#adityaguruji #jodhidam
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
என்னை ஜோதிடக் கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் நேரில் சந்திக்கும் பலர் முதலில் சொல்லும் வார்த்தை “அய்யா, உங்களுடைய சாயாக் கிரகங்களின் சூட்சும நிலைகள் கட்டுரைகளைப் படித்துப் பிரமித்திருக்கிறேன். அவற்றைப் பத்திரமாகப் பைண்டு பண்ணி வைத்திருக்கிறேன்” என்பதாகத்தான் இருக்கும்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ஜோதிட மாத இதழில் சாயாக் கிரகங்களான ராகு-கேதுக்களைப் பற்றி நான் எழுதிய பதினோரு கட்டுரைகள் இணையத்தின் தயவால் உலகம் முழுவதும் உள்ள எனது மாணவர்களாலும், மற்றவர்களாலும் இன்றும் புகழப்படுகின்றன. என்னை நினைக்க வைக்கின்றன.
ராகுவைப் பற்றிய தற்போதைய கட்டுரைகள் அந்தக் கட்டுரைகளின் தொடர்ச்சியாக இருக்கும்.
என்னுடைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஜோதிட ஆய்வில் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ராகுவைப் பற்றி மட்டும் ஆராய்வதில் செலவிட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு கணிக்கச் சிக்கலான சுவாரஸ்யமான கிரகம் ராகு.
என்ன செய்யும் என்று கணிக்க அசாத்திய திறன் தேவைப்படும் இந்தக் கிரகங்களைப் பற்றி மூல நூல்களில் கூட விரிவாகச் சொல்லப்படவில்லை. பின்னர் வந்த விளக்க நூல்களிலும் சுருக்கமாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான ஜோதிடர்களுக்கு ராகு-கேதுக்களைப் பற்றி பலன் சொல்வதில் சிறு தயக்கம் இருக்கும். அதிலும் இந்த நிழல் கோள்கள் சுய நட்சத்திரத்தில் இருந்தால் அவ்வளவுதான். தலை சுற்ற ஆரம்பித்து விடும்.
என்னைப் பொறுத்தவரையில் ஜோதிடத்தின் மிக உயர்நிலைப் புரிதலாக ராகு-கேதுக்களைச் சொல்லுவேன்.
தனக்கென சொந்தவீடு இல்லாமல், இருக்கும் வீட்டினை ஆக்கிரமித்து அந்த வீட்டு அதிபதியின் செயல்களைக் கவர்ந்து, தானே அந்தக் கிரகமாக மாறி பலன் தரும் ராகுவைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளும் ஒரு ஜோதிடர் மட்டுமே ஓரளவிற்குத் தெளிவான, துல்லியமான பலன்களைச் சொல்ல முடியும்.
குப்பையில் கிடப்பதை கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல வைப்பவர் ராகுதான். வாழ்க்கையின் மிக உச்சத்திற்குச் சென்ற ஏராளமான பிரபலங்கள் ராகு தசையில் வெளிச்சத்திற்கு வந்தவர்கள்தான்.
ராகு எனும் இந்த இருட்டுக் கிரகம்தான் அநேக வி. ஐ. பி. க்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கிறது.
சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியதும், ஆட்சிக்கு ஆசைப்படாமல் நடித்துக் கொண்டிருந்த ஒருவரை, மக்கள் தலைவராக்கி, பத்து வருடங்கள் நீடித்த மன்னனாக்கி, இன்றும் இறவாதவராக இருக்கும் வகையில் அழியாப் புகழைக் கொடுத்தவரும் இந்த ராகுதான்.
என்னுடைய அனுபவத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் பலவீனம் அடைந்திருந்தாலும், ராகு மட்டும் நல்ல இடத்தில் அமர்ந்து, அந்த ஜாதகருக்கு நன்மை தரும் அமைப்பில் இருந்து, அவருடைய தசையும் நடக்குமாயின் அவர் வாழ்க்கையின் உச்ச நிலைக்குச் செல்வதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக சூரியன் குறிப்பிடப்பட்டாலும் கிரகங்களின் பலம் என்று வரும்போது சூரியனையும் தாண்டி ராகு-கேதுக்களுக்கு ஞானிகள் முதலிடம் கொடுத்திருப்பதில் இருந்தே ராகுவின் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும்.
இந்திய ஜோதிடத்தின் மேன்மை மிகு முக்கிய அமைப்பும் இந்த ராகுவிற்குள்தான் அடங்கி இருக்கிறது.
பல்வேறுபட்ட உலக ஜோதிட முறைகளில் இந்திய ஜோதிடத்தில் மட்டுமே ராகு-கேதுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உலகின் மற்ற முறைகளில் இந்த இருள் கிரகங்களுக்கு இத்தனை முக்கியத்துவம் இல்லை.
பராசர மகரிஷி ராகுவின் நுணுக்கங்களை தெளிவாகக் கண்டறிந்து, அதற்கு கிரக அந்தஸ்தையும் கொடுத்து, தசா வருடங்கள் பதினெட்டினையும் ஒதுக்கி, ராகுவை ஜோதிடத்தினுள் நுழைத்ததில் இருந்தே நமது இந்திய ஞானிகளின் வானியல் நுண்ணறிவு தெளிவாக விளங்கும்.
நவ கிரகங்களின் தன்மைகளை வைத்து அவற்றை மூன்று வகையாக நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் பிரித்தார்கள். ஒன்பது கிரகங்களும் ஒளிக் கிரகங்கள், குஜாதி ஐவர் எனும் பஞ்ச பூதக் கிரகங்கள், சாயாக் கிரகங்கள் எனப்படும் நிழல் கிரகங்கள் என மூன்று வகைப்படும்.
மூலக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் பகலிலும், இரவிலும் அதிக ஒளியை உலகிற்கு நேரிடையாக வழங்கி பூமியின் மேல் தாக்கத்தினை ஏற்படுத்துவதால் ஒளிக் கிரகங்கள் என வகுக்கப்பட்டன.
சூரியனின் ஒளியை பிரதிபலிக்கும் குஜாதி ஐவர்கள் எனப்படும் குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய ஐவரில் சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் கல், மண், பாறைகள் போன்ற திடப் பொருட்களால் ஆனவை. மீதமுள்ள குருவும், சனியும் திடப் பொருட்கள் இல்லாமல் வாயுக்களால் ஆனவை.
இவர்கள் ஐவரையும் இரவு வானில் நாம் பார்க்க முடியும். ஆனால் சாயாக் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு-கேதுக்கள் கல், மண் போன்ற திடப் பொருட்களாலோ, வாயு அல்லது திரவ ரூபமாகவோ ஆன கிரகங்கள் அல்ல. பூமியின் நிழலும், சந்திரனின் நிழலுமே ராகு-கேதுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சாயா எனும் சம்ஸ்கிருத வார்த்தைக்கு நிழல் என்று அர்த்தம். எனவே பூமி மற்றும் சந்திரனின் நிழல்களான இவை சாயாக் கிரகங்கள் என்று அழைக்கப்பட்டன. மற்ற கிரகங்களைப் போல இவற்றை நம்மால் வானில் பார்க்க முடியாது. இவைகளின் இருப்பை கிரகணங்களின் போது மட்டுமே நம்மால் உணர முடியும்.
சூரிய சந்திரர்களை மறைக்கும் கிரகணத்தின் போது ராகு-கேதுக்களை நமது ஞானிகள் உணர்ந்து, அவற்றை ஆராய ஆரம்பித்து, அவை மூல ஒளியினை மறைப்பதால் பூமிக்கும், பூமியில் வாழும் உயிரினமான மனிதனுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்து இந்த நிழல்களின் முழுப் பரிமாணத்தையும் நமக்கு அறிந்து சொன்னார்கள்.
ராகு-கேதுக்களையும் அவைகளின் துல்லியமான சுற்றுப் பாதையையும் கண்டுணர்ந்து, கிரகண நேரங்களை முன்கூட்டியே கணித்ததில் இந்திய வேத ஜோதிடத்தின் மேதமை உலகிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தெளிவாக்கப் பட்டிருக்கிறது.
பூமி சூரியனைச் சுற்றி வரும் சுற்றுப்பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றி வரும் விரிவு படுத்தப்பட்ட சந்திரப் பாதையும், பூமியின் நிழலும், சந்திரனின் நிழலும், வெட்டிக் கொள்ளும் புள்ளிகளே ராகு-கேதுக்கள் எனப்படுகின்றன.
ராகு,கேதுக்களின் வீரியம் குருவுக்கும் சனிக்கும் நடுவில் என உணரப்பட்டு, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் குருவிற்கும், முப்பது வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும் சனிக்கும் நடுவில் ஏறத்தாழ பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை ராகுவின் சுற்று அமைவதாக நமக்குச் சொல்லப்பட்டது.
ஜோதிடத்தில் ராகு-கேதுக்கள் இரண்டு கிரகமாக குறிப்பிடப்பட்டாலும் இவை இரண்டிற்குமிடையே கண்ணுக்கு தெரியாத ஒரு இணைப்பு இருப்பதால்தான் இவைகள் ஒரு பாம்பினைப் போல நீளமான ஒரு கோடாக உருவகப்படுத்தப்பட்டு ராகு பாம்பின் தலையாகவும், கேது பாம்பின் வாலாகவும் நமக்கு உணர்த்தப்பட்டது.
பூமி சூரியனைச் சுற்றும் நேரான சுற்றுப்பாதையின் குறுக்காக சற்றுச் சாய்வாக சந்திரனின் பாதை அமைகிறது. இதில் மேலே அமைந்த நிழல் ராகுவாகவும், கீழே உள்ளது கேதுவாகவும் அமைந்தது.
இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள நீங்கள் நேராக வரையப்பட்ட ஒரு படுக்கைக் கோட்டினையும் அதனை மேலும் கீழுமாக வெட்டிச் செல்லும் ஒரு சாய்வுக் கோட்டினையும் கற்பனை செய்து பார்த்தால் சாய்வுக் கோட்டின் மேல் பகுதி ராகு எனவும் கீழ் பகுதி கேது எனவும் புரிந்து கொள்ள முடியும்.
கிரகங்களிலேயே ராகு ஒரு பச்சோந்திக் கிரகம் ஆவார். தான் இருக்கும் வீட்டினை ஒட்டி தனது குணத்தையும், இயல்பையும் அப்படியே மாற்றிக் கொள்வார். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய ஐந்து ராசிகளைத் தவிர்த்து மற்ற ராசிகளில் ராகு இருக்கும் நிலையில், நீங்கள் ராகு இருக்கும் ராசியதிபதியின் செயல்கள் ராகுவின் தசையில் நடப்பதை உணர முடியும்.
ராகுவைப் பற்றிய இந்த தொடர் கட்டுரைகளில் நீண்ட நாட்களாக எனது மாணவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கால சர்ப்ப தோஷம் எனப்படும் ராகு,கேதுக்களுக்குள் அனைத்துக் கிரகங்களும் அடங்கும் நிலையைப் பற்றிய உண்மைகள் மற்றும் ராகு கேதுக்களின் ஆன்மிக நிலைகள் ஆகியவற்றை விளக்க இருக்கிறேன்.
குறிப்பாக கோவில்களில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் வரிசையில் அவர்களுக்குக் கீழே எழுதப்பட்டிருக்கும் அவர்களது பிறந்த மாதம் மற்றும் நட்சத்திரக் குறிப்புகளைப் பார்த்தீர்களேயானால் அவைகள் பெரும்பாலும் அஸ்வினி, மகம், மூலம், சதயம், சுவாதி என ராகு-கேதுக்களின் நட்சத்திரமாகவே குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதைவிட மேலாக நமது உன்னத மதத்தின் தலைவனும், நாயகனும், நம் எல்லோருக்கும் அம்மையப்பனாக விளங்கும் சர்வேஸ்வரன் அவதரித்ததே ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில்தான் என்பது ஒன்றே போதும் ராகுவின் மகத்துவத்தை விளக்குவதற்கு.
இன்னுமொரு சிறப்பாக பனிரெண்டு வீடுகளுக்குள் அடங்கும் இருபத்தியேழு நட்சத்திரங்களில், சில கிரகங்களின் நட்சத்திரங்கள் உடைபட்டு இரண்டு ராசிகளில் விரவிக் கிடக்கும் நிலையில் ராகு-கேதுக்களின் ஆறு நட்சத்திரங்களும் துண்டாகாமல் ஒரு ராசிக்குள் முழுமையாக அமைவதும் இந்த சாயாக் கிரகங்களின் சிறப்புத்தான்
கணிப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் ?
இவருக்கு என்ன நடக்கும் என்பதை மனதிற்கும், புத்திக்கும் எளிதில் அடங்காத, சகல விதிகளையும், விதி விலக்குகளையும் ஒரு சேர பயன்படுத்தி சரியாகக் கணிப்பதில்தான் ஜோதிடத்தின் மாட்சிமை அடங்கியிருக்கிறது.
இந்தக் கணிப்பு ஒவ்வொரு ஜோதிடருக்கும் அவரவரின் ஜாதகத்தில் புதன் இருக்கும் வலுவிற்கேற்ப வேறுபடும். துல்லியமான கணிப்பு என்பது ஜோதிடரின் பூர்வ புண்ணிய பலத்தை வைத்து பரம்பொருள் கொடுக்கும் அருட்கொடை.
எவ்வளவு அனுபவமுள்ள ஜோதிடராக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் தான் பார்க்கும் ஒவ்வொரு ஜாதகத்திலிருந்தும் ஒரு நுணுக்கமான விஷயம் அவருக்குக் கிடைத்தே தீரும்.
வாழ்க்கை முழுவதும் கற்றாலும், முழுமை பெற முடியாத சிறப்புக்கள் வேத ஜோதிடத்தில் இருப்பதால்தான் இந்த சாஸ்திரத்தை முழுவதும் கற்க ஒரு மனிதனுக்கு இரண்டரை முழு ஆயுள் தேவைப்படும் என்று ஞானிகளால் சொல்லப்பட்டது. அதன் அர்த்தம் எவர் ஒருவராலும் ஜோதிடத்தில் நூறு சதவிகித முழுமை பெற முடியாது என்பதே.
முழுக்கத் தெரிந்து கொள்ள முடியாத, ஏராளமான சூட்சுமங்களும், நுணுக்கங்களும் நிரம்பிய ஒரு கலையில், நீங்கள் ஒன்றைத் தெளிவாகச் சொல்வதற்கு அபாரமான ஞானமும், பரம்பொருளின் ஆசிகளும் வேண்டும். இதைத்தான் நம் கிரந்தங்கள் காலம், நேரம், யுக்தி பயன்படுத்தி, தெய்வத்தினை வேண்டி பலன் உரைக்கக் சொல்லுகின்றன.
எப்படிக் கணிக்க வேண்டும் என்பதற்கு சிறுவயதில் நான் கேள்விப்பட்ட ஜோதிடக் கதை ஒன்று...
ஜோதிடர் ஒருவர் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது கிணற்றடிக்கே ஒரு பெண் வந்து வணங்கி, தட்சணை வைத்து " அய்யா... ஐந்து வருடங்களுக்கு முன் காணாமல் போன என் மகன் திரும்பி வருவானா, மாட்டானா? உயிரோடு இருக்கிறானா, இல்லையா?" என்று கேட்க..
அவள் கேட்ட அடுத்த நொடி வாளி அறுந்து கிணற்றுக்குள் விழ, கண்மூடி யோசித்து கிரக நிலைகளைக் கணக்கிட்ட ஜோதிடர் " வீட்டிற்குத் திரும்பப் போ.. உன் மகன் சமையலறையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் " என்று சொன்னார்.
சென்ற பெண்ணும் உடனே சந்தோஷமாக திரும்பி வந்து " உண்மைதான். என் மகன் வீட்டில் இருக்கிறான்.. நீங்களே ஜோதிடர் " என்று வாழ்த்திச் சென்றாள்.
அருகில் இருந்த சீடன் " சுவாமி.. எப்படி பலன் சொன்னீர்கள்? " என்று கேட்டதற்கு " நீயாக இருந்தால் என்னடா பலன் சொல்வாய்? " என்று குரு கேட்டார்.
" கேள்வி கேட்ட போது அப சகுனமாய் வாளி அறுந்து கிணற்றில் விழுந்ததே.. மகன் இறந்து விட்டான் என்று பலன் சொல்லியிருப்பேன் " என்று சீடன் சொல்ல,
குரு சொன்னார்.. " வாளி அறுந்து கிணற்றில் விழுந்தது என்று ஏனடா கணிக்கிறாய்? கிணற்றில் இருந்து வெளியே வந்த நீர், கிணற்றினுள்ளே போய் விட்டது. குடும்பத்தை விட்டு வெளியேறிய மகன் திரும்ப குடும்பத்தினுள் வந்து விட்டான்".
இதுவே கணிப்பு. இவரே ஜோதிடர்.
( ஜன 28 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
Ragu story super sir
arumai.thank you ji.
Great Astroger…. In INDIA
every sentences in every article is to studied with enthusiasm. hail u ji.
wow sir, arumai neenga yeppadi intha maathiri gaanam ungalukku kidaikirathu.