கிருஷ்ணன், ஈரோடு.
கேள்வி :
பல வருடங்களாக பெண் பார்த்தும் எனக்குத் திருமணம் நடைபெறவில்லை. எப்போது திருமணம்? அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும்?
ல | |||
ராசி | ரா,செவ் | ||
கே | |||
பு,சு | சூ,சந் வி,சனி |
பதில்:
மீனலக்னம். கன்னிராசியாகி லக்னத்திற்கு 7-ல் சனி அமர்ந்து ராசிக்கு ஏழாமிடத்தை பார்ப்பதும், குடும்பாதிபதி செவ்வாய் நீசமாகி ராகுவுடன் இணைந்ததும் தோஷ அமைப்பு. ராகுதசை நடப்பதால் முறையான பரிகாரங்களை ஶ்ரீகாளகஸ்தியில் ஜென்மநட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு தங்கி செய்யவும். ஜாதகப்படி குரு தசையில் தான் நீங்கள் தந்தையாக வேண்டும் என்பதால் ராகு தசை சந்திர புக்தியில் திருமணம் நடக்கும். குருபகவான் லக்னாதிபதி என்பதால் அவரது தசையில் அனைத்தும் கிடைத்து செட்டில் ஆவீர்கள்.
எஸ்.சந்திரா, திண்டுக்கல்.
கேள்வி :
அம்மா வீட்டில் நல்ல வசதி, வாய்ப்புகளுடன் வளர்ந்த நான் திருமணமாகி புகுந்த வீட்டில் பல கஷ்டங்களைப்பட்டேன். லக்னத்தில் ராகு–செவ் இருப்பது நிம்மதியின்மையைக் கொடுக்கும் என்கின்றனர். எனக்கும் அவருக்கும் ஒத்தே வருவதில்லை. அவரைப் பார்த்தாலே வெறுப்பாக வருகிறது. இது கிரகப் பொருத்தம் இல்லாததாலா? என் இறுதி வாழ்க்கை நிம்மதியாக முடியுமா?
பதில்:
70 வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தாய் இப்படிக கேட்டால் நான் என்ன பதில் சொல்வது அம்மா? கணவரின் குணம் எப்படி இருந்தாலும் சகித்துக்கொண்டு குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களைப் போன்ற தெய்வங்களால்தான், இந்த தேசமும், இந்த நாட்டின் கலாச்சாரமும் உயிர்ப்புடன் இருக்கிறது.
உங்களுக்கு தனுசு லக்னம், கணவருக்கு ரிஷப லக்னம் என இருவருக்கும் சஷ்டாஷ்டக லக்னமாக அமைந்ததாலும், ஜாதகத்தில் உள்ள வேறுசில அமைப்புகளாலும் உங்கள் இருவருக்கும் மனப்பொருத்தம் என்பது இருக்கவே இருக்காது. உங்கள் ஜாதகத்தில் ஏழுக்குடையவன் ஆட்சி பெற்று, மாங்கல்ய ஸ்தானாதிபதி திக்பலம் பெற்றிருப்பதாலும், கணவரின் ஜாதகத்தில் ஏழாமிடத்தில் குரு இருப்பதாலும் உங்கள் கணவர் இன்னும் நீண்ட ஆயுளுடன் இருப்பார். அதேநேரத்தில் தீர்க்க சுமங்கலி அமைப்பும் உங்களுக்கு உண்டு. உங்களுக்குப் பிறகே உங்கள் அருமை அவருக்குத் தெரியும். இங்கே ஏகப்பட்ட பெண்களின் நிலைமையும் அதுதான். உங்களின் மீனராசிக்கு அஷ்டமச்சனி முடிந்து விட்டதால் இனிமேல் கஷ்டங்கள் என்று சொல்ல எதுவும் இல்லை.
எஸ். முருகன், கோயம்பத்தூர் – 6.
கேள்வி :
எனது மானசீக குருவான தாங்கள் இந்த சீடனை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். ஜோதிடம் எனும் இந்த தேவரகசியத்தை என்னால் அறிந்து கொள்ள முடியுமா? ஜோதிடம் கற்றுக் கொண்டு பிறருக்கு சொல்ல முடியுமா? வீட்டு உபயோக கிளீனிங் பொருட்களை விற்பனை செய்கிறேன். கடை வைத்து வியாபாரம் செய்யும் வாய்ப்பு இருக்கிறதா? இப்போது செய்யும் தொழிலோடு துணியும் சேர்த்து வியாபாரம் செய்யலாமா? திருமணம் எப்போது நடக்கும்?
ரா | சந்,ல | ||
குரு | ராசி | ||
செவ் | |||
சனி | சூ,பு சு | கே |
பதில்:
(ரிஷப லக்னம், ரிஷப ராசி. 5-ல் கேது, 6-ல் சூரி, புத, சுக். 7-ல் சனி. 9-ல் செவ். 10-ல் குரு. 22.10.1986, 7.55 இரவு, திருநெல்வேலி)
சந்திரன் உச்சமாகி அம்சத்தில் புதன் ஆட்சியானதால் ஜோதிடம் உங்களுக்கு கை வரும். வாக்குஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் வாக்குப்பலிதமும் உண்டு. அதேநேரத்தில் தற்போது ரிஷபத்திற்கு அவயோகியான குருவின் தசை நடப்பதால் எதிலும் உங்களுக்கு தடைகள் இருக்கும்,. தொழிலும் முழுமையாக இருக்காது.
ஜீவனாதிபதி சனி என்பதால் ஏற்கனவே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீட்டு உபயோக கிளினிங் பொருட்கள் விற்பனை சரியான ஒன்றுதான். துணி வியாபாரத்தையும் இணைத்துக் கொள்ளலாம். தொழில் விரிவாக்கங்களுக்கு சனி தசையே ஏற்றது. பெரிய அளவில் முதலீடு செய்யாமல் சிறியகடை ஆரம்பியுங்கள். படிப்படியாக முன்னேறி சனிதசை முதல் நல்லநிலைமையில் இருப்பீர்கள். இந்தமாதம் சுக்கிரபுக்தி ஆரம்பிப்பதால் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் திருமணம் நடக்கும்.
சையது இப்ராகிம், கூடுவாஞ்சேரி.
கேள்வி :
நான்கு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்த நாங்கள் இப்போது பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. குழந்தை இல்லை. மனைவிக்கு உடல்ரீதியாக குறைபாடுகள் இருந்தும் அவளுடன் அன்பாகவே குடும்பம் நடத்தி வந்தேன். தற்போது தாய், தந்தையின் பேச்சைக் கேட்டு என்னிடம் விவாகரத்து கேட்டிருக்கிறார். நீதிமன்ற வழக்கால் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறேன். எனக்கு ஜாதகம் இல்லாததால் மனைவியின் ஜாதகத்தை இணைந்துள்ளேன். மனைவி என்னுடன் சேர்ந்து வாழ்வாரா? அல்லது எங்கள் இருவருக்கும் வேறு திருமணம் நடைபெறுமா?
சந் | ரா | ||
சு,செவ் | ராசி | ||
சூ,வி | சனி,பு கே | ல |
பதில்:
(கன்னி லக்னம். மேஷ ராசி. 3-ல் சனி, புத, கேது. 4-ல் சூரி, குரு. 6-ல் சுக், செவ். 1.1.1985, 12.05 அதிகாலை, சென்னை)
மனைவிக்கு தற்போது அஷ்டமச்சனி நடந்து, இரண்டாவது திருமணத்தைக் குறிக்கும் பதினொன்றாம் அதிபதி சந்திரனின் தசை கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பித்திருப்பதாலும், எட்டில் மறைந்த சந்திரனைக் கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற குரு பார்த்து, சுக்கிரனோடு செவ்வாய் இணைந்துள்ளதாலும், நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை.
பி. நடராஜன், திருச்செங்கோடு.
கேள்வி :
மகளுக்கு திருமணம் பார்த்து வருகிறோம். நல்ல இடத்தில் அமையுமா? எப்போது திருமணம்? அரசுவேலைக்கு போட்டித் தேர்வுகள் எழுதி வருகிறாள். அரசு வேலை கிடைக்குமா?
செவ் | பு,சு | சூ | ல,குரு |
ராசி | கே | ||
சனி,ரா | சந் | ||
பதில்:
(மிதுன லக்னம், சிம்ம ராசி. 1-ல் குரு. 8-ல் சனி, ராகு. 10-ல் செவ். 11-ல் புத, சுக். 12-ல் சூரி. 30.5.1990, 8.45 காலை, மார்த்தாண்டம்).
சந்திரனுக்கு பத்தில் சூரியன் அமர்ந்து, லக்னத்திற்கு பத்தில் செவ்வாய் இருந்து, சிம்மம் வலுவாகி, தற்போது சூரியதசையும் நடப்பதால் மகளுக்கு உறுதியாக அரசு வேலை கிடைக்கும். கணவனைக் குறிக்கும் ஏழாமிடத்தை குருபகவான் பார்ப்பதால் நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். அதேநேரத்தில் லக்னத்திற்கு எட்டில் சனி, ராகுவும், ராசிக்கு எட்டில் செவ்வாயும் இருப்பதால் 28 வயதிற்குப் பிறகு சூரியதசை குருபுக்தியில் திருமணம் நடக்கும். அதுவே நல்லது.
அவர் எப்போது எனக்கு தாலி கட்டலாம்..?
ஒரு மகள், கடலூர்.
கேள்வி :
எல்லோரும் காதலித்து கல்யாணம் செய்வார்கள் அல்லது வீட்டில் பார்க்கின்ற மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வார்கள். எனக்கு இரண்டுமே நடக்கவில்லை. அவர் மட்டும் என்னை காதலித்தார். நான் இல்லை என்றால் இறந்து விடுவதாக சொன்னார். என்னால் ஒரு உயிர் போய்விடக் கூடாது என்பதற்காக வீட்டைவிட்டு போகும்படியாகிவிட்டது. பிறகுதான் அவர் சொன்னது எல்லாமே பொய் என்று தெரிந்தது. நீ எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்லிவிட்டேன் என்றார். அவர் வீட்டில் எங்களை சேர்த்துக் கொள்ளாமல் நண்பர் வீட்டில் தங்கினோம். அவருடைய அம்மா ஒரு பெரியவரைக் கூட்டிக்கொண்டு வந்தார். பெரியவர் என்னை ஒரு கூழாங்கல்லை எடுத்து வரச்சொல்லி அதைக் கையில் வைத்துக் கொண்டு அருள்வாக்கு சொல்வது போல் எனக்கு தோஷம் இருக்கிறது என்று சொல்லி திரும்பிப் போ என்று சொன்னார். இனிமேல் போக முடியாது என்று மறுத்தேன். என் கழுத்தில் தாலி கட்டினால் அவர் இறந்து போவார் என்றும் அதற்கு பதிலாக நானே ஒரு கருப்புக்கயிறை கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும் என்றும் குழந்தை பிறந்தபிறகுதான் தாலி கட்டவேண்டும் என்றும் சொல்லிவிட்டு பெரியவர் போய்விட்டார். இதெல்லாம் என் மாமியாரின் சதியா? அல்லது என் விதியா என்று தெரியவில்லை. நானும் இதுவரை தாலிகட்டிக் கொள்ளவில்லை. 90 நாள் மட்டும் சந்தோஷமாக இருந்தேன். பிறகு அவரும், அவர் வீட்டாரும் செய்யாத கொடுமைகளே இல்லை. கொடுமை அதிகரித்ததால் வயிற்றில் குழந்தையோடு அம்மா வீட்டிற்கு வந்து விட்டேன். இப்போது வேலைக்கு போகிறேன். வீட்டில் உள்ளவர்கள் வேறு திருமணம் செய்ய வற்புறுத்தியும் நான் சம்மதிக்கவில்லை. நான்கு வருடம் கழித்து என்னை பார்க்க வந்தார். மன்னித்து விடு, திருந்திவிட்டேன் என்று சொல்லி என்னை கூட்டிக்கொண்டு போனார். விடிவுகாலம் வந்து விட்டது என்று சந்தோஷத்துடன் குழந்தையுடன் அவருடன் ஊருக்கு சென்றேன். போனபிறகுதான் அவரது துரோகம் தெரிந்தது. ஒரு பெண் எதை விட்டுக் கொடுக்க முடியாதோ அதை அவர் செய்திருந்தார். தற்கொலை முடிவெடுக்கையில் மகனை நினைத்து அதனை கைவிட்டேன். உடனே திரும்பி தாய்வீட்டுக்கே வந்து விட்டேன். இப்போது மறுபடியும் கூப்பிடுகிறார். எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. எனக்கு அப்பா இல்லை. உங்கள் மகள் போல் நினைத்து என் வாழ்விற்கு ஒரு நல்லமுடிவைச் சொல்லுங்கள். நான் எப்போது சேர்ந்து வாழ போகலாம்? அவர் என் கழுத்தில் எப்போது தாலி கட்டலாம் என்று நேரத்தையும் குறித்து தரவும்.
பதில்:
உன்னுடைய கடிதத்தை பதில் தர நான் தேர்ந்தெடுக்கக் காரணம் இதைப்படிக்கும் ஒரே ஒரு பெண்ணாவது இதுபோன்ற முட்டாள்தனத்தை செய்யக்கூடாது என்பதற்காகத்தான். நீயே குழியை வெட்டி, நீயே உள்ளே போய் உட்கார்ந்து மண்ணைப் போட்டு மூடிக்கொண்டு, இப்போது என்ன செய்வது என்று என்னைக் கேட்கிறாய்..
இதைப் படிக்கும் பெண்ணைப் பெற்றவர்களின் வயிறு பற்றி எரியும் மகளே... நல்லவேளை, உனக்கு ஆண்குழந்தை பிறந்தது.
பக்கம் பக்கமாக நீ எழுதியிருப்பதில் இருந்து உன்னுடைய மனம் முழுவதும் எனக்குப் புரிகிறது. ஆயினும் மீட்கவே முடியாத ஆழத்திற்குப் போய் விட்டாய். தாய், தகப்பன் கரடியாகக் கத்தினாலும் உங்கள் காதில் எதுவும் ஏறுவதில்லை. எல்லாம் முடிந்த பிறகு உன்னைத் திட்டி என்ன பிரயோஜனம்?
இப்போதுகூட நல்ல முடிவைச் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்கும் நீ அடுத்த வரியில் எப்போது சேர்ந்து வாழப் போகலாம், அவர் எப்போது என் கழுத்தில் தாலி கட்டலாம், நேரம் கொடுங்கள் என்று உன் முடிவை எடுத்து விட்டுத்தானே என்னிடம் கேட்கிறாய்?
உன்னுடைய ஜாதகத்தையோ அவருடைய ( நீயும் கணவர் என்று குறிப்பிடாமல் வெறும் அவர் என்றே கடிதத்தில் எழுதியிருப்பதால் நானும் அப்படியே சொல்கிறேன் ) ஜாதகத்தையோ அனுப்பாமல், அல்லது பிறந்தநாள், நேரம் போன்ற விபரங்களைக் கூட அனுப்பாமல் நான் வெறும் துலாம்ராசி என்று மட்டும் குறிப்பிட்டிருப்பதால் என்னால் ஜோதிடரீதியாகவும் உனக்கு ஆலோசனை சொல்ல முடியாது. ஏழுவருடங்களாக நடந்து கொண்டிருக்கும் ஏழரைச் சனியில் உன் புத்தி வேலை செய்யவில்லை என்பது மட்டும் புரிகிறது.
ஆயினும் தாலிகட்ட வேண்டும் என்று ஒரு நல்ல விஷயத்தை நீ கேட்பதால் என்னால் முடிந்த ஒரு சிறிய அறிவுரையாக, பக்கத்தில் இருக்கும் ஒரு அனுபவமுள்ள ஜோதிடரிடம் சென்று உனக்கும், உன் அவரின் ராசிக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளாக குறித்துக் கொடுக்கச் சொல்லி அந்த நல்ல காரியத்தை இந்த முறையாவது இருபக்கத்து உறவினர்கள் முன்னிலையில் வைத்துக் கொள்.