adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 137 (30.5.2017)
ஜெகார்த்திக், திருச்சி – 2.
கேள்வி :
எனக்கு 28 வயது நடந்து கொண்டிருக்கிறது. வரும் 29-வது வயதில் திருமணம் செய்யலாமா? என்பதை தாங்கள் அருள்கூர்ந்துகூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சூ,பு ல,குரு
ராசி
சந்,சுக் செ,ரா சனி
பதில் :
(மிதுன லக்னம், மகர ராசி. 1-ல் குரு. 8-ல் சுக், செவ், சனி, ராகு. 10-ல் சூரி, புத. 22.3.1990, மதியம் 1.32, திருச்சி) கடிதத்தைப் பார்த்தால் கார்த்திக் எழுதியதாகத் தெரியவில்லை. அவரது அப்பா எழுதியதாகத் தெரிகிறது. கார்த்திக் ஜாதகத்தில் 8-மிடத்தில் சனி, செவ்வாய் இருவரும் ராகுவுடன் இணைந்திருப்பதும், அதில் செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதும் தோஷம். மேலும் தாம்பத்திய சுகத்தை கொடுப்பவனும், மனைவிக்கு காரணமானவனுமான சுக்கிரன் ராகுவுடன் ஒரே டிகிரிக்குள் இணைவதும் தாரதோஷ அமைப்பு. இந்தக் குற்றங்களை சமாளித்து நல்ல வாழ்க்கையை தர வேண்டிய லக்னாதிபதி புதனும் நீசமாகி 6-க்குடையவன் உச்சமாக இருக்கிறார். இதுபோன்ற ஜாதகங்களுக்கு தாமதமாக திருமணம் செய்வது நல்லது. லக்னாதிபதி பலவீனமாக இருந்தாலும் பரிவர்த்தனையின் மூலம் வலுப்பெற்று இருப்பதும், அடுத்து லக்னத்தில் அமர்ந்து ஏழைப் பார்க்கும் குருவின் தசை நடைபெற இருப்பதும் தாமத திருமணம் என்றாலும் அதன்பிறகு தொல்லைகள் எதுவும் இருக்காது என்பது காட்டுகிறது. 30 வயது முடிந்த பிறகு திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம். ஜெ. சக்திவேல், ஈரோடு.
கேள்வி :
குருநாதரின் திருப்பாதங்களுக்கு வளர்ந்து வரும் ஒரு ஜோதிடனின் நமஸ்காரங்கள். உங்கள் மாணவனாக இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் என்றமுறையில் அவர்களின் திருமண விஷயத்தை குருவின் சொல்படி செய்யலாம் என்று உள்ளேன். குடும்பத்தின் சிறு சேமிப்பின் மூலம் ஒருவருக்குத் திருமணம் செய்யமுடியும். 27 வயது மகனுக்கு முதலில் செய்வதை விட 23 வயது மகளுக்கு திருமணம் செய்யலாம் என்று கருதி வரன் பார்த்து வருகிறேன். ஆயில்யம் நட்சத்திரம் என்பதால் தோஷம் என்று சொல்லி நிராகரித்து வருகிறார்கள். அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. மகளுக்கு எப்போது திருமண யோகம் வருகிறது? என்ன பரிகாரம்? மகன் மெக்கானிக் தொழில் கற்று வருகிறான். எந்த வயதில் முன்னுக்குவருவான்? வரும் ஜென்மச்சனியில் கெட்ட பெயர் ஏற்படுமா? எதிர்காலம் எப்படி? மகன், மகள் வாழ்க்கை பற்றி மானசீக குருநாதரிடம் கேள்விகளை சமர்ப்பித்த பிறகு நிம்மதியாக இருக்கிறேன்.
சூ,சனி ராசி  சந்,செவ்
பு
சுக் ரா
பதில் :
(ரிஷப லக்னம், கடக ராசி. 3-ல் செவ். 6-ல் ராகு. 8-ல் சுக். 9-ல் புத. 10-ல் சூரி, சனி. 15.2.1995, மதியம் 12.15, நாமக்கல்) மகளின் ஜாதகப்படி ஏழுக்குடைய செவ்வாய் நீசமாகி ராசிக்கு ஏழாமிடத்தை பார்ப்பதும், ராசிக்கு எட்டில் சனி இருப்பதும்தான் தோஷ அமைப்பே தவிர, அவர் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பது தோஷமல்ல. ஆயினும் சுக்கிரதசை நடந்தால் சீக்கிரமாக தாம்பத்ய சுகம் கிடைக்க வேண்டும் என்பதன்படி வர இருக்கும் புதன்புக்தியில் திருமணம் நடைபெறும். திருமணத்திற்கு பிறகு அவளது வாழ்க்கை நன்றாகவே இருக்கும். பரிகாரம் தேவையில்லை. மகனது ஜாதகத்திலும் ராசிக்கு 2-ல் சனி, ராகு. லக்னத்திற்கு 8-ல் செவ்வாய் என்கிற அமைப்பு இருக்கின்றது. ஆயினும் லக்னாதிபதி திக்பலமாக வலுவுடன் இருப்பதால் அவனது திருமணம், எதிர்காலம் பற்றிக் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. திருமணம் 30 வயதிற்கு பிறகுதான் நடைபெறும். ஏழரைச்சனி நடப்பதால் இப்போது தொழில் வைக்க தடை உண்டு. இன்றும் 3 வருடங்களுக்கு பிறகு வாழ்க்கையில் நல்லபடியாக செட்டில் ஆவார். சூரியன் திக்பலம், சந்திரனுக்கு குருபார்வை என்பதால் தாய்-தகப்பனை கடைசிவரை பார்ப்பார். தானும் நன்றாக இருப்பார். மகன்,மகள் இருவரின் ஜாதகமும் யோகமாக இருப்பதால் கவலைகளுக்கு இடமில்லை. ராஜகணபதி, சென்னை -5.
கேள்வி :
பிறந்ததில் இருந்து இன்றுவரை பல்வேறு கஷ்டங்கள் பட்டுவிட்டேன். இன்னமும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். களத்திர ஸ்தானாதிபதிசனி ஏழில் மறைந்து விட்டதால் முதல் மனைவி டைவர்ஸ் ஆகிவிட்டது. 2-வது திருமணம் விதவைப் பெண்ணுடன் நடக்குமா?
குரு ரா
ராசி
சனி ல,சூ சுக்
 சந் பு,செ
பதில் :
(சிம்ம லக்னம், துலாம் ராசி. 1-ல் சூரி, சுக். 2-ல் புத, செவ். 6-ல் சனி. 8-ல் குரு. 11-ல் ராகு. 24.8.1963, அதிகாலை 5.38, திண்டிவனம்) ஜாதகத்தை பார்த்தால் பிறந்ததில் இருந்து கஷ்டப் பட்டதாக தெரியவில்லை. என்னிடம் பதில் வாங்குவதற்காக சேர்க்கப்பட்ட வார்த்தையாகத் தெரிகிறது. சிம்ம லக்னத்திற்கு வரக்கூடாத சூட்சும வலுப் பெறாத சனியின் தசை நடப்பதால் சனி தசை ஆரம்பித்ததில் இருந்து தொல்லைகள் இருக்கும். ஏழுக்குடையவனை விட பதினொன்றுக்குடையவன் வலுப் பெற்றால் இரண்டு திருமணம் என்பதை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழுக்குடைய சனி ஆறில் மறைந்து, ராசிக்கு ஏழுக்குடைய செவ்வாய் ராசிக்கு பனிரெண்டில் மறைந்த நிலையில், லக்னத்திற்கு பதினொன்றுக்குடையவர் உச்சம், ராசிக்கு பதினொன்றுக்குடையவர் ஆட்சி என்ற நிலை இரண்டாவது திருமணத்தை குறிக்கிறது. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக ராகுபுக்தி நடப்பதால் விதவையின் அறிமுகமும், அவரை பற்றிய எண்ணங்களும் அதிகமாக இருக்கும். 2-வது திருமணத்தைக் குறிக்கும் பதினொன்றாமிடத்தில் ராகு அமர்ந்திருப்பதால் விதவையைத் திருமணம் செய்ய முடியும். எஸ். என். லீலாவதி, சேலம் - 1.
கேள்வி :
மதிப்பிற்குரிய குருநாதருக்கு சிஷ்யையின் வணக்கம்என் மகனுடையகையால் எழுதிய ஜாதக குறிப்பும்கம்ப்யூட்டர் ஜாதகமும் அனுப்பியுள்ளேன். இரண்டிலும் லக்னமும், செவ்வாய் தோஷமும்மாறுபடுகிறது. எது உண்மை என்று குருநாதர்தான் சந்தேகம் தீர்க்க வேண்டும். மகன் பி.காம் முடித்துள்ள போதும் வயதிற்குத் தகுந்த பொறுப்பு இல்லாமல் இன்னும் குழந்தையாகவே இருக்கிறான். அவனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று, மகனை ஆசிர்வதித்து நல்ல பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதில் :
கம்ப்யூட்டர் ஜாதகப்படி மகனின் லக்னம் மிதுனம் என்பதே சரி. அதேநேரத்தில் 12-ல் செவ்வாய் இருப்பது பயப்படும் அளவிற்கு தோஷமல்ல. செவ்வாய் சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் அது தோஷமாகாது. மகனுக்கு மிதுன லக்னமாகி, லக்னாதிபதி புதன் லக்னத்திலேயே இருப்பதால்தான் பி.காம் படித்திருக்கிறார். லக்னத்தைக் குரு பார்த்து, சுக்கிரனின் தசை நடப்பதால் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இப்போது விளையாட்டுத்தனமாக இருந்தாலும் இன்னும் 2 வருடங்களில் தன்னுடைய திறமையால் தன் வாழ்க்கையைத் தானே அமைத்துக் கொள்வார். லக்னம் வலுப் பெற்ற ஜாதகம் என்பதால் எதிர்காலத்தில் சிறப்பான நிலையில் இருப்பார். வாழ்த்துக்கள். ஜெ. சுரேஷ், சேரனூர்.
கேள்வி :
உங்கள் எழுத்துக்களை தவறாமல் படிக்கும் பக்தன் நான். திருமணம் தள்ளிக் கொண்டே செல்கிறது. பெண் கொடுப்பவர்கள் எல்லாம் மாப்பிள்ளை பி.. படித்திருக்க வேண்டும் அல்லது சிங்கப்பூரில் இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். நான் பிளஸ்டூதான் படித்திருக்கிறேன். ஒரு பெரியவர் திருமணத்திற்கு பிறகுதான் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொன்னார். ஆனால் எனக்கோ திருமணம் நடக்கும் அறிகுறி கூட இல்லை. திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் அரைமெண்டல் ஆகிவிட்டேன். நண்பர்கள் எல்லோரும் குழந்தைகளுடன் இருக்கும் நிலையில் என்னடா மாப்பிள்ளை எப்போது திருமணம் என்று கிண்டல் செய்கிறார்கள். எனக்கு கல்யாணம் நடக்குமா   ? நடக்காதா?
பதில் :
என் பக்தன் என்று சொல்லும் உனக்கு பிறந்த நேரத்தை எழுதத் தெரியாதா? வெறும் பிறந்த தேதியை மட்டும் வைத்துக் கொண்டு என்ன பலன் சொல்வது? உனக்கு விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம் என்பதால் இப்போதைக்கு அரைமெண்டலாகத்தான் இருப்பாய். இந்த வருடம் தீபாவளியில் இருந்து உன் அனைத்துக் குறைகளும் தீரும். அடுத்த வருடம் 35 வது வயதில் உனக்குத் திருமணம் நடக்கும். ஜென்மச்சனி முடியப் போவதால் திருமணத்திற்கு பிறகு அந்த பெரியவர் சொன்னதைப் போல நன்றாக இருப்பாய்.
அம்மாவைப் போல இளம் வயதில் இறந்து போவேனா?
கே. மாலதி, பாளையங்கோட்டை.
கேள்வி :
தங்களின் மாலைமலர் கேள்வி - பதில்களுக்கு நான் தீவிரமான ரசிகை. 27 வயது முதல் கடந்த 18 வருடங்களாக எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. இந்த நோயினால் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது. சமீபத்தில் மூளைக்குச் செல்லக் கூடிய நரம்பில் ஒருபிளாக் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு குணமாகி விட்டது. கணையத்தில்உள்ள பிரச்னைகளுக்காக வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடவேண்டியுள்ளது. இடது கண்ணில் பார்வைக் குறைபாடு ஏற்பட்டு 2 முறைலேசர் சிகிச்சை மேற்கொண்டும் பயனில்லை. கண்ணில் ஆப்ரேஷன் செய்து உடைந்திருக்கும் ரத்த நாளங்களை நீக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். கடந்த 3 வருடங்களாக ஏதாவது ஒரு நோய்க்கு மருத்துவம் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். தற்போது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கிறேன். இந்த நோய்களில் இருந்து விடுதலை உண்டா? என்னுடைய ஆயுள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று பயமாக உள்ளது. குழந்தைகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி பேரக்குழந்தைகளை கொஞ்சும் பாக்கியம் உள்ளதா? எனது தாயார் 47 வயதிலேயே இறந்து விட்டார். எனக்கும் அதேபோல ஆகிவிடுமோ என்ற கவலையும், பயமும் அதிகமாக உள்ளது. பரிகாரம் ஏதாவது உண்டா?
  செவ் சனி
சுக் ராசி
சூ,பு ரா
குரு சந்
பதில் :
(மிதுன லக்னம், கன்னி ராசி. 7-ல் குரு. 8-ல் சூரி, புத, ராகு. 9-ல் சுக். 11-ல் செவ். 12-ல் சனி. 3.2.1972, மதியம் 3.30, நெல்லை.) ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்து ஆறுக்குடையவன் அவரை விட வலுப் பெறக் கூடாது என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். ஆறுக்குடையவன் கடனையும், நோயையும் தருபவன் என்பதால், ஜாதகர் ஆணாக இருந்தால் அளவுக்கு மீறின கடன் தொல்லையையும், பெண்ணாக இருந்தால் ஆரோக்கிய குறைபாடுகளையும் தருவார். உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதியும், ராசிநாதனுமான புதன் எட்டில் மறைந்து ராகுவுடன் ஒரே டிகிரியில் இணைந்து வலுவிழந்து இருக்கிறார். அதேநேரத்தில் நோயை தருகின்ற ஆறுக்குடைய செவ்வாய், ஆட்சியும், வர்க்கோத்தமமும் பெற்று வலுவாக இருக்கிறார். லக்னாதிபதி வலுவிழந்தால் ராசிப்படி பலன்கள் நடக்கும் என்பது விதி. உங்கள் ராசிக்கு ஆறுக்குடைய சனி, சுக்கிரனுடன் பரிவர்த்தனையாகி ராசிக்கு ஆறாம் வீட்டிலேயே இருக்கும் நிலை பெறுகிறார். லக்னத்திற்கு ஆறாமிடமும், ராசிக்கு ஆறாமிடமும் மிகவும் வலுவடைந்து விட்டதால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடக்கூடிய அளவிற்கு நோய் தொந்தரவு இருக்கிறது. பாதகாதிபதியான குருவின் தசையில் கடந்த 2013 ஜூலை முதல் நடந்த புதன் புக்தியில் உங்களுக்கு தொந்தரவுகள் அதிகமாக இருந்திருக்கும். தற்போதைய சுக்கிர புக்தியில், சுக்கிரன் யோகாதிபதி என்பதால் நோய் கட்டுக்குள் இருக்கும். அடுத்து பாதகாதிபதி தசையில், மாரகாதிபதி சந்திரனின் புக்தி வரப் போவதால் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருங்கள். லக்னத்தை குரு பார்ப்பதால் எதுவும் எல்லை மீறாது. கடவுள் இருக்கிறார். அவர் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டார். கவலைப்பட வேண்டாம். லக்னத்தை குரு பார்ப்பது எல்லா குறைகளையும் தீர்க்கும் ஒரு அமைப்பு என்பதால் எதற்கும் கவலைப்பட வேண்டாம். லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை நீங்கள் செய்தே ஆக வேண்டும். ஒரு புதன்கிழமை இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், (புதன் ஹோரை) ஒரு பச்சைநிற பிளாஸ்டிக் தட்டில், 2 தலைவாழை இலை விரித்து, அதில் ஒரு பச்சைப்புடவை, ரவிக்கை, இரு கை நிறைய பச்சைப்பயிறு, கொஞ்சம் பாகற்காய், பச்சை மிளகாய், அவரைக்காய், சிறிதளவு கொத்தவரங்காய் வைத்து ஒரு நடுத்தர வயது சுமங்கலி பெண்ணிற்கு தானம் செய்யவும். ஒரு புதன்கிழமை புதன் ஹோரையில். புதனின் வாகனமான குதிரைக்கு விருப்பமான உணவு தரவும். லக்னாதிபதி புதனை ஒருடிகிரிக்குள் ராகுபகவான் கிரகணப்படுத்தி இருப்பதால் ஆயுள் குற்றம் விலக ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலை காளத்திநாதனுக்கும், அன்னைக்கும் நடைபெறும் ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொள்ளவும்.

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 137 (30.5.2017)

  1. அற்புதமான பதில்கள்,மானுடசந்தேகத்தை நீக்கும் வல்லமையுடையவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *