தரன் குமார். மன்னார். இலங்கை.
கேள்வி :
மணமாகி 5 வருடங்கள் ஆகியும் புத்திர பாக்கியம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. தங்களின் வின் டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். மருத்துவத்திற்கு இங்குள்ள நல்ல வைத்தியசாலைக்கு சென்று வந்தும் பலன் கிடைக்கவில்லை. இருவருக்கும் ஐந்தில் சூரியன் இருப்பதால் சூரிய தோஷத்திற்கு கோதுமை தானமும், வழிபாடும் செய்து வருகிறோம். உமது ஜோதிட தீவிர ரசிகன் நான். இணையத்தில் தவறாது மாலைமலர் படிப்பவன். எமக்கு எப்போது புத்திர பலன் உண்டு ஐயா?
பதில் :
கணவன். மனைவி இருவருக்கும் பிறந்த தேதி பிப்ரவரி 21 என்று தவறாக எழுதி இருக்கிறீர்கள். இதில் யாரோ ஒருவருடையது தவறான தேதியாக இருக்கும். கணவனின் பிறந்த தேதி 21-2-1982 இரவு 9-58 இலங்கை மன்னார் என்பதன்படி நீங்கள் குறிப்பிட்டுள்ள மீனராசிக்கு பதிலாக மகர ராசி வருகிறது. அவசரத்தில் தவறாக எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். முறையான பரிகாரங்களை தெரிந்து கொள்வதற்கும் பரம்பொருளின் அனுமதி வேண்டும். குழந்தை பாக்கியத்திற்கான வேளை இன்னும் வரவில்லை. மீண்டும் சரியாக எழுதி அனுப்புங்கள். பதில் தருகிறேன்.
ஏ. பி. ராஜாராமன், மதுரை-16
கேள்வி :
மாலைமலரில் தொடர்ந்து தங்களின் ஜோதிட எழுத்துக்களை வாசிக்கும் எளிய வாசகன் நான். மகள் ஜாதகத்தில் ஏழாமிடத்தில் ராகு உள்ளதால் காதல், கலப்புத் திருமணம் நடக்கும் என்று ஒரு ஜோதிடர் சொல்லுகிறார். இல்லை, கஜகேசரி யோகம் உள்ளது, குரு பார்க்கிறது, அதெல்லாம் நடக்காது என்று மற்றொரு ஜோதிடர் சொல்கிறார். எனக்கு பெரிய மனக் குழப்பமே வந்து விட்டது. கல்லூரி முடித்து விட்ட மகளோ மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது. மகளை கல்லூரிக்கு அனுப்ப வேண்டாம். உடனே கல்யாணம் செய்து கொடுத்து விடுங்கள் என்று முதல் ஜோதிடர் சொல்லுகிறார். இதில் எது நடக்கப் போகிறது, அதற்கு நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கவலையுடன் தங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறேன்.
பதில் :
பு செ சனி | சந் | ||
கு கே ல சூ |
6.3.1998
அதிகாலை
5.50
மதுரை
|
||
சுக் | ரா | ||
ஏழில் ராகு இருந்து விட்டாலே ஒரு பெண் காதல் திருமணம் செய்வாள் என்று அர்த்தமல்ல. இதன் பொதுவான பலன் நெருங்கிய சொந்தத்தில் மாப்பிள்ளை அமையாது என்பதுதான். இரண்டில் செவ்வாய். சனி நீச புதனுடன் இணைந்திருக்கும் ஜாதகத்தை கொண்ட ஒரு பெண்ணிற்கு 20 வயதில் திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று சொல்லுகின்ற ஒரு ஜோதிடர் அனுபவம் இல்லாதவர்.
ஒரு ஜோதிடர் கண்களையும், காதுகளையும் எப்போதும் திறந்து வைத்துக் கொண்டு சமுதாயத்தை கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும். பெண்கள் படிக்க ஆரம்பித்து, தன் தேவையை தானே கவனித்துக் கொள்ளும் அளவிற்கு சுய பாதுகாப்பு பெற்று, தொட்டதற்கெல்லாம் விவாகரத்து பெருகி வரும் இன்றைய சூழ்நிலையில் ஒரு பெண்ணுக்கு அவளது விருப்பத்தை மீறி 20 வயதில் திருமணம் செய்து வைப்பது மகா தவறு.
ஒரு பெண் கெட்டுப் போக வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் அவளை யாரும் தடுத்துவிட முடியாது. கல்லூரிக்கு போய்தான் அவள் காதலிக்க வேண்டும் என்பது இல்லையே, வீட்டிலேயே இருந்தாலும் பூட்டியா வைத்திருப்பீர்கள்? வீட்டிலிருந்தபடியே காதலிக்க முடியாதா என்ன?
இரண்டில் செவ்வாய், சனி, ஏழில் ராகு என்ற அமைப்புள்ள பெண்ணிற்கு 20 வயதில் திருமணம் செய்வது அவளை கிணற்றில் தள்ளி விடுவதற்குச் சமம். தற்போது பெண்ணின் ரிஷப ராசிக்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருப்பதால் திருமணம் செய்ய முடியாது. 2020 ஆம் வருடம் அஷ்டமச்சனி முடிந்து குரு தசையும் ஆரம்பிக்கிறது. குருவும் சனியும் பரிவர்த்தனை ஆகியுள்ளதால் குருதசை, சுய புக்தியில் அவளுக்குத் திருமணம் நடக்கும்.
சூரியன் சுபத்துவமாகி, சந்திரன் உச்சமாக உள்ளதால் தாய், தகப்பன் மனம் வருத்தப்படும்படியான எதையும் உங்கள் மகள் செய்யமாட்டார். ஜோதிடரை விட பெற்ற பெண்ணை நம்புங்கள். எல்லாம் சரியாக வரும். பெண்ணின் விருப்பப்படியே இரண்டு வருடங்களுக்கு அவளை மேற்படிப்பு படிக்க வையுங்கள். அவளது வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.
எம். வெங்கடேஸ்வரன், திண்டுக்கல்.
கேள்வி :
மாலைமலரின் தவறாத வாசகன் நான். ஆனால் ஜோதிடர் அல்ல. தாங்கள் எழுதும் பதில்களை தனியாக எழுதி வைத்துப் படித்து புரிந்து கொள்ளும் எனக்கு, எனது ஜாதகத்தையும் எதிர்காலத்தையும் தெரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது. நடந்து கொண்டிருக்கும் புதன் தசையின் பிற்பகுதியும், அடுத்து வரும் ஆட்சி பெற்ற குருவின் பார்வை பெற்ற கேது மற்றும் சுக்கிர தசைகளும் எனக்கு எப்படி இருக்கும்?
பதில் :
சனி | சந் கே | ||
30.9.1972
காலை
7.20
திண்டுகல்
|
|||
சக் | |||
கு ரா | ல | சூ பு செ |
என்னுடைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில் தரப்படும் பதில்களை ஒரு மூன்று மாதமோ, மூன்று வருடமோ படிப்பதால் மட்டும் ஜோதிடம் வந்து விடாது. அதேநேரத்தில் ஜோதிடம் என்பது ஒரு மாபெரும் பூச்சாண்டி அல்ல. புரிந்து கொண்டால் எல்லோருக்கும் எளிமையானதுதான்.
சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் வலுவாக இருக்கும் ஒருவருக்கு ஜோதிடம் புரிய வரும். ராகு, கேது தசை, புதன்தசை போன்றவைகள் நடக்குமானால் ஜோதிடத்தில் ஆர்வமும் வரும். ஜாதகப்படி இந்த அமைப்பு உங்களுக்கு இருக்கிறது. மதிப்பு மிக்க எவையும் சுலபத்தில் கிடைத்து விடாது. “சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்” என்ற பழமொழி ஜோதிடத்திற்கும் பொருந்தும்.
உங்கள் ஜாதகப்படி துலாம் லக்னமாகி தற்போது 9-க்குடைய புதன் தசை நடந்து கொண்டிருப்பது சிறப்பான ஒன்று. பாக்கியாதிபதி புதன் எட்டு டிகிரிக்குள் சூரியனுடன் இணைந்து, ஜீவனாதிபதி சந்திரனின் சாரம் பெற்று இருப்பதால் தசையின் பிற்பகுதியில் உங்களுக்கு ஒன்பதாமிடத்தின் நல்ல பலன்களைச் செய்வார். கடந்த எட்டு வருடங்களாக பன்னிரண்டாமிட பலன்கள்தான் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும்.
