வி. நாராயணன், சேலம்.
கேள்வி :
ஜோதிட சித்தருக்கு வணக்கம். ஆண். பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமடைந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு இல்லையா? மனித வாழ்க்கையில் சுக்கிரனின் பங்கு முக்கியமானதா? சுக்கிரன் நீசம் அடைந்தால் வேறு எந்த கிரகம் மூலம் அதை ஈடு செய்யலாம்?
பதில் :
இதே பகுதியில் சுக்கிரன் நீசமடைந்த ஜாதகத்தைக் கொண்ட ஒரு பெண்ணின் தம்பி கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறேன். அதுவே உங்கள் கேள்விக்கும் பதிலாக அமையும். எந்த ஒரு ஜாதகத்திலும் இயற்கை சுபர்களான குருவும் சுக்கிரனும் பலவீனமடையக் கூடாது. அது நன்மைகளைத் தராது. இவர்கள் இருவரும் ஆதிபத்திய ரீதியாக பாபர்களாக இருந்தாலும் கூட ஜாதகத்தில் நேர்வலு இழப்பது நன்மைகளைத் தராது.
ஜோதிடம் ஒருவிதமான மறைபொருள் சாஸ்திரம்தான். பாபக் கிரகங்கள் ஆட்சி, உச்சம் போன்ற நேர்வலு அடையக் கூடாது என்று நான் சொல்லும் “பாபக் கிரகங்களின் சூட்சுமவலு” தியரியிலேயே சுபக் கிரகங்கள் ஆட்சி, உச்சம் போன்ற நேர்வலுவை இழக்கக்கூடாது என்கின்ற மறைமுக அர்த்தம் இருக்கிறது. எந்த நிலையிலும் சுக்கிரன் நேர்முகமாக நீசமடைவது சுக்கிரன் சம்பந்தப்பட்ட தசைகளில் ஜாதகருக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும். சுக்கிரன் நீசமடைந்திருக்கும் நிலையில் பெரும்பாலும் புதனுடன் பரிவர்த்தனையாகி இருப்பார். இது இழந்த வலுவை மீண்டும் பெற வைக்கும். அல்லது சுக்கிரன் நீசமாக இருந்தாலும் வேறுவகையில் மற்ற சுபர்களான வளர்பிறை சந்திரன், குரு ஆகியோரின் தொடர்புகளை பெற்று நீசபங்கம் அடைந்திருக்க வேண்டும்.
சுக்கிரன் கெடுவதால் ஜாதகத்தில் அவரது ஆதிபத்தியங்களும், காரகத்துவங்களும் நிச்சயம் பாதிக்கப்பட்டே தீரும். ஒவ்வொரு லக்னத்திற்கும் சுக்கிரன் எந்த ஆதிபத்தித்யத்திற்கு உரியவர் என்பதைப் பொருத்து ஜாதகனின் உயர்வு, தாழ்வு இருக்கும். உதாரணமாக தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் நீசமாகும் போது ஜாதகருக்கு கடன், நோய், எதிர்ப்பு ஆகியவற்றை தர இயலாத நிலையில் இருப்பார். ஆனால் நீசபங்கமானால் இவற்றை இருமடங்காக தருவார்.
சுக்கிரன் கெடும்போது அவரது முக்கிய செயல்பாடான தாம்பத்திய குறைபாடுகள் இருக்கும். ஒரு கணவன், ஒரு மனைவி என்ற நிலையை நீச சுக்கிரன் கண்டிப்பாக தடுப்பார். நீச சுக்கிரனோடு தொடர்பு கொண்ட கிரகங்களின் தசா, புக்தி நடக்கும் போது வயதிற்கு ஏற்ற வகையில் ஆணிற்கோ, பெண்ணிற்கோ தேடுதல்கள் இருக்கும். இவர்கள் தடம் புரளுவார்கள். இதுபோன்ற அமைப்பில் அவர்களுக்கு சுக்கிரன் தரும் காமத்தின் பேரில்தான் கண் இருக்குமே தவிர சுற்றுப்புறம், சமூகம் அவர்கள் கண்ணுக்கு படாது. எனவேதான் நீச சுக்கிர தசா,புக்தி அமைப்புகள் அல்லது சுக்கிரனோடு சம்பந்தப்பட்ட தசா, புக்திகள் வரும்போது ஒருவர் நிலைதடுமாறி, அவமானத்திற்கு உள்ளாகிறார்.
இன்னொரு விதமாக சொல்லப் போனால் வலுப்பெற்ற சுக்கிரன் சொகுசு வாழ்க்கைக்கு காரணமானவராக இருப்பார். பணத்தை தண்ணீர் போல செலவு செய்ய வைப்பது சுக்கிரன்தான். பணத்தைக் கொடுப்பது குரு என்றாலும் அதைச் செலவு செய்ய வைப்பது சுக்கிரன். சுக்கிரன் வலுவோடு இருப்பவர்கள் நல்ல செல்வந்தராகவும், செலவாளிகளாகவும் இருப்பார்கள், எதிலும் உன்னதத்தை அனுபவிக்க வைப்பவர் சுக்கிரன் மட்டும்தான். சுக்கிரன் வலுவாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு அழகான அனைத்தும் கிடைக்கும். அவர் நீசமாக இருக்கும் பட்சத்தில் இதற்கு எதிர்மறையான பலன்கள் நடக்கும். ஒரு கிரகம் வலுவிழப்பது கர்மாவின் பலன். அதை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது.
(24.07.2018 மாலைமலரில் வந்தது )