adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
குரு-கேது தொடர்பின் சூட்சுமங்கள் – C – 066 – Guru-Kethu Thodarbin Sootchumangal…
#adityaguruji #jodhidam ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி எண் : 8681 99 8888 பொதுவாக துலாம் லக்னத்திற்கு கேது சாதகமான பலன்களைச் செய்பவர்அல்ல. லக்னத்திற்கு ஐந்து, ஒன்பது, பத்து, பனிரெண்டு ஆகிய பாவங்களிலஅவர் சூட்சும வலுப் பெற்று அமரும் நிலையில் அவரால்நன்மைகள் இருக்கும்.குறிப்பாக ஐந்தாமிடமான கும்பத்திலும், பனிரெண்டாமிடமான கன்னியிலும், குரு பார்வை பெறாமல் அமர்கின்ற நிலையில் துலாம் லக்னத்திற்கு கேது நன்மைகளை அளிப்பார். அதேநேரத்தில் கன்னியில் இருக்கும் கேதுவை மகரத்தில் இருந்து நீசபங்கம் பெற்ற குரு பார்க்கும் நிலையில் ஆன்மீக எண்ணங்களையும், ஞான ஆற்றலையும் தருவார். ஒன்பதாமிடமான மிதுனத்தில் சந்திரனின் தொடர்பைப் பெற்றும், பத்தாமிடமான கடகத்தில் புதனின் தொடர்பைப் பெற்றும் இருக்கும் நிலையில் அவரால் அபரிமிதமான நன்மைகள் ஜாதகருக்கு உண்டு. துலாம் லக்னத்திற்கு ஆறாம் அதிபதியான குருவின் தொடர்பைக் கேது பெறுவது நல்ல பலன்களைத் தராது. ராகு-கேதுக்களுக்கு குருவின் பார்வை நன்மைகளைத் தரும் என்பது ஒரு பொதுவிதிதான் என்றாலும் அது ரிஷப, துலாம் லக்னங்களுக்குப் பொருந்தாது. ரிஷபத்திற்காவது குரு எட்டுக்குடையவராகி சில நிலைகளில் வெளிநாட்டு வாசத்தையும், வெளிநாட்டில் வருமானம் பெறுவதையும் குறிக்கின்ற நிலையில், குருவின் தொடர்பைப் பெறும் ராகு-கேதுக்கள் தங்களது தசையில் வெளிநாடு, வெளிமாநில விஷயங்களின் மூலம் நன்மைகளை அளிப்பார்கள். ஆனால் துலாம் லக்னத்திற்கு குரு ஆறுக்குடையவனாகும் பரிபூரண பாவி என்பதால், அவர் வலுப்பெற்று ராகு-கேதுக்களுடன் சம்பந்தப் பட்டிருந்தாலோ பார்வை, இணைவு, சாரம் போன்ற தொடர்புகளைப் பெற்றிருந்தாலோ ராகு-கேதுக்கள் அப்படியே ஆறுக்குடையவனாக மாறி தனது தசையில் ஆறாமிடத்துக் கடுமையான பலன்களான கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு, விபத்து, அசிங்கம், கேவலம் போன்ற பலன்களைச் செய்வார்கள். தன்னோடு தொடர்பு கொள்ளும் மற்றும் தன்னைப் பார்க்கும் கிரகங்களின் பலன்களை எடுத்துச் செய்யும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள் ரிஷப, துலாம் லக்னங்களுக்கு குருவின் தொடர்பை அடையக் கூடாது. ஆனால் குரு கெடுதல் செய்யும் வலிமையிழந்து இருக்கும் நிலையில் கேதுவுடன் தொடர்பு கொண்டால், கேது புனிதப்பட்டு ஆன்மீக எண்ணங்களையும், தனத்தையும் ஜாதகருக்குத் தருவார். அதுபோலவே துலாத்திற்கு ஆறாமிடத்தில் ராகு-கேதுக்கள் அமர்வதும் நன்மைகளைத் தராது. ஆனால் குருவின் இன்னொரு வீடான மூன்றாமிடத்தில் இருப்பது கெடுபலன்களைத் தராமல் மூன்றாமிடத்து நல்ல காரகத்துவங்களான தைரியம், புகழ், இசைத்திறன், எழுத்து, இளைய சகோதரம், உதவி, ஆபரணம் போன்ற பலன்களைச் செய்யும். லக்னத்தில் கேது இருந்தால் கெடுதல்கள் எதுவும் துலாத்திற்கு இல்லை. லக்னாதிபதி சுக்கிரனின் வலுவைப் பொருத்து மற்ற சுபப் பலன்கள் இருக்கும். நான்காமிடத்தில் கேதுவால் நன்மைகள் உண்டு. ஏழு, எட்டு, பதினொன்றில் சாதகமான பலன்களைத் தரமாட்டார். அடுத்து, விருச்சிக லக்னத்திற்கு கேது யோக பலன்களை அளிக்கக் கடமைப் பட்டவர். லக்னத்திலோ, பதினொன்றாமிடத்திலோ கேது அமர்ந்து, ராகுவிடமிருந்து எட்டு டிகிரிக்கு மேல் விலகி ஐந்தாமிடத்தில் அமர்ந்திருக்கும் குருவின் பார்வையைப் பெறும் நிலையில் நல்ல நன்மைகள் இருக்கும். இதேபோன்ற அமைப்பில் குரு பார்வையுடன் இருக்கும் நிலையில் மூன்று, நான்காமிடங்களான மகர, கும்பத்திலும் கேது நன்மைகளைச் செய்வார். ஐந்து, ஒன்பதாமிடங்களில் குரு, சந்திர, செவ்வாயின் தொடர்புகளுடனும், பத்தாமிடத்தில் சூரியனுடன் தொடர்பு கொள்ளும்போதும் கேது விருச்சிக லக்னத்திற்கு சுபராகச் செயல்படுவார். இங்கே தொடர்பு என்று குறிப்பிடுவது மேற்கண்ட சூரிய, சந்திர, செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் கேதுவைப் பார்ப்பது, இவர்களின் நட்சத்திரங்களில் கேது இருப்பது அல்லது இவர்களுடன் கேது இணைவது மற்றும் கேதுவிற்கு கேந்திரங்களில் இவர்கள் இருப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. மேற்கண்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் இருக்கும் கேது விருச்சிக லக்னத்திற்கு சாதாரண பலன்களை அளிப்பார். மிகக் கடுமையாக லக்ன அசுபர்களின் தொடர்பு ஏற்பட்டால் ஒழிய விருச்சிக லக்னத்திற்கு கேது கெடுதல்களைச் செய்வது இல்லை. அடுத்து தனுசு லக்னத்திற்கும் கேது சுபர் என்ற நிலையில் தன்னுடைய நல்ல பலன்களை மட்டுமே செய்வார். இந்த லக்னத்திற்கு பனிரெண்டாமிடமான விருச்சிகத்தில் சுப, சூட்சும வலுவுடன் இருக்கும் கேது தனம், ஞானம் இரண்டையும் ஜாதகருக்கு அளித்து முக்தி எனப்படும் இப் பிறவியே கடைசிப் பிறவி என்றாகும் மோட்ச நிலையையும் அளிப்பார். இந்த இடத்தில் கேது இருக்கும் நிலையில் லக்னாதிபதி குரு எட்டில் அமர்ந்து உச்சம் பெற்று கேதுவை பார்ப்பது மிகச்சிறந்த யோக அமைப்புகளைத் தரும். அதுபோலவே எட்டில் உச்சம் பெறும் குருவுடன் கேது இணைவதும் நல்ல அமைப்புதான். இதன் மூலம் கேள யோகம் எனப்படும் தன வரவிற்கான அமைப்புகள் உண்டாகி, தனது தசையில் மறைமுகமான தன லாபங்களையும் வெளிநாடு, வெளிமாநில வாய்ப்புகளையும் கேது தருவார். எட்டில் தனித்திருக்கும் கேதுவை நான்கில் ஆட்சி பெற்ற குரு பலவீனமாகாமல் பார்ப்பதும் நல்ல பலன்களை தரும். அதேபோல மூன்றாமிடமான கும்பத்தில் அமர்ந்திருக்கும் கேதுவை, சிம்மத்தில் இருக்கும் குரு வலுப் பெற்றுப் பார்ப்பதும் யோக நிலைதான். இதுபோன்ற அமைப்புகளில் ஞானத்தையும், தனத்தையும், நல்அறிவினையும்,, ஆன்மீக உணர்வுகளையும் கேது அள்ளித் தந்து தனது தசையில் ஜாதகரை உயர்வுக்கு உள்ளாக்குவார். நான்காமிடமான மீனத்திலும், பத்தாமிடமான கன்னியிலும் சூரிய, செவ்வாய், குரு ஆகியோரின் தொடர்புகளை பெற்று சூட்சும வலு அடைந்திருக்கும் நிலையில் தனுசு லக்னத்திற்கு நன்மைகளை கேது தருவார். ஏற்கனவே நான் சொன்னபடி சூரிய, சந்திர, செவ்வாய், குருவின் லக்னங்களுக்கு கேது நன்மைகளைச் செய்யக் கடமைப்பட்டவர் என்பதன்படி தனுசு லக்னத்திற்கு இவர்களின் தொடர்பைப் பெறும் கேதுவால் நன்மைகள் இருக்கும். இந்த லக்னத்தின் எட்டுக்குடையவரான சந்திரனின் தொடர்பைப் பெறும்போது வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற அமைப்புகளின் மூலம் ஜாதகருக்குப் பயன்கள் அமையும். பொதுவாகவே ஒருவருக்கு கேதுதசை புக்தி ஆரம்பித்ததுமே இருக்கும் இடத்தில் இருந்து தூர நகருதல் என்ற பலன் இருக்கும் என்றாலும் சூரிய, சந்திர, செவ்வாய், குருவின் லக்னங்களுக்கு இந்த அமைப்பின் மூலம் பொருளாதார முன்னேற்றமும் இருக்கும். லக்னத்தில் கேது இருக்கும் நிலையும் குருவின் பலத்தைப் பொருத்து தனுசுவிற்கு நன்மைகளையே தரும். இவை தவிர்த்த பிற இடங்களில் சாதாரண பலன்களைக் கேது தருவார். கேது-குரு இணைவு எப்போதும் நன்மையா? கேதுவோடு குரு சேர்வதும் பார்ப்பதும் நன்மை என்று பொதுவாகச் சொல்லப்படும் நிலையில் இந்தக் கட்டுரையில் துலாம் லக்னத்திற்கு மாறுபாடான பலன்களை நான் சொல்லியிருப்பது குழப்பங்களைத் தரலாம். நமது மூலநூல்கள் எப்போதும் பொதுவிதிகளை மட்டும்தான் சொல்லித் தருகின்றன. இந்த விதிகளை தக்க இடத்தில் பொருத்திப் பார்த்து உண்மைகளை உணர்ந்து பலன் அறிந்து கொள்வதில்தான் ஒருவரின் ஜோதிட ஞானம் வெளிப்படும். கேதுவை குரு பார்ப்பது நன்மை என்பது ஒரு விதி. அதோடு ஆறு எட்டுக்குடையவர்களின் தொடர்பை ராகு,கேதுக்கள் பெறக் கூடாது என்பதும் ஒரு விதிதான். இருக்கும் வீட்டின் அதிபதியைப் போல ராகு,கேதுக்கள் பலன் தருவார்கள், ஒரு ஜாதகத்தில் ஆறுக்கதிபதி வலுப் பெறக்கூடாது என்பவைகளும் விதிகள்தான். இவை அனைத்தையும் புரிந்து கொண்டு, பலன் அறிவதற்கு இவற்றை ஒருசேரப் பயன்படுத்துவதில்தான் ஒருவரின் மேதமை அடங்கியிருக்கிறது. அதேநேரத்தில் ஆதிபத்தியங்களுக்கும், காரகத்துவங்களுக்கும் உள்ள வித்தியாசங்களையும் புரிந்து பலன் அறிவது ஜோதிடத்தில் இன்னும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். உதாரணமாக துலாம் லக்னத்திற்கு குருவோடு தொடர்பு கொள்ளும்போது ஆதிபத்திய ரீதியில் ஆறுக்குடையவனின் கெடுபலன்களைத் தரும் கேது, குருவின் காரகத்துவமான தனம், ஆன்மிகம், குழந்தைகள் போன்றவற்றையும் சேர்த்துத்தான் தருவார், அதை எப்படி எந்த முறையில் தருவார் என்பதைக் கணிப்பது அனுபவத்தைப் பொருத்தது. (29-7-2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது) அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்... https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

3 thoughts on “குரு-கேது தொடர்பின் சூட்சுமங்கள் – C – 066 – Guru-Kethu Thodarbin Sootchumangal…

  1. Nandhini g 11.1.1991 krishnagiri tn
    12ம் இடத்தில் குரு மற்றும் கேது இருந்தால் பலன் என்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *