adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
டாக்டர்-ஐபிஎஸ் – ஜாதக வித்தியாசங்கள் D-021 Docter-IPS-Jadhaga Viththiyasangal..!

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888

இந்திய ஜோதிடம் குறிப்பிட்ட சிலர் மட்டுமே தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு மறைத்து வைக்கப்பட்ட கலையாக சில காலமாக இருந்து வந்தது. சமீபகாலமாக ஆய்வு ரீதியிலான வளர்ச்சி ஜோதிடத்திற்கு இல்லாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். 

ஒரு கலை அல்லது ஒரு பொருள் சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களுக்கும் கிடைக்கும் போதுதான் அது விவாதிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டு மேம்பட்ட ஒரு வளர்ச்சியை அடைகிறது.


இணையம் மற்றும் தொழில்நுட்பத்தின் தயவால் இன்று உலகமே ஒரு குடையின் கீழ் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஜோதிடமும் அனைவரும் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு ஆரோக்கியமான சூழலின் கீழ் அமைந்திருப்பது ஆய்வு நோக்கில் ஜோதிடத்திற்கு ஒரு வளர்ச்சியைக் கொடுப்பதாக அமையும்.

குறிப்பாக படித்தவர்கள், வேறுதுறைகளில் முன்னிலையில் இருப்பவர்கள் ஜோதிடத்தை தெரிந்து கொள்ள முன்வருவது மிகவும் ஆரோக்கியமான ஒன்று. ஜோதிடம் மட்டுமே தெரிந்த, பிறருக்கும் இதைச் சொல்லிக் கொடுக்க நினைக்கும் என்னைப் போன்றவர்கள் எழுதுவதற்கும் இது மிகப் பெரிய ஊக்கத்தை தருகிறது. 

சமீபகாலமாக என்னிடம் ஊடகம் வாயிலாகவும், முகநூலிலும், ஈமெயிலிலும் சந்தேகம் கேட்பது, வேறு துறையைச் சேர்ந்த அதிகம் படித்தவர்கள்தான். அதிலும் சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்கள் மிக அதிகமாக ஜோதிடத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறீர்கள். 

சிலதினங்களுக்கு முன் தேவகோட்டையை சேர்ந்த ஒரு இளம் டாக்டர் என்னிடம் கேட்ட கேள்வி, படித்தவர்களின் ஜோதிட ஆர்வத்தை விளக்குவதாக அமைந்தது.

மருத்துவம், அதிகாரம் இரண்டுக்குமே செவ்வாய்தான் பொதுவான கிரகம் எனில் ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்து அவர் மருத்துவர் ஆவாரா, காவல்துறை அதிகாரி ஆவாரா அதாவது டாக்டரா, ஐபிஎஸ் ஆபீஸரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? எனது மகன் ஜாதகத்தில் இந்தக் குழப்பம் எனக்கு இருக்கிறது என்பது அவருடைய கேள்வியாக இருந்தது.

எழுதுவதிலும், பேசுவதிலும் நுணுக்கமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்துவது என்னுடைய வழக்கம். என்னுடைய கட்டுரைகளை திரும்பத் திரும்பப் படிக்கும்போது சில இடங்களில் நான் உபயோகப்படுத்தும் வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்கள் உங்கள் மனதில் பதியும். 

ஜோதிடம் என்பது ஒருவகையான ஞானம் சார்ந்த கலை என்பதால் இதனை திரும்பத் திரும்ப மனதில் பதிய வைக்கும்போது மட்டுமே இதில் உள்ள சூட்சுமங்கள் புரிய ஆரம்பிக்கும். மேலோட்டமாகப் படிக்கும் நிலையில் நுணுக்கங்கள் புரியாது.

ஒரு சம்பவம் அல்லது செயல் என்பது தனி ஒரு கிரகத்தினால் நடத்தப்படுவது அல்ல, அது கிரகங்களில் கூட்டுச் செயலால் நடத்தப்படுவது என்று முன்னர் எழுதியிருக்கிறேன். எந்த ஒரு அமைப்பும், செயலும் தனி ஒரு கிரகத்தினால் தரப்படுவது இல்லை. தரவும் முடியாது.

ஒருவர் மருத்துவர் ஆவதற்கு செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்று கிரகங்கள் சுபத்துவ மற்றும் சூட்சும வலுவோடு இருக்க வேண்டும் என்பதோடு, ராசி மற்றும்  லக்னத்திற்கு பத்தாமிடத்தோடு அல்லது பத்தாமிடத்திற்கு அருகில் இந்த கிரகங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் இதில் முதன்மைக் கிரகம் செவ்வாய் என்றும் கடந்த கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். இதிலும் தோல், நரம்பு, மனநலம், பல், எலும்பு போன்ற மருத்துவத் துறைகளுக்கு புதன், சந்திரன், சனி ஆகிய கிரகங்களின் தொடர்பும் அவசியம்.   

எந்த ஒரு நிலையிலும் ஒருவர் மருத்துவராவதற்கு அவரது ஜாதகத்தில் செவ்வாய் முதன்மை பலம் பெற்று, பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதேநேரத்தில் காவல்துறையில் உயரதிகாரி ஆவதற்கு முதன்மை கிரகம் சூரியனாக இருக்கும். செவ்வாய் இரண்டாம் நிலை கிரகமாக இருக்கும். 

மருத்துவராகி ரத்தத்தைப் பார்க்க வைக்கும் கிரகம் செவ்வாய். அரசில் அதிகாரம் செய்ய வைக்கும் கிரகம் சூரியன். காவல்துறை அதிகாரியும் ரத்தத்தைப் பார்ப்பவரே.. ஆனால் அவர் ரத்தம் பார்க்கும் நிலை வேறு. 

உயிர் காக்கும் நிலையில் ரத்தம் பார்ப்பவர் மருத்துவர். உயிர் போகும் கொடூரமான நிலையில் ரத்தம் பார்ப்பவர் காவல்துறை அதிகாரி. 

செவ்வாய், குரு, சூரியன் சுபத்துவமாகி பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ளும்போது ஒருவர் மருத்துவர் ஆவார். இதில் மற்ற இரண்டு கிரகங்களின் சுபவலுவை விட செவ்வாயின் சுபத்துவம் இங்கே முதன்மையாக இருக்கும். ஆனால் ஐபிஎஸ் அதிகாரி போன்ற உயர் அதிகார அமைப்புக்கு செவ்வாயை விட சூரியன் சுபத்துவமாக இருக்க வேண்டும் இரண்டாம் நிலையாக செவ்வாய் சுபத்துவ, சூட்சும நிலைகளில் இருப்பார். 

இதில் நான் சுபத்துவம், சூட்சுமவலு என்று குறிப்பிடும் விஷயங்களை உங்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தால் தேவகோட்டை இளம் டாக்டர் கேட்ட கேள்விக்கான பதிலை உணர்ந்து கொள்ள முடியும். 

சில அத்தியாயங்களுக்கு முந்தைய “ஜோதிடம் சரியா தவறா?” என்ற தலைப்பிலான ஏழாவது கட்டுரையில் ஒரு காவல்துறை அதிகாரியின் ஜாதகத்தை விளக்கியிருந்தேன். அதை தற்போது மீண்டும் நினைவு படுத்துகிறேன். 

அந்த உயரதிகாரியின் ஜாதகத்தில் விருச்சிக லக்னம், தனுசு ராசியாகி, ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் அமர்ந்து பரிவர்த்தனையாகியிருக்கிறார். இதன் மூலம் லக்னத்திற்கு பத்தில் சூரியன் அமரும் நிலை இருக்கிறது. 


கேது
  செவ்
குரு
  காவல்துறை அதிகாரி  ஜாதகம் 
 சுக்,புத,
சனி

சந்

 சூரி,
ராகு

லக்னத்திற்கு பத்தாம் வீடு சூரியனின் சிம்மம் எனும் நிலையில் பரிவர்த்தனையின் மூலம் சூரியன் ஆட்சி நிலை பெற்றதால், இங்கே பத்தாமிடத்திற்கு சூரியனின் முதல்நிலை தொடர்பு உண்டாகிறது.  

அதிகாரத்தை கொடுக்கும் இரண்டாவது கிரகமான செவ்வாய், லக்னத்திற்கு எட்டில் மறைந்து சூட்சும வலுப் பெற்று, குருவின் இணைவாலும் வளர்பிறை சந்திரனின் பார்வையாலும் சுபத்துவமாகி, ராசிக்கு பத்தாம் இடத்தை பார்க்கிறார். இது சூரியனை அடுத்த இரண்டாம் நிலை தொடர்பு. எனவே இவர் மருத்துவர் ஆகாமல் காவல்துறையில் உயர்நிலை அதிகாரியாக இருக்கிறார். 

ஒரு நிலைக்கு எந்தக் கிரகம் முதன்மையாக இருக்க வேண்டும், எது இரண்டாம் நிலை பெற வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டாலே, ஒருவர் எதிர்காலத்தில் எந்தத் துறையில் வருவார் என்பதை உறுதியாகச் சொல்லி விடலாம். என்ன கொஞ்சம் ஆழமாக உள்ளே சென்று ஆராய வேண்டும். அவ்வளவுதான்.

மருத்துவர்களின் ஜாதகத்தில் சுபத்துவ சூட்சும நிலைகளில் செவ்வாய் முதல் நிலை கிரகமாக இருக்கும். காவல்துறை அதிகாரிகளின் ஜாதகத்தில் சூரியன் முதல் நிலை கிரகமாகி சுபத்துவமாக இருக்கும்.

கீழே சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒரு காவல்துறை உயரதிகாரியின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். இவரும் தன்னுடைய பதினெட்டு வயதிலேயே காவல்துறை உயரதிகாரியாக வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டு மன உறுதியோடு ஜெயித்தவர்தான்.

செவ்வாயின் சுபத்துவ அமைப்பு குறைவாக இருப்பதால் தனது பணியில் மிகவும் கண்டிப்பானவராக இருந்தவர். தனது பணிக்காலம் முழுவதும் காவல்துறையில் முக்கியமான பதவிகளில் இருந்தவர். அவரது ஜாதகத்தின் மிக யோக தசாபுக்தி காலத்தில் ஒரு ஐந்து வருடம் ஆளுவோருக்கு நெருக்கமான நிலையில், மிக உயர் அதிகாரம் கொண்டவராக இவர் இருந்தார்.

 
செவ்

கேது
 
 
31-1-1957
காலை 5-45 பெரியகுளம்காவல்துறை அதிகாரி 
 
ல,சூரி,
சந்
 
சுக்,
புத
சனி,
ராகு
 
குரு

இவரது ஜாதகப்படி மகரலக்னம், மகரராசியாகி, லக்னம், ராசி இரண்டின் நான்காமிடத்தில் மூலத்திரிகோண வலுப்பெற்ற செவ்வாய் அமர்ந்து தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தைப் பார்க்கிறார். 

இங்கே செவ்வாய்க்கு அதிகபட்ச சுபத்துவமோ, சூட்சும வலுவோ இல்லை. மிக முக்கியமாக அவர் திக்பலத்திலும் இல்லை. ஆனால் செவ்வாய் மூலத்திரிகோண நிலை பெற்றிருக்கிறார். 

இந்த ஜாதகத்தில் அதிகபட்ச சுபத்துவ நிலையில் சூரிய, சந்திரர்கள் இருவரும் இருக்கிறார்கள். அதாவது ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பங்கமற்ற குருவின் பார்வையில் இருக்கிறார்கள். பார்வை தரும் குரு பரிவர்த்தனையாகி இருக்கிறார். மேம்போக்காக இது அமாவாசை நிலையாகத் தெரிந்தாலும் சந்திரன் இருள்நிலை நீங்கி வளர்பிறைக்கு வந்து விட்டார். 

ஆக இந்த ஜாதகத்தில் செவ்வாயை விட சூரியனே வளர்பிறைச் சந்திரனுடன் இணைந்து, குருவின் பார்வையில் அமர்ந்து, அதிகபட்ச சுபத்துவத்துடன் இருப்பதால் இது மருத்துவர் ஆகாமல் அதிகாரம் செய்யக்கூடிய அமைப்பு.

அடுத்து கீழே ஏற்கனவே எடுத்துக் கொண்ட மருத்துவ, தங்கையின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.  

 சுக்,
கேது
ல,சூரி, புத 
சந்,
சனி

  தங்கை22-5-1995காலை 5.40நெல்லை
 
 
செவ்
 
குரு

ராகு
 

இந்த அமைப்பின்படி, மருத்துவ முதன்மைக் கிரகமான செவ்வாய், தேய்பிறைச் சந்திரனாக இருந்தாலும் பாதி அளவு ஒளியுள்ள, சனியை விட்டு பதினாறு டிகிரி விலகியுள்ள சந்திரனின் பார்வையைப் பெற்று அவருக்கு மிகவும் பிடித்த அதி நட்பு வீடான சிம்மத்தில் இருக்கிறார். 

செவ்வாய், அம்சத்தில் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து சுபத்துவமாகிறார். ராசி, லக்னத்திற்கு பத்தாம் வீட்டை ஒருசேரப் பார்க்கிறார். இதில் ராசிக்கு பத்தாம் வீடு செவ்வாயின் வீடாகவே அமைந்துள்ளது. ஆகவே இங்கே தொழிலை நிர்ணயிப்பதில் செவ்வாய் முதன்மை கிரகமாகிறார்.

ஜாதகப்படி அரசு அதிகாரத்தைக் குறிக்கும் சூரியனை, குரு பார்த்தாலும் குருவின் பார்வைக்கு இங்கே வலுவில்லை. குருவை செவ்வாய், சனி இருவரும் பார்க்கிறார்கள். பாபக் கிரகங்களின் தொடர்பு பார்வைகளைப் பெற்ற குருவின் பார்வைக்கு வலிமை இருக்காது. மேலும் இங்கே குரு திக்பலத்தையும் இழந்து சூன்ய பலத்தை அடைந்திருக்கிறார். 

எனவே அதிகாரத்தை தரக்கூடிய சிவராஜ யோகத்தில் குரு இருந்தாலும் சூரியனை அரசு அதிகாரம் தரும் நிலைக்கு மேம்படுத்தும் அளவிற்கு குருவின் பார்வை இல்லை. எனவே மருத்துவ முதன்மைக் கிரகமான செவ்வாயின் அமைப்பின்படி இந்தப் பெண் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறார்.      

இன்னும் சில விளக்கங்களை அடுத்த வெள்ளி பார்க்கலாம்.

(24.08.2018 மாலை மலரில் வெளிவந்தது)அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM தொடர்பு எண்கள் - செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.