adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 195 (10.07.18)

து. மகேஸ்வரி, துறையூர்.

கேள்வி :

ஆசானுக்கு வணக்கம். கடந்த முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தேன். எதிர்காலத்தில் அரசியலில் உயர்பதவி கிடைக்குமா அல்லது இதே ஊராட்சி மன்ற தலைவர் ஆவேனா? உடலில் சிறிய உபாதைகள் உள்ளன. அவை எப்போது நிரந்தரமாக சரியாகும்? சிறுவயதிலிருந்து யாரிடமும் ஜோதிடம் பார்த்ததில்லை. தங்களின் கட்டுரைகளைப் படித்ததும் ஜோதிடம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. எனது எதிர்காலம் பற்றி கூறுங்கள்.

பதில் :
ரா குரு
சனி
17-11-1965 அதிகாலை 2- 06 துறையூர்
சந் ல
சுக் செ கே பு சூ

திருக்கணிதப்படி சிம்ம லக்னமாகி, பத்தாமிடத்தை சூரியன் தொடர்பு கொண்டு, உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஜெயித்து பதவி வகிக்கும் நிலைக்கு காரணமான சனி, குருவின் பார்வையில் சுபத்துவமாக அமர்ந்து சிம்மத்தைப் பார்த்ததால் ஊராட்சித் தலைவர் பதவியில் இருந்தீர்கள். அரசியல் நாதனான சூரியனின் பார்வை பெற்ற ராகுதசை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராகுவிற்கு மூன்று கேந்திரங்களிலும் கிரகங்கள் அமர்ந்து, பர்வத ராஜ யோகம் இருப்பதால் மீண்டும் ஊராட்சி தலைவர் பதவியை அடைய முடியும். ரிஷப ராகு உங்களுக்கு யோகத்தை கொடுப்பார். ராகுவிற்கு பத்தாமிடத்தை தொடர்பு கொண்டு பதவியை கொடுத்த அதே சுபத்துவ சனிதான் உங்களுக்கு நோயையும் கொடுக்க வேண்டியவர் என்பதால் ராகுதசை முடியும் வரை சிறுசிறு உடல்நலக் கோளாறுகள் இருக்கத்தான் செய்யும். எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும்.

ரா. வெங்கடசுப்ரமணியன். திருவைகுண்டம்.

கேள்வி :

குருஜி அவர்களின் பாதம் பணிகிறேன். மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். 2009ல் பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்து தேர்வு பெற்றேன். பின்புதான் பிரச்சினைகள் வந்தன. நல்ல பள்ளியில் இடம் கிடைத்தும், ஹாஸ்டலில் தங்கி படிக்கையில் உடன் இருக்கும் சக மாணவர்களின் தொல்லையினால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. பெற்றோரிடம் சொல்லியும் அவர்களுக்கும் சரியான நடவடிக்கை எடுக்கத் தெரியவில்லை. பிளஸ் டூவில் பெயிலாகி விட்டேன். கல்லூரியிலும் சரியாகப் படிக்க முடியவில்லை. வெளியே சொன்னால் அசிங்கம். காலேஜ் முடித்தபோது 24 அரியர் இருந்தது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். இன்னும் 17 அரியர் இருக்கிறது. அப்பா, அம்மா இருவருமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள். மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் வந்தும் மன நிம்மதி இல்லை. கடந்த வருடம் அதீத மன அழுத்தத்தால் ஒருவாரம் மனநல மருத்துவமனையில் இருந்தேன். அரியர்ஸ் எல்லாம் கிளியர் செய்ய ஒரு வழி வருகிறது. அதைப் பயன்படுத்தி பாஸாகி விடுவேன். நான் படித்த சிவில் இன்ஜினியரிங்கில் எனக்கு ஆர்வம் இல்லை. கெமிக்கல் இன்ஜினியர் அல்லது விமானி ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. அடுத்து வரும் புதனும் 6-ல் உள்ளதால் புதன் தசை எப்படி இருக்கும்? என் ஜாதகத்தில் பாசிடிவ் பாயிண்ட்ஸ் என்ன உள்ளது? இது யோக ஜாதகமா?

பதில் :
கே
சனி சந்
16- 1- 1994 இரவு 8- 25 நெல்லை
சூ பு சுக்   
செ ரா குரு

சிம்ம லக்னத்திற்கு வரக்கூடாத சனிதசை ஏழு வயதிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. சனி 7-ல் இருப்பதால் தசையின் முதல் ஒன்பதரை வருடங்கள் ஏழாமிட பலனைச் செய்ததால் பத்தாம் வகுப்பு வரை எந்தவிதமான கெடுதலும் இல்லை. பிற்பாதி தசையில் ஆறாமிடத்து கெடுபலன்களால் தடுமாறி விட்டீர்கள். சனியின் கெடுதல்களை சமாளிக்க வேண்டுமென்றால் லக்னாதிபதி சூரியன் வலுவாக இருக்க வேண்டும். இங்கே அவரும் ஆறாம் வீட்டில் பகை நிலையில் இருப்பதால் சனிதசை முடியும் வரை உங்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்காது.

லக்னாதிபதி வலுவிழந்து, ஆறுக்குடையவன் தசை நடப்பதால் எதிலும் பிடிப்பின்றி, இலக்கின்றி, வீட்டில் முடங்கி கிடக்கிறீர்கள். ஜோதிடம் என்பது இது போன்ற நிலைகளை தெளிவாக உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வதுதான். சனிதசை முடியப் போவதால் இனிமேல் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் மட்டுமே இருக்கும். புதன்தசை முதல் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் இருக்கும். சனியை போல புதன் கெடுதல்கள் செய்யாது. சூரியனை புதன் நண்பராக நினைப்பவர் என்பதால் சிம்ம லக்னத்திற்கு புதன் தசை கூடுமானவரை எந்த நிலையில் இருந்தாலும் கெடுதல் செய்வதில்லை.

லக்னாதிபதி சூரியனை வலுப்படுத்தும் பரிகாரங்களை மாலைமலரில் எழுதி இருக்கிறேன். அதன்படி சூரிய ஸ்தலங்களுக்கு சென்றும், சூரியனுக்குரிய தானங்களைச் செய்தும் நீங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு வரமுடியும். அடுத்த வருட ஆரம்பம் முதல் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். 2020 முதல் தற்போது இருக்கின்ற அனைத்து எதிர்மறை எண்ணங்களும் மாறி நன்றாக இருப்பீர்கள்.

லக்னாதிபதி சூரியன் ஆறில் சனி வீட்டில் மறைந்தாலும், வர்கோத்தமமாக, சொந்த நட்சத்திரத்தில் இருப்பதும், ராசியை குரு பார்ப்பதும், அடுத்து புதன் தசை நடக்க இருப்பதும் உங்களது ஜாதகத்தில் உள்ள பாஸிடிவ் பாயிண்ட்ஸ். சனிதசைக்குப் பிறகு உங்கள் ஜாதகம் யோக ஜாதகம்தான். இனிமேல் நன்றாக இருப்பீர்கள். வீட்டை விட்டு வெளியே வந்து நடக்க வேண்டிய வேலைகளுக்கான ஆரம்பங்களைச் செய்யுங்கள். இனி உங்கள் வாழ்வில் ஒரு குறையும் இல்லை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *