adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
எதைத் தருவார் சனி…C-046 – Yedhai Tharuvar Sani ?

எதைத் தருவார் சனி..?

ஒன்பது கிரகங்களிலும் சனியும், ராகுவும் மட்டுமே ஒரு ஜாதகத்தில் ஊன்றிக் கவனித்துப் பலன் சொல்ல வேண்டியவை. ஏனெனில் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய அமைப்புகள் மற்றும் பாக்கியங்களைத் தடை செய்வதில் முன்னிலை வகிப்பவை இந்த இரண்டு பாபக் கிரகங்கள் மட்டும்தான்.

சனியையும், ராகுவையும் சரியாகக் கணிக்க முடிந்து விட்டால் ஜோதிடம் கைவசம் வந்து விட்டது என்று பொருள்.

மரணம் அல்லது ஆயுள், பொய் சொல்லுதல், வயதானவர்கள், இரவு, கோபம், தோல் பொருட்கள், உடல் உழைப்பால் பிழைத்தல், சட்டத்துறை, சட்டத்திற்கு புறம்பான செய்கை, கருப்பு நிறம், துக்கம், வேலைக்காரர், மேற்குத் திசை, தாழ்வு மனப்பான்மை, விவசாயம் செய்தல், கழுதை, அடிமை, கெட்ட நடத்தை, திடீர் சரிவு, முரட்டுப் பிடிவாதம், ஆண்மைக் குறைவு, அருவருப்பான இடங்கள், முறையற்ற காமம், எமன், திருட்டு.

அழுக்கான இடங்களில் பணி, போதைப் பழக்கம், திரவமான நீசப் பொருட்கள், வேஸ்ட் பேப்பர் மற்றும் குப்பைகள், சாராயம், மது, பெட்ரோல், தார், சாலை போடும் பணி, பழைய கிழிந்த துணிகள், எண்ணெய், எருமை மாடு, நயவஞ்சகம், இரும்பு, இடிந்த கட்டிடம், குட்டிச் சுவர்கள், கல்மண் சுமப்போர், ஆலைத் தொழிலாளர், எடுபிடி வேலை, துப்புரவுப் பணிகள், விறகுக் கடை, கலப்படம் செய்யும் தொழில், நீலம், விமான நிலையம், மூட்டை சுமத்தல், கூலி வேலை, சுரங்கம், கல் குவாரிகள், பிளாஸ்டிக், சிறைச்சாலைப் பணி, தண்டனை அனுபவித்தல், மக்கள் தொடர்பு, குற்றவாளிகளின் சேர்க்கை, செவிலியர், மருத்துவமனையின் நெடி,

பொதுப்பணத்தை மோசடி செய்தல், ஊராட்சி மன்றம், உடல் ஊனம், நடக்க இயலாத நிலை, அநாதை விடுதிகள், கருப்பு நிறப் பொருட்கள், மை, வெட்டியான் பணி, புரோகிதம், பிணத்துடன் இருத்தல், மரணத்திற்குப் பின் என்ன என்கிற தேடல், சித்து நிலை, ஆன்மிகம், தவம், கூடு விட்டு கூடு பாய்தல், சிறுதெய்வ வழிபாடு, ஈஸ்வரப் பற்று, சந்தேகம், நடைபாதை வியாபாரம், வளவளவென்ற விஷயமற்ற பேச்சு, குள்ளம், முட்டாள்தனம், கழிப்பிடத்தைப் பராமரித்தல், கடன், பசியுடன் இருத்தல், வறுமை, தீராத நோய், ஏமாற்றுதல் போன்ற அனைத்துக்கும் சனியே காரகன் ஆவார்.

ஒரு ஜாதகத்தில் தனித்து வலுப் பெறும் நிலையில் சனி மேலே நான் சொன்ன அவரது செயல்களை தனது தசையில் வலுவாகச் செய்வார். சுபத்துவமும் சூட்சும வலுவும் அடைந்திருந்தால் மேற்சொன்ன அமைப்புகளின் மூலம் நன்மைகளையும், நேர்வலு மற்றும் பாபத்துவம் அடைந்திருந்தால் இவற்றின் மூலம் தீமைகளையும் செய்வார்.

சனி ஒருவருக்கு லக்னாதிபதியானாலோ அல்லது தொழில் ஸ்தானங்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலோ, பத்தாமிடத்து அதிபதியானாலோ அல்லது பத்தில் இருந்தாலோ வேறுவகையில் பத்துக்குடையனுடன் இணைந்தாலோ மேலே நான் சொன்ன விஷயங்களில் ஒருவருக்கு வருமானம் வரும்.

சனி சூட்சும வலுவும், சுபத்துவமும் அடைந்திருந்திருக்கும் நிலைகளில் ஒருவருக்கு தனது காரகத்துவங்களின் வழியாக அபரிமிதமான வருமானங்களைத் தருவார். அவருடைய வலுவைப் பொருத்து ஒருவருக்கு மேற்கண்ட அமைப்பில் முதலாளியாகவோ, வேலைக்காரனாகவோ வருமானம் அமையும்.

உதாரணமாக சனி முற்றிலும் நேர் வலுவிழந்து, சுபத்துவம் அடைந்து பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டு, பத்தாமிடம் திரவம் சம்பந்தமான ராசியாக இருப்பின் ஒருவரைத் தனது தசையில் மதுபானத் தொழிற்சாலைகள், பெட்ரோல், ஆசிட் போன்ற நீசத் திரவங்கள் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தொழிலதிபராக்கி வருமானம் தருவார்.

இதே அமைப்பில் சனி நேர்வலுப் பெற்று சுபத்துவமின்றி அமைந்தால் மதுக்கடை பார்களில் பாட்டில் பொறுக்கும் வேலை, பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடும் பணி போன்றவை அமையும்.

சமீபகால விஞ்ஞான வளர்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகமான பிளாஸ்டிக் கூட சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதுதான். பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட ஹார்டுவேர் கடை மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட கடைகளும் சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதுதான். இவற்றில் பணம் வருமா போகுமா என்பது சனியின் சூட்சும வலுவைப் பொருத்தது.

மிகவும் முக்கியமாக ஒருவர் குடிப் பழக்கம் போன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவதும் சனியால்தான். லக்னத்தோடு சம்பந்தப்பட்ட பாபத்துவம் பெற்ற சனி ஒருவரை குடிப் பழக்கத்திற்கு உள்ளாக்குவார். குடியில் இருந்து மீள முடியாத நிலையை லக்ன பாபர்களின் தசைகளிலோ, தனது தசையிலோ தருவார்.

ஒருவருக்கு மகர லக்னமாகி லக்னாதிபதியான சனி ஏழாமிட நீர் ராசியான கடகத்தில் பகை பெற்று அமர்ந்து, எவ்வித சுபத்துவமும் பெறாமல் லக்னத்தைப் பார்க்கும் நிலையில் லக்னமும் சுபர் பார்வையோ, தொடர்போ இல்லாமல் இருந்தால் அவர் குடிக்கு அடிமையானவராக இருப்பார். சனி தசை, புக்திகளில் அவருக்கு மது அறிமுகப்படுத்தப்படும். இங்கே லக்னாதிபதி லக்னத்தைப் பார்க்கிறார் என்பது செல்லுபடியாகாது.

அதேபோல ஒருவருக்கு சனியின் வீடுகள் ஜீவன ஸ்தானமானாலோ ஜீவனாதிபதியுடன் வலுப்பெற்ற சனி தொடர்பு கொண்டாலோ குப்பைகள், வேஸ்ட் பேப்பர் போன்ற கழிவுப் பொருட்கள், கழிப்பிடங்கள், பாத்ரூம் பொருட்கள் விற்றல் போன்றவைகளின் மூலம் வருமானம் வரும்.

பெட்ரோலிய பொருட்களுக்கும் சனியே காரணகர்த்தா ஆவார். பெட்ரோலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் சனியே காரணம். பெட்ரோலின் கடைநிலை வடிவமான ரோடு போட உபயோகப்படும் தார் மற்றும் வாகனங்களின் டயர்கள் போன்றவைகள் சனிக்குச் சொந்தமானவை.

நேர்வலு மட்டும் அடைந்து பாபத்துவம் அடைந்த சனி ஒருவரை உடலால் பிழைக்கும் தொழில்களில் ஈடுபடுத்துவார். கைவண்டி இழுப்பவர்கள், மூட்டை தூக்கி பிழைப்பவர்கள், கட்டிடத் தொழிலில் செங்கல் சுமக்கும் சித்தாள் வேலை செய்பவர்கள் போன்றவர்கள் சனியால் உருவாக்கப்பட்டவர்கள்தான்.

சனி நீச பங்கம் பெற்ற நிலைகளில் சுக்கிரனுடன் இணைந்து தொழில் ஸ்தானத்தோடு தொடர்பு கொண்ட நிலையில் ஒருவர் பெண்கள் சம்பந்தப்பட்ட நீசத் தொழிலில் இருப்பார். அதேநேரத்தில் சனி பெண்களின் ஜாதகத்தில் நேர்வலு மட்டும் பெற்று சுக்கிரனோடோ அல்லது சுக்கிரனின் வீடுகளோடோ தொடர்பு கொள்கையில் ஜாதகியை ஒழுக்கம் குறையச் செய்வார்.

கருப்பு நிறம் சனிக்கு உரியது என்று எப்படிச் சொல்லப்பட்டது?

கருப்பு நிறம் சனிக்கு சொந்தமானது என்பதால் சனி வலுப் பெற்றவர்கள் கருப்பு நிறப் பொருட்கள் மேல் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். கருப்பு சம்பந்தப்பட்ட பொருட்களில் அவர்களுக்கு லாபம் வரும்.

கருப்பு என்பது ஒரு நிறம் அல்ல. அது ஒரு நிறமற்ற நிலை என்பதை நான் முன்பே விளக்கி இருக்கிறேன். மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறமான, ஒளி ஒரு இடத்தில் இல்லாதபோது, அங்கிருக்கும் நிறமற்ற நிலையே கருப்பு எனப்படுகிறது.

கிரகங்கள் பிரதிபலிக்கும் அல்லது வெளிப்படுத்தும் ஒளியின் நிறத்தை வைத்தே கிரகங்களின் நிறங்களை ஞானிகள் நமக்குச் சொன்னார்கள். பூமியில் அந்த நிறமுள்ள பொருட்களின் மேல் சம்பந்தப்பட்ட கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதை உணர்ந்தே கிரக நிறம், ராசிக் கல், உலோகம் போன்றவைகளும் பிரிக்கப்பட்டன.

உதாரணமாக சிகப்பும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் ஒளியை வெளிப்படுத்தும் சூரியனுக்கு அக்னிக் கலரும், பச்சை வண்ணத்தை வெளிப்படுத்தும் புதனுக்கு பச்சை நிறமும், அந்த நிறக் கல்லான மரகதப் பச்சையும் ஞானிகளால் ஒதுக்கப்பட்டன. புதனின் தேவதை வடிவமாகவும், பச்சை நிறமுடையவளாகவும் அன்னை மீனாட்சி உருவகப்படுத்தப்பட்டதும், அன்னையின் கையில் பச்சைக் கிளி இருப்பதற்கும் காரணம் இதுவே.

இதுபோலவே தூய வெள்ளை நிறத்தில் பால் போல அதிகாலை நேரத்தில் கிழக்கு வானில் பிரகாசமாக ஒளிரும் சுக்கிரனுக்கு பால் வெள்ளை நிறமும், நள்ளிரவில் பாதி வெண்மை நிறத்தில் ஒளிரும் சந்திரனுக்கு, பாதி வெள்ளை நிறமும் ஞானிகளால் ஒதுக்கப்பட்டன.

பூமியில் இருந்து பார்க்கும்போது மிகத் தெளிவாக சிவப்பு நிறத்தில் தெரியும் செவ்வாய்க்கு ரத்தச் சிவப்பு நிறம் ஒதுக்கப்பட்ட காரணமும் அது சிவப்பு நிறக் கதிர்களை பிரதிபலிப்பதால்தான். இதன் அடிப்படையில்தான் மிகப் பிரகாசமாக மஞ்சள் நிறத்தில் நம் கண்களுக்கு தெரியும் குருவுக்கும் மஞ்சள் நிறம் ஒதுக்கப்பட்டது.

மேற்கண்ட கிரகங்களுக்கு ஒளிப் பிரதிபலிப்பு நிலை இருப்பதன் காரணமாக அவை வெளிப்படுத்தும் நிறங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், சூரிய ஒளியை பிரதிபலிக்க முடியாத அதிக தூரத்தில் இருக்கும் சனிக்கு ஆழ்ந்த இருட்டைக் குறிக்கும் கருப்பு எனப்படும் கருநீலம் நமது ஞானிகளால் ஒதுக்கப்பட்டது.

சனியை போலவே ஒளியற்ற கிரகமாக அமைந்த ராகு- கேதுகளுக்கும் இருட்டைக் குறிக்கும் கருப்பு மற்றும் கருநீலம் ஒதுக்கப்பட்டதன் காரணம் இதுவே..

அஷ்டமச் சனி, ஏழரைச் சனி என்ன செய்யும்?

அன்றைய தின கிரக நிலையான கோட்சாரத்தில் ஒருவரின் ராசிக்கு எட்டாமிடத்தில் வரும் அஷ்டமச் சனி எனும் நிலையும், ஒருவரின் ராசியிலும் அதற்கு முன்பின் வீடுகளில் வரும் ஏழரைச் சனி எனும் நிலையும் தனிமனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை.

நமது ஜோதிட சாஸ்திரம் ஒருவருக்கு முப்பது வயதுகளின் நெருக்கத்தில் நடக்கும் அஷ்டமச் சனியும், ஏழரைச் சனியும் கடுமையான எதிர்மறை பலன்களைத் தந்து அவருக்கு வாழ்வின் பரிமாணங்களைப் புரியவைக்கும் என்று குறிப்பிடுகிறது.

அஷ்டமச் சனி என்பது ஒருவருக்கு சுமாராக இரண்டரை வருடம் முதல் மூன்று வருட காலங்களுக்கு நடக்கும். ஏழரைச் சனி என்பது ஏழரை வருடம் முதல் எட்டு வருடங்கள் தொடரும்.

அஷ்டமச் சனி நேரங்களில் ஒருவருக்கு நெருங்கிய உறவினர் மரணம், வருமானம் இல்லாத நிலை, எதிலும் தோல்வி, வம்பு, வழக்கு, வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நிம்மதியற்ற தன்மை, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் பிழைத்தல் போன்றவைகள் நடக்கும்.

ஏழரைச் சனி காலங்களில் நான் மேலே சொன்னவைகளோடு கூடுதலாக ஒருவர் நல்லது எது கெட்டது எது, நண்பர் யார், சுற்றியுள்ளவர்கள் எப்படி என்பது போன்ற அனுபவங்களைப் பெறுவார். அவரவர் வயது, வாழ்க்கை முறை, இருக்கும் இடம் போன்றவைகளைப் பொருத்து சனியின் பலன்கள் நடக்கும்.

குறிப்பாக ஏழரைச்சனி ஆரம்பிப்பதற்கு ஒரு வருடம் அல்லது சில மாதங்களுக்கு  முன்பாக ஒருவரைத் தொழில் ஆரம்பிக்க வைத்து, சனி ஆரம்பித்ததும் சிக்கல்களை உண்டாக்கி பணத்தை இழக்க வைத்து புலி வாலைப் பிடித்த கதையாக தொழிலை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் சிக்கலான  அனுபவங்களை சனி தருவார்,

ஏழரைச் சனியின் நடுப்பகுதியான ஜென்மச் சனி எனப்படும் சொந்த ராசியில் சனி அமரும்போது கடுமையான மன உளைச்சல்களைத் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். அதிலும் ஜென்ம நட்சத்திரத்தில் செல்லும்போது எதிர்மறையான வழிகளில் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை சனி புரிய வைப்பார். சுய நட்சத்திரத்தில் செல்லும் சனியால் வாய்விட்டு அழக்கூடிய சம்பவங்கள் நடக்கும்.

 ( ஜன 22 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *