உலகில் பிறந்த அனைவரும் அதிர்ஷ்டசாலி இல்லை. நம்மில் மிகச் சிலரே சரியான பருவத்தில் கேட்கும் அனைத்தும் கிடைக்கப் பெற்று நல்லவைகளை அனுபவிக்கும் அமைப்பை பெற்றிருக்கிறார்கள். ஏனைய பெரும்பாலானவர்கள் ஏமாற்றங்களுடன், தான் இப்படி இருப்பதற்கான காரணங்களை கூட அறியாமல் வறுமையிலும், சோகத்திலும் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
ஒருவகையில் பார்க்கப் போனால் இந்த வேறுபட்ட நிலைகளின் காரணத்தை அறிய மனிதன் ஆர்வப்பட்ட நிலையில்தான் ஜோதிடம் பிறந்தது என்று கூடச் சொல்லலாம். இதுபோன்ற முரண்பட்ட மனித வாழ்விற்கு காரணங்களைத் தேடும் போதுதான் முற்பிறவி கர்மா என்ற ஒன்று ஆன்மிகத்தால் உணரப்பட்டு, சென்ற பிறவியில் மனிதன் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் இப்பிறவி அமைகிறது என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டது.
ஜோதிடம் என்பது ஒரு மனிதனின் எதிர்கால நிகழ்வை முன்பே உணர்த்தக் கூடியது. ஜோதிடத்தில் எதையும் முன்னரே சொல்ல முடியும் என்பதால்தான் மனித வாழ்வு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்றாகிறது.
உண்மையில் பிரபஞ்சமே ஒரு ஒழுங்கான, கட்டுக்கோப்பான நியதிக்கு உட்பட்டு முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒரு வடிவத்தில்தான் இயங்குகிறது என்பது விஞ்ஞான ரீதியான உண்மை. நம்முடைய பூமியும் கூட தீர்மானிக்கப்பட்ட விதத்தில்தான் இயங்குகிறது.
கடந்த 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பிறந்த இந்த பூமி படிப்படியாக உருமாறி தன்னைத்தானே மாற்றிக் கொண்டு, உயிர்களைப் பிறப்பித்து, அழித்து இன்றைக்கு மனித சமுதாயம் உருவாகி, வளர்ந்து முன்னேறி பிரபஞ்சத்தின் தோற்றத்தையே ஆராயும் அளவிற்கு முன்னேறிக் கொண்டு இருப்பதும் ஒரு ஒழுங்கான கட்டமைப்பிற்குள் உள்ள முன்பே தீர்மானிக்கப்பட்ட விஷயம்தான்.
ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பிறந்த இந்த பூமியும் கூட இன்னும் அதேபோன்ற அளவான சுமார் நானூறு கோடி ஆண்டுகளுக்குப் பின் அழிந்து போகும் என்பதும் பிரபஞ்சத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒரு விஷயம்.
உயிர்கள் உருவான சில விஷயங்களுக்குள் நாம் போவோமேயானால் நமது பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கின்ற சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் ஒரு லட்சம் கிலோமீட்டர் கூடவோ, குறையவோ இருந்திருந்தால் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை.
அதேபோல நம்மிலிருந்து சுமார் 4 லட்சம் கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள சந்திரன் இன்னும் சற்று அருகிலோ அல்லது தூரத்திலோ இருந்திருந்தால் கூட பூமியின் தோற்றம் முற்றிலும் மாறி விட்டிருக்கும். ஆக அனைத்துமே ஒரு தீர்மானிக்கப்பட்ட ஒரு ஒழுங்கில் இருப்பது தெரிய வரும்.
நீங்கள் சொல்வது தவறு. இது போன்ற அமைப்புகளில் பூமி “தற்செயலாக” பொருந்தி வந்ததால்தான் பூமியில் உயிர்கள் தோன்றி வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் சொல்வீர்களேயானால் அந்த தற்செயலை உருவாக்கியது யார், எது என்ற கேள்வி எழும்.
சரி... ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கும், சொகுசான அதிகார வாழ்க்கைக்கும் காரணமான ஒரு யோக ஜாதகம் என்பது எப்படி இருக்க வேண்டும்?
ஜோதிடத்தில் ஜாதகத்தை வழி நடத்துபவராக, அதன் தலைவனாக லக்னாதிபதி குறிப்பிடப்படுகிறார். நல்லவைகளை அனுபவிக்கப் பிறந்த ஒருவருக்கு முதன்மையான விதியாக லக்னாதிபதி எனப்படும் லக்ன நாதன் வலுவாக, சுபத்துவமாக, பாபக் கிரக தொடர்புகள் இன்றி இருக்க வேண்டும்.
லக்னராஜன் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களாக அமைந்தால், எனது தியரிப்படி சூட்சுமவலு பெற்றிருக்க வேண்டும். அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக் கூடிய அனைவரின் ஜாதகங்களிலும் இந்த அமைப்பை கண்டிப்பாக காண முடியும்.
அதேபோல ஒரு ஜாதகம் சுப ஒளி பொருந்திய நிலையில் இருக்க வேண்டும். அதாவது முதன்மை ஒளிக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் அந்த ஜாதகத்தில் தங்களுக்குள் கேந்திரங்களில் அல்லது லக்னத்தில் இருந்து கேந்திரங்களில் அமைந்திருக்க வேண்டும். இந்த இரண்டு அமைப்பிலும் சூரிய, சந்திரர்கள் அமர்ந்து, வளர்பிறை நிலையிலும் ஜாதகம் அமைந்தால் அவர் அனுபவிக்கப் பிறந்தவர் என்று நிச்சயமாகச் சொல்லி விடலாம்.
அடுத்து சுபக் கிரகங்கள் என்று சொல்லப்படக் கூடிய குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோர் கிரகணம், அஸ்தமனம், பகை, நீசம் போன்ற எவ்வித பங்கமும் இன்றி, முக்கியமாக பாபக்கிரக தொடர்புகள் இன்றி சுயத் தன்மையுடன், தனித்துவமாக இருக்க வேண்டும்.
விதிகளை விட விதிவிலக்குகளை ஒரு ஜோதிடர் புரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறேன். விதிவிலக்குகளை உணரும் ஆற்றல் நமக்கு வந்து விடுமாயின் மேலே சொன்ன பகை, நீசம், அஸ்தமனம், கிரகணம் ஆகியவற்றிற்கு விலக்கான விஷயங்களையும், அவற்றிற்கான தீர்வுகளையும் உணர்ந்து ஒரு ஜாதகத்தின் தரத்தை அளவிட முடியும்.
உதாரணத்திற்கு நீசம் எனப்படுவது ஒரு கிரகத்தின் ஒளியிழந்த நிலையைக் குறிக்கும். சில நிலைகளில் ஒரு கிரகம், நீசமடைவது ஜாதகருக்கு நன்மைகளையே அளிக்கும். கிரகங்கள் அனைத்தும் எல்லா நிலைகளிலும் நன்மைகளைத் தருவது இல்லை. முக்கியமாக ஒரு ஜாதகத்தின் ஆறு, எட்டு எனப்படும் கெட்ட இடங்களின் அதிபதிகள் பலமிழந்தே இருக்க வேண்டும்.
இதிலும் ஒரு நுணுக்கமாக எட்டாம் அதிபதி பலவீனமானால் மனிதனுக்கு மிகவும் தேவையான ஆயுள் கெட்டு விடுமே? ஜாதகம் யோகமாக இருந்தாலும் அதை அனுபவிக்க ஆயுள் இல்லாவிட்டால் என்ன பயன்? எனவே ஒரு கிரகம் பலவீனம் அடைந்திருந்தாலும் வேறுவகையில் மறைமுகமாக அது பலம் பெற்றிருக்க வேண்டும்.
கீழே ஒரு யோக ஜாதகத்தை உதாரணமாகக் கொடுத்திருக்கிறேன். எதிர்காலத்தில் சாதிக்கப் போகும், மிக முக்கியமான ஒரு வாரிசின் ஜாதகம் இது. இந்த ஜாதகர் இந்திய அரசியலில் வருங்காலத்தில் முக்கிய இடத்தில் இருப்பார். அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
ஜோதிடத்தில் எந்த ஒரு இடத்திலும் விதிகளை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த ஜாதகத்தில் உள்ள விதிவிலக்குகளை சொல்கிறேன்.
ஒரு யோக ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களில் அல்லது லக்ன கேந்திரங்களில் இருக்க வேண்டும் என்பது விதி. இதற்கு பவுர்ணமிக்கு அருகில் உள்ள சூரிய, சந்திரர்களின் நிலை விதிவிலக்காக அமையும்.
கேந்திரங்கள் என்பது ஒளிப் பிரதிபலிப்பு மையங்கள் என்பதை நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். இதனை எனது “யூ டியூப்” வீடியோக்களிலும் பேசியிருக்கிறேன். ஒரு கிரகம் சரியான ஒளித்திறனோடு இருக்கவேண்டும் என்பதற்காகவே கேந்திரங்களில் கிரகங்கள் இருப்பது நன்மை என்று ஜோதிடத்தில் வலியுறுத்தப்படுகிறது.
இந்த ஜாதகர் பவுர்ணமிக்கு வெகு அருகில் பிறந்திருக்கிறார். இங்கே சூரிய, சந்திரர்கள் தொண்ணூறு சதவிகித ஒளித்திறனுடன் இருக்கிறார்கள். எனவே அவர்கள் கேந்திரங்களில் இல்லாமல் தங்களுக்குள் ஆறு, எட்டாக இருக்கும் நிலை ஈடு செய்யப்படுகிறது.
மேலும் சூரியன் உச்சமானதால் அவர் ஆறில் மறைந்த தோஷமும் விலகுகிறது. இயற்கை பாபக் கிரகமான சூரியன் ஆறில் மறைந்தது நன்மை என்பதோடு சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் ஜாதகர் பிறந்து, ஜனன நட்சத்திர நாதன் உச்சமாவது வெகு அதிர்ஷ்டம்.
சூரியனைப் போலவே லக்னாதிபதி செவ்வாயும் எட்டில் மறைந்திருக்கிறார். லக்ன நாயகன் பாபக் கிரகமானால் அவர் மறைவது சிறப்பு என்பதையும் முன்பே விளக்கியிருக்கிறேன். ஆனால் லக்னாதிபதிக்கு பாபத் தொடர்புகள் இருக்கக் கூடாது. இங்கே லக்னாதிபதி செவ்வாய் வெகு பாபரான ராகுவுடன் இணையவில்லை. ராகுவுடன் ஒரு கிரகம் இணைந்தால் தூரத்தைப் பொருத்து தன் வலிமையை இழந்தே தீரும். ஆனால் இங்கே எதையும் வளர்க்கக் கூடிய செம்பாம்பான கேதுவுடன்தான் செவ்வாய் இணைத்திருக்கிறார். இதுவும் ஒரு நல்ல நிலைதான்.
லக்னாதிபதி குற்ற அமைப்பில் இருந்தால் லக்னம் வலுவாக இருக்க வேண்டும். அப்படி இருப்பின் லக்ன நாதனின் குறைகள் நிவர்த்திக்கப்படும். அதாவது பாவகாதிபதி வலுக் குறைந்தால் பாவகம் வலுவாக இருக்க வேண்டும். இந்த யோக ஜாதகத்தில் மாபெரும் சுபர்களான குருவும், சுக்கிரனும் எவ்வித பங்கமும் இன்றி ஆட்சி, உச்சம் பெற்ற நிலையில் ஒரு சேர லக்னத்தைப் பார்க்கிறார்கள். இது அனைத்திலும் சிறப்பு. இதனால் லக்னம் மிகுந்த வலுப் பெற்றது.
அடுத்து இங்கே புதன் நீச நிலையில் இருக்கிறார். ஆனால் தனித்து இருக்கிறார். சூரியனுடனோ மற்ற பாபருடனோ சேராத தனித்த புதன் மட்டுமே சுபராக நமது கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே புதன் இந்த ஜாதகத்தில் சுபராகத்தான் இருக்கிறார். ஆனால் அவர் நீசம் பெற்று ஒளியிழந்த நிலையில் இருக்கிறார்.
முக்கிய விதிவிலக்காக நீச புதன், குருவுக்கு நிகரான பூரண ஒளிச் சந்திரனின் நேர் பார்வையில் அவரது ஒளியைப் பெற்றும், வக்ரம், பாபக் கிரக சேர்க்கை போன்ற எதையும் பெறாத, பங்கமற்ற முழுத் திறனுடன் கூடிய மகா சுபரான உச்சகுருவின் பார்வையைப் பெற்றும், நீசபங்க ராஜயோக அமைப்பில் வலுவுடன் இருக்கிறார். இங்கே புதனை நீசம் என்று ஒருபோதும் கணக்கிடக் கூடாது.
இந்த ஜாதகத்தில் செவ்வாயைத் தவிர்த்து அனைத்துக் கிரகங்களும் வேறு எவையுடனும் இணையாமல் தனித்துவத்துடன் இருக்கின்றன. அதேபோல ராசிப்படியும், லக்னப்படியும் ஒரு யோக ஜாதகம் வலுவாகவே இருக்கும் என்பதும் விதி. அதன்படி இங்கே லக்னத்திற்கு ஐந்திற்குடைய குரு உச்சம், ராசிக்கு ஐந்திற்குடைய சனி ஆட்சி, லக்னத்தின் பாக்யாதிபதியான சந்திரன் பவுர்ணமிக்கு அருகில் உள்ள உச்சநிலை, ராசிக்கு ஒன்பதிற்குடைய சுக்கிரன் ஆட்சி என்ற அமைப்பு இந்த ஜாதகத்தில் இருக்கிறது.
புகழ் வாய்ந்த பதவிகளை பெறப் போகும் ஜாதகத்தில் ராசி, லக்னம் இரண்டின்படியும் பத்தாம் அதிபதிகள் வலுவாக இருக்க வேண்டும் என்பதும் ஒரு விதி. இங்கே லக்னத்திற்குப் பத்திற்குடைய சூரியன் உச்சம், ராசிக்குப் பத்திற்குடைய புதன் உச்சத்தை விட மேலான நீசபங்க ராஜயோக அமைப்பில் இருக்கிறார்.
இவை அனைத்திலும் மேலாக நடைபெறப் போகும் தசாபுக்தி அமைப்புகளே ஒரு மனிதனின் உயர்வு, தாழ்வை நிர்ணயிக்கின்றன. ஜாதகம் வலுவாக இருந்தாலும் ஒருவருக்கு அவயோக தசைகள் நடைபெறுமாயின் ஜாதகர் முன்னேறுவதற்குத் தடை இருக்கும். அவர் நிச்சயமாக அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியாது.
இந்த ஜாதகர் பிறக்கும்போதே இந்த லக்னத்தின் தர்ம, கர்மாதிபதிகளில் ஒருவரான சூரியனின் தசையில் பிறந்திருக்கிறார். இவர் பிறந்ததிலிருந்து ஜாதகரின் தந்தை அதிகாரத்திற்கு வரத் துவங்கி இன்றைக்கு நல்ல பதவியில் இருக்கிறார். அடுத்து ஜாதகருக்கு சந்திரனின் தசையும், பிறகு கேதுவுடன் இணைந்த செவ்வாய் தசையும் முடிந்து, தற்போது ராகு தசை நடந்து கொண்டிருக்கிறது.
ராகு, சுபர் வீடுகளில் அமர்ந்து, அவருக்கு வீடு கொடுத்தவன் உச்சமானால் மகத்தான யோகங்களைச் செய்வார் என்று நான் அடிக்கடி எழுதியிருக்கிறேன். அதன்படி இங்கே முதன்மைச் சர்ப்பம், கோதண்ட ராகுவாக அமர்ந்து, அவருக்கு வீடு கொடுத்த குரு உச்சமாக இருக்கிறார். எனவே ராகு தசையில் ஜாதகர் தந்தையைப் போலவே ஒரு அதிகார அமைப்பில் அமருவார்.
அடுத்து சரியான பருவத்தில் விருச்சிக லக்னத்தின் மிகப் பெரும் யோகரான குருவின் தசை நடக்கும். குருவும் உச்சமாக இருக்கிறார், அதனையடுத்து, லக்னத்தின் அவயோகரான சனியின் தசை நடக்க உள்ளது. சனியும் உச்ச குருவின் பார்வையில் இருக்கிறார், அவயோக கிரகங்கள் 3,6,10,11 மிடங்களில் இருந்தால் யோகத்தைச் செய்வார்கள் என்ற விதிப்படி இங்கே சனி உபசய ஸ்தானமான மூன்றில் இருப்பதால் சனி தசையும் யோகத்தை செய்யும்.
அதனையடுத்து நடக்க இருக்கும் தசாநாதன் புதன் எப்படிப்பட்ட ஒரு சிறப்பான அமைப்பில் இருக்கிறார் என்பதையும் விளக்கி விட்டேன். ஆகவே வாழ்நாள் முழுக்க உச்ச தொடர்புகள் மட்டுமே வரும் ஒரு சாதிக்கப் போகும் யோக ஜாதகம் இது.
மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை சந்திப்போம்.
(22-06-2018 மாலைமலரில் வெளிவந்தது). தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
அற்புதம் ஐயா
வணக்கம் ஐயா! மேற்கூறிய விளக்கத்தில் சிறிய சந்தேகம் உள்ளது. யோக தசையான குரு தசை வலுவான சனிப்பார்வையால் பங்கப்படாதா…எட்டுக்குடைய புதன் தசை நீச பங்கம் மூலம் நன்மை செய்யுமா ?
அய்யா இது போன்ற ஜாதக விளக்கத்தோடு படிக்க நன்றாக புரிகிறது தங்களுக்கும், அந்த பரம்பொருளுக்கும் நன்றி
(அடுத்தவர்களுக்கு நமக்கு தெரிவதை உணர்ந்து கூறுவது பரம்பொருளுக்கு நிகரான குணம்) தங்களால் ஜோதிடம் என்கின்ற வானவியல் சாஸ்திரம் எளிமையான முறையில் புரிகிறது நன்றி ஐய்யா