பாப அதி யோக விளக்கம்...!
ஜோதிடம் எனும் மகா அற்புதம் - 015
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி..
முந்தைய வாரத்தில் அதி யோகம் அமைந்து, அதனால் சிறப்பாக இருக்கும் ஒரு உன்னத ஜாதகத்தை உதாரணமாக கொடுத்திருந்தேன். தற்போது அதில் உள்ள ஜோதிடச் சிறப்புகளை பார்க்கலாம்.
இந்த ஜாதகத்தில் அதி யோகத்தை தரும் நாயகனான சந்திரன் பௌர்ணமிக்கு அருகில் இருக்கிறார். இன்னும் இரண்டு தினங்களில் பூரண நிலையை அடையப் போகும் நிலவு என்பதால் அவர் மிகுந்த ஒளித்திறனுடன் இருக்கிறார். மதிக்கு எதிரே ஏழு, மற்றும் எட்டாமிடங்களில் சுக்கிரன், புதன், குரு, சூரியன், செவ்வாய் ஆகிய ஐந்து கிரகங்கள் இருக்கின்றன.
இந்த யோக நிலையில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக செவ்வாயும், குருவும் அஸ்தமன நிலையை அடைந்திருக்கிறார்கள். ஒரு கிரகத்தின் அஸ்தமன நிலை என்பது அது தனது இயல்பான நிலையை இழக்கக் கூடிய மிகவும் பலவீனமான ஒன்றாகும். அஸ்தமன நிலையை பற்றி ஏற்கனவே ஜோதிடம் எனும் தேவ ரகசியம் கட்டுரைகளில் விளக்கியிருக்கிறேன்.
அஸ்தமனம் என்பது ஒரு மாபெரும் ஒளிக்கு முன்னால் எதுவுமே எடுபடாமல் அதனுள் அமிழ்ந்து போவதைக் குறிக்கிறது. அஸ்தமன நிலையில் இருக்கும் கிரகங்கள் தன்னுடைய இயல்பை சூரியனிடம் பறி கொடுத்து விடுகின்றன என்று மூல நூல்கள் சொல்லுகின்றன.
அதிக ஒளியையும், பெரிய இருளையும் நெருங்கும் கிரகங்கள் சுய இயல்பை இழக்கும் என்பது ஒரு சூட்சுமம். அதன்படி ஒளியான சூரியனையும், இருளான ராகுவையும் நெருங்கும் கிரகங்கள் அஸ்தமன தோஷத்தையும், கிரகண தோஷத்தையும் அடையும்.
அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றிருந்தால் இழந்த வலுவை திரும்ப அடையும் என்றும் நம்முடைய கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோன்ற இன்னொரு விதிவிலக்கான நிலைதான் அதி யோகம் என்பது. ஒரு கிரகம் அஸ்தமன நிலையில் இருந்தாலும் அது அதியோக அமைப்பில் இருந்தால் சூரியனிடம் தான் இழந்த ஒளியை, சந்திரன் மூலமாக பெற்று சுய இயல்பை அடையும். அதன்படி இங்கே குருவும், செவ்வாயும் அதியோக அமைப்பினால் அஸ்தமன தோஷ நிவர்த்தியை பெறுகிறார்கள்.
அதி யோகத்திலும் பாப அதியோகம், சுப அதியோகம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. சுப கிரகங்களான சுக்கிரன், புதன், குரு ஆகியவை சந்திரனுக்கு 6, 7, 8 ல் இருக்கும்போது மிகவும் உயர்வாக சொல்லக்கூடிய சுப அதியோகம் உண்டாகிறது. இது மனிதனுக்கு எல்லா நிலைகளிலும் நன்மைகளை மட்டுமே தரக் கூடியது.
சந்திரனுக்கு 6. 7 .8 ல் சுப கிரகங்கள் சேர்ந்த நிலையில் இருந்தாலும், தனித் தனியே இருந்தாலும், ஒரே ராசியில் ஆறிலோ, சந்திரனுக்கு ஏழிலோ, ஏட்டிலோ கூடியிருந்தாலும் அது அதியோகம்தான். ஆனால் சுபகிரகங்கள் மட்டும் அதியோக அமைப்பில் இருக்கும் போதுதான் நன்மைகள் அதிகம் இருக்கும். இவற்றுடன் பாபக் கிரகங்களும் இணைந்திருக்குமாயின் சேர்ந்துள்ள பாபக் கிரகத்தின் ஆதிபத்தியப்படி யோகவலு குறையும். பாபக் கலப்பற்ற சந்திராதி யோகமே முதன்மையானது.
சுபமான சந்திராதி யோகத்தைப் போலவே பாப கிரகங்கள் சந்திரனுக்கு 6, 7, 8 ல் இருப்பது பாப அதியோகம் என்று குறிப்பிடப்படுகிறது. ஜோதிடத்தில் சனி, செவ்வாய், சூரியன், தேய்பிறைச் சந்திரன், ராகு-கேதுக்கள் ஆகியவை பாபர்களாக குறிப்பிடப்படுகின்றன. அதியோக அமைப்பின் நாயகனே சந்திரன்தான் என்பதால் நிலவை தவிர்த்த முதன்மை பாபக் கிரகங்களான சனி, செவ்வாய் இரண்டுமே பாப அதியோக அமைப்பில் இருக்கும்போது சுபத்துவ நிலையை அடையும்.
சந்திரன் அதிக ஒளி நிலையில் இருக்கும்போது சந்திரனுக்கு நேர் எதிரில் ஏழிலோ, எட்டிலோ, ஆறிலோ சனியோ, செவ்வாயோ அல்லது சனி, செவ்வாய் இரண்டுமோ இருப்பின் அவை தங்களின் பாபத்துவத்தை இழந்து நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கின்றன. சந்திரனின் ஒளிநிலையைப் பொருத்து சுபத்துவம் கூடுதல், குறைவாக இருக்கும்.
சந்திரனுக்கு ஆறு, எட்டில் சனி செவ்வாய் இருக்கும்போதும், இருக்கும் டிகிரி நிலையைப் பொருத்து சனி, செவ்வாய்க்கு சந்திர பார்வை இருக்கவே செய்யும். இது அதிக ஒளி நிலையில் இருக்கும் குருவிற்கும் பொருந்தும். சூரிய ஒளியை உயிர்களுக்கு அதிக அளவில் பிரதிபலிப்பது பூமிக்கு வெகு அருகில் இருக்கும் சந்திரன் மட்டும்தான் என்பதால்தான் சந்திரனின் அதியோகம் சிறப்பாக சொல்லப்படுகிறது.
செவ்வாய், சனியின் தீய கதிர்கள் ஒரு உயிருக்கு கிடைக்கும் நிலையில், அந்த ஒளி அலைகளோடு சந்திரன் சம்பந்தப்படுமாயின் அதாவது கேந்திரம், கோணம், அதி யோகம் போன்ற நிலை அமையுமாயின், சனி, செவ்வாயின் தீய ஒளி அலைகள் சந்திர ஒளியால் மாற்றப்பட்டு, அதாவது சந்திரன் ஒரு வடிகட்டியாக செயல்பட்டு, தீய கதிர்களை மாற்றி உயிர்களுக்குத் தேவையான நல்ல ஒளியாக (சுபத்துவம்) மாற்றித் தருகிறது என்றுதான் இதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட நிலைகளில் சந்திரனை விட அதிக ஒளித்திறனுடன் குரு இருக்கும் போது அவருக்கும் இந்த அதியோக அமைப்பு உண்டு. ஆனால் அவர் பூமியை விட அதிக தூரத்தில் இருப்பதால் சந்திரனை விட குறைவாகத்தான் ஒளித் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இந்தக் காரணத்தால்தான் குருவின் அதி யோகம் சிறப்பாக சொல்லப்படவில்லை.
சென்ற வாரம் கிரகங்களின் பார்வைச் சிறப்பை விளக்கும்போது கடக குருவின் பார்வை அதற்கு எட்டில் இருக்கும் கும்ப சனிக்கு இருக்கும் என்று நான் எழுதியிருந்தது சிலருக்கு முரண்பாடாக தோன்றியுள்ளது என்பதை அறிகிறேன். அவர்களுக்கு நீங்கள் இன்னும் ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள் என்பதுதான் என் பதில்.
எந்த ஒரு ஜோதிடக் கருத்தையும், விளக்கத்தையும் “எடுத்தேன்.. கவிழ்த்தேன்” என்ற பாணியில் நான் எழுவது இல்லை. ஆய்வு நோக்கில் ஆயிரக்கணக்கான யோக, அவயோக ஜாதகங்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கும் என்னால் நான் எழுதுபவற்றுக்கோ, அல்லது நீங்கள் கேட்பதற்கோ இசைவான ஜாதகங்களை எந்த நேரத்திலும் காட்ட முடியும்.
ஜோதிடத்தில் எதையும் இங்கே யாராலும் மாற்ற முடியாது. இப்போதுள்ள நம்மில் எவருமே ஜோதிடத்தை அருளிய ஞானிகள் இல்லைதான். ஆனால் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் போதித்தது எல்லோருக்கும் புரிய வேண்டிய அவசியம் இல்லை. ஜோதிடம் புரிவது என்பது உங்களுடைய கர்மாவைப் பொருத்தது.
பாப அதி யோகத்தில் சனி, செவ்வாயை அடுத்த பாபக் கிரகங்களான ராகு, கேதுக்களின் நிலை என்னவென்று பார்த்தோமேயானால், ராகுவும், கேதுவும் எந்த ஒரு நிலையிலும் அதியோக அமைப்பில் சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது அதி யோகமாக இருக்காது. யோகம் குறைபட்டிருக்கும்.
அதி யோகமே ஒளி சம்பந்தப்பட்ட ஒரு யோகம் என்பதால், வெளிச்சம் தரும் நிலவுடன் எந்த நிலையில் ராகு, கேதுக்கள் சம்பந்தப் பட்டாலும், மதியின் ஒளி குறையும். சந்திரனுக்கு ஆறில் ராகு இருக்கும் நிலையில், இன்னொரு முனையில் பனிரெண்டில் கேது இருக்கும். இது ஒளியை இருள் நெருங்கும் நிலை போன்றது. சந்திரனுக்கு எட்டில் ராகு இருந்தால், எதிரே இரண்டில் கேது இருக்கும். இது இருள் விலகப் போகும் நிலையைக் குறிக்கிறது.
சந்திரனுக்கு எதிரே ஏழில் ராகு இருக்குமாயின், மதியின் பக்கத்திலேயே கேது இருக்கும். இது முழுக்க முழுக்க இருளின் ஆதிக்கத்தில் சந்திரன் தன் ஒளியை இழந்து கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும். அன்று பவுர்ணமி தினமாயின் கிரகண நிலையாகக் கூட இருக்கலாம். அப்போது நிலவின் ஒளி பூரணமாக பங்கப்பட்டிருக்கும். எனவே ராகு, கேதுக்களுக்கு சந்திர அதி யோக நிலையில் இடமில்லை.
சுப அதியோகத்திற்கு நிகராக பாப அதி யோகம் சொல்லப்படவில்லை என்றாலும் சந்திரனின் ஒளி மிகவும் சக்தி வாய்ந்த நிலையில் இருக்கும்போது பாபக் கோள்கள் சுபத்துவம் அடையவே செய்யும். பாபர்களின் ஆதிபத்திய நிலையைப் பொருத்து இது ஜாதகத்தை மேம்படுத்தும் ஒரு அமைப்பாகும்.
காட்டப்பட்டிருக்கும் உதாரண ஜாதகத்தில் பாபக் கோளான செவ்வாய் மற்ற சுபக் கிரகங்களுடன் இணைந்து அதி யோக நிலையில் இருக்கிறார். அதாவது செவ்வாய் இங்கே சுபர்களான குரு, புதனுடன் இணைந்து சுபத்துவமாக இருக்கிறார். சுக்கிரன், புதன் பரிவர்த்தனையின் மூலமாக சுக்கிரனுடனும் செவ்வாய் மறைமுக சம்பந்தம் பெறுகிறார்.
முக்கியமாக செவ்வாய் இங்கே லக்னாதிபதியாகி பனிரெண்டில் மறைந்து, சூரியனுடன் இணைந்து அஸ்தமன நிலை அடைந்துள்ள நிலையில் அதி யோகத்தின் மூலமாக இழந்த தனது வலுவை திரும்ப அடைகிறார். ஆக லக்னாதிபதி சுபத்துவமும், சூட்சும வலுவும் ஒருங்கே பெற்றிருக்கிறார். ஆகவே இந்த ஜாதகிக்கு பிறந்தது முதல் வெகு சிறப்பான ஒரு சொகுசு வாழ்க்கை அமைந்திருக்கிறது.
அதேபோல ஒரே ஒரு யோக ஒரு அமைப்பு மட்டுமே ஒரு ஜாதகத்தை சிறப்பாக்கி விடாது. பல விதிகள் இணைந்துதான் ஒரு யோக ஜாதகத்தை உருவாக்குகின்றன. ஒரு நல்ல ஜாதகத்தில் கிரகங்கள் அனைத்தும் நல்ல நட்சத்திர சாரம் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும் தசை நடத்தும் கிரகங்கள் யோக நட்சத்திரத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
பூரட்டாதி நான்காம் பாதத்தில் குருவின் தசை பத்து மாதம் மீதமிருக்கும் நிலையில் சென்னையில் பிறந்த இந்த யோக ஜாதகத்தில், தற்போது நடைபெறும் தசாநாதனான புதன், பஞ்சமாதிபதி என்று சொல்லப்படக்கூடிய அதியோக நிலையில் உள்ள குருவின் சாரத்தில் இருக்கிறார்.
அடுத்து நடைபெறக்கூடிய தசாநாதன் கேதுவும் பாக்யாதிபதியான ஒன்பதுக்குடைய, அதிக ஒளியுடன் ஐந்தாமிடத்தில் இருக்கும் சுபத்துவ சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். அதனையடுத்து நடைபெறக்கூடிய சுக்கிர தசையும் அதே சந்திரனின் நட்சத்திரமான அஸ்தத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆக வாழ்க்கையின் மிக முக்கியமான ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் இந்தப் பெண்ணிற்கு நல்ல நட்சத்திர சாரத்தில் அமர்ந்து, அதி யோகத்தைப் பெற்ற கிரகங்களின் தசைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது ஜாதகம் யோகமாக இருந்தாலும் யோக தசைகள் நடைபெற வேண்டும் என்று நான் அடிக்கடி எழுதுவதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
மேம்போக்காக யோகமற்ற ஜாதகமாகத் தெரிந்தாலும், சூட்சும அமைப்பில் வலுவான ஒரு ஜாதகத்தை மேற்கோள் காட்ட வேண்டும் என்பதினால்தான் இந்த ஜாதகத்தை அதியோக அமைப்பை விளக்குவதற்கு தேர்ந்தெடுத்தேன்.
நேரிடையாக “பளிச்” சென்று அதியோக அமைப்பினால் பிரகாசிக்கும் பல ஜாதகங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றை விளக்குவதினால் இதைப் படிப்பவர்களுக்கு பயன் இல்லை. சிக்கலான ஜாதகங்களின் மூலமாகவே ஜோதிடத்தின் இன்னொரு பரிமாணத்தினை நாம் புரிந்து கொள்ள முடியும்.
மீண்டும் அடுத்த வெள்ளி பார்க்கலாம்.
(13-07-2018 மாலைமலரில் வெளிவந்தது).
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
Guruji Chandiran ketu sarathil runthal adiyogam unda.
அற்புதம்…..