ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
சுக்கிர தசை உனக்கு ஆரம்பிக்கப் போகிறது என்றாலே மயங்காதவர்கள் யாரும் இல்லை. வாழ்வில் உச்ச நிலைக்கு சென்று கொண்டிருக்கும் ஒருவரை அல்லது மேல் நிலைக்குச் சென்று விட்ட ஒருவரை “அவனுக்கென்னப்பா சுக்கிர தசை” என்று சொல்வது உலகியல் வழக்கு.
ஆனால் நடைமுறையில் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் சுக்கிரனின் தசை ஆரம்பித்ததும் தன் நிலையிலிருந்து சரிவடைவதும், தசையின் முடிவில் கீழான நிலைக்கு வருவதையும் பார்க்கிறோம். எனவே சுக்கிரனின் தசை நடக்கும் ஒருவர் கொடுத்து வைத்தவர் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை சரிதானா என்பதைப் பார்ப்போம்.
முதலில் சுக்கிர தசைக்கு மட்டும் இந்த எதிர்பார்ப்பு ஏன் என்று பார்க்கப் போவோமேயானால், வேத ஜோதிடத்தில் ஒரு மனிதனின் ஆயுளை நூற்றியிருபது வருடங்களாகப் பிரித்து, அவற்றை சமமற்ற ஒன்பது பங்குகளாக அமைத்து, மனித வாழ்வின் நன்மை, தீமைகளை பகுதி பகுதியாகக் கணித்துச் சொல்லும் தசா, புக்தி வருடங்கள் என்ற அமைப்பை நமக்கு அருளிய பராசர மகரிஷி அவர்கள் சுக்கிரனுக்கு மட்டும் இருபது வருடங்களை ஒதுக்கியிருக்கிறார்.
ஒரு மனிதனின் வாழ்வில் சுக்கிரதசை வருமானால் அது இருபது வருடங்களுக்கு அவனை ஆளுமை செய்யும் என்பதோடு, ஒன்பது கிரக தசைகளிலும் அதிகமான வருடங்களைக் கொண்டது சுக்கிரன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மனிதன், எண்பது வயது வரை உயிரோடு இருப்பான் எனத் தோராயமாகக் கொண்டால் அவனது வாழ்நாளின் கால் பகுதியை சுக்கிரன் எடுத்துக் கொள்வார். விபரமறியாப் பருவங்களான குழந்தை மற்றும் பள்ளி பருவத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கைப் பகுதியை சுக்கிரன் ஆக்கிரமித்துக் கொள்வார் என்பதால்தான், ஒருவருக்கு சுக்கிர தசை வரப் போகிறது எனும் போது அதைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிறது.
சுக்கிரன் ஒருவரே நல்ல மனைவி, அருமையான வீடு, உயர்தரமான வாகனம், உல்லாச வாழ்க்கை, எங்கும் எதிலும் சொகுசாக இருத்தல், பெண்கள் உள்ளிட்ட அனைத்து விதமான இன்பம் ஆகியவற்றைத் தருபவர் என்பதாலும் சுக்கிர தசை வரப் போகிறது என்றவுடன் இதயத் துடிப்பு அதிகமாகிறது.
ஜோதிடம் எனும் தேவ ரகசியம் கட்டுரைகளின் ஆரம்பத்திலேயே ஒரு முக்கிய விஷயத்தை எளிமையாக விளக்கியிருந்தேன்.
நமது ஞானிகள் வானில் ஒரு ஒழுங்கான நியதிக்குக் கட்டுப்பட்டு சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்களை மனித வடிவமாக்கி, அவர்களுக்கு கணவன்-மனைவி, தந்தை-மகன் போன்ற உறவுமுறைகளையும் கற்பித்ததற்கு மறைமுகமாக விளக்கங்கள் இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரைகளின் ஆரம்ப அத்தியாயத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.
ஒன்பது கிரகங்களுக்குள்ளும் ஞானிகள் நட்பு, பகை உறவுகளை நமக்கு விளக்கிச் சொன்னது, அந்தக் கிரகங்களின் தசைகள் ஒருவருக்கு வரும்போது, எது நன்மை செய்யும் எது தீமையைத் தரும் என்பதை எளிமையாகப் புரிந்து கொள்வதற்காகத்தான்.
அதன்படி கிரகங்களுக்குள் ஜென்ம விரோதிகளாக உருவகப்படுத்தப்பட்ட குரு, சுக்கிரன் இருவரும் அடுத்தவரின் லக்னங்களுக்கு நன்மைகளைச் செய்ய மாட்டார்கள். அப்படி அவர்கள் நன்மைகளைத் தர வேண்டுமெனில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்க வேண்டும்.
