adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சுக்கிரன் தரும் பலன்கள்…! C-030 – Sukkiran Tharum Palangal..!
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 
 
கைப்பேசி எண் : 8681 99 8888
 
வேத ஜோதிடத்தின்படி செவ்வாய் ஆண் தன்மையும், சுக்கிரன் பெண் தன்மையும் உடைய கிரகங்கள். பரிபூரண ஆண் கிரகமான செவ்வாய் முழுமையான பெண் தன்மையைக் கொண்ட சுக்கிரனுடன் இணைவது, சுக்கிரனை முழுக்க முழுக்கப் பலவீனப்படுத்தும்.
 
சுக்கிரனுடன் செவ்வாய் இணைந்த நிலையில் வரும் சுக்கிர தசை, புக்திகளில் ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ மாறுபாடான பலன்கள் நடக்கும். இதில் சுக்கிரன் வலுவாக இருந்து செவ்வாய் வலுக் குறைந்திருந்தால் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.
மாறாக சுக்கிரன் பலவீனமாகி, செவ்வாயும் சுபத்துவம் பெறாமல் பாப வலுக் கூடியிருக்கும் நிலையில் சுக்கிர தசை வருமாயின் வாழ்க்கைத் துணைக்கு மனக் கஷ்டங்களைக் கொடுக்கக்கூடிய செயல்களை இருபாலாரும் செய்வர்.
 
இதுபோன்ற நிலைகளில் நம்பிக்கைத் துரோகம், ஒழுக்கம் தவறுதல் போன்ற பலன்கள் சுக்கிரனின் பலம், மற்றும் பலவீனத்தைப் பொருத்து கூடுதல் குறைவாக நடக்கும். அதற்காக ஜாதகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் இணையப் பெற்றவர்கள் அனைவரும் ஒழுக்கம் தவறுவார்கள் என்று சொல்லி விட முடியாது.
 
இதுபோன்ற நுணுக்கமான பலன்களுக்கு சுக்கிர, செவ்வாய் இருவரின் சுப மற்றும் பாப வலுக்கள் துல்லியமாகக் கணிக்கப்பட வேண்டியது மிக முக்கியம்.
 
இருவரும் சுபத்துவம் அடைந்திருக்கும் நிலைகளில் இந்த அமைப்பு பிருகு மங்கள யோகமாக மாறி ஜாதகருக்கு பூமி சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட், குடியிருப்புகள் கட்டித்தரும் பில்டர், உணவுக் கூடங்கள் போன்ற தொழில்களில் பெரிய லாபங்களைத் தரும்.
 
சுக்கிரனால் பெறப்படும் சிறப்பான யோகங்களில் மாளவ்ய யோகம் மிகவும் முக்கியமானது. ஒருவருக்கு சுக்கிரன் லக்ன கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெறுவதால் வரும் யோகம் இது. லக்னம் வலுவிழந்து ராசி வழி நடத்தும் நிலையில் சந்திரனுக்கு கேந்திரங்களிலும் இந்த யோகம் பலன் தரும். ஆனால் லக்ன கேந்திரமே முக்கியமானது.
 
எந்த லக்னமாக இருந்தாலும் ஒருவருக்கு மாளவ்ய யோக அமைப்பில் சுக்கிரன் அமர்ந்து சரியான பருவத்தில் அவரது தசையும் வருமாயின் சுக்கிரனின் காரகத்துவங்கள் முழுமையாகக் கிடைக்கும். சுக்கிரனின் தசையோ, புக்தியோ நடக்கும்போது திருமணம், வீடு, வாகனம் போன்ற அடிப்படைத் தேவைகளை சுக்கிரன் நிறைவேற்றித் தருவார்.
 
மேலும் சுக்கிரனின் செயல்பாடுகளான கலைத்துறை, உணவு விடுதிகள், டெக்ஸ்டைல்ஸ், ஆடம்பரப் பொருட்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகரை ஈடுபடுத்தி லாபம் தருவார்.
 
தனித்தனியாக சுக்கிரன் ஒவ்வொரு லக்னத்திற்கும் என்ன பலன்களைத் தருவார் என்று பார்ப்போமேயானால் மேஷ லக்னத்தவருக்கு குடும்பம் மற்றும் களத்திர வீடுகள் எனப்படும் இரண்டு ஏழுக்குடையவரான சுக்கிரன் ஏழாமிடத்தில் ஆட்சி மற்றும் மூலத் திரிகோண பலம் அடைவதன் மூலம் இந்த யோகம் உண்டாகும்.
 
