சந்திரா, கோவை.
கேள்வி :
இவன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்க்கிறான். வேலையில் சிக்கல் இருக்கிறது. சம்பளம் குறைவாக இருக்கிறது. வேலை மட்டும் அதிகமாக உள்ளது. டார்ச்சர் அதிகமாக இருப்பதால் சொந்த ஊருக்கே திரும்பி வந்து வேலை பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறோம். இங்கே வந்தால் வேலை கிடைக்குமா அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா? இவன் ஜாதகப்படி என்ன அமைப்பு உள்ளது? இங்கே வரலாமா வந்தால் வேலை கிடைக்குமா?
பதில் :
செ | |||
சந் ல |
17-8-1981
மாலை
6-32
திண்டுக்கல்
|
ரா | |
கே | சூ பு | ||
சு கு சனி |
வாக்கிய பஞ்சாங்கப்படி மகர லக்னம் என்று கணிக்கப்பட்ட தவறான ஜாதகத்தை அனுப்பி இருக்கிறீர்கள். வாக்கிய பஞ்சாங்கம் என்பது தமிழ்நாடு ஜோதிடத்திற்கு மட்டும் வந்த ஒரு சாபக்கேடு என்பதை இந்த ஜாதகம் நிரூபிக்கிறது. தென்மாவட்டத்தில் இருப்பவர்கள் முழுக்க முழுக்க தவறான, சரி செய்யவே முடியாத, சாஸ்திர விரோதமான வாக்கிய பஞ்சாங்கத்தில் ஜாதகங்களை கணிப்பதால்தான் இளையவர்களின் வாழ்க்கையில் குழப்பங்கள் உண்டாகி, ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலை உருவாகிறது.
இன்றைக்கு விவாகரத்துக்கள் அதிகமாகி பெண்களின் வாழ்க்கை கெட்டுப் போவதற்கு ஜாதகத்தில் சனி, செவ்வாயை தவறாக குறிப்பிடும் வாக்கியப் பஞ்சாங்கம்தான் காரணம். ஜாதகத்தில் நம்பிக்கை உள்ள பெண்ணைப் பெற்றவர்கள் திருமணத்திற்கு பார்ப்பதற்கு முன் தங்களின் குழந்தைகளின் ஜாதகம் திருக்கணிதப்படி எழுதியிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வாக்கியப் பஞ்சாங்கப்படி எழுதப்பட்ட ஜாதகத்தைக் கொண்டு மண வாழ்க்கையை அமைப்பதால்தான் குழப்பங்கள் வருகின்றன.
இந்த ஜாதகர் லக்னம் முடிவடையும் நேரத்தில் பிறந்திருக்கிறார். துல்லியமான திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மகரலக்னம் முடிந்து கும்பலக்னம் தொடங்கிவிட்டது. ஆனால் நீங்கள் தவறான வாக்கிய பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்ட மகர லக்னம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஜாதகர் மகர லக்னத்தில் பிறந்திருந்தால் 8, 12ம் இடங்கள் சுபத்துவம் பெறாமல் இவர் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை இருக்கும். அதாவது எட்டாம் அதிபதி சூரியன் ஆட்சி பெற்றாலும், பன்னிரண்டாம் பாவகத்தை சுபத்துவமற்ற செவ்வாய் பார்ப்பதனால் இவருக்கு வெளிநாட்டு யோகம் கிடைத்திருக்காது. வெளிநாடு சென்றிருக்கவும் முடியாது.
திருக்கணிதப்படி கும்ப லக்னம் என்பதால் லக்னாதிபதியே 12க்குடையவனாகி எட்டில் அமர்ந்து, குரு, சுக்கிர சேர்க்கையால் சுபத்துவமாகி இருக்கிறார். சுக்கிர, குரு இருப்பால் எட்டாம் வீடு சுபமாகி, எட்டாம் வீட்டு அதிபதி புதன், குருவுக்கு நிகரான சுபரான பௌர்ணமிச் சந்திரனின் பார்வையில் இருக்கிறார். ஆக அந்நிய தேச வாசத்தைக் குறிக்கும் 8, 12மிடங்கள் சுக்கிர இருப்பு, குருவின் பார்வை என சுபத்துவமாக இருக்கின்றன. லக்னாதிபதி சனி சூட்சும வலு அடைந்திருக்கிறார்.
தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் வாக்கிய பஞ்சாங்கத்தை கடைப்பிடிப்பதை எப்போது கை விடுகிறீர்களோ அப்போதுதான் துல்லியமான பலன்களைச் சொல்ல முடியும். திருக்கணிதப்படி இப்போது இவருக்கு புதன் தசையில் சந்திர புத்தி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. வாக்கியத்தில் இதுவும் தப்பாக வரும். மகர, கும்ப லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சூரிய, சந்திர தசா,புக்திகளில் நன்மைகள் நடக்காது. எனவே கடந்த ஒரு வருடமாகவே இவருக்கு வயதுக்கேற்றபடி வேலை தொழில் அமைப்புகள் நன்றாக இருக்காது.
தற்போது இவருக்கு எட்டுக்குடையவன் தசையில் ஆறுக்குடையவன் புக்தி நடப்பதால் உடல், மனம் இரண்டுமே பாதிக்கப் படக்கூடிய சம்பவங்கள் மட்டுமே நடக்கும். கிரக அமைப்புகளின்படி இவர் வெளிநாட்டிலிருந்து இங்கே வர முடியாது. இன்னும் ஒரு வருடத்திற்கு கடன், நோய், எதிரி அமைப்பு இருப்பதால் வெளிநாட்டில் கஷ்டப்படுவார். பணம் என்றால் என்னவென்பதை புரிந்து கொள்ளும் சம்பவங்கள் இப்போது இவருக்கு நடந்து கொண்டிருக்கும்.
இன்னும் ஒன்றரை வருடத்திற்கு நல்ல வேலைக்கு உத்தரவாதம் இல்லை. சந்திர புத்தி முடிந்தவுடன்தான் நன்மைகள் நடக்கும். எப்படிப்பட்ட ஒரு சூழலிலும் கண்டிப்பாக சொந்தத் தொழில் செய்யக் கூடாது. வேலைக்கு மட்டுமே செல்ல செல்ல வேண்டும். லக்னாதிபதி சனி சுபத்துவமாகி எட்டில் மறைந்து, சூட்சும வலுவும் பெற்றுள்ள நிலையில் ஜாதகத்தில் பவுர்ணமி யோகமும் இருப்பதால், புதன் தசையில் அடுத்து வரும் ஜீவனாதிபதி செவ்வாய் புத்தி முதல் நிலையான நல்ல வேலை கிடைக்கும் அதுவரை வெளிநாட்டிலேயே பொறுமையாக இருக்க வேண்டும்.
அடுத்தடுத்து 8, 12ம் இடங்களில் இருக்கும் கிரகங்களின் தசை நடக்க உள்ளதால், அதாவது புதன் தசை முடிந்ததும், பன்னிரெண்டில் இருக்கும் கேது தசை, அடுத்து எட்டில் இருக்கும் சுக்கிரதசை, அதனையடுத்து அஷ்டமாதிபதி புதனுடன் இணைந்த சூரியதசை, நிறைவாக அஷ்டமாதிபதி பார்வை பெற்ற சந்திர தசை என வாழ்நாள் முழுக்க வெளிநாட்டு வாசத்தை குறிக்கக் கூடிய பரதேச வாச தொடர்பு ஜாதகருக்கு இருப்பதால் ஜாதகர் நிரந்தரமாக வெளிநாட்டிலேயே குடியிருப்பார்.
நீங்களாகத்தான் உள்ளூருக்கு வந்து விடலாமா என்று கேட்கிறீர்களே தவிர ஜாதகருக்கு இந்தியாவிற்கு வர விருப்பம் இருக்காது. ஜாதகப்படி அவர் நிரந்தரமாக இங்கே வந்து செட்டிலாக முடியாது. வெளிநாட்டில்தான் வேலை தேடுவார். செய்வார். ஜாதகம் வலுவாக அமைந்து பவுர்ணமி யோகமும் உள்ளதால் இப்போது கஷ்டப்பட்டாலும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு யோகமுடன் வாழ்வார். தாய், தகப்பன் காலத்திற்குப் பிறகு நிரந்தரமாக தாய் நாட்டிற்கு வரவே முடியாத ஜாதகம் இது.
(14.08.2018 மாலை மலரில் வெளிவந்தது.)