adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பக்கத்தி வீட்டுப் பெண்ணிடம் நட்பாகப் பழகாலமா?

ஒரு வாசகர், ஈரோடு.

கேள்வி :
ஜோதிடத் தந்தைக்கு வணக்கம். இந்தக் கடிதத்தை கண்ணீர் விட்டு அழுது கொண்டுதான் எழுதுகிறேன். நானும், மனைவியும் தறி ஓட்டும் தொழிலாளர்கள். சிறு வயது முதல் வறுமையைத் தவிர வேறு எதுவும் பார்த்ததில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு தறிப்பட்டறை லீசுக்கு வந்தது. ஐந்து லட்சம் கடன் வாங்கி அதை சொந்தமாக வாங்கி விட்டேன்.

மூன்று வருடம் அயராது உழைத்தும், சிறிதுகூட கடனை கட்ட முடியவில்லை. மாறாக கடன் அதிகமாகி விட்டது. ஏதாவது ஒரு பிரச்சனை, செலவு வந்து கொண்டே இருக்கிறது. பக்கத்து வீட்டுப் பெண் ஒருவரிடம் நட்பாகப் பழகினேன். அக்கம்பக்கத்தினர் அதை என் மனைவியிடம் தவறாகச் சொல்லி பெரிய சண்டையாகிவிட்டது.     இதனால் மனைவி இப்போது வேலைக்கு வருவதில்லை. தினமும் சண்டை போடுகிறாள். உண்மையாகவே நானும் அந்தப் பெண்ணும் நட்பாகத்தான் பழகினோம். மனைவி வேலைக்கு வராததால் தொழிலை சரிவர நடத்த முடியவில்லை. விற்று விடலாம் என்று நினைத்தால் என் நிலைமை தெரிந்து மிகக் குறைந்த விலைக்கு கேட்கிறார்கள். இந்தப் பிரச்சனையால் மன உளைச்சல் ஏற்பட்டு குடிகாரனாக மாறி விட்டேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அடிக்கடி மனம் யோசிக்கிறது. பிரச்சனை எப்போது சரியாகும்? கடன் எப்போது தீரும்?

பதில் :
நாற்பது வயதுகளில் இருக்கும் மூல நட்சத்திரக்காரர்கள் யாரும் தொழில், வேலை விஷயங்களில் நன்றாக இல்லை என்று எழுத ஆரம்பித்திருக்கிறேன். விருச்சிக ராசியின் வேதனைகள் மெதுவாக விலக ஆரம்பித்து, தற்போது தனுசு ராசிக்காரர்கள் சனியின் ஆதிக்கத்தினுள் சென்று கொண்டிருக்கிறீர்கள் குறிப்பாக கேட்டை நட்சத்திரத்தின் துன்பங்கள் விலக ஆரம்பித்து, மூலம், பூராட நட்சத்திரத்திற்கு பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கின்றன.
உங்கள் அமைப்பின்படி மனைவிக்கு விருச்சிக ராசி, கணவனுக்கு தனுசு ராசி என்றாகி 2015ம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரையிலான கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காலங்கள் வாழ்க்கையில் மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும். பணம் என்றால் என்னவென்று அறிந்துகொள்ளக்கூடிய அனுபவங்களை சனிபகவான் தருவார். அதுதான் இப்போது உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும் எதிர்மறை அனுபவங்களை வைத்துத்தான் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நீங்கள் சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும். பணம் என்றால் என்ன என்பது பணமில்லாத நிலையில் தானே தெரிய வரும்? அதுதான் ஏழரைச்சனியின் குணம். மனைவிக்கு கடுமையான ஜென்மச்சனி நடந்து கொண்டிருக்கும்போது, கணவனுக்கு தொழில் நேரங்களில் சாதகமான பலன் இருக்காது.
ஒரு குடும்பத்தலைவி மன அழுத்தத்தில் இருக்க வேண்டும் என்றால் அவளது கணவனோ, குழந்தைகளோ பாதிக்கப்பட்டே ஆக வேண்டும். ஒரு பெண் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்து விடுவாள். எத்தனை கோடி கொடுத்தாலும் கணவனை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டாள். இளம்வயதில் ஒரு பெண்ணின் அதிகபட்ச மன அழுத்தம் கணவனைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் நட்பாக பழகினேன் என்று சொல்கிறீர்கள். இந்த நட்பு எங்கே போய் முடியும் என்று எங்களுக்குத் தெரியாதா? பக்கத்து வீட்டு பெண்ணிடம் தேடிய நட்பை மனைவியிடம் தேடி இருக்கலாமே? ஏன் பக்கத்து வீட்டு ஆணுடன் நட்புத் தேட வேண்டியதுதானே அய்யா? பழகுவதற்கு ஆணே கிடைக்கவில்லை என்றால், அறுபது வயதிற்கு மேற்பட்ட வாழ்க்கை அனுபவமுள்ள ஒரு முதிய பெண்ணிடம் நட்பாக இருக்கலாமே? நம் வயதையொத்த பெண்ணிடம்தான் நட்பு வருமா?
ஏழரைச்சனி நடக்கும் போதுதான் பணம் என்றால் என்னவென்று புரியும். மனைவி, கணவன், நண்பர்கள், பெற்றோர், உறவினர்களின் உண்மையான முகங்களும் தெரிய வரும். இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டுதான் எதிர்காலத்தில் தொழிலை நன்றாக செய்ய முடியும். இன்னும் இரண்டு வருடங்களுக்கு உங்களுக்கு நல்ல பலன் சொல்வதற்கு இல்லை. அதே நேரத்தில் மனைவியின் விருச்சிகராசிக்கு ஜென்மச் சனி முடிந்துவிட்டதால் பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும்.
சனி தரும் துன்பங்களுக்கெல்லாம் தற்கொலை செய்ய ஆரம்பித்து விட்டால் உலகத்தில் யாரும் உயிரோடு இருக்க முடியாது. மன உளைச்சல் இருக்கிறது என்று குடிக்க ஆரம்பித்து விட்டால் கடன் தீர்ந்துவிடுமா? குடிப்பதனால் பிரச்னை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். எனக்கு கடிதம் எழுதும் போதும் போதையில்தான் இருந்திருப்பீர்கள். அதனால்தான் அழுது கொண்டே எழுதியிருக்கிறீர்கள்.
ஒரு கடிதத்தை, கோர்வையாக, அழகாக எழுதத் தெரிந்த உங்களால் வாழ்க்கையை அழகாக கொண்டு செல்ல முடியாதா? ஜாதகப்படி கொஞ்சம் புத்திசாலியாகவே இருப்பீர்கள். எதையும் சமாளிக்க உங்களால் முடியும். முதலில் குடிப்பதை நிறுத்த நிறுத்துங்கள். நீ மட்டும்தான் என் தோழி என்பதை மனைவிக்கு உறுதிப் படுத்துங்கள். உடனே போய் அவளிடம் மனம் விட்டுப் பேசி மன்னிப்புக் கேளுங்கள். உலகில் மனைவியை விட ஒரு சிறந்த நட்பு மனிதனுக்கு இல்லை. இது வயதான் காலத்தில்தான் தெரிய வரும்.
வரும் அக்டோபர் மாதத்திற்கு மேல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரடையும். ஆனாலும் மந்திரத்தில் மாங்காய் விழுந்து விடாது. 2020ம் ஆண்டு முதல் கடன் தொல்லைகள் இன்றி இதே தொழிலில் சிறப்பாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

(31.07.2018 மாலை மலரில் வெளிவந்தது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *