adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 3 (8.9.2014)

பி.பி. பச்சியப்பன்,

கோட்டை, ஈரோடு.
பு சூ சுக்
 ரா ராசி
சனி ல,குரு செவ்,கே
சந்
கேள்வி:-
81 வயதில் வேதனைகளை அனுபவிக்கிறேன். மரணம் எப்போது? எப்படி இறப்பேன்? நோயா? அடிபட்டா? கஷ்டப்பட்டா? துணையாக இருந்த மனைவி சென்ற வருடம் இறந்து விட்டார். மகன் வீட்டில் சாப்பிடுகிறேன். நீடிக்குமா? அனாதை முதியோர் இல்லம் போக வேண்டி இருக்குமா? அடுத்த பிறவி உண்டா? நடக்கும் சனிதசை எப்படி? ஏழரைச்சனி வேறு வருகிறது. வயதானவன் என்பதால் முன்னுரிமையுடன் பதிலை எதிர்பார்க்கிறேன்..
பதில்:
வயதான காலத்தில் மரணத்தைவிட கொடியதுன்பம் மனைவி முன் செல்வதுதான். சிம்மலக்னம் தனுசுராசியாகி லக்னாதிபதி சூரியன் உச்சம். அதோடு லக்னசெவ்வாயுடன் சூரியன் பரிவர்த்தனை. ராசியையும் லக்னாதிபதியையும் லக்னத்தில் அமர்ந்த குரு பார்க்கும் யோகஜாதகம்.
சந்திரகேந்திரத்தில் புதன் நீசபங்கம் பெற்றுள்ளதால் உங்களுக்கே ஓரளவு ஜோதிடம் தெரியும். ஜாதகப்படி வாக்குஸ்தானம் வலுவாக இருப்பதால் நீங்கள் ஜோதிடராக இருக்கலாம்.
லக்னாதிபதி உச்சவர்க்கோத்தமம் பெற்று நோய் ஸ்தானாதிபதியின் தசை நடப்பதால் உங்களுக்கு நோயால் மரணம் ஏற்படும். முதியோர் இல்லம் செல்ல வாய்ப்பே இல்லை. மகனின் ஆதரவு உண்டு. ஆனால் லக்னாதிபதிக்கு விரோதியான சனிதசை நடந்து ஏழரைச்சனியும் வரப்போவதால் வீட்டில் சங்கடங்கள் இருக்கும்.
மரணத்தைப் பற்றித் தெரிந்தாலும் சொல்லாதே என்று வேதஜோதிடம் சொல்லுகிறது. ஏனென்றால் படைத்த பரம்பொருளுக்கு கடைசிநிமிடம் வரை எதையும் மாற்றும் அதிகாரம் இருக்கிறது. மார்க்கண்டேயன் கதை இதற்கு உதாரணம். இருந்தாலும் உங்களின் வேதனை கருதி பதில் தருகிறேன்.
உங்களுக்கு ஆறில் ஆட்சி பெற்ற சனிதசையில் சுயபுக்தி தற்பொழுது நடக்கிறது. பொதுவாக ஆறுக்குடையவன் வலுப்பெறக்கூடாது என்றாலும் சனியை விட லக்னாதிபதி உச்சம் பெற்றதால் சனிதசை நோயைத்தவிர்த்து வேறு கெடுதல்கள் செய்யாது.
சனியே ஏழுக்குடையவனும் ஆவதால் சனிதசையில், இரண்டுக்குடைய புதன் புக்தியில், அஷ்டமாதிபதி குருவின் பார்வையைப் பெற்ற ஏழில் இருக்கும் ராகுவின் அந்தரத்தில் உங்களின் நல்முடிவு இருக்கும். அடுத்த பிறவி உண்டு.
என். பார்த்திபன்
வீரக்கல், மேட்டூர் அணை.
சுக் சூ பு ரா
ராசி
சந் குரு செவ் கே  ல சனி
கேள்வி:-
30 வயது. தொழில், திருமணம் இரண்டும் இல்லை. நோயாளி அம்மா. தொழில் இல்லாத அப்பா. வீடும் கட்ட முடியவில்லை காடும் விற்க முடியவில்லை. எனக்கும் அப்பாவுக்கும் ஒரே நேரத்தில் ஏழரைச்சனி ஆரம்பிப்பதால் என்ன ஆகுமோ என பயமாக இருக்கிறது நல்ல பதிலையும் பரிகாரத்தையும் குருஜி அவர்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
பதில்:-
துலாம்லக்னம் தனுசுராசி மூலம் நட்சத்திரமாகி, லக்னத்தில் உச்சவக்கிர சனி, இரண்டில் செவ்வாய், எட்டில் ராகு என களத்திரதோஷ ஜாதகம். ஆனால் லக்னத்திற்கு ஆறில் சந்திரகேந்திரத்தில் தனித்து எவர் பார்வையும் இன்றி சுக்கிரன் உச்சம் பெற்றது மகாயோகம். எனவே திருமணத்திற்கு பின் வாழ்க்கை அற்புதம்.
நடைபெறும் சந்திரதசை ராகுபுக்தியிலேயே திருமணம் நடக்கும். குரு புக்தியில் தந்தை ஆவீர்கள். ஆனால் வரும் நவம்பர்முதல் ஏழரைச்சனி நடக்க உள்ளதால் சனி முடிந்தபிறகே பொருளாதாரரீதியாக செட்டில் ஆவீர்கள்.
தகப்பனாருக்கும் உங்களுக்கும் ஏழரைச்சனியாகி, உங்களுக்கு சந்திரதசை நடப்பதால் குருநாதர் ஜோதிடபானு அதிர்ஷ்டம் சி.சுப்பிரமணியம் அவர்கள் அடிக்கடி எழுதும் பரிகாரமான திங்கள்கிழமைதோறும் சிவன் கோவிலில் மூலவரின் அபிஷேகத்திற்கு ஆழாக்கு பால் கொடுங்கள். சனி முடியும்வரை காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். தனித்த சன்னதியில் உள்ள சனிபகவானை கும்பிட வேண்டாம்.
பெயர் தெரிவிக்க விரும்பாதவர்.
கோட்டார், நாகர்கோவில் -2
ரா  குரு
 சனி ராசி  சந் பு
 சூ
ல கே செவ் சுக்
கேள்வி:-
மனைவியின் கள்ளத்தொடர்பால் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது. இரண்டு வருடத்திற்கு முன் பிரிந்து சென்று என்னிடம் விவாகரத்து பெறாமல் கள்ளக்காதலனோடு குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறாள். காதலனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 15 வயது பெண், 10 வயது ஆண் குழந்தைகள் என்னிடம் இருக்கிறார்கள். தற்பொழுது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் திரும்பி வந்து விடுவாளோ என்று பயமாக இருக்கிறது. நான் மற்றொரு திருமணம் செய்து கொள்ளலாமா? அல்லது கடைசி வரைக்கும் மகன், மகளோடு வாழ்க்கையை நடத்தி விடலாமா? குருஜி அவர்கள் என் குழப்பத்தைத் தீர்க்க வேண்டுகிறேன்.
பதில்:-
விருச்சிக லக்னம், கடக ராசியாகி செவ்வாய் பனிரெண்டில் மறைந்து ராசிக்கு ஏழாம் வீட்டையும், லக்னத்திற்கு ஏழாம் வீட்டையும் அதிலுள்ள ராகுவையும் பார்க்கிறார். மனைவிகாரகன் சுக்கிரன் பரிபூரண நீசமாகி அம்சத்தில் நீசம் பெற்ற சனியுடன் இணைந்திருக்கிறார். நான்கில் உள்ள சனியை எட்டில் உள்ள குரு மற்றும் பத்தில் உள்ள சூரியன் பார்க்கிறார்கள். சுக்கிர தசையில் சந்திர புக்தி நடப்பு.
நீசசுக்கிரதசை ஆரம்பித்த உடனேயே மனைவி நீசமாகிவிட்டாள். ஐம்பது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் மகனையும், மகளையும் என்ன செய்வீர்கள்? வாழ்க்கை என்பதே ஒருகட்டத்தில் குழந்தைகளுக்காக வாழ்வதுதான். பெற்ற குழந்தைகளின் நலனுக்காக ஒரு தகப்பன் எதையும் செய்யலாம். யாரையும் மன்னிக்கலாம்.
உங்கள் ஜாதக அமைப்புப்படி உங்களுக்கு இரண்டாவது திருமணம் கிடையாது. அதேநேரத்தில் சுக்கிரதசை ராகுபுக்தியில் மனைவி உங்களிடமே திரும்பி வருவார். குழந்தைகளுக்காக மன்னித்து ஏற்றுக் கொள்வீர்கள்.
ஆர். ஆர். மூர்த்தி
சூளைமேடு சென்னை.
சனி
 செவ் ரா ராசி
பு  சந் கே
 சூ சுக்  குரு
கேள்வி:-
45 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. எப்பொழுது நடக்கும்? காதல் திருமணமா? பெற்றோர் பார்த்தா? தொழில் சரியில்லை. அரசுவேலை கிடைக்குமா? குடும்பத்தில் சகோதரர்களுக்குள் ஒற்றுமை இல்லை. காரணம் என்ன? பல வருடங்களாக தந்தைக்கும் எனக்கும் பேச்சுவார்த்தை இல்லை. சரியாகுமா? தங்களின் ஜோதிடபலன்களை மாலைமலரில் தொடர்ந்து வாசிக்கும் எனக்கு நல்வாக்கு சொல்லுங்கள்.
பதில்:-
45 வயதில் காதலிக்க ஆள் இருந்தால் உடனே திருமணம் செய்ய வேண்டியதுதானே? ஜோதிடரிடம் கேள்வி அனுப்பி ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? உங்களுக்கு மிதுனலக்னம், சிம்மராசியாகி லக்னாதிபதி புதன் எட்டில் மறைந்து, லக்னத்திற்கும் புதனுக்கும் நீசவக்ரம் பெற்ற சனியின் பார்வை. அதே சனி ஐந்தில் உள்ள மனைவிஸ்தானாதிபதி குருவையும் பார்க்கிறார். ராசிக்கு ஏழில் ராகுவுடன் செவ்வாய் இணைந்து ராசியைப் பார்க்கிறார். சுக்கிரன் ஏழில் இருப்பதும் களத்திரதோஷம்.
லக்னம், லக்னாதிபதி ராசி மூன்றும் கெட்டால் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் முக்கியமான சுகங்கள் கிடைக்காது. தற்பொழுது மிதுன லக்னத்திற்கு வரக்கூடாத செவ்வாய்தசை நடக்கிறது. இந்த தசையில் சகோதர விரோதம், சகோதர விரயம் இருக்கும்.
தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் பாபிகளான செவ்வாயும், ராகுவும் இருந்து, ஒன்பதுக்கு அதிபதி சனி நீசம் பெற்று அவரே ராசிக்கு ஒன்பதிலும் இருப்பதால் அப்பா உங்களுக்கு இருந்தும் இல்லாதவராக இருப்பார். லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்தால் மட்டுமே வாழ்க்கையில் நல்லவை நடக்கும்.
வி. கல்பனா காயத்ரி
மைலாப்பூர் சென்னை.
பு செவ் சுக் சனி
 சூ சந் ராசி  கே
ரா
 குரு
கேள்வி:-
தினமும் மாலைமலர் படிக்கும் நான் உங்களின் ஜோதிடக்கருத்துக்களை விரும்பிப் படிக்கிறேன். வாழ்க்கையில் இதுவரை துன்பங்களும் வேதனைகளும் தான். காலம் கடந்து திருமணம் ஆகியும் மாங்கல்யம் நிலைக்கவில்லை. இது எதனால்? கணவரை இழந்த வேதனையில் தவிக்கிறேன். அவரது அரசாங்க வேலை எனக்கு கிடைக்குமா? டிகிரி படித்திருந்தும் எனக்கு எந்த விவரமும் தெளிவும் இல்லை. இரண்டு ஆண் குழந்தைகளின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். அவர்களாவது தீர்க்காயுளுடன் இருப்பார்களா? எதிர்காலம் எப்படி? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
பதில்:-
விருச்சிகலக்னம் கும்பராசியாகி லக்னாதிபதி செவ்வாய் ஆறில் மறைந்து ஆட்சி பெற்று இரண்டில் உள்ள குருவின் பார்வையைப் பெறுகிறார். சூரியசந்திரர்கள் இணைந்து நான்கில் அமர்ந்து பத்தாம் வீட்டை பார்த்து தர்மகர்மாதிபதியோகம் உண்டாகி அரசுவேலை பார்க்கும் அமைப்புள்ள ஜாதகம். ஆனால் ஏழில் சனி அமர்ந்து, ஏழுக்குடைய சுக்கிரன் ஆறில் மறைந்து செவ்வாயுடன் இணைந்து குருவின் பார்வையை பெற்றதும், தற்பொழுது சனிதசை நடப்பதும் கடுமையான களத்திரதோஷம்.
திருமணத்தின்போதே நல்ல ஆயுள் உள்ள ஜாதகத்தை இணைத்திருக்க வேண்டும். ஆனால் விதி யாரைவிட்டது? சனிதசையில் செவ்வாயின் பார்வையைப் பெற்ற கேதுபுக்தியில், கேது செவ்வாயாக மாறி கணவரின் மரணம். தற்பொழுது சுக்கிரபுக்தி நடப்பதால் துணை ஒன்று கிடைக்கும்.
2016-ல் சூரியபுக்தியில் கணவரின் வேலை கிடைத்து இறுதிவரை அரசு சம்பளமும் பென்சனும் பெறுவீர்கள். உங்களின் ஜாதகப்படியும் மகன்களின் ஜாதகப்படியும் பிள்ளைகள் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். எதிர்காலம் கவலைப்படும்படி இருக்காது. அனைத்து துன்பங்களையும் அனுபவித்தபின் பரிகாரங்கள் தேவையில்லை.
ஏ. வி. பாலசுப்ரமணியன்
34, கூத்தனூர்.
ராசி  சந் ரா
செவ் கே
சூ பு சுக் குரு சனி
கேள்வி:-
அரசுவேலை கிடைக்குமா? 34 வயது. திருமணம் எப்பொழுது?
பதில்:-

ரிஷபலக்னம் கடகராசியாகி, சூரியன் எட்டில் புதனுடன் மறைந்து, பத்தாம் வீட்டிற்கு சுபர் தொடர்பு எதுவும் இல்லாததாலும், வாக்குஸ்தானம் வலுப்பெற்று குருவுடன் சனி இணைந்ததாலும் தனியார் துறையில் சொல்லிக் கொடுக்கும் பணியில் இருப்பீர்கள். சந்திரனுக்கு ஏழில் செவ்வாய் உச்சம் பெற்று, ராசியில் ராகு அமர்ந்ததால் தாமததிருமணம்தான். 2016ம் ஆண்டு திருமணம் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *