அ. சண்முகம்,கழுநீர்குளம் .
கேள்வி :
என் பேத்தி பத்தாம் வகுப்பில் 500க்கு 483 மார்க் வாங்கினாள். தற்போது பிளஸ் டூ பரிட்சை எழுதுகிறா ள். அவளுக்கு துலாம்ராசி . அவள் நல்ல மார்க் எடுப்பா ளா? 80 வய தா கும் எனக்கு தயவுசெய்து பதில் தரவும்.
பதில்:
இது போன்ற கேள்விகள் என் பார்வைக்கு வந்து நான் பதில் தருவதற்குள், தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கும் என்பது நிச்சயம். தற்போது உங்கள் பேத்தி என்ன மார்க் எடுத்திருக்கிறார் என்பது உங்களுக்கே தெரிய வந்திருக்கும். இன்னொரு முறை வேறு ஏதாவது அவளது எதிர்காலம் சம்பந்தப்பட்ட கேள்வி கேளுங்கள். பதில் தருகிறேன்.
பாலாஜி, புதுக்கோட்டை.
கேள்வி :
எனது இந்தக் குறை பலருக்கும் கேலியையும், நகைப்பையும் ஏற்படுத்தலாம். ஆனால் இது மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால்தான் கடவுளின் அருளையும், குரு அருளையும் வேண்டி இதற்கு பதில் தந்து என் குறையைப் போக்க வேண்டுகிறேன். 27 வயது நெருங்கியும் என்னால் இருசக்கர வாகனம் இயக்கும் ஆற்றலைப் பெற இயலவில்லை. முயற்சிக்கும் போதெல்லாம் தோல்விதான் ஏற்படுகிறது.இனம் புரியா பயம் தொற்றிக் கொள்கிறது. எதனால் எனக்கு இந்தக் குறை எந்த வயது முதல் நான் இயல்பாக அனைவரையும் போல் வாகனம் இயக்கும் ஆற்றலை பெறுவேன்? அதற்கு எத்தகைய பரிகாரங்கள் செய்ய வேண்டும்?
பதில் :
சந், பு | சூ | சு,செ கே | |
10-5-1991, இரவு,7-33 புதுக்கோட்டை | குரு | ||
சனி | |||
ரா | ல |
ஜோதிடத்தில் வாகன காரகனாக சுக்கிரன் குறிப்பிடப்படுகிறார். எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்பை நான்கு, பத்தாமிடங்களோடு தொடர்பு கொண்ட ராகு, கேதுக்கள் தருவார்கள். ஒரு மனிதனின் எண்ணங்கள், மற்றும் செயல்கள் நிறைவேறுமா, இல்லையா என்பதை நடைபெறும் தசா,புக்தி சுட்டிக் காட்டுகிறது.
ஜாதகப்படி உங்களுக்கு ஆசைகள் நிறைவேற தடைகளைச் செய்யும் அஷ்டமாதிபதி புதன் தசை நடந்து கொண்டிருக்கிறது. விருச்சிக லக்னத்திற்கு புதன் நன்மைகளைத் தர மாட்டார். அதிலும் வாகனத்தை ஓட்டும் ஆர்வம் வரும் பதிமூன்று வயது முதல் உங்களுக்கு புதன் தசை நடக்கிறது. அஷ்டமாதிபதி எதிலும் பயத்தை மட்டுமே தருவார். முப்பது வயது வரை உங்களுக்கு நடக்கும் எட்டுக்குடைய நீசபங்க புதன்தசை உங்களின் நியாயமான ஆசைகள் அனைத்தையும் தடை செய்தே தரும்.
வாகனத்தை குறிக்கும் நான்காம் வீட்டு அதிபதி சனி அந்த பாவகத்திற்கு பனிரெண்டில் மறைந்த நிலையில், வாகன காரகன் சுக்கிரன், செவ்வாய்-கேது ஆகிய இரு பாபக் கிரகங்களுடன் இணைந்து, நவாம்சத்தில் ராகுவுடன் சேர்ந்திருப்பதால் இதுவரை உங்களால் இருசக்கர வாகனம் இயக்கும் ஆற்றலை பெற முடியவில்லை. அஷ்டமாதிபதி தசை நடப்பதால் முயற்சி செய்யும்போதே மனம் முழுக்க பயம் தொற்றிக் கொள்கிறது.
இன்னும் இரண்டு வருடங்களுக்கு இது நீடிக்கத்தான் செய்யும். 2021-ல் கேது தசை ஆரம்பித்ததும் உங்களால் பயமின்றி சரளமாக டூவீலர் ஓட்ட முடியும். அதற்கான முயற்சிகளை இப்போதிருந்தே செய்யுங்கள். லக்னாதிபதி செவ்வாய் எட்டில் மறைந்து கேதுவுடன் இணைந்து இருப்பதால், ஒருமுறை கும்பகோணம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். அருகில் இருக்கும் பழமையான முருகன் கோவிலில் செவ்வாய் தோறும் வழிபடுவதும் சிறப்பு.
ஏ. சுப்பிரமணியன், தேனி .
கேள்வி :
நான் தங்களுடைய மாலைமலர் தீவிரரசிகன். எனக்கு எத்தனை மனைவி ? குழந்தைகள் எத்தனை பேர்? அதில் ஆண் எத்தனை ? பெண் எத்தனை ?எப்போது ஆயுள் முடியும்? 81 வயதாகும் எனக்கு பதில் சொல்ல வேண்டுகிறேன் .
பதில் :
ஜோதிடம் என்பது விஞ்ஞான ரீதியிலான எதிர்காலத்திற்கு வழிகாட்டக் கூடிய ஒரு கலை. இதில் கணிதத்திற்கும், புனிதத்திற்கும் மட்டும்தான் இடம் இருக்கிறது. மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை. மருத்துவரிடம் சென்றவுடன் கையை நீட்டிக் கொண்டு எனக்கு என்ன நோய் என்று கண்டு பிடியுங்கள் என்றா சொல்வீர்கள்? வயிற்றை வலிக்கிறது, இடுப்பை வலிக்கிறது என்றுதானே சொல்வீர்கள்? ஆனால் ஜோதிடரிடம் மட்டும் ஏன் எனக்கு மனைவி எத்தனை? பிள்ளை எத்தனை என்று கண்டுபிடி என்று சொல்கிறீர்கள்?
அனைத்தையும் ஜோதிடத்தில் சொல்ல முடியும் என்றாலும் ஒரே நிமிடத்தில் உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் சொல்வதற்கு இது ஒன்றும் “சூ... மந்திரகாளி” வித்தையில்லை. எல்லாவற்றிற்கும் ஆயிரமாயிரம் கணக்குகள் இருக்கின்றன. அவற்றை வைத்து கணித்துத்தான் சொல்ல முடியும். தவிர உங்களுக்குத் தெரிந்ததை உங்களுக்கே சொல்வதற்கு ஜோதிடம் எதற்கு? உங்களைப் போன்றவர்கள் இப்படி கேட்பதால்தான் மனைவி, குழந்தைகள், கூடப் பிறந்தவர்கள் எண்ணிக்கையை குறித்து வைத்துக் கொண்டு ஜாதகத்திலிருந்து சொல்வது போல கிராமத்து ஜோதிடர்கள் பலன் சொல்கிறார்கள்.
ஜாதகப்படி ஏழில் சனி, இரண்டில் செவ்வாய் என்றாகி, ராசிக்கு எட்டில் செவ்வாய் இருப்பதால் உங்களுக்கு ஒரே ஒரு மனைவி இருக்க வாய்ப்பில்லை. தவிர எத்தனை மனைவி என்ற கேள்வியிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பது தெரிந்து விடுகிறதே. பிறந்தநேரம் துல்லியமாக இல்லாத ஜாதகங்களுக்கு துல்லியமாக ஆயுளைக் கணிக்க முடியாது.
கா. வைரவலிங்கம், கமுதி .
கேள்வி :
வயது 38 ஆகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. தலையில் உள்ள எல்லா முடியும் கொட்டிப் போய்விட்டது. அதனாலேயே எல்லா வரன்களும் தட்டிப் போய்க் கொண்டிருக்கின்றன. போகாத கோவில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. வரன் பார்க்கவும் நிறைய செலவு செய்துவிட்டோம். பார்க்கும் எல்லோரும் என்னப்பா கல்யாணம் பண்ணிக்காம இப்படி இருக்க என்று கேட்டு கூடுதல் கவலை ஏற்படுத்துகிறார்கள். நிம்மதியே இல்லை. அரசுத் துறையில் வேலை செய்கிறேன். எப்போது திருமணம் நடைபெறும்? குழந்தை பாக்கியம் உண்டா? எதிர்காலம் எப்படி இருக்கும்? தயவு செய்து பதில் தாருங்கள்.
பதில் :
ல | சு | ||
24-8-1980 இரவு,9-15 கமுதி | ரா | ||
சுக் கே | சூ, பு,கு | ||
செவ் | சனி |
லக்னம், ராசிக்கு 2, 7, 8 ம் இடங்கள் பாதிக்கப்பட்டால் தாமத திருமணம் அல்லது இரண்டு திருமணம் போன்ற நிகழ்வுகள் இருக்கும் என்பது விதி. ஜாதகப்படி மீன லக்னம் ஏழில் சனி, எட்டில் செவ்வாய் அமர்ந்து ராசிக்கு ஏழில் ராகு இருப்பது கடுமையான களத்திர தோஷம். 7-க்குடையவன் ஆறில் மறைவதும் பலவீனம்.
ஆயினும் தாம்பத்திய சுகத்தை கொடுக்க கூடிய சுக்கிரன் திக்பலமாக இருப்பதால் நிச்சயமாக திருமண வாழ்க்கை உண்டு. தற்போது குரு தசையில், சுக்கிர புத்தி நடப்பதால் வருகின்ற அக்டோபர் மாதத்திற்குப் பிறகு வரன் முடிவாகும். இந்த வருடம் கடைசியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் உறுதியாக திருமணம் நடக்கும். சுக்கிர புக்தி நடப்பதால் தாம்பத்திய சுகம் கிடைத்துத்தான் ஆக வேண்டும்.
லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை இதுவரை நீங்கள் செய்திருக்க வாய்ப்பில்லை. அவற்றை ஏற்கனவே மாலைமலரில் எழுதி இருக்கிறேன். குருவை வலுப்படுத்தும் பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். தாமத திருமணம் தானே தவிர குழந்தை பாக்கியம் உடனடியாக உண்டு. முதல் குழந்தை பெண் குழந்தை. ஆண் வாரிசும் உண்டு.
தெற்குப் பார்த்த வாசலை வடக்காக மாற்றலாமா?
வி. ஆர். மணி, பாண்டிச்சேரி .
கேள்வி :
என் பையனும் ஒரு பெண்ணும் விரும்புகிறார்கள். திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பெண் வீட்டில் கொஞ்சம் கூட வசதி இல்லை. என்னிடமும் திருமணம் செய்ய போதுமான பணம் இல்லை. மகன் தொழில் செய்ய பணமும் கேட்கிறான். சிறிய மகன் பொறுப்பில்லாமல் இருக்கிறான். மனைவி அனுசரணையாக இல்லை.எப்போது பார்த்தாலும் வீடு சரியில்லை, இப்போ தி ருக்கும் தெற்கு பார்த்த வாசலை வடக்கு த் திசையில் மாற்ற வேண்டும் என்று தொந்தரவு செய்கிறார். ஏற்கனவே இப்படிச் சொல்லி இரண்டு முறை மாற்றியமைத்து கையில் உள்ள பணம் தீர்ந்து போனது தான் மிச்சம். ரொட்டிக் கடை நடத்தி வருகிறேன். என் ஒருவன் வருமானத்தில்தான் குடும்பம் நடத்த வேண்டியுள்ளது. ஒரு வருடமாக தொழில் முடங்கியுள்ளது. பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை பார்க்க வந்தவர்கள் மானக் குறைவாக பேசினார்கள். எல்லாம் என் நேரம் என்று நொந்து கொண்டேன் . 65 வயது வரை எவரிடமும் கடும் சொல் எதுவும் கேளாமல் மானத்தோடு வாழ்ந்து விட்டேன். இனியும் அப்படி வாழ முடியுமா ?
பதில் :
ல | குரு | ||
5-9-1953 இரவு,8-6 பாண்டிச்சேரி | சந்,சு, கே | ||
ரா | சூ, பு செவ் | ||
சனி |
ஜீவன ஸ்தானாதிபதி குரு பத்தாமிடத்தைப் பார்த்து, பாக்கியாதிபதி செவ்வாய் ஒன்பதாம் வீட்டைப் பார்த்த தர்மகர்மாதிபதி யோகம் உள்ள மிக நல்ல ஜாதகம். புத்திர மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியாகிய ஐந்துக்குடைய சந்திரனும் ஆட்சியாக இருக்கிறார்.
வாழ்வில் எந்தக்காலத்திலும் மிகப்பெரிய அசிங்கம், கேவலம் போன்றவைகள் உங்களுக்கு வந்துவிடப் போவதில்லை. 65 வயதிற்கு மேல் மிகவும் யோகத்தை தரக் கூடிய 11-மிட மகர ராகுவின் தசை தற்போது ஆரம்பித்திருக்கிறது. ராகுவுக்கு வீடு கொடுத்த சனி உச்ச நிலையில் இருக்கிறார். தசாநாதனுக்கு வீடு கொடுத்தவர் உச்சமானால் தசை, யோகங்களைச் செய்யும் என்பது பொது விதி.
அதைவிட மேலாக உச்சனின் வீட்டில் இருக்கும் ராகு நிறைவான நல்ல பலனை தந்தே தீரும். அதைப் போலவே மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்கள் ராகுவிற்கு மூன்று, பதினொன்றாம் இடங்களாக அமைந்தால் ராகுவால் சந்தேகத்திற்கிடமின்றி நன்மைகள் கிடைக்கும். ராகுவிற்கு இடமளித்த சனியை குரு பார்ப்பதும் மிகவும் மேலான அமைப்பு. வாழ்வில் அந்திம காலத்தில் ராகுதசை வருவது நீங்கள் செய்திருக்கும் பூர்வபுண்ணிய பலனைக் காட்டுகிறது.
அதேநேரத்தில் எந்த ஒரு தசையிலும் சுயபுக்தி நன்மைகளைச் செய்வதில்லை என்பதன் அடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களாக உங்களுக்கு தொழில் சிக்கல்கள் இருந்தே தீரும். இந்த வருட பிற்பகுதியிலிருந்து நிலைமைகள் சீராகி அடுத்த வருட ஆரம்பம் முதல் எவ்வித பிரச்சனையும் இன்றி நன்றாக இருப்பீர்கள்.
மகனுக்கு பார்த்த பெண்ணிற்கு விருச்சிக ராசியாகி, ஏழரைச்சனி முடிந்து விட்டதால் அவர்களது திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கும். கவலைப்பட வேண்டாம். காதல் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என்பதை மாலை மலரில் அடிக்கடி எழுதி வருகிறேன். வாழ்வில் இணைந்த பிறகு அவர்களுக்கு நடக்க இருக்கும் அனைத்தும் கர்மாவின் அடிப்படையிலானது என்பதால் காதலிப்பது என்பது அவரவரின் தலைவிதிப்படி என்று விட்டுவிட வேண்டியதுதான். கடவுள் காரணமின்றி யாரையும், யாருக்கும் அறிமுகப்படுத்துவது இல்லை. எல்லாவற்றுக்கும் காரணங்கள் இருக்கின்றன.
ஜாதகப்படி வடக்குத் திசை உங்களுக்கு லாபம் தருவதுதான் என்றாலும் வீட்டு வாசலை மாற்றியமைப்பது என்பதெல்லாம் பலன் தந்து விடாது.. வாஸ்து என்பது ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சொல்லப்பட்டது தானே தவிர, அதிர்ஷ்டமாக வாழ்வதற்கு சொல்லப்படவில்லை. வாஸ்துப்படி வீடு அமைந்தால், அங்கே காற்றோட்டமாக நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் வாஸ்துப்படி வீடு கட்டி வீட்டில் குடி போனவுடன் கோடீஸ்வரன் ஆகிவிட மாட்டீர்கள்.
நடக்கும் நன்மை, தீமைகளுக்கு வாழும் வீடு பொறுப்பாகாது. இதை மனைவிக்கு எடுத்துச் சொல்லுங்கள். நல்லநேரம் வரும் பொழுது நல்ல வீட்டில் தான் இருப்போம். ஜாதகம் வலுவாக இருப்பதால் பிள்ளைகளுக்குரிய கடமைகளை நிறைவேற்றி, யாருடைய தயவும் இன்றி, வாழ்வின் கடைசிக் காலத்தில் எவ்வித குறையுமின்றி, கௌரவக் குறைச்சல் இல்லாமல் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.