adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 113 (29.11.2016)

. சிவராமன், பண்ருட்டி.

கேள்வி :

எனக்கு ஜாதகம் இல்லாததால் பொருத்தம் பார்க்காமல் எனது திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் என் மனைவியின் குணம் மற்றும் கோபம் மாறவில்லை. பேசும் வார்த்தைகளில் நிதானமும் இல்லை. யாரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுகிறார். குழந்தைகளிடமும் அப்படிதான். குழந்தைகளின் எதிர்காலம் கருதி பொறுமையாக இருக்கிறேன். மனைவி குணம் மாறுவாளா? என் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்குமா?

செவ் குரு
 லக், ராகு ராசி
சுக்
சனி  சந் சூ,பு
பதில் :

(கும்ப லக்னம், துலாம் ராசி. 1-ல் ராகு, 2-ல்செவ், 4-ல் குரு, 7-ல் சுக், 8-ல் சூரி, புத. 11-ல் சனி. 12.10.1988, 3.57 பகல், விழுப்புரம்)

மனைவியின் ஜாதகத்தில் வாக்குஸ்தானமான இரண்டாம் வீட்டில் வக்கிரச் செவ்வாய் அமர்ந்து ராசியை பார்ப்பதால் வார்த்தைகளில் நிதானம் இருக்காது. லக்னத்தில் ராகு அமர்ந்து லக்னம், ராசியை செவ்வாய், சனி பார்த்தால் அவர்கள் மாறுபாடான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உங்கள் மனைவிக்கு இந்த அமைப்பு இருக்கிறது.

கடந்த சில வருடங்களாக மனைவியின் லக்னத்திற்கும், ராசிக்கும் அவயோகியான குருவின் தசை நடப்பதும், ஏழரைச்சனி அவருக்கு நடப்பில் இருப்பதும், மனைவியின் எதிர்பார்ப்புகளை பொய்க்க வைத்து அவரை மன அழுத்தத்துடன் இருக்க வைக்கும். மனைவியின் கோபத்திற்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள்.

இங்கே எந்தக் கணவன் மனைவியும் கட்டிப் பிடித்துக் கொஞ்சிக் கொண்டு இருப்பவர்கள் இல்லை. தொண்ணூறு சதவிகிதம் பேர் குழந்தைகளுக்காக ஒருவரையொருவர் அனுசரித்து வாழ்பவர்கள்தான். அடுத்த வருடம் ஏழரைச்சனி முடிந்த பிறகு மனைவியின் போக்கில் நல்ல மாறுதல்கள் தெரியும். மனைவியின் ஜாதகப்படி ஐந்துக்குடைய புதன் உச்சமாகி, குருவின் பார்வையில் இருப்பதால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

கே. எம். . கோவிந்தன், சென்னை.

கேள்வி :

எழுபது வயதான நான் குடும்பத்தில் உள்ள அனைவராலும் அவமதிக்கப்பட்டு செக்யூரிட்டி வேலை செய்து வருகிறேன். இதிலும் நிரந்தரமாக ஒன்றும் இல்லை. நான்கு, ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு காரணத்தினால் இடம் மாற வேண்டியுள்ளது. தற்போது வேலையின்றி வேறு இடம் தேடிக் கொண்டிருக்கிறேன். சுருள்பாசி என்ற கடல்பாசி தயார் செய்து மார்க்கெட்டில் வியாபாரம் செய்யலாம் என இளையமகன் சொல்கிறான். அதற்கு முயற்சிகள் செய்யலாமா? அல்லது செக்யூரிட்டி வேலைக்கே போகலாமா என்பதை தங்களின் மேன்மைமிகுவாக்கால் கூறும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ராகு சூரி
ராசி  சந்,சு பு,சனி
செவ்
 லக் குரு
பதில் :

(துலாம் லக்னம், கடக ராசி. 8-ல் ராகு, 9-ல் சூரி, 10-ல் சுக், புத, சனி, 11-ல் செவ், 12-ல் குரு. 30.6.1946, 2.30 பகல், திருவண்ணாமலை)

அவயோகர்கள் தசை நடக்கும்போது தேவையற்ற முறையில் நமக்கு பிரச்னைகளைக் கொடுத்து முன்னேற இயலாத தொழில்களில் நம்மை ஈடுபடுத்தி நேரத்தை வீணடிப்பார்கள். உங்களுக்கு துலாம் லக்னமாகி கடந்த ஆறு வருட காலமாக வலுப்பெற்ற பாதகாதிபதி சூரியனின் தசை நடப்பதால் சூரியனின் வீட்டில் அமர்ந்த ராசிக்கு பத்தாம் அதிபதி செவ்வாயின் தொழிலான செக்யூரிட்டி வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் சூரியதசை முடிவதால் அதன் பிறகு நீங்கள் காவலாளி வேலைக்குப் போக மாட்டீர்கள். அடுத்து நடக்க இருக்கும் ஜீவனாதிபதி சந்திரதசையில், சந்திரன் திரவத்தையும், கடலையும் குறிப்பவன் என்பதால் கடல் பாசி வியாபாரம் செய்வீர்கள். அதில் முன்னேற்றமும் உண்டு.