துலாம் லக்னத்திற்கு 2, 9, 11-க்குடைய சூரியன், புதன், செவ்வாய் மூவரும் இணைவது பெரிய தன லாபத்தை கொடுப்பதாக அமையும். ஆனால் இவர்கள் 2, 9, 11-ஆம் இடங்களில் இணைந்து இவர்களின் தசை நடக்கும் போது மட்டுமே அந்த யோகம் செயல்படும். மற்ற இடங்களில் யோகம் குறைவாக இருக்கும். புதன் தசையின் பிற்பகுதி இப்போதிருக்கும் நிலையை விட நன்மைகளை தரும். குரு புக்தி தவிர்த்து மற்ற புக்திகளில் நன்மைகள் உண்டு.
அடுத்து நடக்க இருக்கும் கேது தசை, புதனும். சந்திரனும் இணைந்திருப்பது போன்ற தர்மகர்மாதிபதி யோக பலனைத் தரும். புதனை விட கேது தசை சிறப்பாக இருக்கும். ராகு-கேதுக்களுக்கு வீடு கொடுத்தவர் உச்சமானால் அவர்கள் நல்ல பலன்கள் தருவார்கள் என்ற விதிப்படியும், கேதுவிற்கு சுபர் பார்வை இருப்பதாலும் கேது உங்களுக்கு யோக தசையாக அமையும். சுக்கிர தசையும் கெடுதல்கள் செய்யாமல் இருப்பதை வைத்து ஓட்டிக் கொண்டு இருக்கச் செய்யும். வாழ்த்துக்கள்.
மகேஸ்வரி குமார்சுவாமி, மதுரை-14
கேள்வி :
எனது வாழ்க்கை இதுவரை எவ்வளவோ கஷ்டங்களுடனும், அவமானங்களுடனும் கடந்துவிட்டது. 28 வயதாகும் மகளுக்கு ஒரு நல்ல வரன் அமைவது போல் உள்ளது. இருவரும் பழக்கமானவர்கள். அந்தப் பையனையே பேசி முடிக்கலாம் என்று என் பெண்ணின் மூலமே அந்தப் பையனிடம் பேசினோம். அவனுக்கும் விருப்பம் இருப்பதாகவும் அவனது அக்காவிற்கு திருமணம் முடித்த பின் பெரியவர்கள் மூலம் வந்து திருமணம் பேசுவதாகவும் கூறியுள்ளான். பையனுக்கு பெற்றோர் இல்லை. இவர்கள் இருவரையும் இணைத்தால் எதிர்காலத்தில் நன்றாக இருப்பார்களா என்பதை தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.
பதில் :
மகளுக்கும் அந்த பையனுக்கும் ஒரே மிதுன லக்னமாக அமைவது சிறப்பு. இருவரின் ஜாதகத்திலும் லக்னாதிபதி புதனும். சுக்கிரனும் ஐந்தாமிடத்தில் இருப்பது நல்ல வாழ்க்கையை மட்டுமே அமைத்துத் தரும். மகளுக்கு கும்பராசி வரனுக்கு மிதுன ராசி என இருவரின் ராசிகளும் ஐந்து, ஒன்பதாக அமைவதால் இருவருக்கும் மனப் பொருத்தம் உண்டு.
கடிதத்தில் பக்கம் பக்கமாக நீங்கள் எழுதி இருக்கும் துயரங்கள் உங்கள் மகளுக்கு ஒருபோதும் நடக்கப் போவதில்லை. அவரவரின் கர்மாபடியே இங்கே வாழ்க்கை அமைகிறது. உங்களை விட மகளின் ஜாதகம் யோகமானது. திருமணத்திற்கு பிறகு அவர் ஒரு சிறப்பான நீடித்த வாழ்க்கை வாழ்வார். வாழ்த்துக்கள்.