சுக்கிரன் ஒரு இயற்கைச் சுபர் என்பதால் சுப கிரகங்கள் கேந்திரத்தில் இருப்பதால் கேந்திராதிபத்திய தோஷம் உண்டாகும் என்பதன் அடிப்படையில் இந்த இடத்தில் சுக்கிரன் தனித்திருப்பது சிறப்பல்ல. யோகத்தை விட இந்த இடத்தில் தோஷமே முன் நிற்கும் என்பதால் மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் ஏழில் தனித்து அமைவது சரியான அமைப்பாகாது.
 
மேலும் சுக்கிரன் ஏழில் இருப்பதினால் உண்டாகும் களத்திர தோஷ நிலையும் கூடுதலாக இணையும். எனவே மேஷத்திற்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் தனித்திருப்பதை விட வேறு கிரகங்களுடன் இணைந்திருப்பது கேந்திராதிபத்திய தோஷத்தை குறைத்து நன்மைகளை அதிகப் படுத்தும்.
 
அதேநேரத்தில் ஏழில் இருக்கும் சுக்கிரன் லக்னத்தைப் பார்ப்பார் என்பதால் ஒரு சுப கிரகம் லக்னத்தைப் பார்ப்பது சிறப்பான நிலை என்பதன் அடிப்படையில் ஜாதகர் நல்ல குணங்களுடன் இருப்பார். கலா ரசிகனாகவும், பெண் சுகத்தில் விருப்பம் உள்ளவராகவும் இருப்பார். சுக்கிர தசையில் பெண்கள் மூலமான அமைப்புகளில் நன்மைகளைப் பெறுவார்.
 
ரிஷபத்திற்கு சுக்கிரன் லக்னாதிபதியாகி, லக்னத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தைத் தருவார். இந்த அமைப்பு ரிஷப லக்னத்திற்கு மிகவும் சிறப்பான ஒரு நிலையாகும். இங்கிருக்கும் சுக்கிரன் கிருத்திகை நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் யோகம் கூடுதலான சிறப்பை அளிக்கும்.
 
கிருத்திகை நான்காம் பாவத்தில் சுக்கிரன் அமர்ந்தால் நவாம்சத்தில் உச்சம் பெறுவார் என்பதால் இந்த அமைப்பில் பிறந்த ரிஷப லக்னக்காரர்கள் சுக்கிர தசையில் சிறந்த நன்மைகளை அடைவார்கள்.
 
முப்பது வயதிற்கு மேல் இவர்களுக்கு சுக்கிர தசை நடப்பில் வருமாயின் நல்ல வீடு, உயர்தர வாகனம், புரிந்து கொண்ட வாழ்க்கைத் துணை, கலைத்துறை, பெண்களால் லாபம், அதிகமான பெண்கள் வேலை செய்யும் நிறுவனங்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடைகள் விற்கும் கடை, ஹோட்டல் போன்றவற்றில் ஜாதகரை ஈடுபடுத்தி லாபங்களைத் தருவார்.
 
மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் பத்தாம் வீட்டில் உச்சமாகி அவரது தசையில் சிறந்த யோகங்களைத் தருவார். இங்கிருந்து தசை நடத்தும் சுக்கிரனால் ஜாதகருக்கு இளமையிலேயே அனைத்துப் பாக்கியங்களும் கிடைக்கும். ரிஷபத்திற்கு சொன்னதைப் போலவே கலைத்துறை ஈடுபாடு, ரெஸ்ட்டாரண்ட், டெக்ஸ்டைல்ஸ் போன்றவற்றில் ஜாதகரை ஈடுபடுத்தி லாப அமைப்புகளைச் செய்வார்.
 
மிதுனத்தவர்களுக்கு இங்கிருக்கும் சுக்கிரனால் நல்ல அழகிய வாழ்க்கைத் துணை, அருமையான வீடு, சொகுசு வாகனம் ஆகியவைகள் சுக்கிர தசையிலோ சுக்கிரனின் வீடுகளில் இருக்கும் கிரகங்களின் தசைகளிலோ கிடைக்கும். சுக்கிரன் வேறுவழிகளில் பலவீனம் அடையாமலோ, பாபர் சம்பந்தம் ஏற்படாமலோ இருக்க வேண்டியது முக்கியம்.
 
கடக லக்னத்திற்கு சுக்கிரன் நான்காமிடத்தில் ஆட்சியும் மூலத் திரிகோணமும் பெற்று யோகம் செய்வார். இங்கிருக்கும் சுக்கிரன் திக்பலமும் பெறுவார் என்பதால் இது ஒரு கூடுதலான நன்மைகளை ஜாதகருக்கு தரும் என்றாலும் சுக்கிரன் இந்த இடத்தில் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆட்படுவார் என்பதால் என்னதான் யோகம் செய்தாலும் சில நெருடல்களும் இருக்கும்.
 
மேலும் கடக, சிம்ம லக்னங்களுக்கு நல்ல நிலைகளில் இருந்தாலும் சுக்கிரன் மனப்பூர்வமாக நன்மைகளைச் செய்வது இல்லை. சுக்கிரன் இவ்விரண்டு லக்னங்களின் அதிபதிகளான சூரிய, சந்திரர்களை தனது பகைவர்களாக கருதுவதும், கடகத்திற்கு நான்காவது கேந்திரத்திலும், சிம்மத்திற்கு பத்தாவது கேந்திரத்திலும் வலுப் பெற்று கேந்திராதிபத்திய தோஷத்தைத் பெறுவதுமே இதன் காரணம்.
 
கடகத்திற்கு அவர் பாதகாதிபதியாக இருந்தாலும், தனது கேந்திர வீட்டிற்கு எட்டாமிடமான பதினொன்றாம் வீட்டில் லக்ன யோகக் கிரகங்களுடன் அமர்வது நன்மைகளைத் தரும் .
 
அதேபோல சிம்மத்திற்கு பத்தாமிடத்தில் தனித்து ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தைச் செய்வதை விட பத்தில் லக்ன யோகர்களுடன் இணைவது அல்லது பாவத் பாவப்படி பத்தாமிடத்திற்கு ஆறு, எட்டாம் வீடுகளில் மறைவது நல்லது.
 
அதாவது பத்திற்கு ஆறாமிடமான மூன்றில் ஆட்சி பெறுவது அல்லது ஒரு சுப கிரகத்திற்கு வலிமை தரும் திரிகோண பாவமான ஐந்தாமிடத்தில் (பத்தாமிடத்திற்கு எட்டில்) அமர்வது அவரது காரகத்துவங்களில் ஜாதகருக்கு நன்மைகளைத் தரும்.
 
கேந்திராதிபத்திய தோஷம் பெறும் ஒரு சுப கிரகம், கேந்திர வீட்டிற்கு ஆறு, எட்டு, பனிரெண்டாம் வீடுகளில் மறைந்து நட்பு, ஆட்சி, உச்சம், திரிகோண சுபத்துவம் போன்ற வலிமைகளைப் பெறுமாயின் அந்தக் கிரகத்தின் காரகத்துவங்கள் ஜாதகருக்கு முழுமையாகக் கிடைக்கும்.
 
இந்த அமைப்பு எந்த ஒரு கிரகத்திற்கும் வேறு சில நிலைகளிலும் பொருந்தும். பலன் அறியும் போது இந்த பாவத் பாவ விதியை பொருத்திப் பார்த்தால் துல்லிய பலன் காண முடியும்.
 
உதாரணமாக கடக லக்னத்திற்கு குரு ஒன்பதிற்குடைய பாக்யாதிபதி என்றாலும் அவரின் மூலத் திரிகோண வீடு தனுசு என்பதால் அவர் ஆறுக்குடைய பாவி எனும் நிலையில்தான் செயல்படுவார். ஒன்பதைத் தவிர்த்து ஆறாம் வீட்டோடு அவர் தொடர்பு கொள்ளும் நிலையில், அல்லது ஆறாம் வீட்டில் அமரவோ, பார்க்கவோ செய்யும் நிலையில் கெடுபலன்களை அதிகம் செய்வார்.
 
ஆனால் பாவத்பாவ அமைப்பின்படி அவர் ஆறாமிடத்திற்கு ஆறு, எட்டு பனிரெண்டில் மறைந்திருக்கும் நிலையில் கெடுதல்களைச் செய்ய மாட்டார்.
 
அதாவது இயற்கைச் சுப கிரகமான குருவுக்கு வலிமை தரும் திரிகோண ஸ்தானமான, ஐந்தாமிட விருச்சிகத்தில், தனது ஆறாமிடத்திற்கு பனிரெண்டு எனும் நிலையிலும், ஆறுக்கு எட்டாமிடமான லக்னத்தில் உச்சம் பெறும் நிலையிலும் தனது ஆறாம் பாவக் கெடுதல்களைக் குரு குறைத்துக் கொள்வார். இந்த இரு நிலைகளிலும் அவர் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பார். எனவே பாக்கிய ஸ்தானத்தின் பலன்களே ஓங்கி நிற்கும்.
 
அதேநேரத்தில் ஆறுக்கு ஆறில் மறைந்து, பதினொன்றில் இருக்கும் நிலையில் பாக்கிய ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ளா விட்டாலும் தனது ஆறாம் பாவக் கெடுதல்களைச் செய்ய மாட்டார். இதுபோன்ற அமைப்பில் ஜாதகர் கடனற்ற, நோயற்ற வாழ்வு வாழ்வார்.
 
சுக்கிரனுக்கு மட்டும் பனிரெண்டாமிடத்தில் மறைவு தோஷம் இல்லை. ஏன்?
 
ஒரு ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் என்று சொல்லப்படும் 3, 6, 8, 12 ம் இடங்களில் அனைத்துக் கிரகங்களும் மறைவு பெற்று வலிமை இழக்கையில் சுக்கிரன் 3, 8 ல் மட்டுமே மறைவு நிலை பெற்று வலுக் குறைவார். 6, 12 ல் இருக்கும் சுக்கிரன் மறைவு பெறுவதில்லை. மேலும் இவ்விடங்களில் அவர் வலுக் குறைவதும் இல்லை.
 
12 ல் இருக்கும் சுக்கிரனுக்கு மறைவு தோஷம் இல்லை என்பதோடு, இந்த இடத்தில் இருக்கும் சுக்கிரனுக்கு அதிகமான வலுவும் சுபத்துவமும் உண்டு. குறிப்பாக துலாம் லக்னத்திற்கு அவர் லக்னாதிபதியாகி பனிரெண்டில் அமர்ந்து நீசம் பெற்று வலுவிழக்கும் நிலையில் கூட அவர் தனது காரகத்துவங்களைச் செய்வார்.
 
துலாமிற்கு சுக்கிரன் நீசபங்கம் அடையாத நிலையில் கூட சுக்கிர தசையில் பெரிய கெடுதல்கள் நடப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் நீச சுக்கிர தசையில் ஜாதகருக்கு தன்னுடைய செயல்பாட்டு நன்மைகளான நல்ல வீடு, அருமையான வாகனம், அழகான மனைவி, பெண்களால் நன்மை, ஹோட்டல், துணிக்கடை போன்றவற்றில் லாபம் ஆகியவற்றை குறைவின்றிச் செய்வார்.
 
சுக்கிரனுக்கு மட்டும் பனிரெண்டாமிடம் நல்ல இடம் என்பதற்கு காரணம் என்னவெனில், கால புருஷனாக உருவகப்படுத்தப்படும் நமது ராசிச் சக்கரத்தின் படுக்கையறை ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெறுவதுதான், அதேபோல தன்னுடைய லக்னமான துலாமிற்கு ஆறில் அவர் உச்சம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
 
ஒன்பது கிரகங்களிலும் சில வித்தியாச நிலைகளைக் கொண்டவர் சுக்கிரன். ஏற்கனவே சுக்கிரனின் ஆரம்பக் கட்டுரைகளில் சுக்கிரன் மட்டுமே அனைத்து லக்னங்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் அடைவார் என்பதையும் அது ஏன் என்பதையும் விளக்கியிருந்தேன்.
 
அதைப் போலவே தனது நெருங்கிய நண்பரின் வீட்டில் நீசம் எனும் வலுக் குறைவை அடைந்து, ஜென்ம விரோதியின் வீட்டில் உச்சம் எனும் அதிக வலுவை அடையும் ஒரே கிரகமும் சுக்கிரன்தான்.
 
( ஆக 20- 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)
 
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

One thought on “சுக்கிரன் தரும் பலன்கள்…! C-030 – Sukkiran Tharum Palangal..!

  1. About my Lagnaathi Pathi Sukran, Good & detailed explanation Guru ji….

    I belongs to Thula Lagnam, Sukran in 9th House with Sun

    Best Regards – Balaji S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *