adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கேதுவின் செயல்பாடுகள்- C – 072 – Kethuvin Seyalpaadugal…

ஒரு வருடத்திற்கும் மேலாகத் தொடர்ந்த “ஜோதிடம் எனும் தேவ ரகசியம்” கட்டுரைகளின் நிறைவுப் பகுதிக்கு வந்து விட்டோம்.

கடந்த அத்தியாயங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் என்னுடைய முழு வாழ்க்கையையும் ஜோதிடத்தில் செலவழித்துப் பெறப்பட்டவை.

ஜோதிடத்தைத் தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியாது. இதைச் சொல்லிக் கொள்ள நான் வெட்கப்படவும் இல்லை. ஜோதிடத்தின் மீதிருந்த அளவு கடந்த காதல் அல்லது வெறியால் என்னால் பள்ளிக் கல்வியைக் கூட தாண்ட முடியாமல் போய் விட்டது.

“பேஸ்புக்” எனப்படும் முகநூலில் என்னுடைய பதிவுகள் பிரபலமானவை. அங்கு ஒருமுறை நீங்கள் எப்போது “முதன் முதலாக” ஜோதிடனாக உணர்ந்தீர்கள் என்ற கேள்வி என்னிடம் எழுப்பப் பட்டது.

ஒரு ஜோதிடன் தன்னை “ஜோதிடனாக உணர்தல்” என்பது ஒரு பெருமைக்குரிய நிகழ்வு. ஏனெனில் அந்த நிமிடமே உங்களின் வாக்குப் பலிதம் உங்களை உன்னத ஜோதிடராக நிரூபிக்கும். ஆகவே அந்தக் கேள்வி எனக்கு சுவையாகப் பட்டு பதிலளித்தே தீர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

என்னுடைய இளமைக் காலம்  சென்னைப் புறநகர் ஒன்றில் கழிந்தது. சிறு வயதில் எங்கும், எப்போதும் கையில் ஜோதிடப் புத்தகத்தோடு திரியும் போது நண்பர்களால் இகழப்பட்டு கேலி செய்யப்படுவேன். இன்றும் என் நண்பர்களாகத் தொடரும் பாபு, சௌந்தர், மூர்த்தி ஆகிய மும்மூர்த்திகளால் தினமும் என் ஜோதிடப் புத்தகங்கள் பந்தாடப் பட்டிருக்கின்றன.

ஒத்த வயதுடைய நண்பர்கள் இளமைக்கே உரிய ஆர்ப்பரிப்புகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் என்னையும் அறியாமல் கையில் இருக்கும் ஜோதிட நூலில் ஆழ்ந்திருப்பேன். திடீரென தலையில் அடியோ அல்லது கொட்டோ விழுந்து புத்தகம் பிடுங்கி வீசப்படும்.

என் இருபத்தியொரு வயதில் ஒருநாள் இரவு ஒரு குட்டிச் சுவரின் மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென என் எதிர் வீட்டன் மூர்த்தி  ”டேய் ஜோசியரே.. உனக்கு இப்போ என்ன நடக்கும்? சொல்லுடா..” என்றதற்கு “இன்றோ நாளையோ என்னைத் தேளோ, பாம்போ கடிக்கும்” என்றேன். நண்பர்கள் குழு கிண்டலடித்துக் கலைந்தது.

பெற்றோர்கள் ஊரில் இல்லாமல் நானும் எனது தம்பியும் மட்டும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அன்று இரவு இரண்டு மணியளவில் எனது வேஷ்டியில் ஏதோ ஒன்று ஊர்வதை உணர்ந்து தன்னிச்சையாக இடது கையால் அதைத் தள்ளி விட்ட போது அந்தத் தேள் என் கையில் கொட்டியது.

தம்பியை எழுப்பி, “எதிர்வீட்டில் மூர்த்தி அண்ணனை உடனே கூட்டி வா” (மருத்துவ உதவிக்காக) என்று அனுப்பி அவன் வந்து டிவிக்கு அடியில் நகர்ந்து கொண்டிருந்த அந்தத் தேளையும், துடித்துக் கொண்டிருந்த என்னையும் பார்த்த அந்தப் பார்வையில் என்னை நான் “முதன் முதலாக” ஜோதிடனாக உணர்ந்தேன்.

அந்த வலியிலும் எனக்கு இருந்த ஒருவிதமான சிலிர்ப்பை இப்போதும் என்னால் உணர முடிகிறது. அதேபோல அந்தத் தேளையும், என்னையும் மாறி மாறிப் பார்த்த என் நண்பனின் கண்களையும், எனது வாழ்வின் கடைசி நொடி வரை மறக்க முடியாது.

அன்று முதல் என் நண்பர்கள் என்னைக் கேலி செய்வதை நிறுத்தி விட்டார்கள்.

இணையத்தின் தயவால் இன்று எனது மாணவர்கள் உலகம் முழுக்க இருக்கிறீர்கள். உங்களில் அனைவரும் தொழில்முறை ஜோதிடர்களாக வராமல் போகலாம். ஆயினும் ஜோதிடத்தை ஓரளவு அறிந்தவர்கள் என்பதால் நீங்கள் ஜோதிடர்கள்தான்.

இன்றைய ஜோதிட ஆய்வாளர்களாகிய உங்களுக்கு முக்கியமாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஆரம்ப காலங்களில் நீங்கள் மற்றவர்களின் ஜாதகங்களை ஆராய்வதை விட முதலில் உங்களுடைய ஜாதகத்தைக் கணித்துப் பழகுவதே  நல்லது. ஏனெனில் உங்கள் ஜாதகம் உங்களிடம் பொய் சொல்லாது.

அதிலும் ஸ்ரீராமபிரான், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், புத்தர், ஹனுமான், விநாயகர்  போன்றவர்களின் ஜாதகங்களை ஆராயத் தலைப்படாதீர்கள். இவர்களெல்லாம் அவதாரங்கள். இவர்களின் ஜாதகங்களில் ஆய்வுக்கான காரணிகள் மிகக் குறைவு. ஜோதிடம் சாதாரண மனிதனுக்கானது. எனவே அம்பானியின் ஜாதகத்தை விட அன்றாடங் காய்ச்சியின் ஜாதகத்தில் விஷயம் அதிகம்.

உங்கள் ஜாதகத்தை நீங்கள் ஆராய்வது அனைத்தையும் விட சுலபம். ஒவ்வொரு மணி நேரமும் அந்தந்த ஹோரைகளில் உங்களுக்கு நடக்கின்ற சம்பவங்கள், பணம் வரும் நேரம், காதல் அனுபவங்கள், சண்டைகள், மனமும் புத்தியும் தடுமாறும் விஷயங்கள் என கிரகங்களால் நடத்தப்படும் சில அற்புதங்களை நீங்கள் உங்கள் ஜாதகத்தை வைத்தே துல்லியமாகக் கணிக்க முடியும்.

இதற்கு நீங்கள் உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு என்ன தசா,புக்தி அந்தரம் நடக்கிறது என்பதோடு மட்டும் அல்லாமல் சித்திரம், சூட்சுமம், பிராணன் என அந்தரத்தை ஒன்பது பங்காக பிரித்தல், அதனையும் ஒன்பது பங்காக பிரித்தல் என உள்ளே சென்று இப்போது நான் எந்த எந்தக் கிரகங்களின் ஆளுமையில் இருக்கிறேன், எனக்கு என்ன நடக்கும்? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணரும் போது ஜோதிடம் இன்னும் நிறைய விஷயங்களை சொல்லித் தரும்.

உதாரணமாக பயணம் சம்பந்தப்பட்ட ஒரு கிரகத்தின் ஹோரையில் நீங்கள் பஸ்ஸிலோ ரயிலிலோ போய்க் கொண்டிருக்கும் போதோ, பணம் வரும் ஹோரையில் அது கிடைக்கும் போதோ ஜோதிடத்தின் அற்புதத்தை அனுபவித்து சிலிர்ப்பீர்கள்.

இது போல கணிப்பதற்கு முயலும் போது இயல்பாகவே அன்றைய நட்சத்திரம் என்ன? எப்போது துவங்கி எப்போது முடிகிறது என்பது போன்ற பஞ்சாங்க விஷயங்களையும் மனதில் நிலை நிறுத்தும் பழக்கமும் வந்து விடும்.

நிறைவாக கீழ்க்காணும் விஷயங்கள் கேதுவின் ஆதிக்கத்தில் இருப்பனவாக நமது ஞானிகளால் சுட்டிக் காட்டப் பட்டிருக்கின்றன.

ஜாதகத்தில் கேது சூட்சும வலுவும், சுபத்துவமும் பெற்றிருக்கும் நிலையில் கீழே சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களில் ஜாதகருக்கு நன்மைகளும், சுப வலு இல்லாத அமைப்பில் தீமைகளும் நடக்கும்.

சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் கீழ்த்தட்டு மக்களுடன் தொடர்பு, எந்த ஒரு விஷயத்திலும் இறுதி நிலை, சேரிகளில் வசித்தல், சிவன் மேல் ஈடுபாடு, சிறைச்சாலை, தீராத வயிற்றுவலி, சொறி, சிரங்கு, கட்டி போன்ற தோல்நோய்கள், மருத்துவப்பணி, பாட்டன்-பாட்டி, எதிரி, நாய், மாந்த்ரீகம் மற்றும் சூனியம், தத்துவம் பேசுதல், முழுமையான ஆன்மிக ஞானம், கஞ்சத்தனம். ரகசியமாய் எதுவும் செய்தல், முட்புதர்கள்,

வேதஅறிவு, கழுகு, சேவல் போன்ற பறவைகள், மான், எலும்புருக்கி நோய், வேட்டையாடுதல், கல்லில் மோதி காயம் ஏற்படுதல், மோட்சம் எனப்படும் முக்தி, உடலில் ஏற்படும் அனைத்து வலிகள், காய்ச்சல், ஆன்மிக யாத்திரை, வைடூரியம், கிறிஸ்தவம், வெளிநாட்டு வாசம், சிறிய பாம்பு, எலக்டிரிக்கல் கடை எனப்படும் மின்சாரம் சம்பந்தப்பட்டவைகள், ஓட்டம்,

அந்நிய மத திருமணம், விபத்து, துர் மரணம், லேசான சிவப்பு போன்ற அரக்கு நிறம் சம்பந்தப்பட்டவைகள், முடி, கொள்ளு, கட்டிடவேலை செய்யும் சித்தாள், சுற்றித் திரியும் நிலை, கெட்ட பழக்கங்கள், விதவையுடன் உறவு. சாக்கடையோரம் இருத்தல், மயானம், இரவில் செய்யும் வேலைகள், சாஸ்திர ஈடுபாடு, ஜோதிடத்தில் ஆர்வம், பிரம்மா, அலித்தன்மை, சிங்கம் போன்ற மிருகங்களுடன் பழகுதல், வடமேற்கு, வேற்று மொழியிடங்கள் உள்ளிட்டவைகள் கேதுவினால் நடைபெறும்.

இத்துடன் கிரகங்களைப் பற்றிய நமது ஆய்வு முடிவுகளை முடித்துக் கொள்வோம்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் தொடர்ந்த இந்த கட்டுரைகளின் மூலம் ஜோதிடத் திருப்தி அடைந்த முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். தனக்குக் தெரிய வந்ததை அடுத்த தலைமுறைக்கு நகர்த்திய மன நிறைவுதான் அது.

மீண்டும் வேறு ஒரு தலைப்பில் விரைவில் சந்திப்போம். வணக்கம்.

கேதுவிற்கான பரிகாரத் திருத்தலங்கள்..!

கேதுவிற்கு அதிதேவதையாக வேத ஜோதிடத்தில் சித்திரகுப்தன் சொல்லப் பட்டிருப்பதால் ஜாதகத்தில் கேது சாதகமற்ற பலன்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் சித்திர குப்தனுக்கென்று அமைந்திருக்கும் கோவிலான காஞ்சிபுரத்தில் உள்ள சித்திர குப்தன் ஆலயத்தில் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அல்லது ஒரு செவ்வாய்க் கிழமையன்று அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.

ராசிச் சக்கரத்தில் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியே முதலாவது மூல நட்சத்திரமாக ஆரம்பிப்பதால், நம்முடைய மேலான இந்து மதத்தின் மூல முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகப் பெருமான் கேதுவின் இன்னொரு அம்சமாக கருதப்படுகிறார். எனவே கேது தசையில் இடையூறுகளைச் சந்திப்பவர்கள் தும்பிக்கையானை நம்பித் துதிப்பதன் மூலம் கஷ்டங்களை நீக்கிக் கொள்ளலாம்.

ஏற்கனவே ராகுவின் பரிகாரங்களில் சொல்லியுள்ளபடி மிகுந்த அருட்சக்தி வாய்ந்த, தடை நீக்கும் திருத்தலமான ஸ்ரீகாளஹஸ்தி கேதுவிற்கான முதன்மை பரிகாரத் தலம். அன்னை ஸ்ரீஞானப் பிரசுன்னாம்பிகை கேதுவாக இங்கே அருள் பாலிக்கிறாள்.

ஜாதகத்தில் திருமணத்தை தடை செய்யும் அமைப்பில் லக்னம் அல்லது ராசிக்கு இரண்டு, ஏழு, எட்டில் கேது இருப்பவர்கள் தங்களின் ஜென்ம நட்சத்திர நாளுக்கு முதல் நாள் மாலையே இத் திருத்தலத்தில் தங்கி ஜென்ம நட்சத்திரம் அமைந்த மறுநாள் தங்கள் தோஷத்தின் அளவிற்கேற்ப, கடுமையான தோஷம் உள்ளவர்கள் அதிகாலை ருத்ராபிஷேகத்திலும், சிறிய அளவில் தோஷம் உள்ளவர்கள் சர்ப்ப சாந்தி பூஜையிலும் கலந்து கொள்ள வேண்டும்.

கொடுமுடி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், சீர்காழி பாம்புக் கோவில், சுயம்புவாகத் தோன்றிய புற்றுக் கோவில்கள், நாகநாத சுவாமி, நாகேஸ்வரன், நாகவல்லி, நாகாத்தம்மன் போன்ற பெயருடைய திருத்தலங்கள் அனைத்தும் கேதுவின் தடை நீக்கும் திருக் கோவில்கள்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *