சென்ற வாரம் மேஷம் முதல் கன்னி வரையிலான ஆறு லக்னக்காரர்களின் குணங்கள் எப்படி அமையும் என்று பார்த்து விட்ட நிலையில், மீதமுள்ள ஆறு லக்னத்தின் சிறப்பியல்புகளைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
துலாம் லக்னம், சுக்கிரனின் இன்னொரு வீடாகும். இது ஒரு ஆண் ராசி. பஞ்ச பூத தத்துவங்களில் காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. ராசி அமைப்பில் மேன்மை மிகுந்த சர ராசியாகும். துலாம், தராசினைக் குறியீடாக கொண்டதாகும். தராசு, எப்போதும் ஒரு வியாபாரியின் கையில் இருக்கும். துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த வியாபாரிகளாக இருப்பார்கள். வேலை செய்வதைவிட சொந்தத் தொழில் செய்வதை விரும்புவார்கள்.
இவர்களின் சிறப்பு குணம் என்னவென்றால் சென்டிமென்ட் இல்லாதவர்கள். யார் தப்பு செய்தாலும் அதை தப்புத்தான் என்று உறுதியாக சொல்வார்கள். கொள்கைப் பிடிப்பாளர்கள். எதற்கும் மசியாத உறுதியான எண்ணம் கொண்டவர்கள். எடுத்துக் கொண்ட ஒரு விஷயத்தில் நேராக, உறுதியாக, சிந்தனையை செலுத்துபவர்கள். எதையும் சாதித்துக் காட்டுவார்கள். நடுநிலையாளர்கள்.
உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் பெரும்பாலோர் இந்த லக்னத்தை கொண்டவர்கள்தான். லக்ன நாயகன் சுக்கிரனைப் போலவே உல்லாச விரும்பிகள். செயல்கள் எதிலும் ஒரு நளினம் இருக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும் பட்சத்தில் களையாகவும், கலைத்தன்மை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
காலபுருஷன் என்று உருவகப்படுத்தப்படும் ராசிக்கட்டத்தின் எட்டாவது ராசியாக விருச்சிகம் அமைகிறது. இது ஒரு மறைவு பெண் ராசி. மர்மமான இடங்களை குறிப்பது. ஒரு மனிதனுக்கு மனோபலத்தை தரக்கூடிய சந்திரன் இந்த ராசியில் நீசம் அடைகிறார். பஞ்சபூத தத்துவத்தில் இது ஒரு நீர் ராசியாகும். ராசிகளின் அமைப்பில் ஸ்திரம் எனப்படும் நிலைத்தன்மை கொண்டது.
சரம் என்பது இயங்கிக் கொண்டே இருப்பது. ஸ்திரம் என்பது நிலையானது. உபயம் என்பது இயங்கிக் கொண்டும், நிலைத்தும் இருக்கக் கூடிய மாறுபட்ட அமைப்பு என்பதை சென்ற வாரம் சொல்லி இருந்தேன். இது புரிந்து கொள்வதற்கு கடினமான ஒரு விஷயம் தான்.
ஜோதிடம் ஒரு மகா நுணுக்கமான கலை என்பதால் கடினமாக இருக்கும் விஷயங்களை திரும்பத் திரும்ப யோசிப்பதன் மூலம், அதாவது மனதை அந்த விஷயத்தைப் பற்றியே சிந்திக்க வைப்பதன் மூலம் சொல்லப்படும் கருத்தினை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.
கடகம் என்பது சரத்தன்மை கொண்ட நீர் ராசி. சர, நீர் என்பது இங்கே எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் நீர் என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆற்றில் நீர் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் கடகம் ஆற்றினை குறிக்கும் ராசியாகும். ஸ்திர, நீர் என்பது நிலைத்து நிற்கும் நீர் என்பதால் ஓடாமல் ஒரே இடத்தில் நிலைத்து நீர் இருக்கும் கிணறு, குளம் போன்றவற்றை விருச்சிகம் குறிக்கும்.
இயங்கும், நிலைத்திருக்கும் இரண்டு குணங்களும் கலந்த உபய நீர் ராசி மீனம் என்பதால், ஓடும் மற்றும் நிற்கும் நீர் எனும் அர்த்தத்தில் மீனம் கடலைக் குறிக்கிறது. கடல்நீர் ஒரே இடத்தில் இருப்பதைப் போலத் தோன்றினாலும் உள்ளுக்குள் நீரோட்டங்கள் உண்டு. எப்போதும் அது மாறிக் கொண்டே இருக்கும். ஆகவே நிலைத்தும், இயங்கியும் இருக்கும் உபய நீருக்கு மீனம் சொல்லப் படுகிறது. மற்ற தத்துவங்களையும் இதைப்போலவே புரிந்து கொள்வது ராசிகளின் குணங்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
விருச்சிகம் என்பது தேளின் உருவம் என்பதால் இந்த லக்னக்காரர்கள் தேள் போலக் கொட்டுவார்கள், பழி வாங்கும் குணம் உடையவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தக் குணம் லக்ன நாயகனான செவ்வாயின் சுபத்துவ, சூட்சும வலுவைப் பொருத்து மாறும்.
விருச்சிகம் செவ்வாயின் ராசி என்பதால் மேஷத்தைப் போலவே இவர்கள் கோபக்காரர்களாக இருப்பார்கள். அதிகார விரும்பிகள். நிர்வாகத் திறமை கொண்டவர்கள். இரக்கம் என்பதை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. கண்டிப்பானவர்கள். காலை மிதிப்பவர்களை சும்மா விட்டு விட மாட்டார்கள். சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். “ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு” என்பதெல்லாம் இவர்களிடம் செல்லுபடியாகாது.
பெரும்பாலான ராணுவம், காவல்துறை போன்ற சீருடைப் பணி அதிகாரிகள், மருத்துவர்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள்தான். ஜாதகத்தில் செவ்வாயின் வலுவை பொருத்து கடுமையான கோபக்காரர்களாக இருப்பார்கள் அதே நேரத்தில் நேரெதிர் குணமாக உண்மையான அன்புக்கு எதையும் செய்வார்கள்.
தனுசு ஒரு ஆண் ராசி. பஞ்சபூத தத்துவத்தில் நெருப்பையும், ராசி அமைப்பில் உபயத்தையும் குறிக்கிறது. நீர் லக்னங்களுக்கு சொன்னதைப் போலவே நெருப்பு லக்னங்களையும் பிரிக்கலாம். சர நெருப்பான மேஷம், யாருக்கும் பயன்படாத கட்டுக் கடங்காத, விரைவாகப் பரவும் காட்டுத் தீயைக் குறிக்கும்.
ஸ்திர நெருப்பான சிம்மம் ஒரே இடத்தில் நிலைத்து எரிந்து, அடுப்பு எரிப்பது போன்ற நன்மை தரும் சமையல் போன்றவைகளுக்கு உதவுவதைக் குறிக்கும். உபய தனுசு நெருப்பு நேரடியாகப் பயன்பட்டும், பயன்படாமலும் இருக்கும் நெருப்பாகும். இதற்கு ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு நகர்ந்து போகும் தீப்பந்தத்தை உதாரணமாக சொல்லலாம். தீப்பந்தத்தால் அடுப்பும் மூட்டலாம், குடிசையையும் எரிக்கலாம். எனவே உபயம் என்பது இரண்டும் கலந்தது.
சமையல் போன்ற ஆக்கத்திற்கு பயன்படாமல், குத்துவிளக்கில் எரியும் ஆன்மீக நெருப்பாகவும் தனுசை சொல்லலாம். தனுசு குருவின் வீடாகையால் இது ஒரு ஆன்மீக ராசியாகும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு அதிகமாக இருக்கும். மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற விஷயங்களை அறியும் ஆற்றல் கொண்டவர்கள் இவர்கள். நேர்மையானவர்களாக இருப்பார்கள்.
பிறக்கும்போது என்ன கொண்டு வந்தோம், போகும்போது எதைக் கொண்டு செல்லப் போகிறோம் போன்ற எண்ணங்கள் இவர்களுக்கு இருக்கும். எல்லோருக்கும் உதவுவார்கள். ஆனால் பாத்திரம் அறிந்து பிச்சை இட மாட்டார்கள். உதவும் குணம் கொண்டதனாலேயே தொல்லைகளை அனுபவிப்பவர்கள். மிகவும் நல்லவர்களாக இருந்து தன்னை நம்பி இருப்பவர்களை சோதனைக்கு உள்ளாக்குவார்கள்.
அதிகமான நல்லவனும், அதிகமான கெட்டவனும் எதற்கும் ஒத்துவர மாட்டார்கள் என்பது இவர்களுக்கு பொருந்தும். நல்லவனாக இருந்து சில நிலைகளில் ஏமாறுவார்கள். ஏமாந்தது தெரிய வந்தாலும் போகட்டும் விடு என்று சொல்வார்கள். உண்மையே ஜெயிக்கும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள். மற்றவருக்கு ஏணியாக இருந்து ஏறியவரால் உதைக்கப் படுபவர்கள் தனுசுவினர்தான்.
மகரம் ஒரு பெண் ராசியாகும். பஞ்சபூத தத்துவத்தில் நிலத் தன்மை கொண்டது. சரம், ஸ்திரம், உபயம் என்று சொல்லப்படும் மூன்று பிரிவுகளில், உயர்வான சர அமைப்பிலுள்ள சனியின் ராசி. இந்த வீட்டின் அதிபதி சனியிடம் இருக்கும் சில நல்ல குணங்களை கொண்டது இந்த ராசி.
மகர லக்னத்தில் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள். மிகுந்த பிடிவாதக்காரர்கள். யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். தனக்கென ஒரு தனி பாணி கொண்டவர்கள். பத்துப் பேர் செய்யும் விஷயத்தை செய்ய மாட்டார்கள். பதினொன்றாக ஒன்றைக் கண்டு பிடித்து அதைச் செய்வார்கள்.
ஒரு விஷயத்தில் இவர்களை சமாதானப்படுத்த கடவுளே நேரில் வந்தாலும் “வாருங்கள் நீங்கள் கடவுளா, உட்காருங்கள்.. டீ சாப்பிடுங்கள்.” என்று உபசரித்து விட்டு வந்திருப்பவர் “அப்பா.. நான் கடவுள். என் பேச்சைக் கேள்” என்றால் டக்கென்று டென்ஷனாகி “வந்தோமா.. டீ சாப்பிட்டோமா என்றில்லாமல், சும்மா கடவுள்.. கடவுள்னு சொல்லிக்கிட்டு.. எழுந்திருய்யா..” என்று சொல்லக் கூடியவர்கள்.
தன் மனதிற்கு சரி என்று படக் கூடியதை மட்டுமே செய்வார்கள். சனியின் குள்ளநரித்தனத்தை யாரும் உணராத வண்ணம் செய்வார்கள். டீசென்டான குழப்பவாதிகள். அடுத்தவர் படும் துன்பத்தை பார்க்கையில் அனுபவிக்கட்டும் என்ற எண்ணம் இருக்கும். துடிப்பானவர்கள். மொத்தத்தில் சனியின் சுப பக்கம் மகரத்திடம் இருக்கும்.
கும்பம் என்பது சனியின் இன்னொரு வீடு. ஆண் ராசி. ஸ்திரத் தன்மை கொண்டது. பஞ்சபூத தத்துவத்தில் காற்று ராசி. சனி சுப நிலையான ஆன்மீக முகம் இந்த ராசிக்கு உண்டு. கும்பத்தில் பிறப்பவர்கள் மிகவும் நிதானமானவர்களாக இருப்பார்கள். லக்னநாதன் சனி பாபத்துவம் பெற்றிருந்தால் அல்லது லக்னத்திலேயே இருந்தால் மந்த புத்தி உடையவர்களாக இருப்பார்கள்.
கும்பத்தில் பிறந்து சனி நேர்வலு பெற்றவர்கள் நிச்சயம் குள்ளமாக இருப்பார்கள். இவர்களுக்குப் பின்னால் ஒருவர் இருந்து எதைச் செய்யவும் தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் ஒருவரின் தோள்மீது சாய்ந்து கொண்டு இருப்பவர்கள். “சாகப் போகிறேன் சீக்கிரம் தண்ணீர் கொண்டு வா...” என்று சொன்னால் செத்த பிறகு பால் கொண்டு வருவார்கள்.
எதையும் சீக்கிரமாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கவே முடியாது. தேர் போல அசைந்து நிதானமாகத்தான் வருவார்கள். செய்வார்கள். அதேநேரத்தில் நுணுக்கமாக, மெதுவாக செய்யக்கூடிய வேலைகளில் அபாரமான திறமை கொண்டவர்கள். கழற்றி மாட்டும் விஷயங்களில் நிபுணத்துவத்தை காட்டுவார்கள். பைலட், ஏரோ நாட்டிகல் இஞ்சினியர் போன்ற வேலைகளை விரும்புவார்கள்.
லக்னத்துடன் குரு, கேது தொடர்பு கொண்டிருந்தால் தூய்மையான ஆன்மீக வாதியாக இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை இருக்கும். சனி சுபத்துவம் பெறாவிட்டால் பொறாமை, வஞ்சகம், காலை வரும் குணம் இருக்கும். ஏன் என்று எப்போதும் கேட்பார்கள். எதையும் குறை சொல்வார்கள்.
மீனம் குருவின் இன்னொரு வீடாகும். ராசிக்கட்டத்தின் இறுதி வீடு இது. பெண் ராசி. பஞ்சபூத தத்துவத்தில் நீர் ராசி. உபயத்தை குறிப்பது. இந்த வீட்டின் அதிபதி குரு என்பதால் குருவின் நற்குணங்கள் அனைத்தும் இவர்களிடம் இருக்கும். நம்பிக்கைக்கு உரியவர்கள். நல்ல நடத்தையும், நன்றியுள்ளவராகவும் இருப்பார்கள்
லக்ன ராஜன் குரு வலுத்திருந்தால் ஈ, எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காத கருணை உள்ளம் இவர்களிடம் இருக்கும். இதுவே இவர்களின் பலமும், பலவீனமாகவும் இருக்கும். இதுவும் ஒரு ஆன்மீக ராசிதான். லக்னத்தோடு சனி, கேது தொடர்பு இருந்தால் மிகுந்த ஆன்மீக ஈடுபாடு இருக்கும். அச்சு அசலான கலப்பற்ற ஆன்மிக எண்ணங்களை இந்த லக்னம் தரும்.
மீனத்தில் பிறந்தவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்களாக இருப்பார்கள். எது போனாலும் தனது பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். பணத்தைவிட பெயர் தான் முக்கியம் என்று சொல்பவர்கள். பணம் வேண்டுமா, புகழ் வேண்டுமா என்று கேட்டால் யோசிக்காமல் புகழைத் தேர்ந்தெடுப்பவர்கள்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்று கோடு போட்டு வாழ்வார்கள். எதற்கும் விலை போக மாட்டார்கள். உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இரக்கம் காட்டி, அடுத்தவர்களுக்கு சகாயம் செய்யப் போய் ஏமாளி என்று பெயர் வாங்குவார்கள். ஆனாலும் சந்தோஷத்துடன் ஏமாறுவார்கள். இரக்கமும், நல்ல குணமும் இவர்களது பலவீனமாக இருக்கும்.
ஜோதிடம் என்பது ஒரு அபாரமான கடல். அதனை ஒரு குடத்திற்குள் அடக்கி விட முடியாது. அதேபோல ஒருவரின் வாழ்க்கை சரித்திரத்தையும், குணத்தையும் நான்கு வரிகளுக்குள் சொல்லி விட முடியாது.
பனிரெண்டு லக்னங்களுக்கும் நான் மேலே சொல்லியிருப்பவை அந்த லக்னத்திற்கும் அந்த வீட்டின் அதிபதிக்குமான குணங்கள். இவை தவிர்த்து அந்த லக்னாதிபதியின் சுப, சூட்சும வலுக்களையும், லக்னத்தில் இருக்கும் கிரகங்கள், லக்னத்தையும், லக்னாதிபதியையும் பார்க்கும், இணையும் கிரகங்களையும் வைத்து ஒருவரின் குணங்களை நூறு சதவிகிதம் உறுதியாகச் சொல்லி விட முடியும்.
அடுத்த வெள்ளி பார்க்கலாம்.