கோ. பாலாஜி, புதுக்கோட்டை.
கேள்வி :
இரண்டு வருடங்களாக எந்த வேலையிலும் நிலைக்க முடியவில்லை. 2016 முதல் ஜோதிடத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பலன் சொல்லி வருகிறேன். உங்களுடைய கட்டுரைகள் என் குழப்பத்தை தீர்க்கின்றன. அடுத்த இரண்டு வருடத்தில் கேதுதசை ஆரம்பிக்க உள்ளது. கிரகங்கள் பலவீனம் அடைந்தால் அதனுடைய தீய காரகத்துவங்கள் நடக்கும் என்று நீங்கள் சொல்வதன்படி எட்டில் செவ்வாயுடன் நெருக்கமாக இணைந்துள்ள கேதுவால் எனக்கு தீயவை நடக்குமா? நேரடி அரசுவேலை கிடைக்குமா? அல்லது அரசியல்வாதிகளின் பின்னாலிருந்து செயல்படும் நிலை வருமா? இப்போதே எனக்கு பல ரவுடிகளின் அறிமுகம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. வாழ்க்கைப் பாதை மாறிவிடுமா?
பதில் :
சந் பு | சூ | சுக் செ,கே | |
10-5-1991 இரவு7-33 புதுக்கோட்டை | குரு | ||
சனி | |||
ரா | ல |
ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருந்தால் ஜோதிடத்தில் ஈடுபாடு வரும். உன் ஜாதகப்படி புதன், சந்திரனோடு இணைந்து நீசபங்க நிலையில், வீடு கொடுத்த குரு உச்சமாக இருப்பதால், ஜோதிடம் உனக்கு கை வரும். ஒரு கிரகம் பலவீனமாக இருக்கும் நிலையில் அதனுடைய தீய காரகத்துவங்கள் நடக்கும் என்பது உண்மைதான். ஏற்கனவே உனக்கு நடந்து கொண்டிருக்கும் புதன் தசை, அஷ்டமாதிபதி தசை என்பதால் நன்மைகளைச் செய்ய வாய்ப்பில்லை. அடுத்து வரும் கேதுதசை உச்சகுருவின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால் புதன்தசை போல தீமைகளைச் செய்ய வாய்ப்பில்லை.
ஆயினும் செவ்வாயுடன் அவர் இணைந்து எட்டில் இருப்பதால், கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம் போன்ற விஷயங்களில் உன்னை ஈடுபடுத்துவார். ஜோதிடத்தில் தசை நடத்தும் கிரகம் அமர்ந்த வீட்டுக்குடையவன் வலுப்பெற வேண்டும் என்பது முக்கியமானது. அதன்படி கேதுவிற்கு வீடு தந்த புதன் நீசமாக இருப்பது நல்லநிலை அல்ல. கேதுதசையில் நேரடியான அரசுவேலையை விட, உன் மனம் அரசியல்வாதிகள் தொடர்பு மற்றும் ரவுடிகள் தொடர்பு போன்ற விஷயத்திலேயே ஈடுபடும். கேதுவுடன் சுக்கிரனும் இருப்பதால் அவர் ஓரளவு சுபத்துவம் அடைந்து உனக்கு நன்மைகளையே அதிகம் செய்வார்.
கே. மாரிமுத்து, ஈரோடு.
கேள்வி :
டிராவல்ஸ் மற்றும் வாகனத்தொழில் செய்து வருகிறேன். கடந்த மூன்று வருடங்களாக தொழிலில் அதிபயங்கரமான நஷ்டம் அடைந்துள்ளேன். எதைச் செய்தாலும் முன்னேற்றம் காண முடியவில்லை. கடன் பிரச்சனையால் குடும்பமே தள்ளாடுகிறது. இதுவரை எந்த வகையான சொத்தும் இல்லை. இனிமேலாவது வாழ்க்கையில் வருமானமுள்ள தொழில், சொந்தவீடு போன்றவைகள் நடக்குமா? தொழில் பற்றிய உங்கள் அறிவுரை என்ன?
பதில் :
ல சந் | கு,ரா | ||
சனி | 22-7-1965 அதிகாலை 12-20 கோபி | சூ | |
பு சுக் | |||
கேது | செவ் |
(மேஷ லக்கினம், மேஷராசி, 1-ல் சந், 2-ல் குரு, ராகு, 4-ல் சூரி, 5-ல் புத, சுக், 6-ல் செவ், 8-ல் கேது, 11-ல் சனி 22-7-1965 அதிகாலை 12-20 கோபி)
மூன்று வருடங்களாக உங்கள் மேஷராசிக்கு அஷ்டமச்சனி நடந்து கொண்டிருந்ததால் தொழிலில் கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டு கடன் தொல்லையில் மாட்டிக் கொண்டீர்கள். பொதுவாக நடுத்தர வயதில் வரும் அஷ்டமச்சனி முடிந்தவுடன் வாழ்க்கை நல்லபடியாக மாறும், தொழில் சிறக்கும் என்பது ஜோதிடவிதி. இனிமேல் எதிலும் உங்களால் முன்னேற்றம் காண முடியும்.
ராசி, லக்கினம் இரண்டிற்கும் பத்தாம் அதிபதி சனியாகி, இரண்டில் ராகுவுடன் இணைந்த குரு, தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் நீங்கள் செய்யும் டிராவல்ஸ், வாகனத்தொழில் சரியானதுதான். நேரம் நன்றாக இருக்கும்பொழுது எந்த தொழில் செய்தாலும் அது நன்கு நடந்து கைகொடுக்கும். சரியான நேரம் இருந்தால் சுடுகாட்டில் போய் கடை வைத்தாலும் வாடிக்கையாளர் தேடி வருவார். சரியில்லாத நேரத்தில் நீங்கள் எத்தனை முயற்சிகள் செய்தாலும் அது பலன்களை தராது.
அஷ்டமச்சனி முடிந்து விட்டதால் இனிமேல் எந்தவிதமான பிரச்சனைகளும் வராது. இருக்கும் தொழிலையே முனைப்புடன் கவனமாக செய்யுங்கள். தற்போது ஜீவனாதிபதி சனி புக்தி நடந்து கொண்டிருப்பதால், இன்னும் சில வாரங்களில் நல்ல முன்னேற்றம் தெரிய வரும். ஒருமுறை காளகஸ்தி சென்று வழிபட்டு வாருங்கள், நிச்சயம் மாற்றம் இருக்கும். நன்றாக வருவீர்கள். வாழ்த்துக்கள்.
கே. சாமிநாதன், சேலம்.
கேள்வி :
குருவுக்கு வணக்கம். போராட்டமான வாழ்க்கை வாழும் நான் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். மனைவியுடன் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. ஒரே கோபம், சண்டை. அவர் யாரையும் மதிப்பதில்லை. தனியார் கல்லூரியில் வேலையில் இருக்கிறார். தயவு செய்து கீழ்க்காணும் கேள்விகளுக்கு ஒளிவுமறைவின்றி தெரியப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன். நான் என்ன மாதிரியான வேலை செய்யலாம்? வெளிநாடு செல்லலாமா அல்லது உள்ளூரிலேயே ஆட்களை வைத்து சொந்தமாக இரும்புத் தொழில் செய்யலாமா? மனைவி ஏன் என் பேச்சை கேட்பதில்லை? குடும்பத்தில் அமைதி ஏற்படுமா? வாழ்க்கையில் முன்னேற்றம் வருமா?
பதில் :
ல | கேது | சனி | |
சந் குரு | 17-1-1975 காலை 11.௦௦மணி சேலம் | ||
சூ,பு சுக் | |||
செவ் | ராகு |
ஒளிவுமறைவின்றி தெரியப்படுத்துமாறு கேட்டிருப்பதால் நானும் பதிலை வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். தினமும் வீட்டிற்குள் நுழைந்து, சட்டையைக் கழட்டுமுன் “இந்தா.. இன்றைய வருமானம், பீரோவில் வை.” என்று மனைவியிடம் கொடுக்கும் கணவனை எந்த மனைவியும் மதிக்கவே செய்வாள். ஆண்மைக்கு அழகு சம்பாதிப்பது, பெண்மைக்கு அழகு குடும்பத்தை நிர்வகிப்பது.
43 வயதான நீங்கள் என்ன தொழில் செய்யலாம் என்று என்னிடம் கேட்டு, மனைவி கல்லூரியில் வேலை செய்கிறார் என்று குறிப்பிடுவதிலிருந்தே குடும்பத்தை மனைவிதான் காப்பாற்றுகிறார் என்பது தெரிகிறது. பிறகு நமக்கு எப்படி மரியாதை இருக்கும்? மனைவிக்கு கேட்டை நட்சத்திரம். விருச்சிக ராசி என்பதால் கடந்த ஐந்தாண்டு காலமாக குறிப்பாக மூன்று ஆண்டுகளாக கடுமையான மன அழுத்தத்திலும் இருப்பார்.
பொருள் சம்பாதிக்காத கணவனை எப்படிப்பட்ட மனைவியும் மதிக்க மாட்டாள். பணமே வாழ்க்கை இல்லைதான். ஆனால் பணம் வாழ்க்கைக்குத் தேவைதானே? முதலில் பணம் சம்பாதிக்கும் வழிகளைத் தேடுங்கள். லக்னத்தை செவ்வாய், சனி இருவரும் பார்த்து, லக்னாதிபதி 12ல் மறைந்த உங்கள் ஜாதகத்தை விட, லக்னாதிபதி வலுப்பெற்ற மனைவியின் ஜாதகம் மேலானது என்பதால் கடைசி வரை மனைவியின் ஆதிக்கமே குடும்பத்தில் மேலோங்கி இருக்கும். மனைவியின் சொல்கேட்டு நடப்பது எதிர்காலத்திற்கு நல்லது
அடுத்து சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த கேதுதசை நடக்க இருப்பதாலும், அதன் பின்னர் தூர இடங்களைக் குறிக்கும் எட்டுக்குடைய சுக்கிர தசை நடக்க உள்ளதாலும் வெளிநாட்டு வேலைக்குப் போவது நன்மை தரும். மனைவிக்கு ஏழரைச்சனி முடிந்தபிறகு குடும்பத்தில் அமைதி ஏற்படும். கேதுதசையில் நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்ததும் மனைவி உங்கள் சொல்பேச்சு கேட்க ஆரம்பிப்பார்.
எப்படிப்பட்ட காமசுகம் எனக்கு கிடைக்கும்?
தமிழ்ச்செல்வன், சேலம்.
கேள்வி :
குருவிற்கு வணக்கம். ஆறுமாத காலமாக திடீர் ஜோதிட ஆர்வம் ஏற்பட்டு அது ஏன் என்பதை உங்களின் கட்டுரைகள் மூலம் தெரிந்து கொண்டேன். மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். திருமணமாகாத பெண்களைப் பார்க்கும்போது எனக்கு அதீத காமஉணர்வு தூண்டப்படுகிறது. அதேவேளையில் என் புத்தி பின் மண்டையில் அடித்து உன் தாயும் ஒரு பெண்தான், அப்படிப் பார்க்காதே என்று தற்காலிகமாக உணர்வை அடக்கி விடுகிறது. காமத்திற்காக மட்டும் பெண் படைக்கப்படவில்லை என்பதும், வரப் போகும் மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது என்பதும், மனதிற்கு புரியும் வேளையில் என் உடல் எப்போது திகட்டத் திகட்ட காமத்தை தருவாய் என்று கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. இது போன்ற உணர்வுகளை அடக்க முடியாமல் தவிக்கிறேன். ஜாதகப்படி எனக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவார்? எப்படிப்பட்ட காமசுகம் எனக்கு கிடைக்கும்? இதைப் படித்த பிறகு சமூகத்தில் சக மனிதனாக ஒரு பெண்ணின் தந்தை என்ற முறையில் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள் என்று தெரியும். இருந்தாலும் என் வயதைக் கடந்த தங்களுக்கு என் உணர்வின் வலி தெரியும் என்பதால் ஜோதிடப்படி எனக்கு என்ன நடக்கும்? ஏன் இது போன்ற எண்ணங்கள் வருகின்றன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். வெளிநாடு செல்வேனா?
பதில் :
ல சுக் | சந் | செவ் | |
சூ,பு | 21-2-1991 காலை 8-15 சேலம் | குரு கேது | |
சனி ராகு | |||
காமம் என்பது பசி, தாகம் என்பதைப் போல அவசியமான ஒரு உணர்வுதான். இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை. மனிதனே ஒரு சமூக மிருகம் என்றுதான் அழைக்கப்படுகிறான். இயற்கையான இந்த காம உணர்வை கட்டுக்குள் வைக்கத்தான் மனிதனுக்கு திருமண பந்தம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பிறவியின் நோக்கமே வம்சவிருத்திதானே? வாரிசை உருவாக்குவது காமத்தின் அடிப்படையில்தானே நடக்கிறது? அதிலும் உன் போன்ற 27 வயது வாலிபனுக்கு இதுபோன்ற உணர்வுகள் கிளர்ந்தெழுவது சகஜம்தான். இதில் வெட்கப்பட எதுவும் இல்லை. இந்த வயதில் இதுபோன்ற எண்ணங்கள் உனக்கு வரவில்லை என்றால்தான் உன்னிடம் ஏதோ குறை அல்லது சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்.
தனக்கு என்ன நடக்கிறது, தன் மனதில் ஏன் இதுபோன்ற எண்ணங்கள் வருகிறது என்பதை உணர முடிந்தவன் என்றுமே கட்டுப்பாடானவனாக இருப்பான். இதைப்பற்றி ஆரோக்கியமாக வெளியில் சொல்லி விவாதிக்கும் உரம் உள்ளவன் நிச்சயம் ஆண்மையாளன். அப்படிப்பட்டவன் என்றுமே தன்னுடைய மனதை, ஒரு கட்டுக்குள், ஒழுங்கிற்குள் வைத்துக் கொள்ள முடியும்.
ஜாதகப்படி உனக்கு மீன லக்கினமாகி, லக்னத்திலேயே காமத்திற்கும், பெண் சுகத்திற்கும் அதிபதியான சுக்கிரன் உச்சமாக இருப்பதால், இதுபோன்ற எண்ணங்களால் நீ தூண்டப்படுகிறாய். சுக்கிரன் அதிக வலுவான அமைப்பில் இருப்பவர்கள் இதுபோன்ற எண்ணங்களால் அலைக்கழிக்கப்படுவதும், அந்த விஷயங்களில் மனதைச் செலுத்துவதும் நடக்கத்தான் செய்யும்.
ஜோதிடப்படி லக்னம் என்பது உன்னுடைய சிந்தனைகளையும், உன் மனம் எதைப் பற்றி யோசிக்கிறது என்பதையும், நீ அதில் எந்தத் திசையில் செல்வாய் என்பதையும் உணர்த்துகின்ற அமைப்பு. லக்னத்தில் காமக்காரகனாகிய சுக்கிரன் உச்சமாக அமர்ந்திருப்பதால் உனக்கு மற்றவர்களைவிட ஒருபடி அதீதமான காம உணர்வு இருக்கத்தான் செய்யும். மேலும் தற்போது போகக்காரகனாகிய ராகுவின் தசை நடப்பதாலும் இயல்பாகவே அதிகமான நேரம் காமத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க கூடிய ஒரு நிலையை ராகு தருவார்.
லக்னாதிபதி குரு, வக்ரநிலையில் உச்சமாக அமர்ந்து, லக்னத்தையும், அதிலிருக்கும் சுக்கிரனையும் பார்ப்பதால் மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உனக்கு நிறையவே இருக்கும். எதிலும் நல்லவற்றையே சிந்திக்கக் கூடிய ஒரு இளைஞனாகவே நீ இருப்பாய். குருவின் பார்வையைப் பெற்ற 11-மிடத்து மகர ராகுவின் தசை உனக்கு நடந்து கொண்டிருப்பதால், திருமணத்திற்கு முன் நீ தவறு செய்ய வாய்ப்பு இல்லை வரப்போகிற மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது என்று நீ எழுதி இருப்பதே, அதற்கு சாட்சி.
பெண்ணைப் பெற்ற எல்லாத் தகப்பனும் முறையான வழியில் தன் பெண் திகட்டத் திகட்ட காமத்தை அனுபவிக்க வேண்டும் என்றே விரும்புவான், அதற்காகத்தானே உரிய வயதில் திருமணம் செய்து வைக்கிறோம்? ஜோடிப் பொருத்தம், உயரம் எல்லாம் பார்ப்பது உண்மையில் காமத்திற்குத்தானே?
மூன்று, ஏழு, பனிரெண்டாம் வீடுகள் ஜோதிடத்தில் காமத்தையும், அதை அனுபவிக்கும் விதத்தையும் குறிப்பிடுகின்றன. மூன்றாமதிபதி உச்சமாகி, ஏழாமிடத்தை உச்சகிரகம் பார்த்து, ஏழாமதிபதி திக்பலத்திற்கு அருகில் போக ஸ்தானத்தில் அமர்ந்து, நவாம்சத்தில் சுக்கிரனின் வீட்டில் குருவுடன் இணைந்திருப்பதால் உன்னுடைய எண்ணப்படி நடந்து கொண்டு, அனைத்திலும் ஈடு கொடுக்கக்கூடிய மனைவி உனக்கு அமைவாள்.
சர ராசியில் இருக்கின்ற கிரகங்கள் நிரந்தர வெளிநாட்டு வாசத்தைக் கொடுக்கும் என்று அடிக்கடி நான் எழுதுவதன்படி, எட்டுக்குடையவன் உச்சம், பனிரண்டாம் அதிபதி ஆட்சிநிலையில் இருந்து, அடுத்தடுத்து சர ராசியில் இருக்கும் கிரகங்களின் தசைகள் நடக்க இருப்பதால், திருமணத்திற்குப் பிறகு நீ வெளிநாடு சென்று நிரந்தரமாக இருக்க முடியும் அடுத்து நடக்க இருக்கும் சனிபுத்தியில் உனக்கு திருமணம் நடக்கும். வாழ்த்துக்கள்.