ஏழரைச் சனி என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் பருவத்திற்கேற்ப துன்பம் தரும் ஒரு அமைப்பு என்பதை கடந்த வாரங்களில் பார்த்தோம். குறிப்பாக வாழ்வில் மிக முக்கிய பருவத்தில் சுமார் ஏழரை ஆண்டுகள் வரும் அமைப்பான இந்த சனிக்கு மனிதனாகப் பிறந்த எவரும் விதிவிலக்காக முடியாது என்பதையும் சென்ற கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன்.
அவரவருடைய பிறப்பு ஜாதக அடிப்படையில், ஒருவருக்கு துன்ப அனுபவங்களை தரும் சனி, கோடீஸ்வரன் முதல் தெருக்கோடியில் இருப்பவர் வரை அவரது முன்ஜென்ம கர்ம வினையின்படி துன்பங்களைத் தருவார். அதேபோல ஒரு குடும்பத்தில் பெரும்பாலானோருக்கு ஒரே நேரத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்குமாயின் அந்தக் குடும்பம் அதன் தரத்திற்கும், உயரத்திற்கும் ஏற்றார் போல கஷ்டப்படும் என்பதும் சனியின் ஒரு மிக முக்கிய பலன்.
எத்தகைய உயர் யோகக் குடும்பமாக இருந்தாலும், குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு ஒரே நேரத்தில், கோட்சார நிலையில் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்கக் கூடாது. அப்படி நடக்குமாயின் யோகமான ஜாதக அமைப்பை குடும்பத்தில் இருப்பவர்கள் கொண்டிருந்தாலும், அந்த ஜாதகங்கள் செயலற்றுப் போகும். கெடுபலன்களே தூக்கலாக இருக்கும்.
யோகங்களை நிலையாக அனுபவிக்கும் குடும்பங்களில் உள்ளவர்களின் ராசிகளைப் பார்த்தால், பெரும்பாலோருக்கு ஒரே ராசியாகவோ அல்லது அடுத்தடுத்த ராசிகளாகவோ இருக்காது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மூன்று, நான்கு ராசிகள் தள்ளி அல்லது கேந்திர ராசிகளில் பிறந்திருப்பதை கவனிக்கலாம்.
உதாரணமாக, கணவன் தனுசு ராசியாக இருந்தால், மனைவி மிதுனமாகவும், ஒரு குழந்தை கன்னி மற்றும், இன்னொரு குழந்தை மீனமாகவும் இருக்கும். இப்படிப்பட்ட அமைப்பில் ஏழரைச் சனி வரும்போது, நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவருக்கு சனி முடிந்த பிறகே, மற்றவருக்கு ஆரம்பிக்கும். இது போன்ற நிலையில் அக்குடும்பம் மிகப்பெரிய பாதிப்பிலிருந்து காப்பாற்றப்படும்.
மாறாக குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்த தொடர் ராசிகளாகவோ, ஏக ராசி என்று சொல்லப்படும் ஒரே ராசியாகவோ இருக்கின்ற நிலையில், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும்போது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பப் பிரச்னைகள், மற்றும் தாங்க முடியாத இழப்புகள் என அந்தக் குடும்பம் கடும் புயலில் சிக்கித் தவிக்கும் சிறு படகு போலாகும்.
கீழே ஒரு மிகப்பெரிய பணக்கார இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவரின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். இரண்டு, மூன்று விதமான தொழில்களில் முன்னிலையில் இருக்கும் குடும்பம் இது. பணம் தரும் அந்தஸ்துடன், அதிகார அமைப்பும் இந்தக் குடும்பத்திற்கு இருக்கிறது.
தற்போது 40 வயதுகளில் இருக்கும் இந்த ஜாதகர் பிறந்தது முதல் மிகப்பெரிய செல்வச் செழிப்பில் வளர்ந்தவர். கஷ்டம் என்ற வார்த்தைக்கும், அதனுள் இருக்கும் நான்கு எழுத்துக்களுக்கும் அர்த்தமே தெரியாதவர். கஷ்டம் வரும் வரை ஜோதிடத்திலும் நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்.
விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரத்தில் இவர் பிறந்திருக்கிறார். இவரது குடும்பத்தில் இவரைத் தவிர்த்து, இவரது தாய்க்கும், இவரது மகளுக்கும், ஒரு சகோதரர் மற்றும் சகோதரிக்கும் விருச்சிக ராசிதான். இவரது மனைவிக்கு துலாம் ராசி, குடும்பத் தலைவரான தந்தைக்கு மீனராசி என மிகப்பெரிய கூட்டுக் குடும்பம் இது.
இவரது பிறந்த ஜாதகத்தை பார்த்தோமேயானால், இவருக்கு ரிஷப லக்கினமாகி, லக்னாதிபதி சுக்கிரன் எவ்வித பங்கமும் இன்றி பதினோராமிடத்தில் உச்ச நிலையில் இருக்கிறார். (சுக்கிரனுக்கு சனி பார்வை இருக்கிறது. ஆனால் சில நிலைகளில் ரிஷபத்திற்கு சனி பார்வை நன்மைகளையே தரும்.)
யோக ஜாதகங்களில் லக்னாதிபதி வலுவாக இருப்பார் என்பதை அடிக்கடி எழுதி இருக்கிறேன். இதையே வேறுவகையில் சொல்ல வேண்டுமானால் ஒருவர் எத்தகைய யோக அமைப்புகளைக் கொண்டிருந்தாலும், யோகத்தை அனுபவிப்பதற்கு அந்த ஜாதகத்தின் தலைவன் என்று சொல்லப்படக் கூடிய லக்ன நாயகன் வலுவாக இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமான ஒரு விதி.
அதன்படி மிகப்பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு லக்னாதிபதி சுக்கிரன் எவ்வித பங்கமும் இன்றி உச்சமாக இருக்கிறார். இயற்கைச் சுபரான சுக்கிரன் எப்போதும் சூரியனையும், புதனையும் ஒட்டியே இயங்கக் கூடிய கிரகம். அவர் உச்சம் அடைவது என்பது வருடத்தில் சுமார் நான்கு வாரங்கள் மட்டுமே.
உச்ச நிலையிலும் சுக்கிரன் பெரும்பாலான நாட்களில், சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடைந்திருப்பார் அல்லது நீச புதனுடன் இணைந்து தன்னுடைய உச்ச வலுவை, புதனுக்கு கடனாக கொடுத்து, புதனை நீசபங்கப் படுத்தி, தான் சூன்ய பலத்தை அடைந்திருப்பார். அல்லது வேறு கிரகங்களின் இணைவைப் பெற்று தனது தனித்துவத்தை இழந்திருப்பார்.
தனித்து, பங்கமின்றி சுக்கிரன் உச்சமடைவது என்பது குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஒரு நிகழ்வு. அது போன்ற தனித்துவ உச்ச சுக்கிர அமைப்பில் இந்த ஜாதகர் பிறந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு மெகா கோடீஸ்வரரின் ஜாதகத்தில் 2, 9, 11-மிட அதிபதிகள் வலுவாகி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விதிப்படி, இவரது ஜாதகத்தில் 2-க்குடைய புதன் பரிவர்த்தனையாகி, இரண்டில் ஒன்பதுக்குடையவர் அமர்ந்து, பதினொன்றாம் அதிபதியின் சுபப் பார்வை இரண்டாமிடத்திற்கும், ஒன்பதாம் அதிபதிக்கும் இருக்கிறது.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் இவருக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகியது. கூடவே இவரது தாய், மகள், சகோதரி, சகோதரர் என குடும்பத்தில் நான்கு, ஐந்து நபர்களுக்கும் சனி துவங்கியது. அதைவிட மேலாக குடும்பத் தலைவரான தந்தையின் மீன ராசிக்கு அஷ்டமச் சனி துவங்க, மனைவியின் துலாம் ராசிக்கு முன்பே சனி நடந்து கொண்டிருந்தது.
சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த தொழில் அமைப்பில் சில சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. புதிதாக ஆரம்பித்த சில தொழில்கள் கை கொடுக்கவில்லை. சில விரிவாக்கங்கள் கிணற்றில் போட்ட கல்லாயின. முக்கியமாக சில அகலக்கால்கள் வைக்கப்பட்டு பிரச்னைகள் உருவாயின.
என்னதான் சிக்கல்கள் என்றாலும் அனைத்தையும் தாங்கக் கூடிய கட்டமைப்புக்களை வலுவாகக் கொண்ட, நிலைத்த பொருளாதார பின்புலம் குடும்பத்திற்கு இருந்ததால் சிக்கல்கள் இருந்தாலும் நிலைமை கைமீறிப் போகாமல் குடும்பத் தலைவரால் சமாளிக்க முடிந்தது.
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும்போது நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்று பாதிக்கப்படும் என்பது ஒரு முக்கியமான விதி. அதாவது எங்கு அடித்தால் உங்களுக்கு நிஜமாகவே வலிக்குமோ அங்கே சனி அடிப்பார். தொழில் சிக்கல்களை சமாளிக்க முடிந்தால் உங்களுக்கு மிகவும் பிடித்த உறவுகளில் தாங்க முடியாத மன அழுத்தத்தை சனி தருவார். அதன்படி தந்தை தொழில் சிக்கல்களை சமாளித்த போது உறவில் மனச்சங்கடம் தரும் வேலையை சனி ஆரம்பித்தார்.
ஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருந்தாலும், மூத்தவன் மேல் தந்தைக்கோ, தாய்க்கோ அதிக பாசம் இருக்கும். அதன்படி நமது உதாரண ஜாதகர், பிறந்ததிலிருந்து குடும்பம் நல்ல வளமுடன் முன்னேறத் துவங்கியது என்ற நம்பிக்கை கொண்டு அதிக பாசம் வைத்திருத்த தந்தை, தாயின் மனம் நோகும்படியான சில விஷயங்களை செய்ய ஆரம்பித்தார்.
கோட்சாரத்தில் ஏழரைச் சனியும், பிறப்பு ஜாதகப்படி நீச சந்திர தசையும் ஒன்றாக நடக்குமாயின் ஜாதகருக்கு மிகவும் மோசமான பலன்கள் நடக்கும் என்பதும் இன்னொரு விதி. அதன்படியே மனதிற்கு காரகனான சந்திரன் பலவீனமாக இருந்து தசை நடத்த ஆரம்பித்ததும் ஜாதகர் மனக் கட்டுப்பாடு இல்லாத விஷயங்களை செய்ய ஆரம்பித்து பெற்றவர்களை கவலைக்குள்ளாக்கினார். ஜாதகரின் பழக்க வழக்கங்களால் அவரது மனம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை.
பெற்றோரின் பேச்சை மீறி ஜாதகர் ஆரம்பித்த தொழில்கள் பெருத்த நஷ்டத்தை தந்து மிகப்பெரிய இழப்பை உண்டாக்கிய நிலையில், இவரது ஜாதகத்தை பார்த்த போது தொழில் நஷ்டத்தையும் மீறி ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவதை உணர்ந்து, குறிப்பிட்ட ஒரு வார காலத்தைக் குறித்துக் கொடுத்து அந்த ஏழு நாட்களும் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் இருக்கும்படி அறிவுறுத்தினேன். முக்கியமாக இவரது தாயாரிடமும் இதைத் தெரிவித்து மகனை இந்த ஒரு வார காலம் கண்காணிப்பில் வைக்கும்படி சொன்னேன்.
நான் குறித்துக் கொடுத்த அந்த ஏழு நாட்களின் இரண்டாவது நாள் இவர் ஒரு பெரிய விபத்தினை உண்டாக்கினார். அன்று அதிகாலையில் எனக்கு வந்த முதல் போன் அவருடையதுதான். முன்கூட்டியே இதைக் கணித்த எனக்கு நன்றி கூறிய ஜாதகர், இறைவனின் அருளால் இந்த சிக்கலில் இருந்து தப்பித்து விட்டதாகவும் சொன்னார்.
ஆனால் சனியின் திருவிளையாடல் வேறுவிதமாக இருந்தது. முடிந்து விட்டதாக, தப்பித்து விட்டதாக நினைத்த விஷயம் ஒரே நாளில் வேறுவிதமாக மாறி சட்டத்தின் கரங்கள் ஜாதகரை நோக்கி நீண்டன. மிகப்பெரும் அந்தஸ்தைக் கொண்ட ஜாதகர் தலைமறைவாக வேண்டியிருந்தது. குடும்பம் மிகுந்த வேதனைக்குள்ளாகியது.
மத்திய அரசில் மிக உயர் நிலையில் ஜாதகரின் உறவினர் இருந்தும் விதியின் விருப்பம் வேறாக இருந்தது. நீடித்த போராட்டங்களுக்குப் பிறகு ஜாதகர் சில வாரங்கள் சிறையில் இருக்க நேரிட்டது. இன்றுவரை இந்த வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சனியின் தாக்கத்தை புரிந்து கொள்வதற்கு நமது புராணங்களில் நளன்- தமயந்தி கதை சொல்லப்பட்டிருப்பதை பெரும்பாலானாவர்கள் அறிவார்கள். நவகிரக ஸ்தலங்களில் சனியின் ஆலயமாக சொல்லப்படும் திருநள்ளாரின் ஸ்தல வரலாறும் நளனுடைய கதைதான்.
மன்னனாக இருந்த நள மகராஜன், ஏழரைச்சனி காலத்தில் மனைவியை இழந்து, சொந்த நாட்டை இழந்து, சொல்ல முடியாத துயரங்களுக்கு உள்ளாகி மீண்டதைத்தான் நளன் கதை சொல்கிறது. சொல்ல முடியா பெருமை வாய்ந்த நமது அதி உன்னத புராணங்களின் அத்தனை கதைகளும் மனித வாழ்க்கைச் சம்பவங்களின் குறியீடுகள் மற்றும் ஜோதிடத்தின் வேறுவடிவமான உண்மைகளே என்பதை “ஜோதிடம் எனும் தேவ ரகசியம்” கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன்.
ஏழரைச்சனி, அஷ்டமச் சனி என்று ஆரம்பித்தாலே இதைப் படிக்கும் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருந்துதான் தீரும். ஏதோ ஒரு விதத்தில் அந்தக் காலகட்டத்தில் நாம் பாதிக்கப்பட்டிருக்கவே செய்வோம். சனி என்றாலே நமது உடல் சிலிர்த்து மனம் பதைக்கத்தான் செய்யும்.
எதிர்காலத்தைக் குறிக்கும் காலவியல் விஞ்ஞானமான வேத ஜோதிடத்தில், ஒரு மனிதனின் கஷ்டமான பருவத்தை மிகச் சுலபமாக முன்னரே அடையாளம் காட்டும் ஒரு நிலைதான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி எனப்படுவது. அதிலும் குடும்பத்தில் அனைவருக்கும் இது ஒன்று போல வரும் நிலையிலோ, அல்லது சம்பந்தப்பட்டவருக்கு பிறந்த ஜாதகத்தில் ஆறு, எட்டுக்குடையவர்களின் தசா புக்தி வரும் நிலையிலோ கஷ்டம் கூடுதலாக இருக்கும் என்பதையும் முன் கூட்டியே அறியலாம் என்பதே வேத ஜோதிடத்தின் சிறப்பு.
அடுத்த வெள்ளி வேறொரு தலைப்பில் பார்க்கலாம்.
(08-06-2018 மாலைமலரில் வெளிவந்தது) தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
Ji உங்களை காண நான் பிப்ரவரி 22 கொடுத்துள்ளார்கள் நான் நேரில் வருகிறேன்.