எம். மோகன், கிருபில்ஸ்பேட்டை.
கேள்வி :
என்னுடைய மகள் திருமணத்திற்கு மாலை வாங்கி வரும்போது ஸ்கூட்டர் பஞ்சராகிவிட்டது. சாந்தி முகூர்த்தத்தின் போது மாப்பிள்ளை வேட்டியில் காபி கொட்டி கறையாகிவிட்டது. பெரியவர்கள் இதைப் பார்த்து விட்டு ஏதோ குறை என்று சொன்னார்கள். அதற்கு பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் செய்து வைத்தேன் என்று பதில் சொன்னேன். எனக்கு இருப்பது ஒரே மகள். மிகவும் கஷ்டப்பட்டுக் காப்பாற்றித் திருமணம் செய்து வைத்திருக்கிறேன். தற்போது இரண்டு மாதங்களுக்கு முன் என் மகளுக்கு சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கு பிறக்கும்போதே மஞ்சள் காமாலை இருந்ததால் டாக்டர்கள் பத்து நாட்களாக லைட்டு வெளிச்சத்தில் வைத்து குணப்படுத்திக் கொடுத்தார்கள். என் குடும்பத்திற்கு முன்னோர்கள் சாபம், தெய்வக்குற்றம் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?
பதில்:
குறை சொல்பவர்கள் எப்போதும் எதிலும் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். உலகில் எதுவுமே முழுமையான நிறைவோடு இருப்பது இல்லை. தமிழகமே போற்றிக் கொண்டாடி வணங்கிய ஒரு தலைவருக்கு வாரிசு இல்லை என்கிற குறை இருந்தது. இத்தனை செல்வாக்கு இருந்தும் பெயர் சொல்வதற்கு ஒரு மழலைச்செல்வம் இல்லையே என்று ஒரு பத்துநிமிடமாவது அவர் ஏங்கி இருக்க மாட்டாரா?
உங்கள் மகளின் திருமணத்தில் நடந்ததாக சொல்வதெல்லாம் சாதாரண நிகழ்ச்சிகள். இதைவிட திருமணத்தன்று கொடுமையான சம்பவங்கள் நடைபெற்றவர்கள் எல்லாம் நிம்மதியான திருமணவாழ்வை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதேபோல முன்னோர்சாபம், தெய்வகுற்றம் என்பதெல்லாம் ஒரு ஜாதகத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை கணிக்கத் தெரியாத ஜோதிடர் மேம்போக்காகச் சொல்வது. இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை.
மகளின் பிறந்த விவரம் 22.4.1989, ரோகிணி நட்சத்திரம், ரிஷபராசி என்று தவறாகக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்த நாளின்படி விசாகநட்சத்திரம், துலாம்ராசி வருகிறது. பேத்தியின் ஜாதகப்படி மகரலக்னம், தனுசுராசி, உத்திராடம் நட்சத்திரமாகி லக்னாதிபதி சனி லக்னத்தை பார்த்து ராசியை குருபகவான் பார்த்து தாயாரைக் குறிக்கும் நான்காம் அதிபதி ஆட்சிபெற்று, தகப்பனாரைக் குறிக்கும் சூரியன் உச்சம் பெற்றுள்ளதால், இந்தக் குழந்தை வளரவளர பெற்றவர்கள் மிகவும் நல்லநிலைமையில் இருப்பார்கள்.
ஆர். பிரபாகரன், ஆலங்குளம்.
கேள்வி :
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை நிறைந்த இந்த கபட உலகில் ஏன் பிறந்தேன் என்று தோன்றுகிறது. 15 வருடங்களாக விடாமுயற்சி செய்தும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. என் வயதுடையமிகவும் மோசமானவர்கள் பலர் பெரிய அளவில் முன்னேறி இருக்கிறார்கள். ஆனால் 99 சதவீதம் நேர்மையான, நான் எந்த சாதனையும் செய்யவில்லை. முன்ஜென்ம பாவம் ஏதாவது செய்துள்ளேனா? நடக்கும் பாதகாதிபதி குரு தசை நன்மை செய்யுமா? அடுத்த சனிதசையில் நோய் ஏற்படுமா? பெரிய தொழில் செய்வேனா? நீடித்த ஆயுள் உண்டா? கபடதாரிகள் பலர் மேன்மை பெற்ற இந்த உலகில் எனக்கு நன்மை உண்டா? மனிதர்கள் மிகவும் மோசமானவர்கள்,வேடதாரிகள்...
குரு | சூ சனி | பு | சனி |
ராசி | |||
ரா |
சூ,பு
சு,செ |
ல,சந் |
பதில்:
(கன்னிலக்னம், கன்னிராசி. இரண்டில் சூரி, புத, சுக், செவ். மூன்றில் ராகு. ஆறில் குரு. பத்தில் சனி. 10.11.1974. 4.30 அதிகாலை, நெல்லை)
மண்ணும் பெண்ணும் பொன்னும் வேண்டாம் என்றால் சாமியாராகப் போக வேண்டியதுதானே? ஏன் சராசரி உலகில் வாழ்கிறீர்கள்? சக மனிதனின் மேல் பொறாமை கொள்பவன் என்றுமே முன்னேறியதாக சரித்திரம் இல்லை. முன்னேறிய ஒவ்வொருவரின் பின்னாலும் அயராத உழைப்பு, லட்சியத்தின் மீது கொண்ட நேர்பார்வை போன்ற விஷயங்கள் இருக்கிறது. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டவனுக்கு எதிரே இருக்கும் வெற்றிக்கம்பம்தான் தெரிய வேண்டுமே தவிர கூட ஓடிவருபவன் எங்கே வருகிறான் என்று திரும்பித் திரும்பிப் பார்த்தால் ஓடின மாதிரிதான்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தை விட ஆறு எட்டு வலுவாகக் கூடாது. அப்படி வலுவானால் இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களும், அதிர்ஷ்டமில்லாத நிலைமையும் இருக்கும். உங்களுக்கு லக்னமும் லக்னாதிபதியும் எட்டுக்குடைய செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்து, அஷ்டமாதிபதி அவர் வீட்டைப் பார்த்து வலுப்படுத்துகிறார். ஆறாமிடத்தில் குரு வர்கோத்தமமாக அமர்ந்து அந்த பாவத்தை வலிமையடையச் செய்கிறார். எனவே இது போன்ற எண்ணங்களால் அலைக்கழிக்கப் படுகிறீர்கள்.
பாதாகதிபதி ஆறில் மறைந்ததால் பாதகம் செய்யமாட்டார். அவர் ஆறில் மறைந்தது நன்மையைத்தான் செய்யும். அதேநேரத்தில் ஆறில் அமர்ந்த குரு அந்த பாவத்தின் கடன் நோய் எதிரி அமைப்புகளைத்தான் செய்வார். உள்ளத்தில் உள்ளதை மறைக்கத் தெரியாத நீங்கள் இந்த தசையில் அனைவரையும் எதிரியாகப் பார்த்து விரோதித்துக் கொண்டு சிக்கலில் கிடப்பீர்கள். குருதசையை முதலில் முடியுங்கள். பிறகு சனிதசையின் பலனைப் பார்க்கலாம். எட்டுக்குடையவன் வலுப்பெற்று எட்டாமிடமும் சுபத்துவம் அடைந்ததால் தீர்க்காயுள் இருப்பீர்கள்.
அ. மகாதேவன், தாரமங்கலம்.
கேள்வி:
அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன். வாய்ப்புகள் ஏதேனும் அமைகின்றனவா, இன்னும் இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதனை தெளிவாகக் கணித்துக் கூறவும்.
செவ் | சூ,பு கே | சுக் | |
சனி | ராசி | ||
சந் | |||
ரா |
குரு |
ல |
பதில் :
(கன்னிலக்னம் சிம்மராசி இரண்டில் குரு ஆறில் சனி எட்டில் செவ் ஒன்பதில் சூரி புத கேது பத்தில் சுக் 18.5.1994 2.57 மதியம் எடப்பாடி)
கன்னிலக்னமாகி ஆறு, எட்டுக்குடையவர்க்கள் வலுப்பெற்றாலும் குருவின் பார்வையால் சுபத்துவம் பெற்று, லக்னாதிபதி பத்தாமிடத்தில் பரிவர்த்தனை அடைந்துள்ளதாலும், சந்திரனுக்கு பத்தாம் வீட்டிலும், திக்பலத்திற்கு அருகிலும் சூரியன் உள்ளதாலும் நிச்சயமாக அரசுவேலை உங்களுக்குக் கிடைக்கும். தற்போது உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் சனி முடிந்ததும் -நடக்கும் சுக்கிரதசை புதன் புக்தியில் அரசுப்பணியில் சேருவீர்கள்.
ஆர். வாசுகி, பட்டுக்கோட்டை.
கேள்வி :
இதுவரை முன்னூறு வரனுக்கு மேல் பார்த்தும் என் மகளுக்கு சரியாக வரன் அமையவில்லை. இப்போது அனுப்பியுள்ள ஜாதகத்தைப் பற்றி ஜோதிடர்கள் பல்வேறு விதமாகக் குழப்புகிறார்கள். இந்த வரனை முடிக்கலாமா? தங்களின் முடிவே தீர்க்கமான இறுதியான முடிவு. பதில் சொல்லி உதவுங்கள்.
பதில்:
வரனின் ஜாதகத்தில் ஏழுக்குடையவன் பலவீனமாகி, பதினொன்றுக்குடையவன் உச்சமானது இரண்டு தார அமைப்பு என்பதாலும், இருவரின் லக்னமும் ராசியும் சஷ்டாஷ்டகமாக உள்ளதாலும் திருமணம் செய்ய வேண்டாம். உங்கள் மகளுக்கு அடுத்த வருடம் தை மாதத்திலிருந்து சித்திரைக்குள் திருமணம் ஆகிவிடும் கவலை வேண்டாம்.
ஆர். குகநாதன், கோவை.
கேள்வி :
இந்த ஜாதகர் தற்போது நோயால் அவதிப்படுகிறார். இதுவரை வீட்டை விற்று நாற்பது லட்சத்திற்கு மேல் செலவு செய்து விட்டோம். மருத்துவர்கள் புதிது புதிதாக ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் இன்னும் செலவாகும் என்றும் தெரிகிறது. தாலியைக் கூட விற்று விட்ட நிலையில் இனிமேல் விற்பதற்கும் ஒன்றும் இல்லை. தெய்வத்தைத் தவிர எங்களுக்கு வேறு துணையும் இல்லை. குருநாதரும் தெய்வமும் ஒன்றுதானே? என்ன நடக்கும் என்று ஆசான் அவர்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதைப் போல எனது குருநாதராகிய தங்களின் வாக்கே எங்களை வழி நடத்தும்.
பதில் :
நடப்பது அனைத்தும் பரம்பொருளின் விருப்பமே. அனைத்தும் அவன் செயல்தான். எல்லாக் காரியங்களுக்கும் கண்டிப்பாகக் காரணங்கள் இருக்கின்றன. ஐந்து பேர் கொண்ட உங்கள் குடும்பத்தில் நான்கு பேர் விருச்சிகராசி என்பதும் ஒருவர் மேஷராசி என்பதும் உங்கள் குடும்பத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எனக்குத் தெளிவாகக் காட்டுகிறது.
ஜூலை இருபத்தி எட்டாம் தேதிக்குப் பிறகு செலவுகள் எதுவும் செய்யத் தேவை இருக்காது.
குடிக்கும் மகன் திருந்துவானா?
எம். பரமசிவம், தூத்துக்குடி.
கேள்வி :
முப்பத்தியாறு வயதாகும் மகன் எந்தத்தொழிலும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கிறான். மதுபானப் பிரியனாக இருக்கிறான். அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்கிறான். அவனது வாழ்க்கை எப்படி அமையும்? அவனது பிற்கால நிலைமை என்ன ஆகும்? உங்களது மேன்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்.
ராசி | சந்,சு ரா | ||
சூ,குரு | |||
ல,செவ் |
பு,சனி |
பதில்:
(துலாம்லக்னம் கடகராசி லக்னத்தில் செவ் பத்தில் சுக் ராகு பதினொன்றில் சூரி குரு பனிரெண்டில் புத சனி 7-9-1980 காலை 10 மணி தூத்துக்குடி)
ஒன்பது மணிக்கே கன்னிலக்னம் முடிவடைந்த நிலையில் பத்துமணிக்குப் பிறந்த உங்கள் மகனின் ஜாதகத்தில் துலாம் லக்னத்திற்குப் பதில் கன்னி லக்னம் என்று தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. பக்கத்திலுள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் திருக்கணிதப்படி ஒரு ஜாதகப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். லக்னாதிபதி சுபவலு அடைந்த ஒருவர் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகவே முடியாது.
லக்னத்தில் பாவி அமர்ந்து லக்னாதிபதி சுக்கிரன் ராகுவுடன் இணைந்ததாலும், தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் ஒரேடிகிரியில் ராகுவுடன் இணைந்து வலுப் பெற்ற பாதகாதிபதி தசை நடப்பதாலும், உங்கள் மகன் தொழில் செய்ய விருப்பமின்றி குடிகாரனாக இருக்கிறார். திடமனதிற்கு காரணமான மனோகாரகன் சந்திரன் கெட்டாலே ஒருவர் தனது மனத்தை அடக்க முடியாமல் ஏதேனும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார்.
துலாம் லக்னத்தின் அவயோக தசைகளான சூரிய சந்திர செவ்வாய் தசைகள் அடுத்தடுத்து நடக்க உள்ளதால் மகனின் எதிர்காலம் பற்றி சிறப்பாக ஒன்றும் சொல்வதற்கில்லை. லக்னாதிபதி சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளும் பட்சத்தில் வாழ்க்கை முறை மாறும்.