. முருகன், சென்னை -37.

கேள்வி :

இரண்டு வருடங்களுக்கு முன்பு பொருத்தம் பார்க்காமல் உறவினர் மகளை மகனுக்கு திருமணம் செய்து வைத்தேன். கல்யாண நாளில் இருந்தே எந்த உறவும் இல்லாமல் சண்டை, சச்சரவாகவே இருந்து ஒருவருடத்திற்கு முன்பு வேறு ஒருவருடன் ஓடிவிட்டாள். மீண்டும் திருமணம் செய்யலாம் என்று எண்ணுகிறேன். ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவனுக்கு வேலை மாற்றம் ஏதாவது இருக்கிறதா? ஒரே மகன் என்பதால் மூத்த சகோதரிகளுக்கு உதவியாக இருப்பானா? எங்களையும் கவனித்து கொள்வானா?

லக்
ராசி சந், சுக்
குரு சூ,பு செவ்
 சனி, கேது
பதில் :

(ரிஷப லக்னம், கடக ராசி. 3-ல் சுக், 4-ல் சூரி, புத, செவ். 6-ல் சனி, கேது. 9-ல் குரு. 10.9.1985, 11.02 இரவு, சிவகங்கை)

மகனின் ஜாதகப்படி கடுமையான தோஷங்கள் இருப்பதால் முப்பத்தி மூன்று வயதிற்கு முன் திருமணம் செய்தால் இரண்டு திருமணம் என்ற அமைப்பின்படி முதல் திருமணம் நிலைக்கவில்லை. 2018 பிற்பகுதியில் அவருக்கு திருமணம் நடக்கும். இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நீடித்தும் இருக்கும்.

பதினொன்றாம் அதிபதி நீசவக்ரம் பெற்று வலுவான நிலையில் இருப்பதால் இவரது மூத்த சகோதரிகள் இவரைக் கவனித்துக் கொள்ளும் நிலையில் நன்றாக இருப்பார்கள். முதல் திருமணம் ஏற்கனவே தோல்வியடைந்து விட்டதால் பரிகாரங்கள் தேவையில்லை. லக்னம் லக்னாதிபதி நன்றாக அமைந்து சூரிய சந்திரர்கள் ஆட்சிபெற்று அமைந்துள்ளதால் இவரது தாய் தந்தையராகிய நீங்களும் இவர் உங்களை கவனிக்கத் தேவையின்றி கடைசிவரை வலுவாகவே இருப்பீர்கள்.

கோ. பாலாஜி, திருச்சி.

கேள்வி :

சினிமாவில் வசனகர்த்தா மற்றும் கதாசிரியராக விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளேன். திரைத்துறையில் நான் பலவருடங்கள் நிலைத்திருக்கும் யோகம் உள்ளதா? ஜாதகத்தில் எந்தகிரகங்களின் வலிமையைக் கூட்ட வேண்டும்?

சந், புத சூரி சுக்,செவ் கேது
ராசி குரு
சனி
லக்
பதில் :

(விருச்சிக லக்னம். மீன ராசி. 3-ல் சனி. திருக்கணிதப்படி 5-ல் புத. 6-ல் சூரி. 8-ல் சுக், செவ், கேது. 9-ல் குரு. 10.5.1991, இரவு 8 மணி, புதுக்கோட்டை)

எதிர்காலத்தில் தமிழகத்தை தன் எழுத்தால் வசியப்படுத்தப் போகும் ஒரு கலைஞனுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள். லக்னாதிபதி செவ்வாய் சுக்கிரனுடனும், ராகுவுடனும் சம்பந்தப்பட்டதால் உங்களால் திரைத்துறையில் சாதிக்க முடியும். எழுத்தைக் குறிக்கும் மூன்றாமிடத்து அதிபதி சனி ஆட்சி பெற்று, அவரையும் மூன்றாமிடத்தையும் உச்சகுரு பார்ப்பதால் உங்களால் எழுத்துத்துறையில் நீண்டகாலம் நீடிக்க முடியும்.

லக்னாதிபதி செவ்வாய் வர்க்கோத்தமம் பெற்று வலுவான நிலையில், லக்னத்தையும், ராசியையும் உச்சகுரு பார்ப்பதால் உங்களது லட்சியம் நிறைவேறும். எழுத்தின் காரகனான புதன் திருக்கணிதப்படி நீசமாகி, சுய நட்சத்திரத்தில் வர்க்கோத்தமம் பெற்று, சந்திர கேந்திரத்தில் அமர்ந்து அவருக்கு வீடு கொடுத்த குருபகவான் உச்சம் பெற்றதால் முறையான நீசபங்கம் அடைந்துள்ளதால் உங்களால் மக்கள் ரசிக்கும் எழுத்தைத் தர முடியும்.

விருச்சிக லக்னத்திற்கு தடைகளைத் தரும் எட்டுக்குடைய புதன்தசை இன்னும் சில வருடங்களில் முடியப் போவதாலும், அடுத்து மூன்றாமிடத்து சனிபுக்தி ஆரம்பிக்க இருப்பதாலும் எழுத்துத் தொடர்புகள் ஏற்பட்டு சினிமாவில் உங்களால் ஜெயிக்க முடியும். அடுத்து நடக்க இருக்கும் தசாநாதன் கேது சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் புகழ் பெறுவீர்கள்.

எனக்கு பெண் சாபம் இருக்கிறதா..?

ஆர். மோகனரங்கம், வாணியம்பாடி.

கேள்வி :

நினைவு தெரிந்த நாள் முதல் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். நன்றாக உழைக்கிறேன். மனமறிந்து யாருக்கும் எந்த துரோகமும் செய்தது இல்லை. ஒரு சுடுசொல் சொன்னதில்லை. வீட்டில் எல்லா சுபகாரியமும் தள்ளிக் கொண்டே போகிறது. கடுமையாக உழைத்து வாங்கிய சொந்த வீட்டை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. பெண்களுக்கு திருமணம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் வந்து விட்டது. என் ஜாதகத்தைப் பார்க்கும் ஜோதிடர்கள் கடுமையான பித்ருதோஷம் இருக்கிறது என்று சொல்லி ராமேஸ்வரத்தில் தில ஹோமம் செய்யச்சொன்னார்கள் இதுவரை நான்குமுறை செய்து விட்டேன். பிரச்சினைகள் கூடிக்கொண்டுதான் போகிறது. இப்போது ஒரு ஜோதிடர் என் தாத்தா ஒரு பெண்ணின் சாபத்தை வாங்கியதால், என் ஜாதகத்தில் பெண்சாபம் இருப்பதாகவும், அதைத் தீர்ப்பதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார். அப்படி என் ஜாதகத்தில் சாபம் ஏதாவது இருக்கிறதா? பரிகார பூஜையை செய்தால் என்னுடைய பிரச்சினைகள் தீருமா? மாலைமலரில் உங்களுடைய தெளிவான பதில்களையும், விளக்கங்களையும் தொடர்ந்து படிக்கும் நான் உங்கள் மீதுள்ள ஈர்ப்பால் இந்தக்கேள்விக்கு தெளிவான பதிலைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

பதில் :

ஜோதிடம் என்பது சில கணிதச் சமன்பாடுகளையும், அதோடு பொருந்தி வரும் விதிகளையும் தொடர்புபடுத்தி ஒரு மனிதனின் எதிர்காலத்தைக் கூறும் ஒரு விஞ்ஞானக் கலை. இதில் நம்ப முடியாதவைகளுக்கோ, நிரூபிக்க இயலாதவைகளுக்கோ, மூடநம்பிக்கைகளுக்கோ. துளியும் இடமில்லை.

நம்பமுடியாத எதையும் மூலநூல்களில் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் சொல்லவே இல்லை. அவர்கள் செய்ததெல்லாம் உயிர்களின் மேல் கிரகங்களின் தாக்கத்தை அறிந்து, அவற்றை காலத்திற்கும் அழியாத விதிகளாகத் தொகுத்து நமக்குத் தந்ததுதான். ஜோதிடம் என்பது ஒரு முழுமையான கணிதம். இதில் விதிகளின் வழியான கணக்கினால் வரும் கணிப்பு மட்டுமே உண்மையானது. விதிகளை கணக்கிடத் தெரியாதவர்களுக்கு பலன்களைக் கணிக்கவும் தெரியாது.

ஒரு ஜாதகர் ஏன் கஷ்டப்படுகிறார், அவரது கஷ்டத்திற்கு ஜாதகத்தில் உள்ள காரணங்கள் என்ன என்பதைக் கணிக்க இயலாதவர்தான் நம்ப முடியாத சாபங்கள் மீது பழியைப் போடுகிறார். சமீபத்தில் கூட மாலைமலரில் பித்ருதோஷம், காலசர்ப்ப தோஷம் போன்றவைகள் உண்மையில் தோஷங்களே கிடையாது என்பதை தெளிவாக எழுதி இருந்தேன்.

உங்களின் கஷ்டங்களின் காரணத்தை ஜோதிடரீதியாக கணிக்க முடியாத ஜோதிடர் சுலபமாக பழியை செத்துப் போன தாத்தாவின் மேல் தூக்கிப் போட்டு விட்டார். என்னுடைய தாத்தா நூறு வயதில் நல்ல நினைவாற்றலுடன் இன்னும் உயிரோடு இருக்கிறார். அவரிடம் போய் யாரிடம் சாபம் வாங்கினீர்கள் என்று கேட்கட்டுமா? என்றால், இவரில்லை உன் கொள்ளுத் தாத்தா சாபம் வாங்கினார் என்று இதே ஜோதிடர் சொல்வார்.

உங்களுக்கு விருச்சிக லக்னம். கடக ராசியாகி பிறந்ததிலிருந்து இதுவரை சனி புதன் கேது சுக்கிரன் என லக்னத்திற்கும் ராசிக்கும் நன்மைகள் தராத தசைகள் நடந்ததால் வாழ்வின் முற்பகுதியில் கஷ்டங்களை அனுபவித்து பிற்பகுதியில் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும் அமைப்புடைய ஜாதகம் உங்களுடையது.

2018 ஏப்ரல் மாதம் முதல் ஆட்சி பெற்ற சூரிய தசையும், அதனையடுத்து ஆட்சியான சந்திர தசை, அதன்பிறகு வலுப்பெற்ற லக்னாதிபதி தசை நடக்க இருப்பதால் தர்ம கர்மாதிபதியோகம் செயல்பட்டு அந்திம காலம் வரை சந்தோஷமாக குடும்பக் கடமைகளை முடித்து நிம்மதியாக இருப்பீர்கள். கஷ்டங்கள் அனைத்தும் தீரப் போவதால் பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 113 (29.11.2016)

  1. ஜோதிட குருஜீ அவர்களுக்கு தங்களது இலட்சக்கணக்கான பக்தர்களுள் ஒருவனான என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் குருஜீ.

    தஙகளின் ‘பாபக்கிரகங்களின் சூட்சம வலு தியரிகளும்’, ‘குருபகவானை ஏன் சுபக்கிரகம்,சனியை ஏன் பாபக் கிரகம்’ போன்ற தங்களின் ஆய்வுகட்டுரைகள் தங்களது புகழை ஜோதிடம் என்னும் தெய்வீக கலை உள்ளவரை பறைசாற்றிக்கொண்டே இருக்கும் ஐயா.

    தங்களது பதிவுகளை படித்தறிந்தவன் என்ற முறையில் தாங்கள் இதுபோல மேலும் பல ஆய்வுகட்டுரைகளை எழுதி என்னைப்போன்ற அடியவர்களுக்கு விளக்கி தாங்கள் மேன்மேலும் புகழ்பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஐயா.

    தங்களது அறிமுகம் முகநூல் வழியாக கிடைக்கப்பெற்று தங்களது பதிவுகளை தவறாது படித்துவரும் இந்த அடியவனின் ஆசையெல்லாம் என் அப்பன் ஆகியாகிய இறைவன் எனக்கு விதித்தவற்றை இந்த ஆசானின் வார்த்தைகள் வழியாக கேட்டறிந்து தெளிவுற ஆசைப்படுகிறேன்.

    தங்களுக்காகவே மாலை மலர் படிக்க ஆரம்பித்த ஆயிரக்கணக்கானவர்களுள் யாமும் ஒருவன் ஐயா.

    மாலை மலர் வழியாக கடிதம் எழுதி ஐயம் தெளிவுற முயற்சிக்கும் போது தான் தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மாலை மலர் விலாசத்தையும், கேட்க வேண்டிய வழிமுறைகளையும் தங்களது வாயிலாகவே அறிந்து கொண்டால் அது தாங்கள் எனக்கு அளித்த அனுமதி என ஏற்றுக்கொண்டு முயற்சி செய்வேன் ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *