வை.லோகநாதன், கோவில்பட்டி.
கேள்வி :
ஐந்து வருடங்களுக்கு முன்பு நீங்கள் ஒரு மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் தரும் போது, உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டு எனக்கு நூறு சதவிகித துல்லியமான பதில் தந்தீர்கள். அதைப் பாராட்டி அப்போது ஒரு கடிதமும் எழுதி இருந்தேன். அதையும் வெளியிட்டிருந்தீர்கள். என்னுடைய ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் உச்சமாக இருக்கிறது. ஆனாலும் வாழ்வு வறுமையில்தான் நடைபெறுகிறது. எனது அந்திம காலம் எப்போது என்று மட்டும் தெரிவிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதில் :
சுக் | சூ | பு செ | கே ல |
5.5.1955
காலை
9.30
கோவில்பட்டி
|
குரு | ||
ரா | சனி சந் |
மாலைமலரில் தரும் பதில்களைப் பாராட்டியும் ஏராளமான கடிதங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் இங்கே எனக்கு ஒதுக்கப்பட்டிருப்பது ஒரு சிறிய பகுதி. எனவே அவற்றை வெளியிட முடியாது. வெளியிடத் தேவையும் இல்லை. நான்கு கிரகங்கள் உச்சம் அடைந்தால் பணக்காரன் என்றெல்லாம் ஜோதிடத்தில் சொல்லப்படவில்லை. யோகம் செய்யும் கிரகங்கள் வலுவடைந்தால்தான் அதிர்ஷ்டம்.
அந்திம காலம் பற்றிய துல்லிய கணிதத்திற்கு பிறந்த நேரம் அவசியம் தேவை. உங்கள் பக்கத்து வாக்கிய பஞ்சாங்க ஜோதிடர்கள் பிறந்த நேரத்தை குறிப்பிடுவது இல்லை. தற்போது உங்களுக்கு 63 வயதுதான் ஆகிறது எட்டாம் அதிபதி சனி உச்சமாகி, பௌர்ணமி சந்திரனுடன் இணைந்து சுபத்துவமாகியுள்ள நிலையில் எட்டாமிடத்தை உச்ச குரு பார்ப்பதாலும், தற்போது லக்னாதிபதியின் தசை நடந்து கொண்டிருப்பதாலும் உங்களுக்கு தற்போது மரணம் இல்லை. இன்னும் நீண்டகாலம் இருப்பீர்கள்.
கா. மங்களவேணி, ராமநாதபுரம்.
கேள்வி :
மணமாகி ஒன்பது வருடமாகிறது. எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கல்யாணமான நாளில் இருந்தே கணவருக்கும் எனக்கும் சண்டை அதிகமாக இருக்கிறது. அவருக்கு நிலையான வேலை இல்லை. வேலைக்கு ஒழுங்காகப் போவதுமில்லை. இரண்டு நாளைக்கு ஒருமுறை என்னிடம் சண்டை போட்டு என்னை அடிஅடி என்று அடிக்கிறார். வீட்டில் போட்ட 30 பவுன் நகையில் பாதிக்கு மேல் பறித்து விட்டார். மீதி நகையை வாங்குவதற்காக என்னிடம் சண்டை போட்டு என் குடும்பத்தை கேவலமாக பேசுகிறார். வீட்டிற்கு போன் போட்டு என் அப்பாவையும் திட்டி அவரையும் வயதான காலத்தில் நிம்மதி இழக்க வைக்கிறான். என் அண்ணனுக்கும் தங்கைக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற காரணத்திற்காகத்தான் இவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மகளுக்கு ஒன்றரை வயதாகும் போது இதேபோல சண்டை அதிகமாகி அப்பா வீட்டில் மூன்று வருஷம் இருந்தேன். வீடு தேடி வந்து சண்டை போட்டு, ரோட்டில் அசிங்கப்படுத்தி, போலீஸ் ஸ்டேஷனில் சமரசம் பேசி கூட்டிக்கொண்டு போனார்கள். உனக்கு நகை தேவையா என்று கேட்டு கையில் கிடைக்கிற எல்லாத்தையும் வைத்து அடிக்கிறான். காலைத் திருவி, மண்டையை உடைக்கிறான். கண்ணிலே போட்டு அடிக்கிறதை பார்த்து என் மகள் அப்படி துடிக்கிறது அய்யா. இவனுக்காக எனது அப்பா நிறைய செலவு செய்து விட்டார். நானும் மற்றவர்களை போல இவனுடன் காலத்தை தள்ளி விடலாம் என்றுதான் நினைக்கிறேன். கணவர் திருந்துவாரா அல்லது ஆயுள் வரைக்கும் இதே நிலைமைதானா? எனக்கு ஏன் இப்படி ஒரு கணவரை கடவுள் கொடுக்க வேண்டும்? அப்படி என்ன எனக்கு கர்மவினை? கணவர் திருந்துவாரா அல்லது நான் இவரை விட்டு விலக வேண்டுமா? உங்களின் பதிலை வைத்துத்தான் இந்த அபலைப் பெண் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்.
பதில் :
ரா | |||
16.9.1982
அதிகாலை
3.30
ராமநாதபுரம்
|
ல | ||
சந் சூ சு | |||
கே | செ | குரு | பு சனி |
அம்மா... கவலைப்படாதே. வாழ்க்கையில் எப்போதும் எல்லோரும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பது இல்லை. ஏதேனும் ஒருநேரத்தில் நிச்சயமாக நல்லது நடந்துதான் தீரும். பக்கம், பக்கமாக நீ கண்ணீர் வடித்து எழுதியிருக்கும் கடிதத்தை என்னால் படிக்க முடியவில்லை. ஒரு குணம் கெட்ட கணவனிடம் மாட்டிக் கொண்டு நீ படும் அவஸ்தையை நீயே எழுதி இருப்பதைப் போல கர்மவினை என்றுதான் சொல்ல முடியும். வேறு எதைச் சொல்ல? எல்லா மனிதர்களும் ஏதாவது ஒரு வகையில் குறையானவர்கள்தான். உன் கணவன் மூர்க்கனும், முரடனும் போலத் தெரிகிறது. ஜாதகம் அனுப்பியிருந்தால் கண்டு பிடித்திருப்பேன்.
இப்போது உன் கஷ்டத்தின் இன்னொரு கோணத்தைப் பார்ப்போம். இத்தனை எழுதியிருக்கும் உனக்கு, உன்னுடைய குறை என்னவென்பதும் தெரிந்துதான் இருக்கும். ஜாதகப்படி அதிகம் பேசுவது உன்னுடைய குணமாக இருக்கும். அதிலும் பேசக்கூடாத சமயத்தில் பேசுவது உன்னுடைய பலவீனம். எல்லா மனிதர்களும் குறையும், நிறையும் கலந்தவர்கள்தான். இத்தனை எழுதிய நீ கணவன் குடிகாரன், குடித்து விட்டு அடிக்கிறான் என்று எழுதவில்லையே, அதுவரைக்கும் கடவுள் உன் மீது கருணை கொண்டவராகத்தான் இருக்கிறார்.
ஒரு பெண் எத்தனை அறிவு உள்ளவளாக இருந்தாலும், சூழ்நிலைக்கு ஏற்றபடி, அதைத் தெரிந்து நடந்து கொள்பவளாக இருக்க வேண்டும். இயல்பாகவே ஒரு பெண் பொறுமைசாலிதானே? கோபக்கார கணவன் பைத்தியக்கார நிலையில் இருக்கும்போது, வாயை மூடிக்கொண்டு காரியத்தால் சாதிக்க வேண்டியதுதானே? ஏன் அடி வாங்கிச் சாகிறாய்? கடிதப்படியே அவன் சரியான முன் கோபக்காரன் என்று தெரிகிறது. அவன் கோபத்தை அதிகப்படுத்துவதும், குறைப்பதும் மனைவியாகிய உன்னிடம் மட்டும்தான் இருக்கிறது. கோபம் வரும்போது சற்று அடங்கித்தான் போயேன். குடியா முழுகிவிடப் போகிறது? அவனுக்கு சரிக்கு சரி பேசி ஏன் உடம்பை புண்ணாக்கி கொள்கிறாய்? பெண்ணிற்கு முதலில் தேவை பொறுமைதான். ஜாதகப்படி அந்தப் பொறுமை உன்னிடம் இருக்காது. முதலில் அதை கற்றுக் கொள்.
கடக லக்னமாகி, அமாவாசைக்கு மிக அருகில் பாபச் சந்திரனாக லக்னாதிபதி இருந்து, ஆறாமிடத்தில் இருக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்து, தசை நடத்துவதால், இந்த தசை முடியும்வரை, இன்னும் இரண்டு வருடங்களுக்கு உனக்கு துன்பம் நீடிக்கத்தான் செய்யும். அடுத்து நடைபெற இருக்கும் யோகாதிபதியான செவ்வாய்தசை உனக்கும் கணவனுக்கும் நல்ல பலன்களை தரும். 38 வயதிற்கு மேல் நல்லவைகளை அனுபவிக்கும் ஜாதகம் உன்னுடையது.
புருஷனை டைவர்ஸ் பண்ணி விடலாம். குழந்தையின் தகப்பனை எப்படி டைவர்ஸ் செய்வது? பொறுமையாக இரு. அதற்காக மீதமிருக்கும் நகைகளையும் தூக்கி கொடுத்து விடாதே. வாழ்நாள் முழுக்க கஷ்டப்படுவதற்கு பிறந்தவள் இல்லை நீ. ஒரு பத்து வருட காலம் கஷ்டம் அவ்வளவுதான். அதிலும் எட்டு வருடத்தை முடித்து விட்டாய். பொறுமையாக இரு. எந்த சமயத்தில் பேச வேண்டுமோ அப்போது மட்டும் பேசுவதை தெரிந்து கொண்டால் நீ என்றும் வாழ்க்கையில் மகாராணிதான். நன்றாக வாழ்வாய் அம்மா. வாழ்த்துக்கள்.