சுகந்தி சண்முகம், தஞ்சாவூர் - 2.
கேள்வி :
என் பிள்ளை நன்றாகப்படிக்கவில்லை. எல்லா பாடத்திலும் 10,8 என்றுதான் மார்க் வாங்குகிறான். எங்கள் சொல்லைக் கேட்பது இல்லை. அதிகமாக கோபப்படுகிறான். எதிர்த்துப் பேசுகிறான். ஸ்கூலில் டிசியை வாங்கிகொண்டு சென்று விடுங்கள் என்று சொல்கிறார்கள். என் மகன் படிப்பானா? என்ன தொழில் செய்வான்?
பதில் :
நீங்கள் அனுப்பியுள்ள 2.9.2004, காலை 9.55-ன்படி உங்கள் மகனுக்கு உத்திரம் நட்சத்திரம், சிம்மராசி என்பது ஒத்து வரவில்லை. மேலும் உங்களுக்கும் இன்னொரு மகளுக்கும் மேஷராசியாகி அஷ்டமச்சனி நடப்பதாலும், உங்கள் கணவருக்கு ஏழரைச்சனி நடப்பில் உள்ளதாலும் இன்னும் ஒரு வருடத்திற்கு நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் உங்கள் விருப்பப்படி நடக்காது. அதனை நிரூபிக்கத்தான் மகனின் பிறந்தநாள் விபரங்களைக் கூட தவறாக எழுதி அனுப்பிருக்கிறீர்கள்.
எம். அபிராமி, நாகர்கோவில்.
கேள்வி :
குருஜி அவர்களுக்கு வணக்கம். எங்களுக்கு குழந்தை இல்லை. எனக்கு கர்ப்பப்பையில் நீர்கட்டி பிரச்சினையும், கணவருக்கு விந்து குறைபாடு பிரச்னையும் உள்ளது. தற்போது இருவரும் மருந்து எடுத்து வருகிறோம். எங்களுக்கு குழந்தை கிடைக்குமா? எவ்வளவு காலத்தில் கிடைக்கும்? ஏதேனும் பரிகாரம் உண்டா?
பதில் :
குழந்தை பற்றிய கேள்விகளுக்கு கணவன்-மனைவி இருவரின் பிறந்தநாள், நேரம், இடம் பற்றிய விவரங்கள் இருந்தால் மட்டுமே துல்லியமான பதில் சொல்ல முடியும். நீ அனுப்பி உள்ள கணவரின் ஜாதக முதல் பக்கத்தில் இவை எதுவும் இல்லை. ஆயினும் புத்திரக் காரகனான குருபகவான் கணவரின் ஜாதகத்தில் நீசமாகி, ராசிக்கு ஐந்தில் உச்ச சனி இருப்பது கடுமையான புத்திர தோஷம்.
உன்னுடைய ஜாதகத்திலும் ஐந்தாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்து, வலுப் பெற்ற சனி ஐந்தாமிடத்தை பார்ப்பதும், ராசிக்கு ஐந்தாமிடத்தில் கேது இருப்பதும் குற்றம். ஆயினும் உனக்கு 21 வயதுதான் ஆகிறது. ஜாதகப்படி உனக்கு கண்டிப்பாக குழந்தை உண்டு. கணவரின் ஜாதகம் தெளிவாக இல்லாததால் எப்போது பிறக்கும் என்பதைச் சொல்ல முடியவில்லை. உனது ஜாதகப்படி 2018-க்கு பிறகு உறுதியாக தாயாவாய். குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை இருவரும் செய்து கொள்ளுங்கள்.
டி. நாச்சியார் அம்மாள், திருநெல்வேலி.
கேள்வி :
என் மகளுக்கு தனுசு லக்னம் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் விருச்சிக லக்னம் என்கிறார்கள். இவனது சரியான லக்னம் என்ன? மறுமணம் எப்போது நடக்கும்? அடுத்த வாழ்க்கை சிறப்பாக அமையுமா? அப்படி அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
பதில் :
வாக்கியப் பஞ்சாங்கப்படியே பார்த்தாலும் மகளுக்கு தனுசு லக்னமே வரும். (7.12.1982, காலை 5. 55 மணி, நெல்லை) ஜாதகத்தை கணித்த ஜோதிடர் தவறு செய்திருக்கிறார். அடுத்த வருட பிற்பகுதியில் சந்திரதசை, சுக்கிரபுக்தியில் மகளுக்கு மறுமணம் நடக்கும். முதல் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களால் இரண்டாவது வாழ்க்கையில் உங்கள் மகள் தன்னை சிறப்பாகவே மாற்றிக் கொள்வார். கவலை வேண்டாம். பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை.
ஆர். பிரபாகரன், கோவில்பட்டி.
கேள்வி :
பல வருடங்களாக தீப்பெட்டி தொழில் செய்து வந்தேன். தற்சமயம் அதில் இருந்து மாறி டிஜிட்டல் பேனர் மற்றும் கம்ப்யூட்டர் ஜாப் ஒர்க் செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன். செய்யலாமா? அல்லது வேறு தொழில் செய்யலாமா?
பதில் :
வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜாதகம் தவறாக கணிக்கப்பட்டிருக்கிறது. (20.4.1975, காலை 9.30, கோவில்பட்டி) நீங்கள் மிதுன லக்னமாக இருந்தால் உங்களால் தீப்பெட்டித் தொழிலில் இருந்திருக்க முடியாது. உங்களுக்கு ரிஷப லக்னமாகி பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்து, ராசிக்கு பத்துக்குடையவனும் செவ்வாயே ஆனதால் நீண்டகாலமாக நெருப்புத் தொழில் செய்து வந்திருக்கிறீர்கள்.
தற்போது இரண்டு மாதமாக சுக்கிர தசை முடிந்து சூரிய தசை ஆரம்பித்து விட்டதால் தொழிலை மாற்றும் எண்ணம் வந்துவிட்டது. ராசிக்கு பத்தில் சூரியன் உச்சமாகி 2 டிகிரிக்குள் புதனை அஸ்தங்கம் செய்துள்ளதால் புதனின் கலப்பு பலனையே உங்களுக்குத் தருவார். ரிஷபத்திற்கு தனாதிபதியும் புதனே என்பதால் நீங்கள் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழிலை தாராளமாக செய்யலாம்.
ஆர். காளிச்சாமி, கோயம்புத்தூர் – 7.
கேள்வி :
குருஜியின் பாதங்களுக்கு தீவிர ரசிகனின் வணக்கம். சிறுவயது முதற் கொண்டே தீவிர நோய்த் தொல்லைகளை அனுபவித்து வருகிறேன். இன்னமும் திருமணம் ஆகவில்லை. எப்போது நோய் வராமல் இருக்கும்? திருமணம் எப்போது நடக்கும்?
சந் | செவ் | ||
ராசி | |||
ல,சூ,பு சு,சனி குரு,ரா | |||
பதில் :
(சிம்ம லக்னம், மேஷராசி. 1-ல் சூரி, புத, சுக், குரு, சனி, ராகு. 11-ல் செவ். 11.9.1979, காலை 5.07 மணி, கோவை)
லக்னத்தில் ஆறு கிரகங்கள் ஒன்று கூடி, லக்னாதிபதி சூரியன் நோய் ஸ்தானாதிபதியான சனியுடன் ஒரே டிகிரியில் இணைந்து பலவீனமானதால் நோய்த்தொல்லையால் அவதிப் படுகிறீர்கள். குருவைத் தவிர்த்து மற்ற அனைத்து கிரகங்களும் ராகு, சனிக்கு மிக நெருக்கமாக இருப்பதால் தற்போது நடக்கும் ராகு தசையில் எந்த நன்மைகளும் நடைபெறவில்லை.
அடுத்து நடக்க இருக்கும் தசாநாதன் குரு சிம்மத்திலேயே இவர்களுடன் இருந்தாலும், சூரியனுடன் அஸ்தமனமாகாமல் 22 டிகிரி விலகியும், ராகுவிற்கு பனிரெண்டு டிகிரி தள்ளியும் இருப்பதால் குருதசை முதல் நோயற்ற வாழ்வை வாழ்வீர்கள். ராகுவிற்குரிய பரிகாரங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொள்ளவும். இன்னொரு ஜென்ம நட்சத்திரமன்று கும்பகோணம் சூரியனார் கோவிலில் வழிபட்டு இரண்டரை மணிநேரம் கோவிலுக்குள் இருக்கவும்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை பகலில் சென்னை ரெட்ஹில்ஸ் அருகே உள்ள ஞாயிறு கிராமத்தில் உள்ள பழமையான சூரியன் கோவிலில் வழிபட்டு 48 நிமிடம் உள்ளே இருக்கவும். இன்னொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியில் இருந்து 2 மணிக்குள் சூரியஹோரையில் 35 வயதிற்கு அதிகமாகாத சிவப்பு நிறமுள்ள சுமங்கலிப் பெண்ணிற்கு 10 கிலோ கோதுமை வெட்டவெளியில் வைத்து தானம் செய்யவும்.
பி. மணிகண்டன், திண்டுக்கல்.
கேள்வி :
ஆசானுக்கு வணக்கம். ஐந்து வருடங்களாகவே மன உளைச்சலில் இருக்கிறேன். அம்மா, அப்பா, அக்கா இருந்தும் தனியாக உணர்கிறேன். யாருடனும் மனம் விட்டு பேச முடியவில்லை. 32 வயதாகியும் திருமணம் தாமதமாகிறது. அதற்கான எந்த முயற்சியும் வீட்டில் எடுக்கவில்லை. அப்பா எந்த வேலைக்கும் போகாமல் எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார். வேலையிலும் நிம்மதி இல்லை. சொந்தத் தொழில்செய்யலாமா? பெற்றோர் பார்க்கும் பெண் அமையுமா? அல்லது நான்தான் முடிவெடுப்பேனா? திருமணம் எப்போது? தெளிவான பதில் கூறவும்.
பதில் :
இவ்வளவு அழகாக கேள்வியை டைப் செய்து பிறந்த நேரத்தை குறித்து ஜாதக கட்டத்தையும் எழுதி அனுப்பி இருக்கிறீர்கள் சரி. நீங்கள் பிறந்த நாள், வருடம் என்ன? அது இல்லாமல் எப்படி ஜாதகத்தை சரி பார்த்து பதில் சொல்வது? இவ்வளவு செய்தவர் முதலின் பிறந்த நாள் நேரத்தை அல்லவா எழுதவேண்டும்? இப்படித்தான் எல்லாவற்றையும் செய்வீர்கள் போல் தெரிகிறது. பதில் தர தேர்ந்தெடுத்தும் பதில் சொல்ல முடியவில்லையே?
அலித்தன்மை உண்டாக ஜோதிடவிதிகள் என்ன..?
ஆர். ஜெயதீஷ், சேலம்.
கேள்வி :
ரிஷிகளின் அருளை பெற்று என் போன்ற மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி ஜோதிடம் உரைக்கும் குருஜி அவர்களின் பாதங்களுக்கு வணக்கம். ரிஷபம், துலாம் பனிரெண்டாம் வீடாகி அதில் சூரியனும் செவ்வாயும் இருந்தால் அலித் தன்மையா? பாதகாதிபதி குரு நீசம்பெற்றதால் நன்மையெனில் ஏழுக்குடையவனாய் என்ன பலனை செய்வான்? ஏழாமிடத்திற்கு அஸ்தங்க செவ்வாயின் பார்வை என்ன பலனைத் தரும்? சுக்கிரன் உச்சம் பெற்று வர்க்கோத்தம நிலையில்கடைசி பாகையில் இருப்பது திரிசங்கு நிலையா? மேஷத்தில் பதினொன்றில் இருக்கும் ராகு சுயமாக ஏன் இதுவரை நன்மை செய்யவில்லை? திருமணம் நடைபெறுமா? எப்போது? ஜோதிடம் என்னால் கற்றுக் கொள்ள முடியுமா?
பதில் :
அலித்தன்மையை அளவிட பனிரெண்டாமிடத்தை விட, வீரிய ஸ்தானமான மூன்றாமிடத்தையும், உடலுறவைக் குறிக்கும் ஏழாமிடத்தையும் தான் பார்க்க வேண்டும். அனுபவிப்பது மட்டும்தான் போக ஸ்தானத்தின் வேலை. போகசுகம் கிடைக்குமா? உண்டா? எவ்வகை செயல்திறனுடன் சுகம் கிடைக்கும் என்பதற்கு மூன்று, ஏழாமிடங்களைத்தான் கணக்கிட வேண்டும்.
இந்த ஜாதகத்தில் மூன்றாமதிபதி சூரியன் பனிரெண்டில் மறைந்ததும், அவருக்கு சனி, செவ்வாய் தொடர்பு ஏற்பட்டதும், ராசிக்கு மூன்றாமிடத்தோடு இதே சனி, செவ்வாய் தொடர்பு இருப்பதும் குற்றம். அதேநேரத்தில் மூன்றுக்குடையவன் பரிவர்த்தனையாகி, அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சமாக குருபார்வையில் இருப்பதால் முற்றிலுமாக அலித்தன்மை இருக்காது. உறவு விஷயத்தில் ஈடுபாடு குறைவாகவும், மரபு மீறிய ஆர்வங்களும் இருக்கும். நீசம் பெற்ற ஏழாம் அதிபதியும் இதனை உறுதி செய்கிறார்.
எந்த ஒரு ஜாதகத்திலும் பாதகாதிபதி கண்டிப்பாக வலுப்பெற கூடாது. அப்படி வலுப்பெற்றால் கொடுத்துக் கெடுப்பார். மிதுனலக்னத்திற்கு ஏழுக்குடைய குரு உச்சம் பெற்று தனித்து அமர்ந்தால், குருதசையில் மணவாழ்க்கையை கெடுப்பார். ஏழாமிடத்தில் தனித்து அமர்ந்தாலோ மணவாழ்வில் குறைகள் உண்டு. மிதுனத்திற்கு குரு அதிகவலுப் பெற்றால் பாவர் பார்வை அல்லது சம்பந்தம் பெறவேண்டும். மிதுனத்திற்கு குரு ஆறு, எட்டு, பனிரெண்டில் மறைவது நல்லது.
பாதகாதிபதி என்றாலும் அவர் இயற்கை சுபர் என்பதால் நல்ல குணமுள்ள வாழ்க்கைத்துணை அமையும். குரு அம்சத்தில் உச்சம் பெறுவது நல்ல அமைப்பு. பாதகாதிபதி ராசியில் கெட்டு நேர்வலு இழந்து மறைவு வலுப் பெறுவது சிறப்பு. சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெற்ற கிரகத்திற்கு பார்வை பலம் கிடையாது.
சுபக் கிரகங்கள் உச்ச வர்க்கோத்தமம் அடைவது நன்மைகளைத் தராது என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதன் உட்கருத்து. கிரக வலிமை விதிகளில் பரம உச்ச பாகை என்ற ஒரு கணக்கு இருக்கிறது. அதனைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பதினொன்றாமிட மேஷ ராகுவாக இருந்தாலும் சுபரின் தொடர்புகள் இருந்தால் மட்டுமே ராகு நன்மைகளைச் செய்வார். மேலும் ராகுவிற்கு வீடு கொடுத்தவன் கண்டிப்பாக வலிமை பெற வேண்டும். நடைபெறும் சுக்கிர புக்தியில் அடுத்த வருடம் திருமணம் நடைபெறும். ராகுதசை முழுக்க ஜோதிட ஆர்வம் இருக்கும். அதன் பிறகு இருக்காது.
மரபு மீறிய ஆர்வங்களும் இருக்கும் > sabasss
நல்ல விளக்கம். சித்தர்களின் அருள் உங்களுக்குண்டு.
வாழ்த்துக்கள்.
வாக்கிய பஞ்சாங்கம் முற்றிலும் தவறாகிவிட்டது என நீங்கள் கருதுகிறீர்களா?