adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
போகம் தரும் ராகு C-048 – Pogam Tharum Raahu…
#adityaguruji #jodhidam
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 
 
கைப்பேசி எண் : 8681 99 8888
 
நமது மூல நூல்கள் ராகுவை போகக் காரகன் என்றும் கேதுவை ஞானக் காரகன் என்றும் வர்ணிக்கின்றன.
 
ஒருவருடைய ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பலவீனம் அடைந்து கெட்டிருந்தாலும் ராகு ஒருவர் மட்டும் சுப வலு அடைந்து ராகுவின் தசை நடந்தால் ஜாதகர் எவ்வளவு கீழ்நிலையில் இருந்தாலும் வாழ்வில் நல்ல மேலான நிலைக்கு வந்தே தீருவார்.
 
ராகு,கேதுக்கள் பருப்பொருள் அற்ற கண்ணுக்குக் தெரியாத கிரகங்கள் மற்றும் மறைந்து வலம் வரும் இருள் கிரகங்கள் என்பதால், நம் வாழ்வின் பின்னால் மறைந்து நிற்கும் நமக்குத் தெரிய வராத, இப் பிறவிக்கு முந்தைய பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களைப் பிரதிபலிப்பார்கள்.
 
பூர்வ புண்ணியம் வலுவடைந்த நிலையில் இருக்கும் ஒருவருக்கு, அதாவது சென்ற பிறவியில் நன்மைகள் செய்து நற்கர்ம வினைகளைச் சேர்த்து வைத்திருக்கும் ஒருவருக்கு, அந்தக் கர்மாவை வைத்து இப் பிறவியில் சொகுசாக வாழ ராகு தன் தசையில் துணை புரிவார்.
 
இது போன்ற அமைப்பில் பிறந்த ஒருவருக்கு ராகு நமது மூலநூல்களில் சொல்லியுள்ளபடி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் ஏதாவது ஒன்றில் அமர்ந்து, அவருக்கு வீடு கொடுத்த கிரகமும் வலுப் பெற்று. ராகுதசை முக்கிய பருவத்தில் நடக்குமானால் அந்த நபர் உயர்நிலைக்குச் செல்வார்.
 
மேற்கண்ட ஐந்து இடங்களில் இருக்கும் ராகு மட்டுமே சுயமாக நன்மை தரும் அதிகாரம் பெற்றவர் என்று நமது கிரந்தங்களில் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. எனவே ராகுதசை நன்மை செய்யுமா என்று கணிப்பதற்கு முன் இந்த வீடுகளில் ராகு அமர்ந்திருக்கிறாரா என்று பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம்.
 
என்னுடைய நீண்டகால அனுபவத்தில் மேற்கண்ட ஐந்து இடங்களில் இருக்கும் ராகு, அவை ஜாதகத்திற்கு கெட்ட இடங்களாக இருந்தாலும் கடுமையான பலன்களைத் தருவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். எனவே மேற்கண்ட பாவங்களில் இருக்கும் ராகு கெடுதல்களைச் செய்வதில்லை.
 
இந்த ஐந்து இடங்களைத் தவிர்த்து மற்ற ஏழு ராசிகளில் இருக்கும் ராகு இயற்கைச் சுபர் வீட்டில் இருந்தாலும் அவர் தரும் நன்மைகள் இரண்டாம் பட்சமாகவே இருக்கும். இதுபோன்ற அமைப்பில் தான் இருக்கும் வீட்டின் அதிபதியின் ஆதிபத்திய மற்றும் காரகத்துவத்தை ராகு அப்படியே பிரதிபலிப்பார்.
 
மேலே சொன்ன ஐந்து இடங்களில் இருக்கும் ராகு சுப வலுப் பெற்றவராகி, வீடு கொடுத்தவர் உச்சம் பெற்று, அந்த வீடுகளும் மூன்று, ஆறு, பதினொன்று, பனிரெண்டாம் வீடுகளாகி, சுபருடன் இணைந்து, சுபர் பார்வை பெற்று, சனி, செவ்வாயின் பார்வை மற்றும் இணைவைப் பெறாமல் இருக்கும் நிலைகளில் தனது தசையில் மிகப் பெரிய யோகங்களைச் செய்வார்.
 
இதுபோன்ற அமைப்பில் இந்த மண்ணில் ஒருவருக்கு கிடைக்கும் மண், பொன், பெண் ஆகிய அனைத்துப் போகங்களையும் குறைவின்றி திகட்டத் திகட்ட அனுபவிக்கச் செய்வார் ராகு.
 
அதே நேரத்தில் ராகு, சனி, செவ்வாயின் ஸ்திர ராசிகளான விருச்சிகம், கும்பம் ஆகிய இடங்களில் அமர்ந்து, அந்த வீடுகள் ஜாதகருக்கு ஆறு, எட்டாம் வீடுகளாகி இங்கே சனி, செவ்வாய் அல்லது லக்ன அஷ்டமாதிபதி அல்லது ஆறுக்குடையவன் இணைவு மற்றும் பார்வையைப் பெற்று தசை நடத்துகையில் ஜாதகரின் வயதுக்கேற்ப கடுமையான பலன்களைத் தருவார்.
ராகுவின் இன்னுமொரு சிறப்பு என்று பார்க்கப் போனால் நமது மூல நூல்கள் ராகுவின் காரகத்துவமாகக் சொல்லும் “நானாவித வேடத்தொழில்” என்பதைச் குறிப்பாகச் சொல்லலாம். இந்த வார்த்தைக்கு சகல விதமான நடிப்பு என்று அர்த்தம்.
 
ராகு போகக் காரகன் என்பதால் பத்தாமிடத்தொடு அல்லது தொழில் ஸ்தானாதிபதியோடு தொடர்பு கொள்கையில் ஒருவரை பெண் சுகம் எளிதாகக் கிடைக்கும் பெண்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது சினிமா, தொலைக்காட்சி போன்ற மீடியாத் துறையில் ஈடுபடுத்துவார்.
 
சினிமா தோன்றாத அந்தக் காலத்தில் நடிகர்கள் மேடையில் நாடகங்களில் நடித்தார்கள். அதிலும் ஒரு நாடகம் விடிய விடிய நடத்தப்பட்ட நிலையில் அதில் பங்கு பெறும் ஒருவரே நான்கு வேடங்களை ஏற்று நடிப்பதும், பொது மக்களிடையே பலத்த கைதட்டல்களைப் பெறுவதும் நடந்தது.
 
உதாரணமாக சம்பூர்ண ராமாயணம் நாடகம் விடிய விடிய நடத்தப்படுகிறது என்றால் பரதனாக வருபவரே ஜடாயுவாகவும், கோசலையாகவும் இந்திரஜித்தாகவும் நான்கு வித வேடங்களில் வருவதுண்டு. இதுபோன்ற சகலவிதமான வேடங்களை ஏற்று நடிப்பதற்கு காரணமானவர் ராகு.
 
இன்றைய காலகட்டங்களில் நாடகங்கள் மறைந்து போய் சினிமாவாக மாறி, மேடைகள் அரசியலுக்கு மட்டும் என்றாகி விட்ட சூழலில், பொதுமக்கள் மத்தியில் ஒருவரை அரசியல்வாதியாக மேடைகளிலோ, நடிகராக தொலைக்காட்சிகளிலோ, சினிமாக்களிலோ பிரபலப்படுத்துபவர் ராகுதான்.
 
மேடையில் பேசும் போது ஒரு அரசியல்வாதியும் பார்வையாளர்களைக் கவர்வதற்காக அங்க அசைவுகளுடன் உணர்ச்சிகரமாக இருக்க வேண்டியிருப்பதால் அரசியலில் ஒருவரைப் பிரபலமாக்குபவரும் ராகுதான்.
ராகு சுபரோடு சேர்ந்து, சுபர் வீட்டில் அமர்ந்து, அவருக்கு வீடு கொடுத்தவரும் வலிமை பெற்றிருக்கும் நிலையில், செவ்வாய், சனியின் இணைவையோ தொடர்பையோ, பார்வைகளையோ பெறாமல் இருக்கும் நிலையில் பெரிய நன்மைகளை செய்வார்.
 
குறிப்பாக அந்த ஜாதகரை அரசியல், சினிமா போன்ற பாப்புலாரிட்டியை தரும் துறைகளில் ஈடுபடுத்தி வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்வார். சினிமாவில் வெற்றி பெறுவதற்கு சுக்கிரனை விட சுக்கிரனுடன் தொடர்பு கொண்ட ராகு அல்லது சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த ராகுவின் தயவு மிக முக்கியம்.
 
இன்றைய சினிமா அல்லது தொலைக்காட்சி, அரசியல் ஆகியவற்றில் முக்கிய இடத்தைப் பெற்று உச்சத்தில் இருக்கும் பிரபலங்களின் ஜாதகங்களை ஆராய்ந்தால் அவர்களைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு வந்தது ராகு தசையாகத்தான் இருக்கும். பிரபலமடைய இருக்கும் ஒருவரை அவரது வாழ்வில் உயர்நிலைக்குகொண்டு செல்ல இருக்கும் வேலைகளை ராகுவே செய்வார்.
 
இன்னொரு நிலையாக ராகுதசைக்கு அடுத்து சகல பாக்கியங்களையும் தர இருக்கும் குருவின் தசை நடக்கும் என்பதால் குருவின் தசையில் ஒருவருக்கு கிடைக்க இருக்கும் அனைத்து நன்மைகளுக்கும் அடிப்படையாக ராகுதசை அமையும்;
 
ஒரு மனிதனுக்கு சகல சுகங்களையும் அள்ளித் தந்து அவனைப் பாக்கியவான் ஆக்கும் தகுதி பெற்ற இரண்டு இயற்கைச் சுபர்களான குரு, சுக்கிரனின் தசைகளுக்கு முன்பாக இந்த இருள் கிரகங்களான ராகு, கேதுக்களின் தசைகள் அமைவது ஏன் என்பதை யோசித்தால் ஜோதிடத்தின் இன்னும் சில சூட்சுமங்களும் புரியும்.
 
அதாவது உலகில் பிறந்த அனைவருக்கும் ஏதேனும் ஒருவகையில் நன்மை செய்தே ஆகவேண்டிய குருவின் தசைக்கு முன்பாக ராகுதசை நடப்பதும், அதேபோல குருவிற்கு ஆகாத அணியினருக்கு நன்மைகளைச் செய்யக் கடமைப்பட்ட சுக்கிரனின் தசைக்கு முன்பாக ராகுவின் எதிர் கிரகமான கேதுவின் தசை நடப்பதும் ஏன் என்பதை யோசித்துப் பாருங்கள்.
 
காதல் செய்ய வைக்கும் ராகு ...!
 
ஒருவரைத் தகுதிக்கும் வயதுக்கும் மீறி அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்கச் செய்பவர் சுபர் வீடுகளில் அமர்ந்த ராகுதான். அதனால்தான் இன்பங்களைத் துய்க்க வைப்பவர் என்ற அர்த்தத்தில் வேதஜோதிடத்தில் போகக் காரகன் என்று அவர் அழைக்கப் படுகிறார்.
 
எத்தனை சுப நிலையில் இருந்தாலும் சுக்கிர தசையைப் போலவே இளம் வயதில் பள்ளிப் பருவத்தில் வரும் ராகுதசை ஒருவருக்கு நன்மைகளைச் செய்வது இல்லை.
 
உடலும் மனதும் இன்பங்களை முழுமையாக அனுபவிக்கத் தகுதியாக, உறுதியாக இருக்கும் நடுத்தர வயதில் வரும் ராகு தசையே ஒருவருக்கு முழுமையாக நன்மைகளைச் செய்யும்.
 
பள்ளிப் பருவத்தில் நடக்கும் ராகுவின் தசை ஒருவருக்கு அமைந்திருக்கும் நிலையைப் பொருத்து படிப்பில் ஆர்வக் குறைவையோ அல்லது கல்வித் தடையையோ நிச்சயமாகத் தரும்.
 
மேலும் ஒரு முக்கிய நிலையாக இளம் பருவத்தினரிடையே காதல் என்ற பெயரில் காமத்தை அறிமுகப்படுத்துபவரும் ராகுதான். குறிப்பாக ஆறு எட்டுக்குடையவருடன் இணைந்து ஆறு அல்லது எட்டாமிடங்களில் சுபத்துவமில்லாமல் இருக்கும் ராகு தனது தசை, புக்தியில் ஒரு பெண்ணை காதலில் ஈடுபடுத்தி சந்தோஷமாக கற்பிழக்க வைத்து பின்னர் ஏமாந்து விட்டோமே என்று கண்ணீர் விட வைப்பார்.
 
ஒரு பெண்ணை சம்மதத்துடன் கற்பிழக்கச் செய்பவை ஆறு, எட்டாமிடங்களின் சம்பந்தம் பெற்ற பாபக் கிரகங்கள்தான். அதிலும் சனி, செவ்வாய் தொடர்பைப் பெற்று சுக்கிரனின் வீடுகளில் இருக்கும் ராகு,கேதுக்கள் இளம் வயதில் நிச்சயமாக இந்த அனுபவத்தைக் கொடுப்பார்கள்.
 
இது போன்ற அமைப்பில் ராகுவின் நிலையையும் கிரகத் தொடர்புகளையும் வைத்து ஒன்றுக்கு மேற்பட்ட காதல், பல ஆண்கள் என்று இந்த நிலை அமையும். தான் இருக்கும் வீட்டு அதிபதி கிரகத்தின் செயல்களை அப்படியே செய்பவர் ராகு என்பதால் இதுபோன்ற பலன்களை முன் கூட்டியே கணிக்க முடியும்.
 
இப்படிப்பட்ட அமைப்பு ஒரு பெண்ணுக்கு நடக்கும் போது, ராகு-கேதுக்கள் முதலில் அந்தப் பெண்ணிற்கு கல்வி அல்லது வேலை என்ற பெயரில் இட மாற்றத்தைக் கொடுத்து, இருக்கும் இடத்தை விட்டு அல்லது பெற்றோரை விட்டு தூர நகர்த்தி, வெளிமாநிலம், வெளிநாடு போன்ற இடங்களில் தைரியமாக கேட்க ஆளில்லாமல் சுதந்திரமாக தவறு செய்ய வைப்பார்.
 
( பிப் 4 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)
 
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

2 thoughts on “போகம் தரும் ராகு C-048 – Pogam Tharum Raahu…

  1. I am a senior citizen from Chennai. I am a victim of marital discord (last 10 years) I shall be much obliged to get your prediction (only one item). I just want to know that if you can predict my immediate future by going through my horoscope. I am contemplating on going and settling in a foreign country and with a suitable soul mate (may one call it as extra marital relation) I am starved of love, affection and care. I just want to know if I will succeed in this. I shall send you my birth details along with your fees (Net banking preferred)Since I am not having Tamil font in my computer, I am typing in English. You can send your predictions in Tamil. Thanking you

    1. குருஜி அவர்கள் முகநூலில் பதில் தருவதில்லை. இங்கு அவரது பதிவுகள் உதவியாளர்களால் நிர்வகிக்கப் படுகின்றன. Contact: Cell 8681998888, 8870998888, or Whatsapp 8428998888 off 044-48678888 or e-mail- adhithyaguruji@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *