ஒரு வாசகர். கடலூர்.
கேள்வி :
நான் மிகவும் இளகியமனம் கொண்டவன். ஒரு மாட்டையோ, நாயையோயாராவது அடித்தால் கூட என் மனம் பொறுக்காது. கடுகளவும் தீயபழக்கம் இல்லை. சிறுவயதில் இருந்தே கஷ்டப்படுகிறேன். இரண்டு முறை திருமணம் நடந்தும் மனைவியின் நடவடிக்கை சரியில்லாததால் விவாகரத்தாகிவிட்டது. உடல்நிலை சரியில்லாத தாய்க்கு துணி துவைத்து போடுவது, டாய்லட்டுக்கு தூக்கிசெல்வது, குளிப்பாட்டுவது, சோறூட்டுவது, நகம் வெட்டி, காது அழுக்குகூட பார்த்தேன். சில மாதங்களுக்கு முன் எனக்கென்று இருந்த ஒரே ஜீவனான என் தாய் இறந்த பிறகு இன்று வரை அழாத நாள் இல்லை. அனாதையாக நிற்கிறேன். என் வாழ்க்கையில் மீண்டும் திருமணம் உண்டா? நல்ல காலம் பிறக்குமா? சில ஜோதிடர்கள் நான் மகானாகிவிடுவேன் என்று சொல்கிறார்கள். இது உண்மையா? வீடு, வாசல், இடம் எல்லாவற்றையும் விற்றுவிட்டு பாதியை ஏழைகளுக்கு தர்மம் செய்து விட்டு மீதியை கோவில் கட்ட கொடுத்து விட்டு துறவியாகி விடலாமா? என் தாயார் திருமணம் செய்து கொள்ள சொல்ல கட்டளை இட்டு இருக்கிறார்கள். 2005-ல் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க மிகப்பெரிய வாய்ப்பு வந்தது. பிரபல ஜோதிடர்கள் தற்போது இந்தவாய்ப்பு வேண்டாம். இதனால் உயிருக்கு ஆபத்து என்பதால் வாய்ப்பை வேண்டாம் என்று தேர்ந்தெடுத்த டைரக்டரிடம் சில நாள் போகட்டும் என்று சொல்லிவிட்டேன். இப்போது முயற்சி செய்தால் சினிமாவில் நடிக்க முடியுமா?
சுக்,சனி ரா | சந் | ||
சூ | ராசி | ||
புத | |||
செவ் | குரு |
பதில் :
(கடக லக்னம் ரிஷபராசி 3ல் குரு, 5 ல் செவ், 7 ல் புத, 8 ல் சூரி, 9ல் சுக் சனி ராகு 25-2-1969 3.25 பகல் கடலூர்)
கடக லக்னமாகி சந்திரன் உச்சம் பெற்று லக்னாதிபதியை குருவும் பார்த்த யோக ஜாதகம். ஆனால் சந்திரனை வலுப்பெற்ற சனியும் செவ்வாயும் பார்த்ததால் வலுவிழந்து அனைத்து நல்ல வாய்ப்புகளையும் தானே வீணடிக்கும் அமைப்பு உங்கள் ஜாதகத்தில் உள்ளது.
நான்கிற்கு அதிபதியான சுக்கிரனும், மாதாகாரகன் சந்திரனும் உச்சமானதால் தாயார் மேல் அபரிமிதமான அன்பும் பக்தியும் இருந்திருக்கும். பொதுவாக கடக ரிஷப ராசிக்காரர்களுக்கு அம்மாவின் மேல் அதிகமான பாசம் இருக்கும். தற்போது எட்டுக்குடைய சனி தசையும் நடப்பதால் வழக்கமான நடைமுறை வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு நடக்கக் கூடிய எதுவும் உங்களுக்கு நடக்க வாய்ப்பில்லை.
ஏழுக்குடையவன் வலுவிழந்து பதினொன்றுக்குடையவன் வலுவானால் இரண்டு திருமணம் என்பது பொதுவிதி. அதன்படி உங்களுக்கு இரண்டு திருமணங்கள் நடந்தாலும் குடும்பாதிபதி சூரியனும், களத்திர ஸ்தானாதிபதியும் கெட்டு, குருவும் சுக்கிரனும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதால் இனிமேல் உங்களுக்கு திருமண வாய்ப்பு இல்லை.
குருவும் சனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதோடு இருவருமே லக்னாதிபதியையும் பார்ப்பதால் உங்களுக்கு இல்லற வாழ்க்கையை விட ஆன்மீக எண்ணங்களே அதிகமாக இருக்கும். சனி தசையும் நடப்பதால் சந்நியாசி வாழ்க்கைதான் உங்களுக்கு. தற்போது சுக்கிர புக்தி நடப்பதால் சினிமாத்துறை பற்றிய எண்ணங்களும் ஆர்வமும் இருக்கும். அஷ்டமாதிபதி தசை எதுவும் சரி வராது,
ஜெ. கோமதி, புதுவை – 4.
கேள்வி :
என் மகனுக்கு 34 வயதாகியும் திருமணம் கூடி வரவில்லை. சமீபத்தில்தான் மாலைமலரில் உங்களுடைய ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகளை படித்து வருகிறேன். கொஞ்சம் மெனக்கெட்டால் துல்லியமாகச் சொல்லி விடலாம் என்று தாங்கள் சொல்லுவது என் மனதை ஆறுதல் படுத்துகிறது. மகனுக்கு எப்போது திருமணம் ஆகும் என்பதை தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
சுக், புத | சூ,ரா | ||
ராசி | |||
சந், குரு | ல,சனி செவ் |
பதில் :
(கன்னிலக்னம், துலாம் ராசி லக்னத்தில் சனி, செவ், இரண்டில் குரு, திருக்கணிதப்படி ஒன்பதில் சுக், புத, பத்தில் சூரி ராகு 30-6-1982 காலை 11.55 பாண்டி)
மகனுக்கு லக்னத்தில் சனி செவ்வாய் இணைந்திருப்பது தாமத திருமண அமைப்பு. அதேநேரத்தில் திருக்கணிதப்படி லக்னாதிபதி புதனும் சுக்கிரனும் பழுதின்றி ஒன்பதாமிடத்தில் இணைந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகம். இது போன்ற ஜாதகங்களுக்கு 33 வயதிற்குப் பிறகுதான் திருமணம் நடைபெறும்.
அடுத்தவருடம் ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியின் புக்தி நடைபெற இருக்கிறது. அப்போதுதான் தாம்பத்திய சுகம் கிடைக்கும். எனவே 2017 ஆவணிக்குப் பிறகு தை மாதத்திற்குள் திருமணம் நடைபெறும். ஒன்பதாமிடத்தில் சுபத்துவமாக தர்மகர்மாதிபதி யோகம் அமைந்து வாழ்வின் நடுப்பகுதிக்குப் பிறகு புதன் சுக்கிர தசைகள் உங்கள் மகனுக்கு நடைபெற இருப்பதால் எதிர்காலத்தில் பிரமாதமாக இருப்பார்.
என். ரமணன், நாகர்கோவில்.
கேள்வி :
இதுவரை எந்த தொழில் முன்னேற்றமும் இல்லை. எப்போது முன்னேறுவேன்? திருமணம் எப்போது. எப்படிப்பட்ட மனைவி அமைவாள்? சொந்த வீடு எப்போது? வியாழன் தசை, சனிதசைகள் எப்படி இருக்கும்?
குரு, ராகு | சந் | ||
ராசி | லக் | ||
சுக், சனி | சூ,பு | செவ் |
பதில் :
(கடக லக்னம் ரிஷப ராசி மூன்றில் செவ் நான்கில் சூரி, புத ஐந்தில் சுக், சனி ஒன்பதில் குரு ராகு 7-11-1987 அதிகாலை 0.35 நாகர்கோவில் )
லக்னாதிபதி உச்சம் பெற்று, குருவும் செவ்வாயும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு தர்மகர்மாதிபதி யோகமும் அமைந்து லக்னத்தைக் குரு பார்ப்பதால் எதிர்காலம் கவலைப்படும்படி இருக்காது. நடக்கும் ராகுதசையின் பிற்பகுதி யோகம் செய்யும். ராசிக்கு ஏழில் சனி இருப்பதால் முப்பது வயதிற்குப் பிறகுதான் திருமணம் நடக்கும். தாமத திருமணம் நல்ல மனைவி என்ற நிலை இருக்கும்.
குருவும் சனியும் கடக லக்னத்திற்கு ஆறு எட்டுக்குடையவர்கள் என்றாலும் அவர்கள் தங்களின் கெட்ட ஆதிபத்திய வீடுகளைத் தொடர்பு கொள்ளாமல் ஒன்பது ஏழாமிடங்களைத் தொடர்பு கொள்வதால் அவர்களின் தசைகள் உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும்.
மகன் எப்போது திருந்துவான்..?
எஸ். எம், கூடுவாஞ்சேரி.
கேள்வி :
எனக்கு மாலைமலர் படிக்கும் பழக்கம் இல்லை. எங்கள் ஊர் நந்தீஸ்வரன் கோவிலில் அமர்ந்து கண்ணீர் மல்க இறைவனிடம் என் குறையைக் கூறும் போது ஒரு பெண்மணி மாலைமலர் இதழைக்கையில் கொடுத்து இதற்கு தீர்வு குருஜிதான் தர வேண்டும், எழுதி அனுப்பு என்றார். அந்த ஈசனே இட்ட ஆணையாக ஏற்று எழுதுகிறேன். தலைமை ஆசிரியையாக இருக்கிறேன். இளையவன் பி. டி. எஸ். படிக்கிறான். வாத்தியார் பிள்ளை மக்கு என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே சம்பாதிக்கும் அனைத்தையும் அவன் ஒருவனுக்கே செலவழிக்கிறோம். ஐந்து வருடப்படிப்பை ஏழுவருடங்களாக படிக்கிறான். ஒரு தாயாய் இவனால் நான் படும் அசிங்கம் கொஞ்சமல்ல. அவனிடம் இல்லாத தீயபழக்கங்களே இல்லை. ஒருவருடமாக கல்லூரிக்குப் போவதாகச் சொல்லிவிட்டு நள்ளிரவு முழுபோதையில் வருகிறான். கல்லூரிக்கும் போவதில்லை. எங்கேm போகிறான் என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பதிலில்லை. வேற்று மதத்து பெண்ணைக் காதலிக்கிறான். அந்தப் பெண்ணோ அப்பா, அம்மா கொடுக்கிற படிப்பு உனக்குத் தேவையில்லை. எங்கள் மதத்திற்கு வா உனக்கு நான் வழிகாட்டுகிறேன் என்று சொல்கிறாளாம். அதனால்தான் அவன் படிக்கவில்லையா? கல்லூரிக்கு போக வேண்டாம் என்றாலும் விடமாட்டேன் என்று சொல்லி ஆயிரம் சத்தியம் செய்கிறான். பெற்ற மகன் மதம் தாண்டி காதல் வயப்பட்டு போதைக்கு அடிமையாகியுள்ள நிலையில் அவனை வேவு பார்க்கக் கூட முடியாமல் நடைபிணமாக வாழ்கிறேன். தீவிரவாதியாக மாறிவிட்டானோ என்ற பயம் கூடஇருக்கிறது. ஐயனே.. இவன் திருந்துவானா? டாக்டர் ஆவானா? திருமணவாழ்க்கை எவ்வாறு அமையும்? படிப்பை நிறுத்திவிட்டு வெளிநாட்டிற்குஅனுப்பலாமா? எதிர்காலம் என்ன?
சந் | லக் | ||
சூ,சனி சுக்,பு | ராசி | ||
செவ் | |||
ரா | குரு |
பதில் :
(ரிஷப லக்னம் மீனராசி ஆறில் குரு, ஏழில் ராகு, ஒன்பதில் செவ், பத்தில் சூரி, புத, சுக், சனி, 14-2-1994 பகல் 1.00 மணி சென்னை)
கவலைப்பட வேண்டாம் அம்மா. கடவுள் ஒருபோதும் உங்களையும் உங்கள் மகனையும் கைவிட மாட்டார். நடப்பவை அனைத்தும் நமது பூர்வ ஜென்ம கர்ம வினைகளின்படியே நடக்கிறது என்றுதான் வேதஜோதிடம் சொல்லுகிறது. மனமுருக பரம்பொருளைப் பிரார்த்திப்பதன் மூலம் அனைத்தையும் மாற்றிக் கொள்ளலாம்.
ஒருவரின் குடிப்பழக்கத்திற்கு சனியே காரணம். லக்னாதிபதி சூட்சுமவலுப் பெறாத சனியுடன் தொடர்பு கொண்டால் ஜாதகர் குடிக்கு அடிமையாவார் என்பது ஜோதிட விதி. மகனின் மீனராசிக்கு அஷ்டமச் சனி நடந்தபோது அவர் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி இருப்பார். உங்கள் மகனின் ஜாதகத்தில் சனியும் சுக்கிரனும் ஒரே டிகிரியில் இணைந்திருக்கிறார்கள். லக்னத்திற்கோ ராசிக்கோ சுபர் பார்வையில்லாததால் மனக்கட்டுப்பாடும் அவருக்கு இருக்காது.
இருந்தாலும் இந்த நிலைமை இன்னும் சில வருடங்கள் மட்டும்தான் நீடிக்கும். குறிப்பாக அவரது இருபத்தியெட்டு வயதுவரை நடக்கும். லக்னத்தில் உள்ள கேதுவின் தசை அவருக்கு நன்மைகளைச் செய்யாது. ராகுகேதுக்களின் தசை நடக்கும்போது ஒருவருக்கு வேற்றுமத தொடர்புகள் ஏற்படும் என்பதன்படி உங்கள் மகன் இன்னொரு மதப் பெண்ணை விரும்புகிறார். ஏழில் ராகு இருப்பதும் இதற்குக் காரணம்.
ரிஷப லக்னத்தின் சுபர்களான சுக்கிரன் புதன் சனி ஆகிய மூவருமே ராகுவின் நட்சத்திரத்தில் இருப்பதும், அந்த ராகு சுபத்துவமில்லாத விருச்சிக ராகுவாக இருப்பதும் குற்றம். இந்த அமைப்பை விலக்க காளத்திநாதன் ஒருவரால் மட்டுமே முடியும். மகனை ஜென்மநட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஸ்ரீகாளஹஸ்திக்கு அழைத்துச் சென்று தங்கி மறுநாள் அதிகாலை ருத்ராபிஷேகப் பூஜையில் கலந்து கொள்ளச் செய்யுங்கள். கேதுதசை நடப்பதால் ஒரு செவ்வாய்க் கிழமையன்று காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோவிலுக்கும் சென்று வழிபடுங்கள்.
தாய், தந்தையின் அன்பு உரியபருவத்தில் கிடைக்காத குழந்தைகள்தான் இது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். யோசித்துப் பார்த்தீர்களேயானால் தவறு உங்கள் பக்கமும் இருக்கும். மகனிடம் அன்பு செலுத்தாமல், அவனிடம் அக்கறை எடுத்துக் கொள்ள நேரம் இல்லாமல் தாயும் தந்தையும் ஓடி ஓடி உழைத்து அவர்களுக்கு வீட்டையும் சொத்தையும் சேர்த்து வைத்து என்ன பிரயோஜனம்?
பெற்றவர்கள் இருவரும் வேலை வேலை என்று அலையும் நிலையில் வீட்டில் அன்பற்ற சூழ்நிலையில் வளரும் குழந்தைகள்தான் வெளியிடங்களில் தாய்க்கு நிகரான அன்பு போல ஒன்று கிடைக்கும்போது இதுபோன்ற நிலைக்கு ஆளாகின்றன. இனிமேலாவது மகனுக்கு உங்களின் அன்பு முழுவதுமாக கிடைக்க வழி செய்யுங்கள். அன்புக்கு நிகரான சக்தி இவ்வுலகில் எதுவும் இல்லை.
மகனின் ஜாதகப்படி செவ்வாய் உச்சமாக இருப்பதால் அவர் நிச்சயமாக மருத்துவப் படிப்பை முடிப்பார். ஆனால் தாமதமாகும். எட்டு பனிரெண்டுக்குடையவர்கள் இருவருமே வெளிநாட்டைக் குறிக்கும் பனிரெண்டாம் இடத்தைப் பார்ப்பதால் வெளிநாட்டிற்குச் செல்ல முடியும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். திருமணத்திற்கு அவசரப்பட வேண்டாம். கேதுதசை முடிந்ததும் இப்போது அவர் காதலிக்கும் பெண் அவரை விட்டு விலகுவார். கவலை வேண்டாம். இருபத்தியெட்டு வயதிற்கு மேல் லக்னாதிபதி சுக்கிரனின் தசை நடக்க உள்ளதால் மகனின் எதிர்காலம் கவலைப்படும் படி இருக்காது. லக்னாதிபதி சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள்.