அதாவது அசுர குரு எனப்படும் சுக்கிரனின் ரிஷப, துலாம் லக்னங்களுக்கு தேவகுருவான வியாழன் நன்மைகளைத் தரமாட்டார். அதேபோல தனக்கு எதிர்த் தன்மை உடையவரான குருவின் தனுசு, மீன லக்னங்களுக்கு சுக்கிரன் நல்லது செய்யமாட்டார்.
அதிலும் ஒரு ஜாதகருக்கு எதிரிகளை உருவாக்கித் தரும் மறைவு ஸ்தானமான ஆறாம் பாவத்தின் அதிபதிகளாக இவர்கள் இருவரும் அமைகையில் தங்களது தசையில் கெடுபலன்களை அதிகமாகச் செய்வார்கள். இந்நிலை தனுசு லக்னத்திற்கு ஆறாம் பாவ அதிபதியாக சுக்கிரன் வரும்போதும், துலாம் லக்னத்திற்கு ஆறாம் பாவ அதிபதியாக குரு வரும்போதும் நடக்கும்.
துலாம் லக்னத்திற்கு குரு உச்சம் பெறும் நிலையில் ஆறாம் பாவத்தைப் பார்த்து வலுப்படுத்தி, வேறு வகையில் பலவீனமடையாவிட்டால் அந்த ஜாதகருக்கு ஆறாம் பாவத்தின் கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு, சிறை போன்ற கெடுபலன்களை தனது தசையில் வலிமையுடன் செய்வார்.
அதேபோல சுக்கிரன் தனுசு லக்னத்திற்கு ஆறாமிடத்தில் ஆட்சி பெற்றிருந்தாலோ, வேறுவகைகளில் ஆறாமிடத்தோடு தொடர்பு கொண்டு அந்த பாவத்தை பலப்படுத்தி இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு கெடுபலன்களையே அதிகமாகத் தருவார். எனவே சுக்கிர தசை மற்றும் புக்தி நன்மைகளைத் தரும் என்பது எல்லா ஜாதகங்களுக்கும் பொருந்தாது.
அதேநேரத்தில் பாவத்பாவ விதிகளின்படி ஒரு ஸ்தானாதிபதி அந்த பாவத்திற்கு ஆறு, எட்டில் மறைந்தால் கெடுதல்களைச் செய்ய மாட்டார். இதுபோன்ற நிலையில் தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் ஆறாம் பாவத்திற்கு ஆறாமிடமான பதினொன்றாம் வீட்டில் இருந்தாலும், துலாம் லக்னத்திற்கு குரு பதினொன்றாம் வீட்டில் இருந்தாலும் கெடுதல்களைச் செய்ய மாட்டார்கள்.
ஆறாமிடத்தை அடுத்து அஷ்டமம் எனும் எட்டாமிடத்திற்கு சுக்கிரன் அதிபதியாகும் நிலை மீன லக்னத்திற்கு ஏற்படும். சுக்கிரன் மீன லக்னத்திற்கு வலுவாக இருக்கும் நிலையில் அவரது தசையில் பெரும்பாலும் ஜாதகனை வெளிநாடு, வெளிமாநிலங்களில் அலைந்து திரிந்து பொருள் தேட வைப்பார்.
சிலநிலைகளில் பெண்கள் விஷயத்தில் அவமானம் வழக்கு போன்ற விஷயங்களையும் செய்வார். அதுபோலவே ரிஷபத்திற்கு எட்டிற்கு அதிபதியாகும் குருவும் தனித்து வலுப்பெறும் நிலையில் கெடுதல்களையும், வெளிநாடு வெளிமாநில அமைப்புகளையும் தருவார்.
ஆனால் எட்டாமிடத்தை விட ஆறாமிடமே அதிகமான அசுபத் தன்மை வாய்ந்தது என்பதாலும், ஒரு ஜாதகனின் எதிரியையும், அவனுக்கு வேண்டாதவைகளையும் குறிக்கும் பாவம் ஆறாமிடம் என்பதாலும், தனுசு லக்னத்திற்கு லக்னாதிபதி குரு வலுவிழந்து, சுக்கிரன் ஆறில் ஆட்சி பெறும் போதோ, அல்லது வேறு வகைகளில் வலுப் பெற்று இருக்கும்போதோ சுக்கிர தசை வந்தால் கொடிய பலன்கள் நடக்கும்.
இதுபோன்ற நிலையில் சுக்கிர தசை ஜாதகரை மிகக் கீழான ஒரு நிலைக்கு கொண்டு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதுபோன்ற ஜாதக அமைப்பில் கேது தசையில் வலிமையான அதிகார அமைப்பில் இருந்து, பொருள் சம்பாதித்து, சுக்கிர தசையில் தவறு செய்து பிடிபட்டு, அதிகாரத்தையும், அந்தஸ்தையும் இழந்து வழக்கு, சிறை என்று அலைந்து திரியும் ஜாதகங்களை என்னால் உதாரணம் காட்ட முடியும்.
மேலும் சுக்கிரன், பெண்கள், காமம், உல்லாசம், ஆடம்பரம், கேளிக்கை இவற்றிற்கு அதிபதி என்பதால் சுக்கிர தசையில் பெண்களின் மூலமாக கெடுதல்களும், அவமானங்களும், தோல்விகளும் இருக்கும். இப்படிப்பட்ட நிலை துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் வலுவிழந்து குரு ஆறாமிடத்தில் ஆட்சி பெற்றாலும் நடக்கும்.
எந்த ஒரு லக்னத்திற்குமே லக்னாதிபதி வலுவிழந்திருக்கும் நிலையில் ஆறுக்குடையவன் பலம் பெற்றிருக்கக் கூடாது. அப்படி ஒருநிலையில் நாம் வலுவிழந்து நம் எதிரி பலத்தோடு இருக்கிறார் என்பதுதான் பொருள்.
இதுபோன்ற ஒரு நிலை ஜாதகத்தில் அமைந்தால் அவரது முன்னேற்றத்திற்குத் தடை இருக்கும் என்பது ஒரு சூட்சுமமான, ஞானிகளால் வெளிப்படையாகச் சொல்லப்படாத விதி. இதையே அடிக்கடி கட்டுரைகளிலும் கேள்வி-பதில்களிலும் எழுதி வருகிறேன்.
மேலும் குரு, சுக்கிரனுக்கு எதிர்த் தன்மையுடையவர் மற்றும் ஆகாதவர் என்றாலும் நமது மூல நூல்களில் சுக்கிரனின் அறிவிக்கப்பட்ட எதிரியாகச் சொல்லப்படுவது சூரியனும், சந்திரனும்தான்.
எனவே இவர்கள் இருவரின் கடக, சிம்ம லக்னங்களுக்கும் சுக்கிரன் வலிமையாகத் தனியாக இருக்கும் அமைப்பில் முழுமையாக நன்மைகளைத் தர மாட்டார். இதுபோன்ற அமைப்பில் தனது வீடு, வாகனம், பெண் சுகம் போன்ற காரகத்துவங்களைக் கொடுத்து தனது ஆதிபத்தியத்தைக் கெடுப்பார்.
மற்றபடி சுக்கிரனின் நட்பு லக்னங்களான மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு சுக்கிர தசை அபாரமான நன்மைகளைச் செய்யும். மேற்கண்ட லக்னங்களுக்கு சுக்கிரன் வலுவிழந்த நிலையில் இருந்தாலும் சுக்கிர தசை பெரிய அளவில் தீமைகளைச் செய்யாது.
ஒரு முக்கியக் கருத்தாக எந்த ஒரு தசையிலும் இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியோர் இரண்டு விதமான முரண்பட்ட பலன்களை செய்வார்கள் என்பதால் ஒரு மகா தசை முழுக்க முழுக்க நன்மைகளையோ, முழுவதும் தீமைகளையோ செய்து விடுவது இல்லை.
நல்ல ஆதிபத்தியத்தின்படி முதலில் நன்மைகளைச் செய்யும் ஒரு கிரகம் அடுத்து தீய ஆதிபத்தியத்தின்படி தசையின் பிற்பகுதியில் கெடுபலன்களையோ, சாதகமற்ற பலன்களையோ செய்யும்.
ஒரு தசையின் முதற் பகுதியில் ஒரு கிரகம் தீமைகளைச் செய்யுமாயின், அடித்த கையே அணைக்கும் என்பதன்படி அதே கிரகத்தின் பிற்பகுதி தசை முதலில் தந்த தீமைகளால் நடந்த விளைவுகளை நீக்கி நன்மைகளைச் செய்து விட்டுப் போகும். இதுவே சிருஷ்டியின் ரகசியம்.
சுக்கிர தசைக்கு இந்த அமைப்பு சரிபாதியாக அமையும்போது, சுக்கிரன் நன்மைகளை செய்யும் நிலையில் இருந்தால், தனது தசையின் முதல் பத்து வருடங்கள் தனது நல்ல காரகத்துவங்களை ஜாதகருக்கு குறைவின்றித் தருவார்.
ஜாதகனின் வயதைப் பொருத்து அவருக்கு திருமணத்தின் மூலம் நல்ல மனைவியையும், அருமையான சொகுசான வீடு, உயர்தர வாகனம், பெண் குழந்தைகள், எந்த ஒரு நிலையிலும் சொகுசாக, சுகமாக வாழும் நிலை, பெண்களால் நன்மை போன்ற அமைப்புகளைச் செய்வார்.
அதேபோல இளம் பருவத்தில் வரும் சுக்கிர தசை மற்றும் புக்திகள் ஒரு ஜாதகருக்கு காதல் அனுபவங்களை வலுவாகத் தரும். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வரும் இருவரை திடீரென ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி காதல் எனும் அமைப்பில் நுழைய வைப்பவர் சுக்கிரன்தான்.
காதலின் அடிப்படையே காமம்தான் என்பதால் சுக்கிரன் வலுப் பெற்றவர்கள் காதல் என்ற பெயரில் காமத்தைப் பெறுவதிலேயே குறியாக இருப்பார்கள்.
கலைத்துறையில் ஜெயிப்பவர் யார்?
கலைகளின் அதிபதி சுக்கிரன்தான். இசை, நடனம், பாட்டு, நடிப்பு போன்ற அனைத்திற்கும் அடிப்படை இவர்தான் என்பதால் ஜாதகத்தில் இவர் எந்த பாவத்தோடு தொடர்பு கொள்கிறாரோ அந்த பாவத்திற்கு சம்பந்தப்பட்ட கலைத்துறையில் ஜாதகரை ஈடுபடுத்துவார்.
உதாரணமாக சுக்கிரன் மூன்றாமிடத்தோடு சம்பந்தப்பட்டால் இசையிலும், லக்னம் மற்றும் ஐந்து பத்தாமிடங்களோடு தொடர்பு கொண்டால் நடனம், நடிப்பிலும், சினிமா எடுப்பதிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதிலும் ஒருவருக்கு ஆர்வம் இருக்கும். மேற்கண்ட துறைகளில் ஜாதகர் புகழோடும் இருப்பார்.
ஒருவருக்கு சுக்கிர தசையோ, சுக்கிர புக்தியோ நடைபெற ஆரம்பித்து விட்டாலே அவருக்கு சினிமா மற்றும் மீடியாத் துறைகளில் ஆர்வம் வந்து விடும். குறிப்பாக சிம்ம லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுக்கிரன் ஜீவனாதிபதி ஆவதால் இந்த லக்னத்தவர்களே அதிகமாக கலைத்துறையில் முயற்சிப்பவராக இருப்பார்கள்.
ஜாதகத்தில் சுக்கிரனின் வலுவைப் பொறுத்து இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கேமிரா இயக்குனர், லைட்பாய், டிராலி தள்ளுபவர், ஸ்டுடியோ வாட்ச்மேன் என அவரவரின் ஜாதக வலுக்கேற்ப ஒருவர் கலைத்துறையில் இருப்பார்.
சுக்கிரன் சுப வலுவில்லாமல் அந்த ஜாதகருக்கு தீமை தரும் அமைப்பில் இருந்தால் பயனற்ற வழிகளில் கலைத்துறையில் வாய்ப்புத் தேட வைத்து வாய்ப்பும் கிடைக்காமல், வேறு வாழ்க்கை வழிகளையும் காட்டாமல் இளமைப் பருவம் முழுவதையும் தொலைக்க வைத்து பின்னால் வருந்தவும் வைப்பார்.
( ஜூலை 30 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
Super Explaining guruje
ஐயா உங்களின் விளக்கம் வேத வாக்கு
My lagnam mithunam ,sukkiran at rishabam ,my rasi Scorpio ,my star anusam how is to me on sukira thasai ?
( in Scorpio Jupiter & moon )
Extraordinary effort in making awareness about this topic among unknown people of astrology.
what will happend on sukra dasha?
when the person was born on rishabha lagna with sukran in 6th house?
Ayya enadhu simma laknam kumbha rasi… 10il suriyan budhan … 10ku adhibadhi sukran 8il ucham maraivu 3il guru vakram 2il vakra sani +chevai… cinimavil jeipana