின்றன. இது சென்ற வாரம் நான் எழுதியதைப் போல வழக்கறிஞர் தொழிலுக்கு ஒரு பூரணமான அமைப்பு.
எல்லாவற்றையும் விட மேலாக இந்த மூத்த வழக்கறிஞரின் 28 வயது முதல் சட்ட, நீதித்துறையின் காரகக் கிரகங்களான குரு, சனி ஆகிய இரண்டு கிரகங்களின் தசையும் 35 வருடங்கள் நடந்ததால் இவர் வழக்கறிஞர் தொழிலில் நீடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கிரகத்தின் சுபத்துவ ஆளுமையில் நீங்கள் இருக்கும்போது, அந்தக் கிரகம் சம்பந்தப்பட்ட சுபச் சூழல்களில் அதனுடைய தசை முழுவதும் இருப்பீர்கள். பாபத்துவ ஆளுமையில் இருந்து அந்தக் கிரகம் தசை நடத்தும் பொது அதன் பாப காரகத்துவ சூழல்களில் இருப்பீர்கள்.
இவரின் ஜாதகப்படி முழுமையான முப்பத்தி ஐந்து வருடங்கள் குரு, சனி இரண்டின் சுப ஆளுமைக்குள் இவர் வந்ததால், இளம் வயது முதல் குரு, சனி தசைகளில் சட்டத்துறை, நீதிமன்றம் என்ற அமைப்புகளுக்குள் இவர் இருக்க வேண்டியதாயிற்று.
மேலும் இவர் பல ஆண்டுகளாக 25-க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு சட்ட ஆலோசகராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். வங்கிகளின் சார்பில் சிவில் மற்றும் கிரிமினல் கேஸ்களை தான் நடத்துவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாக ஒருவர் பணம் புரளும் அமைப்புகளில் இருக்க வேண்டுமானால், அதாவது நிதித்துறை, வங்கி, சிட்பண்ட், வட்டிக்கு விடுதல் போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்ட வேண்டுமானால், ராசி, லக்னம் இரண்டிற்குமான பத்தாமிடத்தை குரு தொடர்பு கொள்ள வேண்டும் என்பது விதி. அதன்படி இவருக்கு ராசிக்கு இரண்டில் குரு, கேதுவுடன் கேளயோகத்தில் அமர்ந்து, ராசிக்கு 10-மிடத்தைப் பார்ப்பதால் இவர் வங்கிகளுக்கான வழக்கறிஞராக இருக்கிறார்.
இதுபோன்று மூல விதியினை சரியாகப் புரிந்துகொண்டு, அதன் பிறகு உள்ளே சென்று துணை விதிகளை ஆராய்வோமேயானால், அவர் எந்தத் துறையில் எந்தப் பிரிவில் பணிபுரிகிறார் என்பதைக்கூட மிகத் துல்லியமாக பாரம்பரிய ஜோதிடத்தில் சொல்லிவிட முடியும்.
இந்த மூத்த வழக்கறிஞர் கிரிமினல் கேஸ்களிலும் ஆஜராவதாக குறிப்பிட்டிருப்பது, சனி, செவ்வாய் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதால்தான். அதிலும் நவாம்சத்தில் சனி, செவ்வாய், குரு, வளர்பிறைச் சந்திரன் ஆகியோர் இணைந்திருப்பதும். ராசிக்கட்டத்தில் சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களாக அமர்ந்திருப்பதும் இவர் சொல்வதை உறுதி செய்கிறது.
பரம்பொருளின் கருணையினால், புரிந்து கொள்ளும் ஞானம் இருக்குமானால், பாரம்பரிய ஜோதிடம் வெகு எளிமையாகவே இருக்கும். ஜாதகத்தில் ஜோதிடத்தின் காரக கிரகமான புதனின் சுப வலுவிற்கேற்ப ஜோதிடம் தெரிந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படும். புதனின் தயவு இல்லையெனில் ஜோதிடத்தை புரிந்து கொள்ள முடியாது.
ஜோதிடர்களிடையே ஏற்றத்தாழ்வு இருப்பதும், அவர்களின் புரிந்து கொள்ளும், பலன் சொல்லும் விதம் கூடுதல், குறைவாக அமைவதும் புதன் ஒன்றை மட்டுமே பொருத்தது. புதன் மட்டுமே ஜோதிடத்தின் முதன்மைக் கிரகம். சாஸ்திரங்களைக் குறிக்கும் குரு ஜோதிடத்தின் இரண்டாம் நிலைக் கிரகமாக அமைவார். இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக மறைவான சூட்சும விஷயங்களை அறியும் ஆற்றலைத் தரக்கூடிய ராகு, கேதுக்கள் அமைவார்கள்.
ஒவ்வொரு துறைக்கும், தொழிலுக்கும் அதிகபட்சம் மூன்று கிரகங்கள் சம்பந்தப்படுவார்கள். இதில் ஒரு கிரகம் அந்தத் தொழிலின் முதன்மைக் கிரகமாகவும், இன்னொரு கிரகம் இரண்டாம் நிலையில் இருந்து முதல் கிரகத்திற்கு எடுத்துக் கொடுக்கும் பணியையும் செய்யும். மூன்றாவது கிரகம் இவர்கள் இருவரையும் ஏதேனும் ஒரு நிலையில் இணைக்கின்ற பாலமாகச் செயல்படும்.
மேலே நான் சொல்லும் இந்த கிரக விதிகளையும், ஜோதிடத்தின் மிக முக்கியமான உயர்நிலைப் புரிதலான சுபத்துவ, சூட்சும வலு நிலைகளையும் ஒருவர் சரிவர புரிந்து கொண்டால், அவர் எதையும் சொல்லும் ஜோதிடர்தான்.
காலம் காலமாக இங்கே சுபத்துவம் என்பது சரியாக அறியப்படாமலே இருக்கிறது. அல்லது அதை முழுவதுமாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. இப்போது நான் கூடுதலாக இதில் சூட்சும வலுவையும் இணைக்கிறேன். இவை இப்போது சரியான முறையில் விளக்கப்படுவதால் வேதஜோதிடம் இனி வேறொரு சரியான, துல்லிய தளத்தில் பயணிக்கும்.
அடுத்த வாரமும் வழக்கறிஞர்களை தொடருவோம்.
வணக்கம் குருவே…
DOB:05.01.1994..Time:4.30am.
Place:Nagerkovil… அடுத்து நடக்க இருக்கும் குரு தசை எப்படி இருக்கும் மற்றும் எதிர்காலம் பற்றி ஜோதிட விளக்கங்களோடு கூறுமாறு பணிவோடு வேண்டுகிறேன் (எனக்கு கண்ணி ராசி , விருச்சிகம் லக்னம் )