தீபா முரளி, சென்னை – 12.
கேள்வி :
பிளஸ் டூ படிக்கும் எனது இரண்டாவது மகளுக்கு டாக்டர் படிக்க வேண்டும் என்று ஆசை. நான் இந்த படிப்பு விஷயத்திற்காக இரண்டு பேரை நம்பி இருக்கிறேன். ஒருவர் வெளி ஆள். இன்னொருவர் சொந்தக்காரர் இவங்க எங்களுக்கு உதவுவாங்களா? என் மகள் இந்த டாக்டர் படிப்பை படிக்க முடியுமா ?
பு, குரு | ல,சூ சனி | சந்,சு | |
ராசி | |||
கே | |||
செவ் |
பதில்:
(மேஷலக்னம், ரிஷபராசி. லக்னத்தில் சூரி, சனி. இரண்டில் சுக். ஏழில் செவ். பத்தில் கேது. பனிரெண்டில் புத, குரு.)
லக்னாதிபதி செவ்வாய் ஏழில் அமர்ந்து லக்னத்தையும் பத்தாமிடத்தையும் பார்த்து, பத்தில் மருத்துவக் கிரகமான கேது அமர்ந்து சூரியன் உச்சம் குரு ஆட்சி என்ற ஜாதக அமைப்பு கொண்ட உங்கள் பெண் நிச்சயமாக மருத்துவர் ஆவார். நவாம்சத்தில் செவ்வாய் உச்சம் பெற்றதும் செவ்வாய் தசை தற்போது நடந்து கொண்டிருப்பதும் இதை உறுதி செய்யும் அமைப்புக்கள்.
ம. கருப்பையா, விருதுநகர்.
கேள்வி :
தங்களின் குறுகியகால புது விசிறி நான். மூத்த பையன் பொறியியல் படிப்பை (இயந்திரவியல்) நிறைவுசெய்து ஒரு சிறு தொழிற்சாலையில் பயிற்சியாளராய் தற்போது சென்று கொண்டிருக்கிறார். அவரது எதிர்காலம் எப்படி? அரசுத் துறையில் வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்ல இறைவனின் அருள் உண்டா? என்பதினை அறிய அவாக்கொள்கிறேன்.
பதில்:
மகனுக்கு கன்னி லக்னமாகி நான்காம் வீட்டில் ராகுபகவான் எட்டுக்குடைய செவ்வாயுடன் இணைந்து பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்த குருவின் பார்வையைப் பெற்று தற்போது தசை நடத்துவதால் நடக்கும் குரு புக்தியிலேயே வெளிநாடு செல்வார். அதற்குரிய முயற்சிகளைச் செய்யவும். சுக்கிரனும் புதனும் இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதாலும் இவர்கள் இருவரும் பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ளுவதாலும் எதிர்காலத்தில் மிகவும் யோகமான வாழ்க்கை வாழ்வார்.
நா. சரஸ்வதி, நாமக்கல்.
கேள்வி :
எம். இ. படித்த மகனுக்கு சரியான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைக்கு சென்று கொண்டிருக்கிறான். அரசு வேலைக்கு தேர்வு எழுதுகிறான். வெற்றி கிடைக்குமா? தற்போது திருமணம் செய்யலாமா? தாரதோஷம் உள்ளதா? எந்த வயதில் திருமணம் செய்யலாம். எதிர்காலம் எப்படி இருக்கும்?
சந், குரு | |||
ராசி | |||
ல,ரா | |||
சனி | சுக் | சூ | பு. செவ் |
பதில்:
(மகரலக்னம், மிதுனராசி. லக்னத்தில் ராகு. ஆறில் குரு. ஒன்பதில் புத, செவ். பத்தில் சூரி. பதினொன்றில் சுக். பனிரெண்டில் சனி.)
மகன் ஜாதகத்தில் பத்தாமிடத்தில் சூரியன் நீசமானாலும் வர்க்கோத்தமம் அடைந்து திக்பலத்துடன் குருபார்வை பெற்றுள்ளதாலும் சிம்மம் கெடாததாலும் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும். நன்றாகப் படித்து தேர்வு எழுத சொல்லவும். தற்போது சனிதசையில் சுக்கிரபுக்தி நடப்பதால் அடுத்த வருடம் பிற்பகுதியில் திருமணம் நடைபெறும். சர்ப்பதோஷம் மட்டுமே உள்ளது. வேறு தோஷங்கள் இல்லை. எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும்.
எம். மீனாட்சி, பெரம்பூர்.
கேள்வி :
ஏழு வருடங்களாக கணவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். கடினமாகப் படித்தும் வேலை அமையவில்லை. அவரது ஜாதகப்படி அரசு வேலை அமையுமா?
பதில்:
ஜாதகப்படி நீங்கள் குறிப்பிட்ட சிம்மலக்னத்திற்கு பதில், கன்னிலக்னம் வருவதால் கணவரின் பிறந்த ஊரைக் குறிப்பிட்டு மறுபடியும் அனுப்பவும்.
சி. எம். பிரகாஷ், கவுந்தப்பாடி.
கேள்வி:
40 வயதாகிவிட்டது. திருமணமாக தடை ஏற்பட்டுள்ளது. பரிகாரமும் செய்துள்ளேன். திருமணம் யோகம் உள்ளதா? தடைக்கான காரணம் என்ன ? அடுத்து வரும் தசா புக்திகள் எவ்வாறு உள்ளது .
பதில்:
விருச்சிகலக்னம், மிதுனராசியாகி லக்னத்திற்கு ஏழில் செவ்வாய், கேது இணைந்தும் ராசிக்கு இரண்டில் சனியும் இருப்பதால் இதுவரை திருமணம் ஆகவில்லை. லக்னத்திற்கு இரண்டாம் வீட்டையும் ராசிக்கு ஏழாம் வீட்டையும் செவ்வாய் பார்ப்பதும் குற்றம். மேலும் குருபகவான் ஆறில் மறைந்து புத்திர தோஷம். ஏற்பட்டுள்ளதாலும் திருமணத்திற்குத் தடை ஏற்பட்டுள்ளது.
விருச்சிக லக்னத்திற்கு புதன்தசை வரக்கூடாது என்பதை அடிக்கடி எழுதுகிறேன். உங்களுக்கு சரியான பருவத்தில் எட்டுக்குடைய உச்சம் பெற்ற புதன்தசை ஆரம்பித்ததாலும் திருமண பாக்கியம் கிடைக்கவில்லை. பரிகாரங்களைச் செய்திருப்பதாக நீங்கள் சொன்னாலும் முறையான பரிகாரங்களைச் செய்திருக்க வாய்ப்பில்லை. ஶ்ரீகாளகஸ்தியில் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு தங்கி அதிகாலையில் ருத்திராபிஷேகம் செய்யுங்கள். புதன்தசை முடியப் போவதால் அடுத்த வருடப் பிற்பகுதியில் கண்டிப்பாகத் திருமணம் நடக்கும்.
செவ்வாய் தோஷம் பெரிய தோஷமா?
சி. சோமசுந்தரம், திருக்கனூர்.
கேள்வி :
மாலைமலரில் தங்களின் ஜோதிடப் பகுதிகளை தவறாமல் படித்து வருகிறேன். 28 வயதாகும் மகளுக்கு திருமணம் நடக்கவில்லை. பெண்பார்க்க வருபவர்கள் எல்லாம் பெண்ணிற்கு செவ்வாய்தோஷம் என்று சொல்லிச் சென்று விடுகிறார்கள். செவ்வாய்தோஷம் பெரும் தோஷமா? அதை எங்கே சென்று தீர்க்க முடியும் என்று தயவு செய்து சொல்லுங்கள். நாங்கள் அங்கு சென்று தாங்கள் சொல்கிறபடி செய்கிறோம். எங்களுக்குஒரு நல்ல வழி காட்டுங்கள்.
பதில்:
செவ்வாய்தோஷம் என்பது பெரியதோஷம் அல்ல. அனுபவக்குறைவான ஜோதிடர்களால் மிகைப்படுத்திச் சொல்லப்படுவதுதான் இந்த தோஷம் என்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இரண்டு, ஏழு, எட்டாமிடங்களில் செவ்வாயோடு சனி, ராகு ஆகிய பாபக்கிரகங்களும் தொடர்பு கொண்டால்தான் அது மிகப்பெரிய தோஷமாக மாறும்.
இந்த தோஷம் தாமததிருமணத்தை மட்டுமே உண்டு பண்ணும். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் மகளின் பிறந்தநாளை மட்டுமே எழுதி பிறந்த நேரம், இடம் ஆகியவற்றை நீங்கள் குறிப்பிடாததால் உங்கள் பெண்ணிற்கு செவ்வாய்தோஷம் இருக்கிறதா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை.
ஆர். பூமாதேவி, தூத்துக்குடி.
கேள்வி:
நானும் என் கணவரும் பத்து வருடங்களாக தனித்தனியாக கூல்டிரிங்ஸ் கடையும் பெட்டிக்கடையும் வைத்து நடத்தி வருகிறோம். தொடர்ந்து நஷ்டம்தான். லாபம் பெற வழி இருக்கிறதா? அல்லது வேறு தொழில் தொடங்கலாமா? என் பெயரில் இருக்கும் மனையில் வீடு கட்டலாமா?
பதில்:
நீங்கள் அனுப்பியிருக்கும் ராசி நட்சத்திரம் மட்டும் வைத்து பலன் சொல்ல நான் அருள்வாக்கு சொல்பவன் இல்லையம்மா. பிறந்த தேதி நேரம் இடம் விபரங்களை அனுப்புங்கள். பதில் தருகிறேன்.
வயதான காலத்தில் மருமகள்கள் தொல்லை கொடுக்காமல் இருப்பார்களா ?
என். கண்ணன், மதுராந்தகம்.
கேள்வி:
83 வயதில் ரொம்பவும் கஷ்டப்படுகிறேன். பிள்ளைகள் மூவருக்கும் பாகம் பிரித்து கொடுத்து இரண்டு வருடமாகிறது. எனக்காக எந்த சொத்தும் வைத்துக் கொள்ளவில்லை. எல்லாவற்றையும் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டேன். அதனால் தானோ என்னவோ மருமகள்கள் தொல்லை கொடுக்கிறார்கள். என் பிள்ளைகளும் மனைவிகள் பேச்சைத்தான் கேட்கிறார்கள். இரண்டாவது மருமகள் பரவாயில்லை. என்னுடைய ஜாதகத்தை ஆராய்ந்து என் எதிர்காலத்தை விளக்கும் படியும் தற்போது என்ன தசாபுக்தி நடக்கிறது என்பதைச் சொல்லும்படியும் வணக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
83 வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் தாங்கள் என்னை ஆசீர்வதிக்கக் கோரி பணிந்து வணங்குகிறேன்.
கடகலக்னம், கும்பராசியாகி பவுர்ணமி யோகத்திற்கு அருகில் பிறந்து, லக்னாதிபதி சந்திரனைச் சுக்கிரன் பார்த்து, ஆயுள்காரகன் சனிபகவான் ஆட்சி பெற்றதால் தீர்க்காயுள் யோகம் கொண்ட ஜாதகம் உங்களுடையது. தற்போது உங்களுக்கு பாதகாதிபதி சுக்கிரதசையில் செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருக்கிறது. வருகின்ற ஆவணி மாதம் முதல் எட்டில் லக்னாதிபதியுடன் இணைந்த ராகுபுக்தி ஆரம்பமாகும். தசாநாதன் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் கேதுவுடன் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி உங்களுக்கு மனக்குறை இருக்கத்தான் செய்யும்.
நாமும் ஒருநாள் வயதானவர் ஆவோம் என்பதை இளையவர்கள் பருவத்தில் உணர்வதில்லை. அதுபோல எண்பது வயது தாண்டிய ஒரு அனுபவ அறிவுப் பொக்கிஷம் நமது வீட்டில் இருக்கிறது என்பதையும் அவர்கள் அந்தத் தந்தை உயிரோடிருக்கும் வரை அறிவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை வயதானவன் ஒரு சுமை. எப்போதும் “நொய் நொய்” என்று தொணதொணத்துக் கொண்டிருக்கும் ஒரு தேவையற்ற ஜீவன்.
வயது முதிரமுதிர ஒரு மனிதன் உடலாலும் மனதாலும் குழந்தை போல ஆகிறான். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லும் நமது கலாசாரத்தில் குழந்தைகளுக்குத் தரும் அன்பையும் ஆதரவையும் வயதானவர்களுக்கு நாம் கொடுப்பதில்லை. வீட்டில் மதிப்புக் குறைகிறது என்று தோன்றியதுமே அதுவரை குடும்பத்தலைவனாக இருந்தவன் இறுகிப் போகிறான். சகிப்புத்தன்மையும் அப்போது குறைந்து தன்னையே ஒரு தனித்தீவாக்கிக் கொள்கிறான். இதில் மனைவியை முன்னே வழியனுப்பியவனின் பாடு இன்னும் சொல்ல முடியாதது.
தகப்பனைத் திண்ணையில் உட்கார வைத்து அலுமினியத் தட்டில் சாப்பாடு கொடுத்தவனுக்கு “தட்டைப் பத்திரமாக வை தாத்தா.... என் அப்பாவிற்குத் தேவைப்படும்” என்று பேரன் சொன்ன கதைதான் என் நினைவுக்கு வருகிறது. அனைத்தையும் செவ்வனே அனுபவித்து இறையுடன் கலக்கக் காத்திருக்கும் தங்களுக்கு இனிமேல் எதிர்காலம் பற்றிச் சொல்ல ஜோதிடத்தில் என்ன இருக்கிறது? ஆவணி மாதம் தொடங்க இருக்கும் ராகுபுக்தியில் உங்களின் எதிர்காலம் என்ன என்பதைச் சூசகமாகச் சொல்லி விட்டேன்.