adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 148 (15.8.2017)

ஆர்.மோகனசுந்தராம்பாள், சேலம்.

கேள்வி:

குருஜிக்கு சிஷ்யையின் வணக்கங்கள். தாங்கள் சொன்னபடி என் தங்கை மகளுக்கு சிறப்பாகத் திருமணம் ஆகிவிட்டது. என் பேத்திக்கும் நல்ல முறையில் சமீபத்தில் திருமணம் நடந்தது. எனது பேரன் பி.காம் படித்து முடித்து சி.எஸ். பரீட்சை எழுதியுள்ளான். இன்னொரு பரீட்சை எழுத வேண்டிய நிலையில், தற்சமயம் நண்பரின் உதவியோடு பால், தயிர், நெய் பாக்கெட்டுக்கள் விற்பனை செய்கிறான். இந்த வியாபாரத்தில் அவன் முன்னுக்கு வருவானா? அல்லது வேலை எதுவும் செய்வானா? ஒன்றரை வருடத்திற்கு முன் அவனது ஒரு கண் பார்வை சரி இல்லாது வேறு கண் பொருத்தியுள்ளது மனத்தில் இனம் புரியாத கவலையோடு இருக்கிறான். அவனுடைய எதிர்காலம் பற்றிக் கூறினால் இந்தப் பாட்டியின் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். இவனுடைய வாழ்க்கையும் நல்ல முறையில் அமைய ஆசி தர வேண்டுகிறேன்.

லக் சந்த கேது பு
 சனி ராசி  செவ்
குரு சூரி,புத சுக்,ராகு
பதில்:
(மீன லக்னம், மீன ராசி. 1-ல் சந். 2-ல் கேது. 5-ல் செவ். 8-ல் சூரி, புத, சுக், ராகு. 9-ல் குரு. 12-ல் சனி. 14.11.1994, மதியம் 3.23, சேலம்.) பேரனுக்கு லக்னத்தையும், ராசியையும் குரு பார்த்த யோக ஜாதகம். லக்னாதிபதி  குருபகவான் அம்சத்தில் உச்சமாக இருப்பதால் தன்னுடைய சுய முயற்சியால் முன்னேறி வாழ்க்கையில் நன்றாக இருப்பார். மீனத்தின் யோகாதிபதியான சந்திரன், லக்னத்தில் அமர்ந்து, அவரையும் அவரது கடக வீட்டையும் குரு பார்த்து சுபப் படுத்துவதோடு, தனாதிபதியான செவ்வாயும், சந்திரனின் வீடான கடகத்தில் குருவின் பார்வையில் இருப்பதால் தற்போது உங்கள் பேரன் செய்து வரும் பால், தயிர், நெய் வியாபாரம் மிகவும் பொருத்தமானது. வேலை செய்வதை விட இந்தத் தொழிலிலேயே பேரன் முன்னுக்கு வர முடியும். அடுத்து நடக்க இருக்கும் சுக்கிர தசை, சுபத்துவமாக குருவின் பார்வை பெற்ற செவ்வாயின் பார்வையோடு இருப்பதால் எதிர்காலத்தில் உங்கள் பேரன் சிறப்பாக இருப்பார். வாழ்த்துக்கள். பி.சிவன், கீரனூர்.
கேள்வி:
பத்து வருடங்களாக ஓட்டல் நடத்தி வருகிறேன். தொழில் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன் புதிதாக சொந்த இடத்தில் இன்னொரு ஓட்டல் திறந்தோம். ஆரம்பித்த மூன்று மாதத்தில் எனக்கும் எனது மகனுக்கும் விபத்து நடந்தது. தற்போது மூன்று வருடமாக கடன் தொல்லையாலும் அவதிப்படுகிறேன். இரண்டு ஓட்டல்களிலும் வியாபாரம் இல்லை. வேலை ஆட்கள் நிற்க மாட்டேன் என்கிறார்கள். வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையிலும், சொந்த இடத்தை விற்க முடியாமலும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன். என்னுடைய கடன் தொல்லை எப்போது தீரும்? தொழில் மீண்டும் நல்லபடியாக நடக்குமா?
பதில்:
குழந்தைகளின் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி அமைப்பு குடும்பத் தலைவனாகிய தகப்பனை பாதிக்கவே செய்யும். உங்களுடைய மூத்தமகனுக்கு கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியாகி தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டு இருக்கிறது. இளைய மகனுக்கு மீன ராசியாகி நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அவனுக்கும் அஷ்டமச்சனி நடந்து கொண்டிருந்தது. குழந்தைகள் இருவருக்கும் சனி அமைப்பு இருந்ததால் கடந்த நான்கு வருடங்களாகவே உங்களுக்கு கடன் தொல்லைகளும், விபத்து போன்றவைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இதே அமைப்பு உங்களுடைய பிறந்த ஜாதகத்திலும் இருக்கக் கூடும். வருகின்ற தீபாவளி முதல் ஏழரைச்சனியின் கடுமை குறையும் என்பதால் இனிமேல் தொல்லைகள் எதுவும் இருக்காது. வரும் தீபாவளிக்குப் பிறகு வியாபாரம் மறுபடியும் துளிர் விட ஆரம்பித்து அடுத்த வருடம் முதல் பழைய நிலைமைக்குத் திரும்பும். கடன் தொல்லைகளும் அடுத்த வருடம் முதல் கட்டுக்குள் இருக்கும். இன்னும் இரண்டு வருடங்களில் கடனை முழுவதுமாக அடைக்க முடியும். வே.முரளி அய்யர், தக்கலை.
கேள்வி:
குருஜி அவர்களுக்கு நமஸ்காரம். ஐந்து வருடங்களாக ஒரு கிராமக் கோவில் அர்ச்சகராக இருக்கிறேன். மிகுந்த கடன் சுமை உள்ளது. முன்பும் வேறு கோவில்களில்தான் இருந்தேன். எந்தக் கோவிலாக இருந்தாலும் கும்பாபிஷேகம் ஆனவுடன் வெளியே வந்து விடுகிறேன். வேலை செய்த அத்தனை கோவில்களிலும் இதுதான் நடந்துள்ளது. எனக்கென்று தனியாக ஹோமபூஜைகள் எதுவும் வருவதில்லை. யாருடனாவது வேலைக்குச் சென்றாலும் பூஜையை நான் செய்வேன் தட்சணையை அவர்கள் வாங்கிக் கொள்வார்கள். எனக்கும் எதுவும் கிடைப்பதில்லை. கேட்டால் பிறகு தருகிறேன் என்று சொல்வார்கள். பிறகு தருவதே இல்லை. வேலையும் கிடைப்பதில்லை. செய்த வேலைக்கு கூலியும் வருவதில்லை. ஏன் இவ்வாறு நடக்கிறது? கோவிலில் கிடைக்கும் சம்பளம் வட்டி கட்டக் கூட போதாது. என்னுடைய கடன்சுமை எப்போது தீரும்? நிலைமை எப்போது மாறும்? மகனின் ஜாதகத்தையும் இணைத்திருக்கிறேன். அவனுடைய படிப்பும் சரியாக இல்லை. பிளஸ் 2 படிக்கிறான். அவனுக்கும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று இருவருக்கும் தகுந்த பரிகாரம் சொல்லி அருளும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
லக்,புத கேது சூரி சுக் செவ்
ராசி
 சனி சந் குரு ராகு
சனி குரு ராகு
ராசி
செவ்
 கேது சந்த சூரி புத சுக் லக்
பதில்:
(தந்தை மீன லக்னம். விருச்சிக ராசி. 1-ல் புத, கேது. 2-ல் சூரி. 3-ல் சுக். 4-ல் செவ். 7-ல் ராகு. 9-ல் சந், குரு. 10-ல் சனி. 25-4-1959, அதிகாலை 4.28, கன்னியாகுமரி, மகன் கன்னி லக்னம், விருச்சிக ராசி. 2-ல் புத, சுக். 3-ல் சூரி, சந். 4-ல் கேது. 5-ல் செவ். 9-ல் சனி. 10-ல் குரு, ராகு. 17-11-2001, அதிகாலை 3.15, டெல்லி) இந்த வாரம் விருச்சிக ராசியின் சிறப்பு வாரம் போலத் தெரிகிறது. ஒவ்வொரு வாரமும் மாலைமலரிலும், டி.வி. நிகழ்ச்சிகளிலும், பேஸ்புக் எனப்படும் முக நூலிலும் விருச்சிகராசி பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். கடந்த 5 வருடங்களாக விருச்சிக ராசிக்காரர்கள் கடுமையான சிக்கல்களில் இருக்கிறார்கள். இதற்கு நீங்களும் விதிவிலக்கு அல்ல. குறிப்பாக சொல்லப் போனால் குடும்பத்தில் கணவனுக்கோ, மனைவிக்கோ, குழந்தைகளில் ஒருவருக்கோ விருச்சிக ராசியாக இருந்தாலே அந்தக் குடும்பம் கடுமையான பிரச்சினைகளில் சிக்கித் தவித்து கொண்டிருக்கிறது. குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விருச்சிகம் இருந்தால் இன்னும் குழப்பம்தான். உங்களுக்கும், மகனுக்கும் விருச்சிக ராசி என்பதால் கடந்த ஐந்து வருடங்களாக எதுவும் உங்கள் கையில் இல்லை. அனைத்துமே சனியின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. ஜாதகப்படி தெய்வத் தொண்டு புரிவதற்கான லக்னமான மீனத்தில் பிறந்து லக்னாதிபதி குருபகவான் லக்னத்தைப் பார்ப்பதால் தெய்வப்பணி செய்யும் அமைப்பு உங்களுடையது. ஜாதகம் யோகமாக இருந்தாலும் கடந்த இருபது  ஆண்டுகளாக அஷ்டமாதிபதி சுக்கிரனின் தசை உங்களுக்கு நடந்து வருகிறது. அதிலும் பிற்பகுதி பத்து ஆண்டுகள் எட்டுக்குடைய ஆதிபத்தியத்தை சுக்கிரன் கடுமையாகவே செய்வார் என்பதால் சிரமங்கள் உங்களுக்குச் சற்றுத் தூக்கலாகவே இருக்கும். மேலும் எட்டுக்குடையவன் புக்தியில் ஏழரைச்சனி சந்திப்பதும் வருமானமே இல்லாத ஒரு நிலையை உண்டாக்கும். வருகின்ற சனிப்பெயர்ச்சி முதல் ஜன்மச்சனி விலகி அடுத்த வருடத்தோடு சுக்கிரதசையும்  முடிவதால் இனிமேல் வாழ்க்கையில் முன்னேற்றங்களை சந்திப்பீர்கள். சுக்கிரனுக்கு அடுத்த சூரியதசையும் இரண்டாமிடத்தில் உச்சம் பெற்றதால் கடன் தொல்லைகளைக் கொடுக்கும் என்றாலும் சூரியன் லக்னாதிபதிக்கு நண்பர் என்பதால் சுபக்கடனை மட்டுமே கொடுப்பாரே தவிர அசுபக் கடன்களை கொடுக்க மாட்டார். பிற்பகுதி வாழ்வில் யோகம் காணும் ஜாதக அமைப்பு உங்களுடையது. மகனுடைய ஜாதகத்தைப் பொருத்தவரை கன்னி லக்னமாகி லக்னாதிபதி புதன் வலுத்திருப்பதாலும், இரண்டாம் வீட்டில் புதனும், சுக்கிரனும் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகம் இருப்பதாலும் இவர்கள் இருவரையும் குரு பார்வையிடுவதாலும் மிகவும் முக்கியமாக இன்னும் இரண்டு வருடங்களில் யோகாதிபதி சுக்கிரனின் தசை நடக்க இருப்பதாலும் அடுத்த வருடம் முதல் மகனின் படிப்பில் நல்ல முன்னேற்றம் தெரியும். மகனின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுத்திருப்பதால் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டி இருக்காது. வரும் அக்டோபர் 24-ந்தேதி ஜென்மச்சனி விலகியதும் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கடன் தொல்லைகள் விலக  நல்ல வேலை அமைப்புகள் உருவாகும். கவலைப்பட வேண்டாம். கஷ்டங்கள் இன்னும் சில வாரங்களில் நீங்கப் போவதால் பரிகாரங்கள் தேவையில்லை.
இரண்டாவது திருமணம் செய்யலாமா?
எஸ்.சவுந்தர்யா, திண்டமங்கலம்.
கேள்வி:
நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். மணமாகி ஒரு வருடம் முடிந்து விட்டது. மூன்று மாதம் வரை என்னை நன்றாகப் பார்த்து கொண்ட கணவரும், மாமியாரும் பிறகு என்னை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தார்கள். மாமியார் வீட்டை விட்டு விரட்டி விட்டதால் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன். ஒரு மாதம் கழித்து கணவர் என்னைத் தேடி வந்து மன்னிப்பு கேட்டார். நானும் அவர் திருந்தி விட்டார் என்று மன்னித்த நிலையில், இரண்டு நாட்கள் கழித்து மது அருந்தி விட்டு வந்து எங்கள் வீட்டின் ஓட்டை உடைத்து என்னையும், அம்மாவையும் அடித்து விட்டதால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டோம். அவருடன் நான் வாழ்ந்த ஒன்பது மாதமும் மிகவும் கொடுமையானது. என் கணவர் பழி வாங்கும் எண்ணமும், குத்திக் காட்டும் குணமும் உடையவர். அவரிடத்தில் இருந்து விவாகரத்து வாங்க முடிவு செய்துள்ளேன். எங்கள் இருவருக்கும் விவகாரத்து நடக்குமா? எனக்கு வேறு நல்ல வாழ்க்கை அமையுமா? இருளில் இருக்கும் என் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வருமாறு பணிவுடன் கேட்கிறேன்?
லக்,சூரி புத,சுக் கேது
ராசி
சனி  குரு
ராகு சந்
சனி சந்த பு
கேது ராசி
சுக்,குரு செவ் ராகு
 புத லக், சூரி
பதில்:

(கணவன் மேஷ லக்னம், கன்னி ராசி. 1-ல் சூரி, புத, சுக். 3-ல் கேது. 5-ல் குரு. 6-ல் சந். 9-ல் ராகு. 10-ல் சனி. 12-ல் செவ். 14.5.1992, அதிகாலை 5.30, ராசிபுரம். மனைவி விருச்சிக லக்னம். மேஷ ராசி. 1-ல் சூரி. 2-ல் புத. 3-ல் சுக், செவ், குரு. 4-ல் கேது. 5-ல் சனி. 6-ல் சந். 10-ல் ராகு. 11-12-1997, அதிகாலை 5.30, நாமக்கல்.)

காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்கிறாயே, இப்போது நீ கடிதத்தில் எழுதி இருக்கும் பழி வாங்கும் எண்ணமும், குத்திக் காட்டும் குணமும் காதலிக்கும் போது உனக்குத் தெரியவில்லையா? அப்படி என்றால் உன் கணவரிடம் இருந்த எதைப் பார்த்து நீ அவரை திருமணம் செய்து கொண்டாய்?

ஒருவனின் குணத்தைக் கூட எடை போட முடியாத 19 வயதில் உனக்கு காதலும், கல்யாணமும் தேவையா? ஜோதிடரீதியாக சொல்லப் போனால் இந்தக் காதலை நீயாகச் செய்ய வில்லை. உன்னுடைய மேஷராசிக்கு நடந்து கொண்டிருக்கும் அஷ்டமச்சனி செய்ய வைத்தது.

உனக்கும் உன் கணவருக்கும் கன்னிராசி மற்றும் மேஷராசியோடு மேஷ லக்னம், விருச்சிக லக்னம் என லக்னமும், ராசியும் ஆறுக்கு எட்டாக அமைந்த சஷ்டாஷ்டக தோஷம் இருப்பதால் வாழ்நாள் முழுவதும் இருவருக்கும் ஒத்துப் போகாமல் சண்டை சச்சரவுடன்தான் இருக்கும். அதேநேரத்தில் ஜாதகப்படி அந்தப் பையன் நல்லவனாகத்தான் தெரிகிறான்.

உன்னுடைய ஜாதகப்படி உனது பேச்சிலும், குணத்திலும் சில குறைகள் தெரிகின்றன. உன் போன்ற பக்குவப்படாத குழந்தைகள் திருமண விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுத்தால் இப்படித்தான் எதையும் சமாளிக்கத் தெரியாமல் தாய் வீட்டிற்குத் திரும்பி வந்து கையைப் பிசைந்து கொண்டு நிற்பீர்கள்.

இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்கிறாயே. ஒரு வேளை இவனை விவாகரத்து செய்ததற்குப் பிறகு வரப் போகிறவன் இவனை விட மோசமானவனாக அமைந்து விட்டால் என்ன செய்யலாம்? அவனையும் விவாகரத்து செய்து விட்டு மூன்றாவதாக ஒரு ஆளை தேடிப் பிடிக்கலாமா?

உன் ஜாதகப்படி அடுத்த வருடம் மார்ச் மாதம் வரைக்கும் நீ எந்த முடிவு எடுத்தாலும் சரியாக வராது என்பதால் பொறுமையாக இரு. இன்னும் 6 மாதங்கள் கழித்து உன்னுடைய வாழ்க்கையில் என்ன முடிவெடுப்பது என்பது பற்றி யோசிக்கலாம். அதுவரை பொறுமையாக இரு.

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 148 (15.8.2017)

  1. குருஜி அவர்களுக்கு ஜோதிடம் என்னும் தேவ ரகசியம் , கேள்வி பதில் எல்லாவற்றையும் வாரம் படித்து கொண்டு இன்புறுகிறோம். இருந்தாலும் இது இன்னும் அதிகமாக . விளயாட்டு வீரர்கள் அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் / பிச்சைகாரர்கள், மனநோயாள்கள்., இவர்களது ஜாதகங்களையும் தேர்ந்தெடுத்து உங்கள் மாணவர்களின் ஆராய்சிக்காக எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  2. Pingback: Melanie Glastrong

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Aditya guruji Dismiss