adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
அதி யோகம் எனும் சூட்சும யோகம்..!- D -013- Adhy Yogam Enum Sootchuma Yogam.

ஜோதிடமே மாபெரும் நுட்பங்கள் அடங்கிய ஒரு சூட்சும அமைப்புத்தான் எனும் நிலையில், அதனுள்ளும் இருக்கின்ற ஏராளமான நுணுக்கங்களில் ஒன்று அதி யோகம் என்றும் சந்திராதி யோகம் என்றும் சொல்லப்படும் இந்த அதி உன்னத யோகம்.

ஜோதிடத்தை ஒளியாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி எழுதியும், பேசியும் வருகிறேன். மனிதனுக்குத் தேவைப்படும் நல்ல ஒளியைத் தருகின்ற குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்கள் முழு ஒளித்திறனுடன் இருக்கின்ற நிலையில் பிறந்த ஒருவர் உன்னதப் பிறவி ஆகிறார் என்பதே ஜோதிடத்தின் உட்கருத்து.

பாப ஒளியைக் கொண்ட சனி, செவ்வாய், ராகு,கேது, தேய்பிறைச் சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்கள் மேற்சொன்ன கிரகங்களுடன் இணையும் போது, அவைகளால் பார்க்கப்படும்போது அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் சுபக் கோள்களுடன் தொடர்பு கொள்ளும்போது சுபத்துவம் பெற்று நன்மை தரும். இதைப் புரிந்து கொள்ளும் போதுதான் ஜோதிடத்தின் இன்னொரு பரிமாணம் நமக்குத் தெரிய வரும்.

ஆரம்ப நிலையில் உள்ளவருக்கு ஜோதிடத்தின் மாபெரும் கட்டமைப்புகளான லக்னம், ராசி, ஆதிபத்தியம், காரகத்துவம், கேந்திரம், கோணம், மறைவு ஸ்தானங்கள், நல்ல, கெட்ட கிரகங்கள் மட்டுமே தெரிய வருகின்றன. அடிப்படை விஷயங்கள் அறிய வந்தவுடன் ஜோதிடம் தெரிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு பலர் பலன் அறிவதில் தவறுகிறார்கள்.

மேலே சொன்ன லக்னம், கிரகம், கேந்திரம், கோணம் போன்றவை ஜோதிடத்தின் அஸ்திவாரமான விஷயங்கள் மட்டும்தான். ஜோதிடத்தின் இறுதி நிலையான எதிர்காலத்தை அறிவது என்பது இவைகளையும் தாண்டி ஒரு கிரகத்தின், சுபத்துவ, சூட்சும நிலைகளில் மட்டும்தான் அடங்கியிருக்கிறது.

சுபத்துவ அமைப்பையும், பாபக் கிரகங்களின் சூட்சும வலுவையும் புரிந்து கொள்ளாமல் ஒரு கிரகம் ஜாதகருக்கு என்ன பலன் தரும் என்பதை புரிந்து கொள்ளவோ, அந்த ஜாதகத்தின் தரத்தை அறிந்து கொள்ளவோ முடியாது. உதாரணமாக சென்ற அத்தியாயங்களில் நான் சொன்ன, ஒரு ஜாதகம் குப்பை அள்ளுபவனுடையதா, கோடீஸ்வரனுடையதா என்பதை நிர்ணயிக்க கிரகங்களின் சுபத்துவ, சூட்சும வலுக்களை முழுக்கத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கிரகங்கள் அனைத்தும் சுபத்துவம் அடைந்திருக்க வேண்டும், பாபக் கிரகங்கள் சூட்சும வலுவுடன் இருக்க வேண்டும் எனும் என்னுடைய  35 ஆண்டுகளுக்கும் மேலான  ஆய்வு முடிவினை ஒரு தியரியாகவே சில வருடங்களுக்கு முன் வெளியிட்டிருக்கிறேன்.

அதாவது கிரகங்கள் அனைத்தும் கேந்திர, கோணங்களில் வலுவாக இருந்தாலும், அவை சுபத்துவமாக இருப்பது மட்டுமே நன்மை தரும். கூடுதலாக பாபக் கிரகங்கள் சூட்சும வலுவுடன் இருப்பது மட்டுமே மிகப்பெரிய யோகங்களைத் தரும் என்பதே ஜோதிடத்தின் அடிநாதமான விஷயம்.

நான் இப்போது சொல்லும்  சுபத்துவ விஷயங்கள் ஜோதிடத்தின்  மிக உயர்நிலை புரிதலாக இருப்பவை. அடிப்படை கட்டமைப்புகளான லக்னம், ராசி இவற்றையும் தாண்டி இந்த சுபத்துவ நிலைகள் ஒரு ஜாதகத்தை தூக்கி நிறுத்தும் தன்மை கொண்டவை. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு ஜாதகத்தில் இருக்கின்ற குறைகள் அனைத்தையும் இந்த சுபத்துவ, சூட்சும நிலைகள் நீக்கி ஜாதகரை மிக உயரத்திற்கு இவை கொண்டு செல்லும்.

ஜோதிடத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று, ஒரு ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி  வலுவாக இருந்து, ஐந்து, ஒன்பதுக்குடையவர்கள் 6, 8, 12 போன்ற  மறைவிடங்களில் அமராமல், நல்ல பாவங்களில் இருந்து அவர்களின் தசையும் நடக்குமானால் ஜாதகர்  யோகத்தை  அனுபவிப்பார் என்பது.

விதி என்ற ஒன்று இருந்தால், விலக்கு எனும் ஒன்று ஜோதிடத்தில் இருந்தே தீரும். அடிப்படை விதிகளைக் கூட ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சுபத்துவ, சூட்சும நிலைகள்  மாற்றும் என்பது ஒரு விதிவிலக்கு.  மறைவு ஸ்தானங்களில் கிரகங்கள் இருந்தாலும், லக்னாதிபதி வலுவிழந்து இருந்தாலும் அவர் சுபத்துவ அமைப்பில் இருக்கும் போது யோகத்தை செய்வார். 

இதுபோன்ற  ஒரு உன்னத நிலையினைத்  தருவதுதான்  சந்திர அதி யோகம்.

பொதுவாக எப்போதும் நான் யோகங்களை வலியுறுத்திச் சொல்வதில்லை. ஜாதகத்தை கணிக்கும் போது அதில் உள்ள யோக அமைப்புகளை மட்டும் கணக்கிட்டு, அதன் சுபத்துவ, சூட்சும வலுக்களை கணிக்கத் தெரியாமல், பலன் அறிவதில் பலர் திசை மாறிப் போகிறார்கள். இந்த ஒரு நிலையால்தான், நான் எந்த ஒரு இடத்திலும் யோகங்களை முன்னிலைப்படுத்தி பலன் சொல்வதில்லை.

உண்மையில் நம்முடைய ஜோதிட விளக்க நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஏராளமான யோகங்கள் பயனற்றவை. சந்திராதி யோகம், பஞ்ச மகா புருஷ யோகங்கள், தர்மகர்மாதிபதி யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற மிகச் சில யோகங்கள் மட்டுமே நல்ல பலனைத் தருகின்றன.

ஜோதிடம் என்பதே காலத்திற்கேற்ப புரிந்து கொள்ளக் கூடியது மற்றும் பலன் தருவது என்பதுதான். நமது விளக்க நூல்களில் எழுதப்பட்ட பல யோகங்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் பலன் தந்திருக்கலாம். இப்போது அதே அமைப்பில் உள்ள பல யோகங்கள் நற்பலன்களைத் தருவதில்லை. அதேபோல என்றும் நிரந்தரமான அதி யோகம் போன்றவை ஒரு ஜாதகத்தின் தரத்தை அளவிடும் மிக நுண்ணிய சூட்சும விஷயங்களை நமக்குச் சொல்லித் தருபவை.

பரம்பொருளின் கருணையினால் வாழ்வில் உன்னத நிலையில் இருப்பவர்களின் ஜாதகங்களைப் பார்க்கும் நிலையில் இருக்கும் நான், கீழே இருபது வயதுகளில் இருக்கும் ஒரு மிகப் பெரும் செல்வந்தக் குடும்பத்துப் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.

பீச்சில் விற்கும் பத்து ரூபாய் சுண்டல் வாங்குவதற்கு, கோடிக்கணக்கில் மதிப்புள்ள வகைவகையான கார்களில் எதை எடுத்துக் கொண்டு போகலாம் என்று யோசிக்கும் அளவிற்கு வீட்டில் நிறுத்த முடியாத அளவிற்கு கார்கள் நிற்கின்றன. தான் ஒரு மிகப்பெரிய பணக்காரி என்ற எண்ணம் கூட தெரியாத அளவிற்கு வாழ்வில் அனைத்தும் கிடைக்கின்ற இறையருள் பெற்ற பிறவி இவருடையது.பிறந்தது முதல் கேட்கும் அனைத்தும் கிடைத்த மிகப் பெரிய யோகக் குழந்தை இவர். அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு பதினான்கு தலைமுறைக்குத் தேவையான சொத்து இந்தக் குடும்பத்தில் கொட்டிக் கிடக்கிறது. இவரது தந்தையும், தாயும் மிகப் பெரிய அந்தஸ்தைக் கொண்டவர்கள்.

இவருக்கு விருச்சிக லக்னம், மீன ராசியாகி, லக்னாதிபதி செவ்வாய் பனிரெண்டில் மறைந்திருக்கிறார். லக்ன நாயகனை அடுத்த சுபரான ஐந்துக்குடைய குருவும் அவருடன் பனிரெண்டில் இருக்கிறார். ஒன்பதிற்குடைய பாக்யாதிபதி சந்திரன் ஐந்தில் அமர, மிகப் பெரும் செல்வ நிலைகளை அனுபவிக்கத் தரும் சுக்கிரன் நீச நிலையில் பரிவர்த்தனை அமைப்பில் இருக்கிறார். மேம்போக்காகப் பார்த்தால் மிக மிக சாதரணமான ஜாதகம் இது.

எந்த ஒரு நல்ல ஜாதகத்திலும் லக்னம், லக்னாதிபதியையோ, அல்லது ராசியையோ வலுப்பெற்ற குரு பார்க்க வேண்டும். அல்லது லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். அதுவே வாழ்வில் அனைத்தையும் அனுபவிக்கத் தகுந்த சிறந்த அமைப்பு என்று அடிக்கடி எழுதுபவன் நான். அந்த அமைப்புகள் இல்லாத ஜாதகம் இது.

ஆனால் அதற்குப் பதிலாக வேத ஜோதிடத்தில் சந்திரனால் பெறப்படும் உன்னத யோகமான சந்திர அதியோகம் இந்த ஜாதகத்தில் இருக்கிறது. பலவீனமான அத்தனை கிரகங்களும் சந்திரனின் சுப ஒளியால் சுபத்துவம் அடைந்து ஜாதகருக்கு நன்மை தரும் அமைப்பைப் பெறுகின்றன.

வேத ஜோதிடத்தின் தாயாகவும், தந்தையாகவும் சந்திர, சூரியர்கள் உருவகப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இந்த இருவரும் முழு ஒளித்திறனுடன் இருக்கும் நாளான பவுர்ணமி தினம் மிகப் பெரிய நேர்மறை சக்திகள் அடங்கிய நாளாக ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பவுர்ணமி நாட்களில் பிறப்பவர்கள் ஏதேனும் ஒருவகையில் சிறப்பானவர்களாகவே இருப்பார்கள்.

சந்திராதி யோகம் என்பது “சந்திரனுக்கு ஆறு, எழு, எட்டில் சுபக்கிரகங்கள் இருப்பது” என்று மூல நூல்களில் சுருக்கமாக சொல்லப்பட்டிருகிறது. ஆயினும் இந்த யோகம் ஒருவருக்கு இருக்கும் நிலையில், யோகத்தின் மூல நாயகனான சந்திரன் ஒளி வழங்கும் திறனுடன் வளர்பிறை, பவுர்ணமி, தேய்பிறையாக இருந்தாலும் பவுர்ணமியை நெருங்கிய நாட்கள் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும் என்பதை நாம் நமது ஜோதிட ஞானத்தைக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்.

தான் ஒளியுடன் இருக்கும்போது, தனக்கு நேர் எதிர் ஏழாமிடத்தில் இருக்கும் கிரகத்தை சந்திரன் வலுவாக்குவதை உணர்ந்து சொல்லப்பட்ட யோகம் இது. சந்திரன் முழு ஒளித்திறனுடன் இருக்கும்போது தனக்கு நேர் எதிர் பாவகமான ஏழில் இருக்கும் கிரகத்தையும், அதன் முன் பின் பாவகங்களான ஆறு, எட்டில் இருக்கும் கிரகங்களையும் தன் சுப ஒளி வெள்ளத்தில் மூழ்கடித்து புனிதப் படுத்துகிறார் என்பதை நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் உணர்ந்துதான் இந்த யோகத்தை நமக்கு எடுத்துச் சொன்னார்கள்.

எந்த ஒரு நிலையிலும் ஒரு உயிர் பிறக்கும் போது சந்திரனின் ஒளி அதற்கு கிடைக்காமல் இருக்கக் கூடாது, அப்படி சந்திர ஒளி கிடைக்காத நிலையில் பிறக்கும் ஒரு உயிர் இந்த உலகில் அதிர்ஷ்ட வாழ்வை அடையாது என்பதைக் குறிக்கவே “வட்டவான் மதிக்கு ஈராறெட்டில் அரவு இருப்பின்” போன்ற பாடல்கள் நமக்குச் சொல்லப்பட்டன.

அதாவது வட்ட வான் மதி எனும் சந்திரனுக்கு எட்டு, பனிரெண்டில் அரவு எனப்படும் சர்ப்ப, இருள் கிரகங்களான ராகுவோ, கேதுவோ, சந்திரனுக்கு பனிரெண்டில் நெருங்கி இருப்பின் சந்திரன் ஒளியிழப்பார். அப்போது பிறப்பவருக்கு இந்த அமைப்பு நன்மை தராது என்ற அர்த்தத்தில் இது சொல்லப்பட்டது.

ராகு, கேதுக்களில் ஒன்று சந்திரனுக்குப் பனிரெண்டில் இருந்தால் சந்திரன் ஒளியிழப்பார் என்பதைப் போலவே, சந்திரனுக்கு எட்டில் இவைகளில் ஒன்று இருந்தாலும், அதன் மறுமுனைக் கிரகமான இன்னொன்று நிலவுக்கு இரண்டில் நெருங்கி இருந்து அதன் ஒளியைப் பாதிக்கும் என்பதும் மறைமுகமாக இந்தப் பாடலில் நமக்கு உணர்த்தப் படுகிறது.

பூமிக்கு மிக அருகில் இருக்கும் சுபக் கோளாக சந்திரன் இருப்பதினால்தான் கிரகங்களின் சக்தியிழப்பை மாற்றி அமைக்கும் திறன் சந்திரனுக்கு இருப்பதாக ஜோதிடம் சொல்கிறது. சந்திரனுக்கு கேந்திரத்தில் இருக்கும் கிரகங்கள் நீசபங்கம் அடையும் என்று சொல்வதின் சூட்சுமம் இதுதான்.

உண்மையில் உயிர்களின் தாயாகிய சந்திரன், பூமிக்கும், பூமியில் உள்ள உயிர்களுக்கும் கிடைக்கும் சூரியன் மற்றும் கிரகங்கள், மற்றைய நட்சத்திரங்கள் மூலம் கிடைக்கும் ஒளியை அளந்து, மாற்றித் தரும் ஒரு வடிகட்டியாகவே செயல்படுகிறது.

சந்திராதி யோகம் மூலம் இந்த ஜாதகம் அடைந்திருக்கும் சிறப்புகளைப் பற்றியும், இந்த ஜாதகத்தின் நுணுக்கமான விளக்கங்களையும் அடுத்த வெள்ளிக்கிழமை பார்க்கலாம்...

(29-06-2018 மாலைமலரில் வெளிவந்தது). தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

3 thoughts on “அதி யோகம் எனும் சூட்சும யோகம்..!- D -013- Adhy Yogam Enum Sootchuma Yogam.

  1. வணக்கம் அண்ணா! என் தோழி ஜாதகத்தில் சந்திரஅதி யோகம் விருச்சிக ராசியில் இருக்கிறது. பலன்கள் குறையுமா? அனால் பிறந்த அன்று பௌர்ணமி

  2. குருஜி!
    ஒரு சந்தேகம்…..இந்த ஜாதகத்துல 12ல் உள்ள கிரகங்கள ஆட்சி பெற்ற சனியும் பார்க்கிறாரே…..அப்போது என்ன பலன் கிடைக்கும்?

  3. Gruvea vanakam,
    Nan ungalai en manaseka gruva ninaikeran atharku thangal permission vendum, Nan Aramba nilai manavan,
    Chandaranku 2 & 12 il varum shaya grakam ethani degreekul irunthal Athi Yogam Velai Sheiyaathu?, Pls sir sollunga, Chandra krakanam velakiya piragu
    pirakkum kulanthaikaluku intha yogam vellai seiuma?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *