டி.ராஜேஷ், பரமத்திவேலூர்.
கேள்வி:
கடுமையான மனக்குழப்பத்திற்கு ஆளாகி மனம் முழுக்க தற்கொலை எண்ணம் மேலோங்கி இருக்கிறது. நானும் மனைவியும் எந்த வேலையும் இல்லாமல் அரசு வேலைக்கு முயற்சி செய்கிறோம். மனைவிக்கும் என் அம்மாவிற்கும் பிரச்சினை ஏற்பட்டு அவளுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள். இனி வந்தால் தனிக்குடித்தனம்தான் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டாள். இந்த பிரச்சினையால் என்னால் தேர்வுக்கு சரியாக தயாராக முடியவில்லை. மறதி அதிகமாக இருக்கிறது. மருத்துவச் செலவும் வந்து கொண்டே இருக்கிறது. எனக்கும், மனைவிக்கும் அரசு வேலை வாய்ப்பு உள்ளதா? எப்போது கிடைக்கும்? எனக்கு சேர வேண்டிய சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு தனிக்குடித்தனம் எப்போது செல்ல முடியும்?
பதில்:
சூ,பு சுக் | ரா | சந் | |
குரு | 18-3-1986 அதிகாலை 3.56 நாமக்கல் | ||
ல | |||
செவ் | சனி | கேது |
தற்கொலை என்பது கணநேரத்தில் திடீரென எடுக்கப்படும் ஒரு முட்டாள்தனமான முடிவு. மனோகாரகனாகிய சந்திரன், ராகு அல்லது மற்ற பாபக்கிரகங்களால் பாதிக்கப்பட்டு லக்னம், ராசி போன்ற இடங்களோடு பாபர்கள் சம்பந்தப்படுகின்ற நிலைமையில் ஒருவர் தற்கொலை செய்து கொள்வார். அந்த அமைப்பு உங்களுக்கு இல்லை. விருச்சிக ராசி இருக்கும் குடும்பத்தில் பிரிவினைகளும், சச்சரவுகளும் இருக்கிறது என்பது உண்மைதான். சென்ற வருடத்தோடு அனைத்தும் படிப்படியாக நீங்கத் துவங்கி வரும் ஏப்ரலுக்கு பிறகு குடும்ப பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும்.
குரு | |||
ல | 4-10-1989 மாலை 4.23 நாமக்கல் | கேது | |
ரா | |||
சனி | சந் சு | சூ பு செவ் |
உங்களுக்கு மகர லக்னமாகி இரண்டில் குரு அமர்ந்து சிம்மத்தையும், பத்தாம் வீட்டையும் பார்ப்பதாலும் ஜீவனாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில் வளர்பிறை சந்திரனால் லக்னாதிபதி சனி பார்க்கப்படுவதும் அரசுவேலை கிடைக்கின்ற அமைப்பு. 2019-ம் ஆண்டு இறுதியில் அரசு வேலை கிடைக்கும். மனைவிக்கு அரசு வேலை அமைப்பு இல்லை. அஷ்டமச்சனி நடப்பதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு சொத்துப் பிரிவினை கூடாது. தனிக்குடித்தனமும் போகக் கூடாது.
எஸ்.அசோக்குமார், சேலம்-9.
கேள்வி:
எட்டில் மறைந்த சனிதசையும், நடக்கும் நீச புதன்தசையும் என் வாழ்க்கையை நாசமாக்கி, கேவலமாக்கி, சூனியமாக்கி விட்டது. பஞ்சப்பரதேசியாக அலைகிறேன். தாளமுடியாத கடனில் சிக்கி அவமானப்படுகிறேன். இனியாவது புதன்தசை நன்மை செய்யுமா? படும் வேதனைக்கு அளவில்லாததால் வாழ்க்கையை முடித்து கொள்ளலாமா என்று கூட தோன்றுகிறது. குருஜி அய்யா அவர்கள் என் தொழில் மேம்படவும், கடன் தீரவும் வழிகாட்ட வேண்டுகிறேன்.
பதில்:
பு சனி | சூ செவ் | ரா கு | |
சந் சு | ராசி | ||
ல | |||
கேது |
ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் எதிர்மறை பலன்கள் நடக்கும் என்று உணரும் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜோதிடம் என்பதே நாளை என்ன நடக்கும் என்பதை ஒருவருக்கு உணர்த்துவதுதான் என்பதால் அவயோக தசைகளில் ஒருவர் எச்சரிக்கை உணர்வுடனும், கவனமுடனும் வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்பதுதான் ஜோதிடத்தின் வழிகாட்டுதல்.
உங்களுக்கு சிம்ம லக்னமாகி மிக இளம் வயதிலேயே கடனைக் குறிக்கக் கூடிய ஆறாமிடத்து சனியின் தசை எவ்வித சுபத்துவமும் இன்றி நடந்ததால், சிறு வயதில் இருந்தே கடன் வாங்க கூடிய சூழல்களே அமைந்திருக்கும். தற்போது சனியுடன் இணைந்து, கடன் ஸ்தானாதிபதி சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்த நீச புதனின் தசை நடைபெற்று கொண்டிருக்கிறது.
புதன்தசையின் முதல்பகுதி செவ்வாய்புக்தி வரை கடன்தொல்லைகள் இருக்கத்தான் செய்யும். அதன்பிறகு குறைய ஆரம்பிக்கும். புதன் பரிவர்த்தனை பெற்றுள்ளதாலும் அவரே கடனை தீர்க்கும் பதினொறாம் பாவத்தின் அதிபதி என்பதாலும் தசையின் பிற்பகுதியில் இருந்து படிப்படியாக கடன் தொல்லைகள் குறைய ஆரம்பித்து கேது தசையில் கடன் வாங்க தேவையில்லாத நிலைக்கு வர முடியும்.
லக்னாதிபதி சூரியன் ஒன்பதாமிடத்தில் உச்ச வர்க்கோத்தமம் பெற்றிருப்பதால் பலவீனமாக இருக்கிறார். எனவே தொல்லைகள் குறைவதற்கு சூரியனுக்குரிய முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் சென்னை ரெட்ஹில்ஸ் அருகே உள்ள ஞாயிறு கிராமத்தில் இருக்கும் பழமையான சூரியன் கோவிலில் வந்து வழிபடுங்கள். கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும்.
மூன்று ஆண்களிடம் சிக்கிக் கொண்டு அவஸ்தைப் படுகிறோம்...
ஏ.பிரேமா, திருப்பூர்.
கேள்வி:
உங்கள் மகளாக நினைத்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என் அப்பா குடிக்கு அடிமையாகி விட்டதால் 96 சதவிகித மதிப்பெண் எடுத்தும் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை. அம்மாதான் எனக்கு எல்லாமே. தாலி உள்ளிட்ட நகைகளை அடமானம் வைத்து சிவில் இஞ்சினியரிங் படிக்க வைத்த தம்பி வேலைக்கு செல்லாமல் இருக்கிறான். அப்பா, தம்பி இருவருக்கும் பொறுப்பு இல்லை. என் வருமானம் மட்டும்தான். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார். எனக்கு ஏழரைச்சனி ஆரம்பம் ஆனதாலோ என்னவோ புத்தி மங்கிப் போய் வீட்டில் இதைப் பற்றி கூறினேன். இருவீட்டாரும் பேசி முடிவு செய்தார்கள்.
திருமணத்திற்கு முன் என் கணவரிடம் இரண்டு கட்டளை மட்டும் போட்டேன். தம்பிக்கு வேலை கிடைக்கும்வரை சம்பளத்தில் ஒரு சிறியதொகை அம்மாவிற்கு கொடுப்பேன். வாரத்தில் மூன்றுநாள் அம்மாவை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். இனிமேல் என் குடும்பம் உன் குடும்பம்தான் உன் வீட்டிலேயே இருந்துவிடலாம் என்று உறுதி கூறி என்னை திருமணம் செய்தான். ஆனால் வீட்டில் ஏற்கனவே வெட்டியாக 2 ஆண்கள் இருக்கின்ற நிலையில் இவன் 3-வதாக வந்து விட்டான். 6 மாத கர்ப்பிணியாக இருக்கும் எனக்கு மருத்துவ செலவுக்காக 2 ஆயிரம் மட்டுமே கொடுக்கிறான். சம்பளத்தை என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. என் சம்பளத்தையும் அவனிடம்தான் கொடுக்க வேண்டும் என்று சண்டை போடுகிறான். அடிக்க கை ஓங்குகிறான்.
என் அம்மாதான் எனக்கு எல்லாமே செய்கிறார். இப்போது வேறு வீட்டிற்கு போகலாம் என்று சொல்கிறான். இவனை நம்பி என்னால் செல்ல முடியாது. மூன்று ஆண்களிடம் சிக்கிக் கொண்டு நானும், என் தாயாரும் படாத துன்பம் அடைகிறோம். என் திருமண வாழ்க்கை முறிந்தாலும் பரவாயில்லை. அம்மாவை நான் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். இத்தனை நாள் அவர்கள் பட்ட கஷ்டம் போதும். என் தாயார் என்னுடன் இருக்கும் பாக்கியம் உள்ளதா? அன்றாடம் அழுது கொண்டிருக்கிறேன். நான் தந்தையாக பாவிக்கும் நீங்கள் எனக்கு அறிவுரை கூறுங்கள். கட்டாயம் உங்கள் சொல்படி நடந்து கொள்கிறேன். தற்போது பெற்ற தாயையும், பெறப் போகும் குழந்தையையும் தவிர ஆறுதல் கூற யாரும் இல்லை. நல்லதொரு வழி காட்டுங்கள்.
பதில்:
பு | சூ | சு | செவ் கே |
2-5-1991 இரவு 10.45 திருப்பூர் | குரு | ||
சனி | |||
ச ல ரா | கேது |
மகளே... ஒரு பெண்ணிற்கு பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டின் தொடர்புதான் நிரந்தரமானது. பெற்றோர்களாகிய நாங்கள் ஒருநாள் எங்களின் குழந்தைகளாகிய உங்களை இங்கே விட்டுவிட்டு தனியாகத்தான் போகப் போகிறோம். உங்களை கூட்டிக் கொண்டு செல்லப் போவதில்லை. நீயும் உன் குழந்தையை இங்கே விட்டு விட்டு தனியாகத்தான் போகப் போகிறாய். எங்களுக்குப் பிறகும் தொடரும் உறவே உனக்கு இறுதியானது.
கணவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண்ணிற்கு தாயை விட கணவனே முக்கியம். கணவன் அடிக்க கை ஓங்குகிறான் என்றுதான் சொல்கிறாயே தவிர அவன் அடிக்கிறான் என்று சொல்லவில்லை. திருப்பி அடிக்க முடியாத பெண்ணை அடிக்காத ஒருவனே பூரண ஆண்மகன். அப்பா குடிக்கிறார் என்று தனிப்பட்டுக் குறிப்பிட்ட நீ கணவனைப் பற்றி அவ்வாறு சொல்லாததில் இருந்து அவன் குடிப்பழக்கம் இல்லாதவன் என்றும் தெரிகிறது. இந்தக் காலத்திலும் குடிக்காத வாலிபனை ஒரு மனைவி தாராளமாக நம்பலாம்.
ஒரு பெண் எந்த சூழ்நிலையிலும் தாய்வீட்டில் கணவனை விட்டு கொடுக்கக் கூடாது. வாழ்நாள் முழுவதும் உடன் வாழப்போகும் கணவன் தாயை விட மேலானவன். நான் பெற்ற மகளாக இருந்தாலும், இதைத்தான் சொல்வேன். உன்னுடைய கடிதத்தில் கணவனுக்கு திருமணத்திற்கு முன்பு நான் இட்ட “கட்டளை” என்று குறிப்பிட்டு இருக்கிறாய். நீ எழுதியிருக்கும் தொனியிலேயே உன் மனம் தெளிவாகப் புரிகிறது. பொறுப்பில்லாத புருஷனைப் பார்த்து ஆண்களே இப்படிப்பட்டவர்கள்தான் என்று மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள உன் தாய் உன்னை இயக்குவதாகத் தெரிகிறது. நீ படித்த பெண். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதே. முக்கியமாக வார்த்தைகளைக் கொட்டாதே.
மூன்று ஆண்களிடம் சிக்கிக் கொண்டு நானும் என் தாயும் படுகின்ற அவஸ்தை என்று சொல்கிறாயே, இதையே சற்று மாற்றி இரண்டு பெண்களிடம் மாட்டிக் கொண்டு நான் படும் அவஸ்தை என்று உன் கணவனின் நிலையில் இருந்து சிந்தித்துப் பார். சில விஷயங்கள் தெளிவிற்கு வரும். தாயைப் பற்றி யோசிக்கும் நீ, தாய்க்கு எந்நாளும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அப்பாவையும், தம்பியையும்தான் திருத்த முயற்சிக்க வேண்டுமே தவிர சில மாதங்களுக்கு முன் வந்த கணவனை அல்ல.
திருமணம் முறிந்தாலும் பரவாயில்லை, அம்மா நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற நீ முதலில் என்ன செய்திருக்க வேண்டும்? உன் கல்யாணத்திற்கு முன்பே உன் வருமானம் இந்த வீட்டை விட்டுப் போகப் போகிறது, இனி சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற யோசனையை உன் தந்தைக்கும், தம்பிக்கும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்போது உன் தம்பியாவது வேலைக்குப் போயிருப்பான் அல்லது உன் அப்பா கூட திருந்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது. இதைச் செய்யாமல் தம்பியும், தகப்பனும் இப்படியே சோம்பேறியாக இருக்க வேண்டும். என் புருஷன் சொன்னதைக் கேட்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம் அம்மா?
திருமணத்திற்கு முன் நீ சொன்ன விஷயங்களை பெருந்தன்மையாக ஏற்று, உன் பாஷையில் சொன்னால் உன் “கட்டளை”க்கு அடிபணிந்து, வீட்டு மாப்பிள்ளையாக இருக்க வந்தவன் இப்போது தனிக்குடித்தனம் போகலாம் என்று சொல்கிறான் என்றால், தவறு எங்கே இருக்கிறது என்று யோசி. வீட்டிற்கு ஒரு பாதுகாப்பான ஆணாக வந்தவனை நீயும் உன் அம்மாவும் சேர்ந்து தொழுவத்தில் கட்டிப் போட்டு விட்டீர்களா என்ன..?
அம்மா... கணவனைப் பற்றி நீ எழுதும் வார்த்தைகளிலேயே உன் மனம் ஓடும் விதத்தை நான் கண்டுபிடித்து விடுவேன். எல்லா ஆண்களும் நல்லவர்கள் இல்லைதான். ஆனால் ஆண்கள் அனைவரும் அயோக்கியர்கள் இல்லை. ஆறு மாத குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு அது வெளியே வருவதற்கு முன் அதன் அப்பனை பிரிவதைப் பற்றி யோசிக்கிறாயே? உனக்கு என்ன ஆயிற்று?
குடிக்காத, அடிக்காத கணவனை நம்பி உலகத்தின் எந்த மூலைக்கும் போகலாம். வாழ்க்கை என்பதே சமரசங்களுக்கு உள்ளானதுதான். நிறையப் பெண்கள் இப்படித்தான் குடும்பத்தைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு ஆண்களை சோம்பேறிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். கணவனும் நீயும் வாங்கும் சம்பளம் உன் ஊரில் வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமானது. தேவைப்பட்டால் தனிக்குடித்தனம் போ.
கணவனுக்கு விருச்சிக ராசியாகி கஷ்டங்கள் முடிந்து விட்டதாலும் உன் ஜாதக அமைப்புப்படியும் உனக்கு பெரிய சோதனைகள் எதுவும் இல்லை. ஆனால் உன் தனுசு ராசிக்கு இப்போது சனி நடந்து கொண்டிருப்பதால் என் வார்த்தைகள் உனக்கு கசக்கத்தான் செய்யும். இன்னும் இரண்டு வருடங்களில் தாய், தந்தை, தம்பி, கணவன் ஆகியோரின் உண்மை முகங்களை சனி உனக்குப் புரிய வைப்பார். அடுத்து வரும் இரண்டு வருடங்கள் உன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக இரு. வாழ்த்துக்கள் மகளே...
THE LAST ANSWER IS SUPERB SIR, WHAT A WORDS