adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 163 (28.11.17)

ஜி. விமல்ராஜ், பரமத்திவேலூர்.

கேள்வி :

15-11-2014 அன்று எனது தொழில் நிறுவனத்தில் பணம் திருடு போய்விட்டது. அன்றிலிருந்து இன்று வரை சொல்ல முடியாத துயரங்கள் மற்றும் கடன் பிரச்னைகளால் திண்டாடி வருகிறேன். தொழிலையும் இழந்து, வர வேண்டிய பணமும் வராமல், கொடுக்க வேண்டியதை கொடுக்க முடியாமல் தினந்தோறும் அவமானமாக இருக்கிறது. மனைவிக்கு கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியாகி ஏழரைச்சனி நடப்பதால் எங்களுக்குள்ளும் தினமும் சண்டை வந்து நிம்மதியில்லாமல் இருக்கிறேன். சொத்துக்கள் அனைத்தும் அடமானம் வைக்கப்பட்டு வட்டி கட்ட முடியவில்லை. கடன் பிரச்சினை எப்போது முடியும்? சொத்துக்களை மீட்க முடியுமா? எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்: 
ரா
  15-11-1982 அதிகாலை 2.10 நாமக்கல்
செ கே  சூ,சந் சுக்,பு கு,சனி

2009-ம் ஆண்டு முதல் உங்களுக்கு சனி தசையும், ஏழரைச்சனியும் இணைந்து கொண்டதால் கடன் தொல்லைகள் ஆரம்பமாகி விட்டன. குடும்பத்தில் ஒருவர் விருச்சிக ராசியாகவே இருந்தாலே அந்த குடும்பம் சிக்கலில் இருக்கிறது என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். மனைவிக்கு நடக்கும் ஏழரைச்சனி கணவனை பாதிக்கவே செய்யும்.

சிம்ம லக்னத்திற்கு கடன் ஸ்தானாதிபதியான ஆறுக்குடைய சனியின் தசை உங்களுக்கு நடந்து கொண்டிருப்பதாலும் கடுமையான கடன் சிக்கல்கள் இருக்கும். அடுத்த வருடம் மே மாதத்திற்கு பிறகு சனி தசை முடிந்து உங்கள் லக்னாதிபதிக்கு நண்பரான புதன் தசை ஆரம்பிக்க உள்ளதாலும், உங்களுக்கு ஏழரைச் சனி முடிந்து விட்டதாலும் 2018 பிற்பகுதியில் இருந்து கடனை அடைக்க வழி பிறக்கும். படிப்படியாக இரண்டு வருடங்களில் கடனை அடைக்க முடியும். 2020-ம் ஆண்டுக்கு பிறகு கடன் தொல்லைகள் இன்றி நிம்மதியாக இருப்பீர்கள்.

மு. நாராயணன், திருநெல்வேலி.

கேள்வி :

எனக்கு அவ்வப்போது மரணபயம் ஏற்படுகிறது. ஆயுள்பலம் எவ்வாறு உள்ளது? பயப்படும்படி ஏதாவது இருக்கிறதா? எப்போது திருமணம் நடக்கும்? ஒரு சிலர் திருமணமே நடக்காது என்றும், அப்படியே நடந்தால் பிரிந்து விடுவீர்கள் என்றும் சொல்கிறார்கள். அது உண்மையா? படித்து முடித்து 5 வருடமாகியும் நிரந்தரமான பணி கிடைக்கவில்லை. அரசு வேலைக்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: 
சு கே செ
 சூ,பு
  18-2-1993 காலை10.30 நெல்லை
சனி
சந்   ரா  குரு

பாபக் கிரகங்கள் எட்டாமிடத்தில் சுபத்துவமின்றி அமர்ந்து தசை நடத்தினாலே மரண பயம் அல்லது இனம் புரியாத மனக் கலக்கங்கள் இருக்கும். உங்களுக்கு கடந்த 3 வருடங்களாக செவ்வாயின் வீட்டில், சுப தொடர்புகள் இன்றி இருக்கும் ராகுவின் தசை நடப்பதால் மரண பயம் வருகிறது.

ஆயுளைக் குறிக்கும் எட்டுக்குடையவனும் லக்னாதிபதியுமான செவ்வாய் சந்திரனுக்கு நேரெதிரில் அமர்ந்து, ஆயுள்காரகன் சனி, குரு பார்வையுடன் வலுத்திருப்பதால் நீங்கள் தீர்க்காயுள் வாழுவீர்கள். ராசிக்கு பத்தாமிடத்திற்கு குரு, சுக்கிர தொடர்பு கிடைத்து, லக்னத்திற்கு பத்துக்குடையவன் சுபத்துவமாக இருப்பதாலும், சிம்மத்தை சூரியன் பார்ப்பதாலும் அரசுவேலை இரண்டு வருடங்களுக்கு பிறகு கிடைக்கும்.

ராசிக்கு இரண்டில் சனி, ஏழில் செவ்வாய், லக்னத்திற்கு எட்டில் ராகு என்று கிரகங்கள் அமைந்திருப்பது தாமத திருமண அமைப்பு என்பதால் 28 வயதிற்கு பிறகே திருமணம் நடக்கும். திருமணமே நடக்காது, அப்படியே ஆனாலும் பிரிந்து விடுவீர்கள் என்று சொல்வதெல்லாம் ஜோதிட பலன் இல்லை. உங்களுக்கு ஆண் பிள்ளைதான் பிறக்கும் தவறினால் பெண்தான் என்று சொல்வதைப் போல இருக்கிறது இது. ஏழுக்கு அதிபதியான சுக்கிரன் உச்சமாக இருப்பதால் ஒரே திருமண வாழ்க்கை உங்களுக்கு நீடித்து நிம்மதியாகவே இருக்கும்.

இரமேசு கிருட்டிணன், 131, மேற்கு காட்டுகொட்டாய்.

கேள்வி :

7 வயது முதலே வீட்டில் கடன் இருந்து வருகிறது. 2008-ம் வருடம் பூர்வீக சொத்தை விற்று கடனை அடைத்தோம். எப்படியோ பி.இ. படிப்பை முடித்து நல்லவேலையில் இருக்கிறேன். ஒரு வருடமாக வெளிநாட்டிற்கு முயற்சி வருகிறேன். சிறு முன்னேற்றம் கூட இல்லை. பதவி உயர்வு கூட காலதாமதமாகத்தான் கிடைத்தது. வெளிநாடு பயணம் எப்போது கிட்டும்? திருமணம் எப்போது?

பதில்: 
ல சுக் சந் செ
 சூ,பு
  21-2-1991 காலை 8.15 ஆத்தூர் சேலம்
 குரு கே
சனி ரா

எட்டுக்குடையவன் உச்சம். 12-க்குடைவன் ஆட்சி என்ற அமைப்போடு, இருவரும் உச்சகுருவின் பார்வையில் இருப்பதால், உங்களுக்கு வெளிநாட்டு ஆசை என்பதை விட வெளிநாட்டில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற மோகம் இருக்கும். ஜாதகப்படி தற்போது வெளிநாட்டுப் பயணத்தை குறிக்கும் ராகுவின் தசை நடப்பதால், அடுத்து வரும் 12-க்குடைய சனி புக்தியில் வெளிநாடு செல்வீர்கள்.

சர ராசிகளில் இருக்கும் குரு, சனி என அடுத்தடுத்து வாழ்நாள் முழுக்க வெளிநாட்டு தொடர்புடைய தசைகள் நடப்பதால் திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் நிரந்தரமாக செட்டில் ஆவீர்கள். அடுத்த வருடம் பிற்பகுதியில் திருமணம் நடைபெறும்.

ஜெ. ஆனந்த ராஜசேகர், புதுச்சேரி.

கேள்வி :

38 வயதாகிறது. குடும்ப உறுப்பினர் யாருக்காவது நோய் பிரச்சினையில் தினசரி மருத்துவமனை செல்ல வேண்டியுள்ளது. கடந்த 17 வருடமாக மருத்துவத்திற்கு பல லட்ச ரூபாய் செலவு செய்து விட்டேன். நிம்மதி இல்லை. வேலையை ராஜினாமா செய்து விட்டு தொழில் தொடங்க முயற்சி செய்கிறேன். குடும்ப சொத்து எல்லாவற்றையும் அடமானம் போட்டு விட்டேன். மாதம் 3 லட்சம் வட்டி கட்ட வேண்டி உள்ளது. என்ன செய்வது என்று புரியவில்லை. வாழ்க்கையை நினைத்தால் பயமாக உள்ளது. எப்போது எல்லா பிரச்சினைகளும் தீரும்? கடவுளாக நினைத்து உங்களைக் கேட்கிறேன்?

பதில்:

கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தின்படி மகரலக்னம், மகர ராசியாகி. லக்னாதிபதி சனி 8-ல் மறைந்து ராகுவுடன் இணைந்து தசை நடத்திக் கொண்டிருக்கிறார். லக்னாதிபதி வலுவிழந்து ஆறுக்குடையவன் வலுப் பெற்றாலே கடன், நோய் தொல்லைகள் அதிகமாக இருக்கும். மனைவி குழந்தைகளின் ஜாதகப்படி கடந்த 5 வருடங்களாக அடிமேல் அடி விழுந்து கடனில் தத்தளித்துக் கொண்டிருப்பீர்கள். இரண்டு வருடங்களாக தூங்கி இருக்கவும் மாட்டீர்கள். ஜாதகத்தில் பிறந்த நேரம் இல்லாததால் உங்களுடைய பிரச்சினை எப்போது தீரும் என்பதை கணிக்க முடியவில்லை.

. அசோக்குமார், பேரையூர்.

கேள்வி :

ஜோதிடக்கலையின் பேரரசனுக்கு இந்த மானசீக சீடனின் வணக்கங்கள். இளைய சகோதரன் மதுவிற்கு அடிமையாகி விட்டான். அவனுக்கு குழந்தை பாக்கியமும் இல்லாமல் உள்ளது. இதனால் என் தாய் தினமும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார். இவன் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வருவானா? நடக்கும் சனிதசை அவனுக்கு எட்டாம் வீட்டின் பலனைத்தான் தசை முழுவதும் செய்யுமா? குழந்தைபாக்கியம், தொழில் இவனுக்கு உண்டா?

பதில்: 
ரா  ல
சந்
21-2-1991 காலை 8.15 ஆத்தூர் சேலம்
குரு
 சனி  சூ,பு கே  சுக் செ

இரு ஆதிபத்தியம் உள்ள கிரகங்கள் எந்த வீட்டோடு அதிகமாக தொடர்பு கொள்கிறதோ அந்த வீட்டின் பலனை முதன்மைப் படுத்தி தன் தசை முழுக்க செய்யும் என்பது விதி. அதன்படி தம்பிக்கு எட்டுக்குடைய சனி, ஆறில் மறைந்து, சொந்த நட்சத்திரத்திலும் அமர்ந்து, மூன்றாம் பார்வையால் எட்டாம் வீட்டையே பார்ப்பதால் தனது தசையில் 80 சதவீதம் எட்டாம் வீட்டின் பலன்களையும், 20 சதவீதம் ஒன்பதாம் வீட்டின் பலன்களையும் செய்வார். இதில் அவர் நல்ல பலன்களைச் செய்வாரா, கெடுபலனைத் தருவாரா என்பது அவரின் சுப, சூட்சும வலுவைப் பொருத்தது.

சனி நல்லது செய்ய வேண்டும் என்றால், குரு சுக்கிரன் போன்ற சுப கிரகங்களின் தொடர்புகள் அல்லது சூட்சும வலுவுடன் இருக்க வேண்டும். தம்பியின் ஜாதகத்தில் சனி முழுக்க பாபத்துவம் பெற்று, அம்சத்தில் பகைவீடான சிம்மத்தில் ராகுவுடன் இருப்பதால் அவர் குடிப்பழக்கத்தை முழுமையாக கை விடுவதற்கு வாய்ப்பில்லை. சனியின் பாபக் காரகத்துவங்கள் வலுக்கும் போது ஒருவர் மனக் கட்டுப்பாடு இன்றி குடிப் பழக்கத்திற்கு ஆளாவார்.

ஜாதகப்படி புத்திரகாரகன் குரு எட்டில் மறைந்து நீசமாகி, ஐந்துக்குடைய சுக்கிரனும் நீசமாகி, ஐந்தாமிடத்தோடு நீசனும், ராகு-கேதுக்களும் சம்பந்தப் பட்டதால் தம்பிக்கு கடுமையான புத்திர தோஷம் இருக்கிது. ஆயினும் புதன், சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றதாலும், சுக்கிரன் திக்பலத்தில் இருப்பதாலும் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக வேண்டும் என்பது அமைப்பு. ஆனால் இதை தம்பி மனைவியின் ஜாதகத்தோடு ஒப்பிட்டுத்தான் உறுதி செய்ய வேண்டும்.

பேரனையும், மகளையும் யார் பார்த்துக் கொள்வார்கள்?

நாகேந்திரன், வனவாசி.

கேள்வி :

பேரன் பிறந்த ஒரு வருடத்தில் அவனுடைய அப்பா என் மகளை விவகாரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான் . இதனால் என் மகள் மனநிலை பாதிக்கப்பட்டவள் போல ஆகிவிட்டாள். கூலிவேலை செய்து பேரனை படிக்க வைக்கிறேன். தற்சமயம் பத்தாம் வகுப்பு போகிறான். எனக்கும் 70 வயது ஆகிறது. முன்பு போல வேலை செய்ய முடியாமல் வீட்டு வாடகை கூட தரமுடியாமல் சில நேரம் பட்டினி கிடக்கிறோம். “நீங்கள் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்ய வேண்டாம். படிப்பை நிறுத்தி விட்டு நான் வேலைக்கு போகிறேன்” என்று பேரன் சொல்கிறான். மிகவும் வேதனையாக உள்ளது. அவன் மேற்கொண்டு படிப்பானா? அவனது எதிர்காலம் எப்படி இருக்கும்? எனக்குப் பின்னால் பேரனையும், மகளையும் யாராவது பார்த்துக் கொள்வார்களா? என்னைப் போல என் பேரனும் கஷ்டப்பட்டுத்தான் வாழ்க்கை நடத்த வேண்டுமா? தாங்கள் கூறும் அருள்வாக்கை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.

பதில்: 
சூ,சனி பு,ரா சுக் செ குரு
21-5-2002 மதியம்12.34 ஈரோடு
ல சந்
கே

தந்தையைக் குறிக்கும் சூரியன் பாபக் கிரகங்களுடன் மிக நெருங்கி இணைந்து பலவீனமாகி சூரியதசை நடக்குமானால் தகப்பன் இருக்க முடியாது என்பது ஜோதிட விதி. தந்தை உயிருடன் இருப்பாரா அல்லது பிரிந்திருப்பாரா என்பது அவரது ஜாதகத்தைப் பொருத்தது. பேரன் ஜாதகத்தில் பிதுர்க் காரகனாகிய சூரியன் பத்தாமிடத்தில் பகை பெற்று அமர்ந்து சனி-ராகுவுடன் இணைந்ததால் அவனது ஒரு வயது நான்கு மாதங்களுக்கு பிறகு சூரியதசை ஆரம்பிக்கும் போது தகப்பன் இருக்க முடியாது என்ற அமைப்பின்படி உங்கள் பேரனுக்கு ஒரு வயதிற்குப் பிறகு அப்பாவோடு இருக்கும் அமைப்பு இல்லை.

ஆனால் ஒரு கிரகம் பலவீனமாகும் போது உயிர்க் காரகத்துவத்தை கெடுத்து ஜடக் காரகத்துவத்தைச் செய்யும் என்பதன்படி சூரியன் பத்தாமிடத்தில் திக் பலத்தோடு இருப்பதால் உங்கள் பேரன் எதிர்காலத்தில் நிரந்தரமான ஒரு தொழில் அமைப்பில் மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்வான். பதினைந்து வயதிலேயே கஷ்டப்படும் தாத்தாவை பார்த்து “உங்கள் வேலையை நான் செய்கிறேன் ஒதுங்கி இருங்கள்” என்று சொல்லும் பேரனை விடவா உங்கள் மகளைப் பார்த்துக் கொள்ள இன்னொரு ஆள் வேண்டும்?

லக்னாதிபதி திக்பலம் பெற்று 9, 10-க்குடையவர்கள் இணைந்து தர்மகர்மாதிபதி     யோகம் உண்டாகி ஐந்துக்குடையவன் ஐந்தாமிடத்தைப் பார்த்த யோக ஜாதகம் பேரனுடையது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு பேரனுக்கு ஆரம்பிக்க இருக்கும் செவ்வாய் தசை மிகுந்த யோகத்தை செய்யும் என்பதால் உங்கள் பேரன் அடுத்தடுத்து வர இருக்கும் வகுப்புகளில் நன்கு படித்து கல்லூரி வரை செல்வான். புதன், சுக்கிரன் பரிவர்த்தனை என்பதால் நன்றாக மார்க் எடுப்பான். பேரனுக்கு நடக்க இருக்கும் ராகு தசையில்தான் உங்களுடைய முடிவு இருக்கும் என்பதால் 84 வயதுக்கு மேல் நீங்கள் தீர்க்காயுளுடன் இருந்து பேரனின் வளர்ச்சியையும், அவன் உங்கள் மகளை நன்றாக வைத்து கொள்வதையும் பார்க்க முடியும். கவலை வேண்டாம்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 163 (28.11.17)

  1. தாத்தா அவர்களுக்கு தங்களின் பதிலால் நிம்மதி ஏற்பட்டிருக்கும். இதன் மூலம் பிறர்துயர்துடைக்கும் நிலை அற்புதம்.வணக்கங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *