வேதஜோதிடம் ஆன்மீகத்தோடு பிணைக்கப்பட்டு, இந்த உலகில் இயங்கும் அனைத்துமே பரம்பொருளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது எனவும், ஜோதிடரால் ஒரு மனிதனுக்கு இந்த நேரத்தில் இப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்று சொல்ல முடிந்தாலும், அது இப்படிப்பட்ட சம்பவங்களின் மூலம் நடக்கும் என்று சொல்ல முடியாது எனவும் வரையறுத்து வைக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக ஒரு மனிதருக்கு இப்போதிருந்து இந்த மாதத்திற்குள் திருமணம் நடக்கும் என்று ஒரு மூன்று மாத காலம் நெருக்கமாக ஒருவரின் திருமண காலத்தை ஜோதிடத்தில் கணிக்க முடியும். ஆனால் இன்ன தேதியில், இன்ன நேரத்தில், இந்த இடத்தில் உனக்கு திருமணம் நடக்கும் என்று சொல்ல முடியாது.
அப்படி ஒரு ஜோதிடர் சொல்வாரேயானால் அதைப் பொய்யாக்குவதற்காகவே அன்று திருமணத்தை நடத்த விடாமல் தடுக்கும் அபாயமும் இருக்கிறது. அதைவிட மேலாக திருமணம் என்பது என்ன என்பதிலும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. இருவர் மாலை மாற்றிக் கொள்ளும் நேரம் அல்லது அல்லது தாலி கட்டும் நேரத்தை திருமணம் என்று சொல்லலாமா? அல்லது அவர்களுக்குள் சாந்தி முகூர்த்தம் நடக்கும் நேரத்தை திருமண நேரம் என்று சொல்லலாமா?
சமீப காலங்களில் நம்மில் ஒரு புது வழக்கம் வந்து விட்டது. திருமணத்திற்கு முதல் நாளே ரிசப்ஷன் என்ற பெயரில் மாப்பிள்ளையையும், பெண்ணையும் அருகருகே நிற்க வைத்து, வாழ்த்தி, பரிசளித்து, விருந்துண்டு திரும்பி விடுகிறோம். மறுநாள் தாலி கட்டும் நேரத்தில் சொந்தக்காரர்கள் என்ற பெயரில் இருந்தே தீர வேண்டிய சிலரின் முன்னிலையில் திருமணம் நடக்கிறது. எனவே முதல்நாளே திருமணம் நடந்து விட்டது என்றும் சொல்லலாம்.
இது போன்ற நிச்சயிக்கப்பட்ட சம்பவம் என்பது கலாச்சாரத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதை நீங்கள் நொடிக்கணக்கில் துல்லியமாக சொல்ல முடியாது, திருமணம் என்பது முதல்நாள் ரிசப்ஷனா, மறுநாள் தாலி கட்டலா, சாந்தி முகூர்த்தமா என்பதைப் போல குழப்பங்கள் எல்லா நிகழ்விலும் உண்டு.
ஒருவருக்கு திருமணம் எப்போது நடக்கும் என்பதை ஜோதிடத்தில் கணிப்பதற்கு பலவித முறைகள் உள்ளன. நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீடித்த தினசரி தாம்பத்திய சுகம் எப்போது கிடைக்கும் என்கிற அடிப்படையில், சில அந்தர காலத்தை கணக்கிட்டு பலன் சொல்கிறேன். இதிலும் கண்டிப்பாக தவறுகள் ஏற்படலாம்.
ஜோதிடம் என்பது யூக சாஸ்திரம்தான், இங்கே ஒரு சம்பவம் என்பது இப்போது நடக்கும் என்று அனுமானிக்க முடியுமே தவிர நிச்சயமாக சொல்ல முடியாது என்று சிலர் வாதிடுகிறார்கள். சம்பவம் என்பதே எது என்று நிச்சயமற்ற நிலையில் அது எப்போது நடக்கும் என்பது கணிப்பது இயலாத ஒன்றுதான்.
ஜோதிடத்திற்குப் பிறகு தோன்றிய நவீன விஞ்ஞானம் உலகில் உள்ள அனைத்தையும், நடக்கும் சம்பவங்களையும் வேறுவிதமாகப் பார்க்கிறது. நவீன அறிவியலில் பரம்பொருளின் இருப்பே கேள்விக்குறியாக்கப்படுகிறது, விஞ்ஞானம் அனைத்தையும் பௌதிக விதிகளாக விளக்க முயற்சிக்கிறது. இங்கே கண்ணுக்குத் தெரியும் விதிகளுக்கும், விளக்கங்களுக்கும்தான் முதலிடம். தெரியாத எதையும் விஞ்ஞானம் நம்புவதில்லை.
ஜோதிடமும் ஒருவகை காலவியல் விஞ்ஞானம்தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அடிக்கடி அப்படித்தான் எழுதுகிறேன். என்னைத் தொடர்ந்து படிப்பவர்கள் இதை உணருவார்கள். எனக்கு முன்பிருந்தவர்களைப் போல அடி முதல் நுனி வரை ஜோதிடத்தை ஆன்மீகம் கலந்து நான் விளக்கினாலும், அதனுள் விஞ்ஞானத்தையும் இணைத்து அறிவியல் ரீதியாகத்தான் இதைச் சொல்லி வருகிறேன்.
ஜோதிடம் ஒரு பூரண விஞ்ஞானம் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. ஜோதிடம் ஒன்றேயானாலும் அதைச் சொல்லும் ஜோதிடர்கள் ஒரே மாதிரியானவர்கள் இல்லை. ஞானம், திறமை, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், மாறுபட்ட பலனை இரண்டு ஜோதிடர்கள் வெவ்வேறு விதமாக சொல்லும் போதுதான் இந்த மாபெரும் கலை பரிகாசத்திற்கு உள்ளாகிறது.
உண்மையில் இது ஒரு அபாரமான விஞ்ஞானம்தான் என்பதை ஜோதிடத்தின் உள்ளே நுழைந்து வெளி வருபவர்கள் உணர முடியும். வெளியில் இருந்து விமர்சிப்பவர்கள் ஜோதிடத்தின் அறிவியல்தன்மையை உணர முடியாது. அப்படி ஒருவர் ஜோதிடத்தில் இருக்கும் விஞ்ஞானத்தை புரிந்து கொள்ள வேண்டுமாயின் இந்தக் கலையை ஓரளவேனும் அவர் கற்றுக் கொண்டாக வேண்டும். உங்களுக்கு இது பிடிக்காது எனும்போது உங்களால் இதைக் கற்றுக் கொள்ளவும் முடியாது. இதுவே இந்தப் பிரச்னையில் உள்ள கடுமையான முரண்பாடு.
சரி.. ஒரு சம்பவம் என்பது நிச்சயமற்றது என்பது ஒருபுறம் இருக்கட்டும். தீர்மானிக்கப்பட்ட விஷயங்களைக் கூட சில நிலைகளில் ஜோதிடத்தால் துல்லியமாக சொல்ல முடிவதில்லையே, ஏன்? அனைத்தும் தெரிந்தது பரம்பொருள் மட்டுமே என்று ஏன் இங்கே அடிக்கடி சொல்லப்படுகிறது?
கடவுளைக் காரணம் காட்டாமல், இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் மனிதனால், இன்னொரு மனிதனின் எதிர்காலத்தை துல்லியமாகச் சொல்ல முடியாதா? நடப்பவை அனைத்தும் நிச்சயிக்கப்பட்டவை எனும் போது எதிர்காலத்தின் ஒரு ஓரத்தில், எங்கோ இருக்கும் ஒரு தீர்மானமான சம்பவத்தை, ஒரு மனிதனால் முன்பே உணர முடியாதா? உதாரணமாக, ஒரு நொடியில் நடக்கும் விபத்தை முன்பே சொல்ல முடியாதா?
நிச்சயமாக முடியும்.
இங்கே எதிர்காலம் என்பது நிச்சயிக்கப்பட்டது என்பதில்தான் பகுத்தறிவாளர்கள் மாறுபடுகிறார்கள். அனைத்தும் தலைவிதிப்படி என்பதை மறுத்து, நம்முடைய மனம் செலுத்தும் முடிவுகளின்படி, நாம்தான் நமது வாழ்க்கை முறையை போகிற போக்கில் தீர்மானிக்கிறோமே தவிர, கண்ணுக்குத் தெரியாத வேறு ஏதோ ஒன்று நம் வாழ்க்கையை தீர்மானிக்கவில்லை என்று வாதிடுகிறார்கள்.
மனித வாழ்க்கையை, உலக இயக்கத்தை, பிரபஞ்ச சக்தி எனப்படும் பரம்பொருள் நடத்தி வைக்கிறதோ அல்லது தனது வாழ்க்கையை, மனிதன் தானே தீர்மானித்துக் கொள்கிறானோ, அதனுள் இப்போது போக வேண்டாம்.
எது எப்படி என்றாலும் உலக இயக்கம் அல்லது மனித வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது. அது சம்பவங்களால் நிரம்பியது. அது இந்த உலகை விட்டு வெளியில் வேறு எங்கோ முடிவாகிறதோ அல்லது மனிதன் தனது முடிவால் தானே அதை நடத்திக் கொள்கிறானோ, ஒரு சம்பவம் என்பது நிச்சயம் நடக்கிறது. நடந்தே தீரும். அப்படி நடக்க இருக்கும் சம்பவத்தை முன்பே உணர முடியாதா? இப்போதிருக்கும் சில நிலைகளின்படி ஏன் நூறு சதவிகித பலன் துல்லியமாகச் சொல்ல முடிவதில்லை?
விளக்குகிறேன்.
ஜோதிடத்தில் எதிர்கால பலன் சொல்வதற்கு காரணிகளாக ஒரு மனிதனின் பிறந்த நேரம், பிறந்த நாள், பிறந்த இடம் ஆகியவை தேவைப்படுகின்றன. இதில் பிறந்த நேரமும், இடமும் மிகவும் முக்கியமானவை.
மிகப்பெரும் விஸ்தீரணத்தைக் கொண்ட இந்த பூமி அட்சரேகை, தீர்க்க ரேகை போன்று பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை நுணுக்கமானவை அல்ல. பரந்து விரிந்த இந்த பூமியில், ஒரு அடி, அல்லது ஒரு அங்குலத்தை துல்லியமாக குறிப்பிடும் கணிதம் இன்னும் ஜோதிடத்தில் புகுத்தப் படவில்லை. ஒரு மனிதனின் பிறந்த இடத்தை அடிக்கணக்கில் துல்லியமாக்கும் விஞ்ஞான கணிதம் என்றைக்கு ஜோதிடத்தினுள் வருகிறதோ அன்றைக்கு ஜோதிடம் இன்னும் துல்லியமாகும்.
உதாரணமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் பற்றிய கட்டுரையில் அவர் பிறந்த நேரத்தில் உலகில் இன்னும் நிறைய பெண் குழந்தைகள் பிறந்திருப்பார்களே, அவர்கள் அனைவரும் ஏன் ஜெயலலிதாவாக மாறவில்லை என்ற கேள்விக்கு ஜெயலலிதா மட்டுமே அந்த “இடத்தில்” பிறந்தார் என்று பதில் கொடுத்திருந்தேன்.
இந்தக் கேள்விக்கான பதிலில் ஆன்மீகத்தை நுழைத்து சிலர் வேறுவிதமாக சொல்லியிருந்தார்கள். அதாவது ஒருவரின் முற்பிறவி கர்மா என்பது இங்கேதான் வருகிறது. ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பிறந்திருந்தாலும் முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் இப்பிறவி அமைவதால் ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைகளில் எது முன்னேற்றமான வாழ்க்கையை சந்திக்கும் என்பதை மனிதனால் அறிய முடியாது என்று ஒருவர் பதில் கொடுத்திருந்தார்.
நிச்சயமாக அப்படி இல்லை. மனிதனால் அறிய முடியாதது எதுவும் இல்லை. ஒரு மனிதன் என்பவன் பரம்பொருளின் பிரதிநிதிதான். இப்போது இல்லையென்றாலும் என்றோ ஒரு நாள் அவனால் அனைத்தையும் அறிய இயலும். இந்தக் கேள்விக்குக் கூட ஆன்மீகத்தை கலக்காமல் விஞ்ஞான ரீதியில் பதில் சொல்ல முடியும்.
இங்கு நான் சொல்ல வருவது என்னவெனில் ஜெயலலிதா பிறந்த அன்று அதே நேரத்தில் உலகில் ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் பிறந்திருக்கலாம். ஏன் அதே வினாடியில் நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகள் கூட பிறந்திருக்கலாம். ஆனால் மைசூரில் அவர் மட்டுமே பிறந்தார்.
ஒரு வாதத்திற்காக மைசூரில் கூட அன்றைக்கு அதே வினாடியில் பத்துப் பெண் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, ஜெயலலிதா பிறந்த “இடத்தில்” கண்டிப்பாக அவர் மட்டுமே பிறந்தார். அதனால் அவர் ஜெயலலிதா ஆனார். இதைத்தான் ஜெயாவின் ஜாதக விளக்கக் கட்டுரையில் சொல்லியிருந்தேன். அதாவது அன்றைக்கு அவர் பிறந்த மகம் நட்சத்திரத்தின் ஒளி மையப்புள்ளி மைசூராக இருந்திருக்கும். அதனால் மைசூரில் பிறந்த ஜெயலலிதா மகாராணி ஆனார் என்று எழுதினேன். இன்னும் துல்லியமாகச் சொன்னால் அந்த ஒளி மையப் புள்ளியிலும் அதி நுட்ப மிகத் துல்லிய மையம் ஜெயா பிறந்த இடமாகவே இருந்திருக்கும்.
நமது ஜோதிடக் கணக்குகள் சென்னையில் ஒருவர் பிறந்தார் என்றால், சென்னை என்கின்ற ஏறத்தாழ 40 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றளவுள்ள இந்த நகரத்தின் பொதுவான அட்ச, தீர்க்க ரேகையை வைத்துத்தான் ஜாதகம் கணிக்கப்படுகிறது. அதாவது மயிலாப்பூரில் பிறந்தவருக்கும், மாதவரத்தில் பிறந்தவருக்கும் ஒரே அட்ச, தீர்க்க ரேகைதான். ஒரே இடம் போன்ற கணிதம்தான்.
இந்த சென்னையின் 40 கிலோ மீட்டருக்குள் அந்தக் குழந்தை, எந்த இடத்தில், எந்த மூலையில், எந்த மேல் கீழ், அதாவது எந்த உயரத்தில் (தற்போது அடுக்குமாடி குடியிருப்புக் கலாச்சாரம் வந்து விட்டதால்) என மிகத் துல்லியமாக, மைக்ரோ சென்டிமீட்டர் அளவில் கணக்குகள் வைத்து ஜாதகம் கணிக்க இயலும்போது நிச்சயமாக மனிதனால் ஒருவரின் எதிர்காலத்தை 100 சதவிகிதம் துல்லியமாக சம்பவங்களின்படியே கூட சொல்ல முடியும்.
நவீன அறிவியல் ஒரு மீட்டர் அளவை லட்சங்கள், கோடிகளாகப் பிரித்து ஒரு நானோ மீட்டர் என்று சொல்லி ஆய்வுகளின் மூலம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அறிவியலுக்கு வழிகாட்டிய முன்னோடியான ஜோதிடம் மட்டும் இன்னும் சவலைப் பிள்ளையாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்ன கணக்குகள் சொல்லப்பட்டதோ, அதையே பிடித்துக் கொண்டு நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது.
மனித வாழ்க்கை என்பது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். உயிர்களும், உலக இயக்கமும் தீர்மானிக்கப்பட்ட ஒரு விதத்தில் இயங்குகின்றன என்பதுதான் அறுதியிட்ட உண்மை. அதை மாற்ற இயலுமா என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் நிச்சயிக்கப்பட்ட இதை முன்பே துல்லியமாக அறிய முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். ஆனால் அதற்கான சரியான காரணிகள் வேண்டும்.
நவீன விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கும் அளவிற்கு ஜோதிடம் ஆய்வுகளின் மூலம் வளரவில்லை என்பதே கசப்பான உண்மை. இதுவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான். என்றோ ஒருநாள் இந்த மாபெரும் கலையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு, உலகின் முழுப்பார்வையும் இதன் மீது திரும்பும். அப்போது உலக இயக்கத்தின், தனி மனித வாழ்க்கையின் எதிர்கால சம்பவங்களை மனிதன் முன்கூட்டியே அறிவான். ஒரு நாள் இது நடந்தே தீரும்.
மீண்டும் அடுத்த வெள்ளி ச(சி)ந்திப்போம்.
(15-06-2018 மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
Thirumanam eppothu nadakkum
End ethirkalam eppady irukkum