ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
கிரகங்களுக்குள் இருக்கின்ற நட்பு, பகை அமைப்பில் குருவின் ஜென்ம விரோதியாக சுக்கிரன் சொல்லப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும். சுக்கிரனை அடுத்து, புதனை தன்னுடைய எதிர்த் தன்மையுள்ள கிரகமாக குரு கருதுவார். சுக்கிர, புதனின் நண்பரான சனியின் மேல் சற்று மென்மையான போக்கு குருவுக்கு உண்டு என்பதால் சனிக்கு குரு எதிரி அல்ல.
அதேபோல ராகு-கேதுக்களில் கேதுவை குருவுக்குப் பிடிக்கும். கேதுவுடன் அவர் இணையும்போது ஒருவரை நல்ல நிதிநிலை அமைப்பைக் கொண்டவராக மாற்றும் கேள யோகம் உருவாகும். கேதுவுடன் இணையும் குரு பலவீனம் அடைய மாட்டார் என்பதால் குருவிற்கு கேது பிடித்தவர்.
ஆனால் ராகுவுடன் சேரும் குரு இணையும் தூரத்தையும், ராசியையும் பொருத்து தன் வலிமையை ராகுவிடம் பறி கொடுப்பார் என்பதால் குருவிற்கு ராகு ஆகாதவர். இதை வேறுவிதமாகச் சொல்லப் போனால் இணையும் எவரையும் நல்லவராக்கும் கன்றுக் குட்டியான குரு, ராகுவைப் புனிதப் படுத்தி தனது வலிமையை இழப்பார். இதுவே குரு சண்டாள யோகம் என்று சொல்லப் படுகிறது.
குருவின் நட்பு நிலை என்று எடுத்துக் கொண்டால் சந்திரன் அவருக்கு மிகவும் பிடித்த முதன்மை நண்பர். சந்திரனும், குருவும் ஒருவருக்கொருவர் நேரெதிர் நிலைகளில் இருந்து சம சப்தமமாக தங்களது ஒளியினை, பார்வை என்ற பெயரில் பரிமாறிக் கொள்ளும்போது, இருவருமே வலிமையைப் பெறுவார்கள். சந்திரனுக்கு ஏழில் குரு இருப்பது இருவருக்கும் உன்னதமான நிலை.
அதேநேரத்தில் சந்திரனுக்கு ஐந்து, ஒன்பதில் குரு இருந்து, அந்தக் குரு வலிமையாகவும் இருந்து சந்திரனைப் பார்க்கும்போது, நிலவுக்கு தனது ஒளியோடு சேர்த்து குருவின் ஒளியும் இணையும் போது அந்த ஜாதகத்திற்கு மிகச் சிறந்த வலுக் கிடைக்கிறது. இதனால் அந்த ஜாதகர் மேன்மை அடைவார்.
இதன் பொருட்டுத்தான் ராசியைக் குரு பார்ப்பது நமது கிரந்தங்களில் நல்ல பாதுகாப்பு அமைப்பாகவும், யோகமாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.
சந்திரனை அடுத்து செவ்வாயுடன் நட்பு பாராட்டுவார் குரு. இயல்பாகவே சந்திரனும், செவ்வாயும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத நன்கு புரிந்து கொண்ட நண்பர்கள் என்பதால், நண்பனுக்கு நண்பன், எனக்கும் நண்பன் என்ற முறையில் செவ்வாயும், குருவும் நண்பர்கள் ஆவார்கள்.
குருவின் பார்வையும், தொடர்பும் செவ்வாயின் நிஜ காரகத்துவங்களைக் கட்டுப் படுத்தும். செவ்வாயின் கோபத்தையும், முன் யோசனை இல்லாத அவசரக் குடுக்கைத் தனத்தையும் வலுப் பெற்ற குரு துடைத்தெறிந்து, செவ்வாயின் குணங்களைத் தலைகீழாக்குவார். செவ்வாயை நற்பலன்கள் செய்ய வைப்பதில் குருவிற்கு சிறந்த இடம் உண்டு.
இறுதியாக சூரியனையும் நண்பராகக் கொண்டவர் குரு. இதில் சூரியனும், குருவும் நேருக்கு நேர் நின்று பார்த்துக் கொள்ளும் நிலையில் அவரிடமிருந்து பெற்ற ஒளி எனும் பார்வையை அவருக்கே திரும்பத் தந்து சூரியனை புனிதப்படுத்தி, அதிவக்ரம் எனும் நிலையை குரு அடைவார்.
இந்த நிலை சிவராஜ யோகம் எனும் தலைமை தாங்க வைக்கும் யோக அமைப்பாகும். மேலும் சூரியனுக்கு ஐந்து, ஒன்பதாமிடங்களில் நின்று சூரியனைப் பார்க்கும் குருவால் சூரியனின் பலவீனமான நிலைகளை நீங்கச் செய்ய முடியும்.
லக்ன வாரியாக குரு தரும் நன்மைகள் என்று பார்க்கப் போவோமேயானால், செவ்வாயின் மேஷ, விருச்சிக லக்னங்களுக்கு குரு பாக்கியாதிபதி மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி எனும் ஒன்பது மற்றும் ஐந்திற்குடையவராகி யோக நிலை பெற்று தனது தசையில் மிகச் சிறந்த யோகங்களை அளிப்பார். இந்த லக்னங்களுக்கு அவர் ஆட்சி, உச்சம், நட்பு நிலைகளில் கேந்திர கோணங்களில் அமர்வது நன்மைகளைத் தரும்.
சந்திர, சூரியர்களின் கடகத்திற்கு பாக்கியாதிபதியாகவும், சிம்மத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகவும் அமைந்து குரு யோகம் தருவார். மேற்கண்ட நான்கு லக்னங்களுக்கும் வலிமையற்ற நிலையில் பகை, நீசம் போன்றவைகளை அடைந்திருந்தாலும் கூடுமானவரை கெடுதல்களைச் செய்ய மாட்டார். எந்த நிலையிலும் ஜாதகனை காப்பாற்றிக் கரை சேர்க்கவே முயற்சி செய்வார்.
அதேநேரத்தில் அவரது சொந்த வீடுகளான தனுசு, மீனம் உபய ராசிகளாவதாலும், உபய லக்னங்களுக்கு லக்ன நாதன் கேந்திர, கோணங்களில் வலுப் பெறுவது நன்மைகளைத் தருவதில்லை என்பதாலும், மீனத்திற்கு அவர் உச்சம் பெறுவது மிகப் பெரிய யோகங்களைச் செய்வது இல்லை. அதைவிட அவர் ஒன்பதாமிடமான விருச்சிகத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பது யோக நிலை.
அவரது இன்னொரு லக்னமான தனுசுவிற்கு அவர் உச்சமடைவதே எட்டில்தான் என்பதால், மறைவு ஸ்தானத்தில் உச்சமடையும் குரு நன்மைகளைச் செய்வார். அதேபோல அவரது அதி நட்பு வீடான ஒன்பதாமிட சிம்மத்திலும், இன்னொரு நட்பு வீடான ஐந்தாமிட மேஷத்திலும் அமர்ந்து லக்னத்தைப் பார்க்கும் போது விசேஷ யோகங்களைச் செய்வார்.
மேற்கண்ட இரு லக்னங்களுக்கும் அவர் கேந்திரங்களில் அமர்வது நன்மைகளைத் தருவதில்லை. பொதுவாகவே இயற்கைச் சுப கிரகமான குரு எந்த ஒரு லக்னத்திற்கும் கேந்திரங்களில் வலுப் பெறுவது முழுமையான யோகத்தைத் தராது. சில நிலைகளில் இது கேந்திராபத்திய தோஷமாக மாறி கெடுதல்களையும் செய்யும்.
அதேநேரத்தில் முதன்மை இயற்கைச் சுபரான குரு எந்த ஒரு ஜாதகத்திலும் நமது ஞானிகள் சொன்ன விதிப்படி ஐந்து, ஒன்பது எனப்படும் திரிகோண இடங்களில் இருப்பது, அவருக்கும், அந்த ஜாதகத்திற்கும் மிகுந்த வலுவைத் தரும். மேற்கண்ட இடங்களில் இருக்கும் குரு வலிமையற்ற நிலையில் இருந்தால் கூட தீமைகளைச் செய்யமாட்டார்.
ஒரு ராஜயோக ஜாதகத்தில் இயற்கைச் சுப கிரகங்கள் திரிகோணத்திலும், இயற்கைப் பாபர்கள் கேந்திரங்களிலும் இருப்பார்கள்.
இந்தத் திரிகோண அமைப்பு ஏன் குருவுக்கு அழுத்திச் சொல்லப் படுகிறது என்றால் ஐந்து, ஒன்பதாமிடங்களில் இருக்கும் குரு லக்னத்தைப் பார்ப்பார். லக்னமோ, லக்னாதிபதியோ வலுவிழந்த நிலையில் ஒரு ஜாதகத்தை தூக்கி நிறுத்துவது குருவின் லக்ன பார்வை மட்டுமே.
அதிலும் குரு ஐந்து, ஒன்பதில் வலுப் பெற்ற நிலையில் இருந்தால் அது நிச்சயமாக அவரது நண்பர்களது லக்னங்களாகவோ அல்லது அவரது சொந்த தனுசு, மீன லக்னங்களாகவோதான் இருக்க முடியும். எனவே அவரது நண்பர்களான சூரிய, சந்திர, செவ்வாய் ஆகியோர் லக்னாதிபதிகளாக இருந்து வலுவிழக்கும் நிலையில் ஐந்து, ஒன்பதாமிடங்களில் இருக்கும் குரு லக்னத்தைப் பார்த்து அவர்கள் வலுவிழந்த குறையை நீக்குவார்.
உதாரணமாக சிம்மத்திற்கு சூரியன் நீசமான நிலையில், ஐந்தில் ஆட்சி பெற்ற குரு அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பதும், மேஷத்திற்கு செவ்வாய் நான்கில் நீசம் பெற்றோ, எட்டில் மறைவு பெற்றோ இருக்கும் நிலையில், ஒன்பதில் ஆட்சி பெற்ற குரு அமர்ந்து லக்னத்தைப் பார்த்து வலுப்படுத்தி, லக்னாதிபதியின் குறையை நீக்கி அந்த ஜாதகத்தை யோக ஜாதகமாக மாற்றுவதையும் சொல்லலாம்.
அதேபோல கடக லக்னத்திற்கு லக்னாதிபதி சந்திரன் நீசமாகி வலுக் குறைந்த நிலையில், குரு ஒன்பதில் அமர்ந்து லக்னத்தையும், சந்திரனையும் பார்வையிட்டால் அது யோக ஜாதகம்தான். சந்திரன் இங்கே வலிமை பெற்று லக்னத்தை இயக்கும் வலுவினைப் பெற்று விடுவார்.
ஆனால் பார்வை தரும் குரு, ராகுவுடன் இணைந்து கிரகணமோ, சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனமோ, சனிச் சேர்க்கையோ இன்றி வலுவாக இருக்க வேண்டும். குரு வலுவாக இருந்தால்தான் அவரது பார்வைக்கும் வலு இருக்கும். பலவீனம் அடைந்திருந்தால் அவரது பார்வையின் நன்மை அளவு குறையும். சில நிலைகளில் முழுக்கக் குரு கெட்டிருந்தால் அவருக்குப் பார்வை பலம் இருக்காது.
ஒரு ஜாதகத்தில் குருவின் பார்வையை கணிக்கும்போது குருவிற்கு பார்வை இருக்கிறதா, அந்தப் பார்வைக்கு வலு இருக்கிறதா என்பதை அளவிட வேண்டியது அவசியமானது. உதாரணமாக அஸ்தமனமான குருவிற்கும், ராகுவிடம் மிக நெருங்கிய குருவிற்கும் பார்வை வலு கிடையாது. மேலோட்டமாக இந்த நிலைகளில் அந்த ஜாதகத்தில் உள்ள தோஷ அமைப்பை குரு பார்க்கிறார் எனவே இந்த தோஷம் கெடுதலைச் செய்யாது என்று நினைத்தால், கணிப்புத் தவறுவது இதுபோன்ற நுண்ணிய விஷயங்களில்தான்.
குருவின் பார்வை எல்லா லக்னங்களுக்கும் கோடி நன்மையா?
நான் அடிக்கடி எழுதி வருவதைப் போல சில சூட்சுமங்கள் வேத ஜோதிடத்தில் படிப்படியாக உங்களுடைய அனுபவம் கூடும்போது மட்டுமே உங்கள் அறிவுக்கு புலப்படும்படியாக ஞானிகளால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று இந்த குருவின் பார்வை.
ஜோதிடத்தை மேலோட்டமாக புரிந்து கொண்டவர்களுக்கும், புதிதாக கற்க வருபவர்களுக்கும் “குரு பார்க்கக் கோடி நன்மை” என்பது எப்போதும் சற்றுக் குழப்பத்தைத் தரும் விஷயமாக இருக்கும். சிலர் எந்த லக்னத்திற்கும் குரு பார்வை விசேஷம்தான் என்று தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுவார்கள்.
ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு ஜோதிடம் பிடிபடாமல் கண்ணாமூச்சி வித்தைதான் காட்டும். பிடிபட்டு விட்டாலோ கட்டுண்ட பசு போல பின்னாலேயே வரும். எப்போது பிடிபடும், எப்படிப் பிடிபடும் என்பது அவரவர் ஜாதகத்தில் புதன் இருக்கும் நிலையையும், பரம்பொருளின் கருணையையும் பொறுத்தது.
குருவின் பார்வை என்பது மிகவும் நுட்பமாகக் கணிக்க வேண்டிய சூட்சுமமான விஷயம். தெளிவாகச் சொல்லப் போனால் தான் எதிரியாகக் கருதும் சுக்கிரனின் ரிஷப, துலாம் லக்னங்களுக்கும், கேந்திராதிபத்தியம், பாதகாதிபத்தியம் பெறும் புதனின் லக்னங்களுக்கும் குருவின் பார்வை சில நிலைகளில் கெடுதல்களைத் தரும். ஆயினும் அவர் இயற்கைச் சுபர் என்பதால் அவரால் பார்க்கப்படும் பாவம் வளரும்.
உதாரணமாக ஒரு துலாம் லக்ன ஜாதகத்தில் குரு மூன்றில் ஆட்சியாக அமர்ந்து மூல நட்சத்திரத்திலோ, பாதகாதிபதியான சூரியனின் உத்திராட நட்சத்திரத்திலோ அமர்ந்து அந்த ஜாதகத்தின் ஏழு, ஒன்பது, பதினொன்றைப் பார்க்கும்போது அந்த பாவங்கள் வளருமே தவிர, அவற்றால் ஜாதகருக்குப் பயன் இருக்காது. மாறாகத் ஆறாம் அதிபதியின் பார்வை என்பதால் தொல்லைகள்தான் இருக்கும்.
இதுபோன்ற நிலையில் செவ்வாய் மற்றும் ஏழாம் பாவத்தின் நிலையைப் பொருத்து ஜாதகருக்கு திருமணம் இருக்காது. அல்லது மனைவியுடன் நிம்மதியாக வாழ முடியாது. தந்தை இருப்பார். இவருக்கு பிரயோஜனமாக இருக்கமாட்டார். அண்ணன், அக்காக்கள் இருப்பார்கள். அவர்களால் ஒரு உதவியும் இருக்காது.
ஜோதிடமே விதி மற்றும் விதிவிலக்கு என பல்வேறு கணக்கீடுகளை உள்ளடக்கியதுதான். இதில் மூல அமைப்புகளைத் தவிர மாறாத விதி என்று எதுவுமே கிடையாது. இவற்றை நன்கு ஆராய்ந்து பலன் சொல்வதில்தான் ஒரு ஜோதிடரின் மேதமை அடங்கியிருக்கிறது.
(ஜூன் 18 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
குருவின் சூட்சுமங்களை ஞானக்குருவாக இருந்து எங்களுக்கு எடுத்தியம்பிய தாங்களுக்கு நன்றி.தங்களது ஒவ்வொறு அனுபவமும் எனது சோதிட பயணத்திற்கு நல்வழிகாட்டிய அமைந்து நல்ல சோதிடனாக என்னை மாற்றிக்கொள்ள உதவியாக உள்ளது.நன்றிகள் பல.
ஐயா மிகவும் பயன் படக்கூடிய அளவில் இந்த பதிப்பு இருந்தது நன்றி
பெரும்பாலான கிரகங்கள் வக்கிரம் பெற்றால் அவை வாழ்வின் குறிப்பிட்ட பகுதியில் அதன் காரகத்துவதை பொறுத்து நல்ல அல்ல தீய(முந்தய ஜென்ம ) பலன்களை தரும் என்னும் கருத்து சரியா.
மேலும் ரிஷப லக்கினத்திற்கு 7 ம் இடத்தில வக்கிரம் பெற்று ஆட்சிபெற்ற சனியினால் பார்க்கப்படும் குரு(புதன் சாரம்) எவ்வாறான பலன்களை நல்கும்.
Raj, Guru will give good result because Guru in Bhudan charam(2 & 5th lord for Rishaba), SANI yogakaraga so Guru will give good result…according to me knowledge…..IS IT CORRECT GURU JI???
குருவிற்கு நன்றிகள் பல பல
அருமையான பதிவு, நேர்மையான பதிவு, நன்றி அய்யா…
Excellent write up! Thank you!