adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
லக்னத்தின் குணம் என்ன..? D-016- Laknaththin gunam enna..?

பிறந்தது முதல் நல்லவைகளை மட்டுமே அனுபவித்து, வாழ்வின் உயரத்திற்கு செல்லும் ஒரு அதிர்ஷ்டசாலியின் ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி அமைப்புகள் மிகவும் வலுவாக இருக்கும். அது போன்றவர்களின் ஜாதகத்தில் அவர் பிறந்த லக்னம், சுப ஒளி பொருந்திய கிரகங்களால் பார்க்கப்பட்டோ, அல்லது அந்த கிரகங்கள் லக்னத்தில் அமர்ந்தோ இருக்கும்.

கூடுதலாக லக்ன ராஜனும் சுபக் கிரகங்களால் பார்க்கப்பட்டு, அல்லது அவரே சுபராகி, சுபரோடு இணைந்திருப்பார். சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்கள் லக்னத்தின் தலைவராக அமையும் பட்சத்தில் இந்தக் கிரகங்களும் சுபத்துவம் மற்றும் சூட்சும வலு அடைந்திருக்கும்.

ஒரு ஜாதகத்தில் எட்டுக் கிரகங்களும் வலுவாக இருந்து லக்னாதிபதி மட்டும் பலவீனமடைந்திருந்தால் அது அதிர்ஷ்டமற்ற ஜாதகம்தான். ஆனால், லக்னாதிபதி தவிர்த்த எட்டு கிரகங்களும் பலமற்று இருந்தாலும், லக்னாதிபதி மட்டும் நல்ல அமைப்பில் சுபத்துவ, சூட்சும வலுவோடு இருந்தால் நிச்சயம் அது அதிர்ஷ்டத்தை தருகின்ற யோக ஜாதகம்.

ஜாதகத்தில் ஏனைய கிரகங்கள் வலுவற்ற நிலைமையில் இருந்தாலும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருந்தால், அவர் ஒருவரே செயல்பட்டு ஜாதகரை ஓரளவிற்காவது முன்னுக்கு கொண்டுவந்து விடுவார். ஆனால் லக்னமும், லக்னாதிபதியும் பலவீனமாக இருந்தால் ஜாதகர் முன்னுக்கு வர இயலாமல் எல்லாவற்றிலும் தடைகளைச் சந்திப்பார்.

ஜாதகத்தின் உயிர் என்று சொல்லப்படக் கூடியது லக்னம் மற்றும் லக்னாதிபதி அமைப்புகள் மட்டும்தான். உடலுக்கு கை, கால், கண் போன்ற உறுப்புகள் அவசியம்தான். ஆனால் அவற்றிலும் மேலாக உறுப்புகளை இயங்க வைக்கக் கூடிய உயிர் உடலுக்கு இருந்தே தீர வேண்டும் உயிர் இருந்தால்தான் உடல் இயங்கும். ஒரு ஜாதகத்தின் உயிர் போன்றவர் லக்னாதிபதி மட்டும்தான்.

ஒரு மனிதன், அவன் பிறந்த லக்னம், ராசி இரண்டையும் கலந்து பிரதிபலிப்பவனாக இருப்பான். லக்னம், ராசி இவை இரண்டின் குணங்களும்  அவனிடம் இருக்கும். இதில் எது வலுவாக இருக்கிறதோ, அந்த அதிபதியின்   குணங்கள் ஜாதகரிடம் தூக்கலாக இருக்கும். லக்னமும், ராசியும் ஒன்றாக இருப்பவருக்கு அதன் அதிபதியின் குணங்கள் அப்படியே இருப்பதை கண்கூடாக காண முடியும்.

லக்னம், லக்னாதிபதியை ஒட்டியே ஒரு மனிதனின் அனைத்து அமைப்புகளும் செயல்படும். லக்னாதிபதி கிரகத்தின் தன்மைகளைத்தான் அந்த மனிதன் கொண்டிருப்பான். லக்னாதிபதி வலுக் குறைந்திருக்கும் நிலைகளில் ராசி அதிபதியின் குணங்கள் இருக்கும். இவற்றையே மற்ற பாவகங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்.

பனிரெண்டு லக்னங்களுக்கும் தனித்தனியாக குண இயல்புகள் ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன லக்னம் மற்றும் அதன் அதிபதியின் பலம், பலவீனம், சுபத்துவம், சூட்சும வலு ஆகியவற்றைப் பொருத்து ஒரு மனிதனின் நடத்தை மற்றும் குணங்கள் கூடுதல், குறைவாக அமையும்.

ஒரு ராசியின் இயல்புகளைத் தெரிந்து கொள்வதற்காகவே பனிரெண்டு ராசி வீடுகளும் நுணுக்கமான வகைகளில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மேஷம் முதல் மீனம் வரையிலான இந்த பனிரெண்டு வீடுகளும் ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் வரை மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த பனிரெண்டு பகுதிகளுக்குள் ஏதேனும் ஒரு பகுதியில் மனிதன் பிறக்கும் நேரத்தை வைத்தே அந்த ராசி வீடு அந்த மனிதனின் லக்னம் எனப்படுகிறது. நமது மூலநூல்களில் அந்த லக்னம் எப்படிப்பட்ட குணஇயல்புகளைக் கொண்டது என்று கூறப்பட்டிருக்கிறதோ, அதைப் போன்றே அந்த மனிதனின் குணம் அமைந்திருக்கும்.

விரிவாக சொல்லப்போனால் ஒரு லக்னம் என்பது தோராயமாக இரண்டு மணி நேரம் கொண்டது. இருபத்தி நான்கு மணிநேரம் கொண்ட ஒருநாளில் பனிரெண்டு லக்னங்களும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாறிமாறி அமைந்து, ஒரு நாளில் முழுச் சுற்றாக முடிவடையும்.

உலகில் ஒவ்வொரு இரண்டு மணி நேரங்களிலும் பிறப்பவர்களின் குண இயல்புகள் மற்றும் நடத்தையில் மாற்றம் இருப்பது உணரப்பட்டே, அன்றைய ஞானிகளால் ராசிகளின் குண அம்சங்கள் பகுத்தறிந்து நமக்கு சொல்லப்பட்டன.

உதாரணமாக மேஷம் என்பது ஆட்டைக் குறிப்பதாகும். ஆடு தனித்திருக்காது. மந்தையோடு சேர்ந்து வாழும். எப்போதும் சுறுசுறுப்பாகத் திரியும். வீண் சண்டைக்குச் சென்று முட்டிக் கொள்ளும். ஒரு நாளின் குறிப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் பிறப்பவரின் குணங்கள் ஆட்டின் இயல்புகளை ஒத்ததாக இருந்ததை வைத்தே அந்த இரண்டு மணி நேரப் பகுதிக்கு மேஷம் என்று பெயர் வைக்கப்பட்டது.

அதனையடுத்து இரண்டு மணி நேரத்தில் பிறப்பவரின் இயல்புகள் காளையின் குணங்களை பிரதிபலித்ததால் மேஷத்தை அடுத்த இரண்டு மணி நேரப் பகுதிக்கு காளையின் பெயரில் ரிஷபம் என்று பெயர் வைக்கப்பட்டது. இது போன்றே ராசியின் இயல்புகள் கணிக்கப் பட்டன அவை சரியாகவும் இருந்தது.

இதையும் தாண்டி பிரபஞ்சத்தின் ஆதிக்கம் நமது பூமியின் மேல் தாக்கம் ஏற்படுத்துவதை உணர்ந்தே சரம், ஸ்திரம், உபய ராசிகள், ஆண், பெண் ராசிகள், நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள் என பனிரெண்டு ராசி வீடுகளும் மிக நுணுக்கமாக ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஜோதிடம் ஒரு அபாரமான விஞ்ஞானம் என்பதை ராசி வீடுகள் அமைக்கப்பட்ட, அவை பிரிக்கப்பட்ட விதத்தை வைத்தே உணர முடியும். அதிலும் சர, ஸ்திர, உபய இயக்கங்கள், நெருப்பு, நிலம், காற்று, நீர்  ராசித் தத்துவங்கள் நமக்கு சொல்லப்பட்ட முறை பிரமிக்கத்தக்கது. கற்பனைக்கும் எட்டாதது. மேலே சொன்ன நுணுக்கமான விஷயங்களைக் கணித்து, ஒரு மனிதனைப் பற்றி முழுமையாக அறிய முடியும்.

உதாரணமாக மேஷம் என்பது சர, ஸ்திர, உபய அமைப்புகளில், சர ராசியாகவும், பஞ்சபூத தத்துவத்தில் நெருப்பு ராசியாகவும், காலபுருஷனின் முதல் ராசியாகவும் அமையும். இந்த ராசியின் அதிபதி செவ்வாய், ஒரு அவசரக் குடுக்கையான துடிப்புள்ள, கோபக்கார கிரகம் என்பதால், மேஷ லக்னத்தில் பிறந்தவர் செவ்வாயின் குணங்களை கொண்டிருப்பார்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர் எதிலும் துடிப்பானவராகவும், அதிகமாக கோபப்படுபவராகவும், யோசிக்காமல் எதையும் செய்துவிட்டு விளைவுகளை பின்னர் சந்திப்பவராகவும், பொறுமையில்லாமல் எப்போதும் “துறுதுறு” வென இருப்பவராகவும் இருப்பார். ஜாதகத்தில் செவ்வாயின் வலுவை பொருத்தும், லக்னத்தோடு பிற கிரகங்கள் தொடர்பு கொள்வதைக் கொண்டும் இந்தக் குணங்கள் கூடுதல் குறைவாக இருக்கும். ஆனால் அடிப்படை குணங்கள் இவைகள்தான். இது மாறாது.

ரிஷபம் ஸ்திரத்தன்மையும், நிலத் தத்துவமும் கொண்ட பெண் ராசி. இதன் அதிபதி சுக்கிரன் ஒரு பெண் கிரகம். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகுணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள். சுக்கிரன் கலைத்தன்மையுடைய கிரகம் என்பதால் இவர்களுக்கு கலையார்வம் இருக்கும். கேளிக்கை விரும்பிகளாக, எதிலும் சொகுசுவாசிகளாக இருப்பதை விரும்புவார்கள்.

தன்னை வெட்டிக் காயப்படுத்துபவனையும் நிலம் பொறுத்துத் தாங்கிக் கொள்வதைப் போல, இவர்கள் எதிலும் பொறுமைசாலிகள். நிதானமாகவே இருப்பார்கள். ஆனால் உறுதியானவர்கள். “வழவழா கொழகொழா” என்றிருப்பது இவர்களுக்குப் பிடிக்காது. ஒரு முடிவு எடுத்து விட்டால் அதிலிருந்து பின் வாங்க மாட்டார்கள். சுக்கிரனை அப்படியே பிரதிபலிப்பது இந்த ராசி.

மிதுனம் புதனின் வீடாகும். இது ஒரு உபய ராசி. பஞ்சபூத தத்துவத்தில் காற்றினைக் குறிக்கிறது. புத்திசாலித்தனத்திற்கு புதன் பிரதான அதிபதி என்பதால் மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் அறிவுக்கூர்மை உள்ளவர்களாக இருப்பார்கள். தன்னுடைய திறமையால் பிழைப்பவர்கள் இவர்கள்.

உபயம் என்பது சரம், ஸ்திரம் ஆகிய இரண்டு தன்மைகளையும் கொண்டதாகும். சில நேரங்களில் சுறுசுறுப்பாகவும் சில நேரங்களில் நிதானமாகவும் இருக்கக் கூடிய குணம் மிதுனத்திற்கு இருக்கும். புதன் பேச்சில் வல்லமை தரும் கிரகம் என்பதால் இவர்கள் பேசிப் பிழைப்பவர்களாகவும் இருப்பார்கள்.

உலகம் முழுக்க பரவியிருக்கும் நவீன சாப்ட்வேர் கலாச்சாரத்தின் அதிபதி புதன் என்பதால் இன்றைய ஐ.டி.த்துறையில் சாதிப்பவர்கள் பெரும்பாலும் மிதுனத்தைச் சேர்ந்தவர்கள்தான். மிக முக்கியமாக புதன்  இரட்டை நிலையை  குறிக்கும் ஒரு கிரகமாகும். ஆணுமற்ற, பெண்ணுமற்ற குழந்தைப் பருவத்தை புதன் குறிப்பார். எனவே சில நிலைகளில் இவர்கள் இரண்டு விதமான நேர் எதிர் மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கடக லக்னம் சர ராசியாக, பெண் ராசி மற்றும் நீர் தத்துவத்தை கொண்டதாக அமையும்.  இதன் அதிபதி சந்திரன் தாய்மைப் பண்புகள் உள்ள ஒரு கிரகம்.  ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு கலப்படமற்ற அன்பையும், தனக்கென எதுவும் கொள்ளாமல் குழந்தைகளுக்காகவே அனைத்தையும் தந்து வாழ்வதைப் போல கடகத்தில் பிறந்தவர்கள் சுயநலம் இல்லாமல், பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்

அனைவரையும்  அரவணைத்துச் செல்லும்  ராசி  இது. கடகத்தில் பிறந்தவர்கள்  மற்றவர்களை திருத்தும் தன்மை கொண்டவர்கள். இதுவும் ஒரு தாயின் குணம்தான். சமூக அக்கறையும், பொதுவாழ்வில் விருப்பமும் இவர்களிடம் இருக்கும். எதையும்  விரைவாக செய்யக் கூடியவர்கள் இவர்கள். ஒத்தி வைப்பது இருக்காது. சந்திரனைப் போலவே எப்போதும் ஓடிக் கொண்டிருப்பார்கள்.  அடிக்கடி மாறுவார்கள்.னவே சில நிலைகளில் இவர்கள் இரண்டு விதமான நேர் எதிர் மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம் ஸ்திரம் எனப்படும் நிலைத்தன்மை கொண்ட நெருப்பு ராசியாகும். ஆண், பெண் தத்துவத்தில் இது ஒரு ஆண் ராசி. இந்த ராசியின் அதிபதி சூரியன். ஜோதிடத்தின் தலைவன் சூரியன்தான். சூரியனைச் சுற்றியே அனைத்தும் இயங்குகின்றன. எனவே சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் எதிலும் தலைமை தாங்குவதையும், தன்னைச் சுற்றியே எல்லாம் இயங்க வேண்டும் என்பதையும் விரும்புவார்கள்

எதிலும் முதல் நிலையில் இருக்கத் துடிப்பவர்கள் இவர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்தியே அனைத்தும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். நம்பியவர்களை எந்த நிலையிலும் காப்பாற்றுவார்கள். அதிகாரம் செலுத்த விரும்புவார்கள். ஆளுமைத் திறன் கொண்டவர்கள். எங்கு சென்றாலும் அங்கே முதல் நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். எதிலும் நிலையாக இருப்பார்கள். அடிக்கடி மாறும் குணம் இவர்களிடம் இருக்காது. ஜாதகத்தில் சூரியனின் வலுவை பொருத்து மேலே சொன்ன குணங்கள் கூடுதல் குறைவாக இருக்கும்.

கன்னி புதனின் இன்னொரு ராசியாகும். இது ஒரு பெண் ராசி. அதிலும் இளம் பெண்ணைக் குறிப்பது. இயக்கத் தன்மையில் மாறும் குணமும், நிலைத்திருக்கும் குணமும் கலந்த உபய ராசி. பஞ்சபூத தத்துவத்தில் நிலத்தைக் குறிக்கக் கூடியது. புதனின் அடிப்படைக் குணமான புத்திசாலித்தனம் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்கும். எதையுமே அறிவுக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள். மிகப் பெரிய விஞ்ஞானிகள் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள்தான். ஆராய்ச்சியாளர்கள். இவர்களின் அனைத்து செயல்களிலும் இளமைக்கே உரிய ஒரு நளினம் இருக்கும்.

வயதானவர்களாக இருந்தாலும் மனதில் இளமையாக இருப்பார்கள். கணிதத் திறன் கொண்டவர்கள். புதனின் இன்னொரு ராசியான மிதுனத்தைப் போல அல்லாமல், எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார்கள். சாப்ட்வேர் துறையில் சாதிப்பவர்கள். எதிலும் சரியாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். மற்றவர்களிடமும் அதையே எதிர்பார்ப்பார்கள்

மற்ற லக்னங்களுக்கான பலன்களை அடுத்த வெள்ளி பார்க்கலாம்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

One thought on “லக்னத்தின் குணம் என்ன..? D-016- Laknaththin gunam enna..?

  1. வணக்கம் குருஜி, கும்ப ராசி, சதய நட்சத்திரம், துலா லக்கினத்துக்கு செவ்வாய், சூரியன் பாதகாதிபதி. அவ்வர்கள் 6, 8 இல் தனித்து மறைவது நல்லதா கூடாதா? செவ்வாய் 2,7 இற்குறியது 6 இல் தனித்து இருக்கு. ஒரு சாஸ்திர ஐயா கூறினார் அது களஸ்திர தோஷம் என்று அது சரியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *