நவ கிரகங்களில் புதன் ஒருவகை. இரட்டை நிலை உள்ள கிரகமாவார். இவரது மிதுன ராசியின் இரட்டையர்கள் குறியீடு இதைத்தான் குறிக்கிறது. கிரகங்களில் ஆணுமல்லாத, பெண்ணுமல்லாத அலி கிரகம் என்று புதனைச் சொல்வதுண்டு. அதாவது ஆண், பெண் இரண்டு குணங்களும், தன்மைகளும் கலந்த குழந்தைப் பருவத்தை புதன் குறிப்பார்.
புதன் ஒருவர் மட்டுமே தனித்திருக்கும் நிலையில் சுபராக இருப்பார். பிறருடன் இணையும் போது, அவர் சேரும் கிரகம் சுபரானால், தன்னைச் சுபராகவும் அந்தக் கிரகம் பாபரானால் தன்னையும் பாபராகவும் தனது நிலையை மாற்றிக் கொள்வார்.
சூரியனுடன் புதன் இணையும்போது அவர் நன்மை தரும் சுபராக செயல்படுவாரா அல்லது தீமை தரும் பாபராக இருப்பாரா என்று கணிப்பதில் சிக்கல் ஏற்படும். அனுபவமுள்ள ஜோதிடரையும் தடுமாற வைக்கும் இடம் இது,
இதில் உள்ள நுணுக்கத்தை விளக்குகிறேன்...
நமது கிரந்தங்களில் சூரியன் பாதி அசுபர் அதாவது அரைப் பாபர் என்று குறிப்பிடப்படுகிறார். இதில் மறைந்திருக்கும் அம்சத்தை முன்னரே சொல்லியிருக்கிறேன். அதன்படி சூரியன் மீதி சுபர் என்பதால் ஒருவருக்குச் சூரியன் பாதி நல்லவராகவும், மீதி கெட்டவராகவும் செயல்படுவார் .
இதில் நல்லவர், கெட்டவர் எனும் நிலை சம்பந்தப்பட்ட லக்னங்களைப் பொருத்தது. சூரியன் தனது நண்பர்களின் லக்னங்களுக்கு தனது ஆதிபத்தியத்தைப் பொருத்து சுபராகவே செயல்படுவார். நட்பு லக்னங்களுக்கு ஆதிபத்திய பாபராக வந்தாலும் பெரிய கெடுதல்களைச் செய்வதில்லை.
இதற்கு உதாரணமாக மீன லக்னத்தைக் குறிப்பிடலாம். மீனத்தின் ஆறுக்குடைய கொடிய பாபியான சூரியன் லக்னாதிபதி குருவுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் தனது தசையில் பெரும் கெடுதல்கள் எதையும் செய்ய மாட்டார்.
இதுபோன்ற நிலையில், சூரியன் தனது பாப வலுவை வெளிக்காட்ட இயலாத சூழலில், அவருடன் இணைந்திருக்கும் புதன் சுபத்தன்மை பெற்று சுபராகி நன்மைகளைச் செய்வார். சுருக்கமாகச் சொன்னால் சூரியன் நல்லது செய்யக் கடமைப்பட்டு சுபத்தன்மை மேலோங்கி இருக்கும் சூட்சும நிலையில் அவருடன் இணையும் புதனும் சுபராகி நற்பலன் செய்வார்.
தனுசு லக்னத்திற்கு சூரியனும், புதனும் பத்தாமிடத்தில் இணைந்திருக்கும் நிலையில் தர்ம கர்மாதிபதி யோகம் நல்ல பலன்களைத் தருவது இந்தக் காரணத்தினால்தான்.
அதேநேரத்தில் சூரியன் அவ யோகியாகி பாபத் தன்மையுடன் கெடுபலன்களைத் தர இருக்கும் லக்னங்களுக்கு, அவருடன் இணைந்திருக்கும் புதன், அந்த லக்னங்களுக்குத் தான் சுபரே ஆயினும் நன்மைகளைக் குறைத்தே தருவார்.
சமீப ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த தலைசிறந்த ஜோதிட சூட்சும விளக்க நூலான “ஶ்ரீராஜ ஜோதிடத்தில்” குருநாதர் அய்யம்பாளையம் இரா. அருள்வேல் அய்யா அவர்கள் ஜோதிடம் கற்றுக் கொள்வதில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இதுபோன்ற நுண்ணிய சூட்சுமத்தை புரிந்து கொள்வதற்குச் சுலபமாக பாபர்களை கேந்திராதிபதி என்றும் சுபர்களை திரிகோணாதிபதி என்றும் பிரித்துச் சொல்லியிருப்பார்.
அவருடைய பயிற்சி வகுப்புகளிலும், சூரியனுக்கு முன்பின் பதினான்கு டிகிரிக்குள் இருக்கும் புதன் சூரியனை விட்டு விலகி அடுத்த ராசியில் இருந்தாலும் பாபர் எனும் நிலைதான் பெறுவார் என்பதைத் தெளிவாக விளக்குவார்.
அடுத்து எழுத்தை ஆளுபவன் புதன்தான் என்பதால். ஒருவர் எழுத்தில் ஆளுமை செய்வதற்கு புதனின் தயவு மிகவும் அவசியம். புதன் வலுப் பெற்றவர்கள்தான் மனதில் நினைக்கும் விஷயத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
உலகின் மிகச் சிறந்த கவிஞர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்தான். அதிலும் சுக்கிரனுடன், புதன் இணைந்திருக்கும் நிலையில் பிறந்தவர்கள். காதல் கவிதைகளை எழுதுவதில் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஒருவரை பத்திரிகைத் துறையில் ஈடுபடுத்துபவரும் புதன்தான். வலுப் பெற்ற புதன் ஒரு பத்திரிகையை திறம்பட நடத்தும் ஆற்றலைத் தருவார். ஒருவர் ஜர்னலிசம் படிப்பதற்கும், எடிட்டராகவும், நிருபராகவும், பத்திரிகையில் வேலை செய்வதற்கும் புதன்தான் முதல் காரணம். சட சடக்கும் புத்தம் புதிய காகிதத்தின் மணத்தை நுகர்ந்தபடி நீங்கள் வேலை செய்பவரா? நீங்கள் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர் என்று அர்த்தம்.
அதேபோல அரசியலை அலசுவதற்கும், அதை விமர்சிப்பதற்கும் தேவையான தீர்க்கமான அறிவும், தொலைநோக்குப் பார்வையும் புதனால்தான் தரப்படுகிறது. அரசியலில் நாளை என்ன நடக்கும் என்று சொல்வதற்கு தன்னைச் சுற்றி நடப்பவைகளை உள்வாங்கி விருப்பு, வெறுப்பின்றி கணிக்கும் திறன் தேவைப்படும். இந்தத் திறமையைத் தருபவர் புதன்.
நாளை என்ன நடக்கும் என்று கணிக்கும் திறனுக்கும் புதன்தான் அதிபதி என்பதால்தான் ஜோதிடர்களும் புதனின் ஆதிக்கத்தினுள் வருகிறார்கள்.
புதனின் மிதுனம், கன்னி லக்னங்களில் பிறந்தவர்கள் கணிப்புத் திறனுக்கு பெயர் போனவர்களாகவும், அடுத்தவர்கள் எந்தச் சமயத்தில், எப்படிச் செயல்படுவார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் அறிவாளிகளாகவும் இருப்பார்கள் .
ஒருவர் சிற்பியாவதற்கும் முழு முதல் காரணம் புதன்தான். பிரதி பிம்பங்களை உயிருள்ளவை போலக் காட்டும் ஓவியம், சிற்பம் போன்ற துணுக்கமான கலைகள் புதனுக்குச் சொந்தம். அதேபோல கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுப்பவர்களும் புதன் வலுப் பெற்ற மாணவர்கள்தான்.
புதனின் இரட்டை நிலையில் இன்னொன்றையும் குறிப்பிடலாம். ஒரு ஜாதகத்தில் புதன் நீச நிலை பெற்று பங்கமாகி, நீச பங்க நிலையில் மீனத்தில் இருந்தால் சில குறிப்பிட்ட நிலைகளில் அந்த நபருக்கு கல்வியில் தடை ஏற்பட்டு பள்ளியிறுதி வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
அதேநேரத்தில் பள்ளியில் தொடர்ந்து படிக்காத அவர் அனுபவ அறிவில் கல்லூரியில் படித்தவரை விட மேலான நிலையில் இருப்பார். சகல விஷயத்திலும் பாண்டித்யம் பெற்றிருப்பார். மேலும் கல்லூரியில் படிக்காத அவர் சரளமான ஆங்கில அறிவும், பிறமொழி அறிவும் பெற்றிருப்பார். இவையெல்லாம் புதனின் இரட்டை நிலைகளே.
மிகச்சிறந்த வியாபாரிகள் புதனால்தான் உருவாகிறார்கள். புதன் நாவன்மையை குறிப்பவர் என்பதால் ஒருவர் தனது வாடிக்கையாளருடன் திறமையாகப் பேசி தன் தொழிலை வளர்த்துக் கொள்வதற்கும் புதனே காரணம்.
இயற்கைச் சுப கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாகும் போது ஏற்படும் கேந்திராதிபத்திய தோஷம் புதனுக்கு அதிகமாக உண்டு. தனுசு, மீன லக்னங்களுக்கு அவர் கேந்திராதிபதியாகவும், பாதகாதிபதியாகவும் அமைவார் என்பதால் மேற்கண்ட இரண்டு லக்னங்களுக்கு மட்டும் ஏழாமிடத்தில் தனித்து எவருடைய சேர்க்கையும், பார்வையுமின்றி வலுப்பெறும் நிலையில் அவருடைய தசையில் மணவாழ்வில் கெடுதல்களையும், சிக்கல்களையும் வாழ்க்கை இழப்பினையும் செய்வார்.
தனுசு, மீன லக்னங்களுக்கு அவருடைய நான்கு, பத்தாம் கேந்திர நிலைகளில் தனித்திருந்தால் இதே பலன்தான். ஆனால் கேந்திராதிபத்திய தோஷத்தோடு பாதகாதிபத்தியமும் சேரும் நிலையில் மட்டுமே அவருடைய கெடுபலன்கள் அதிகமாக இருக்கும்.
கன்னி லக்னத்திற்கும் அவர் பத்தாமிட அதிபதியாவார். இங்கு அவர் ஆட்சி நிலை அடைவார் என்றாலும், தனித்திருந்தாலும் பெரிய கெடுதல்களை அவர் செய்வதில்லை. இதற்கு அவர் கன்னிக்கு லக்னாதிபதி என்பதும் ஒரு காரணம்.
ஆனால் மிதுனத்திற்கு அவர் நான்காம் வீட்டில் ஆட்சி, மூலத்திரிகோணம், உச்சம் என்ற மூன்று நிலைகளை அடைந்து தனித்திருப்பது நல்ல நிலை அல்ல. என்னுடைய அனுபவத்தில் எவருடனும் சேராமலும் இங்கு தனித்து உச்சமாகும் புதன் மிதுன லக்னத்திற்கு கேந்திராதிபத்திய தோஷத்தை கண்டிப்பாக செய்யவே செய்கிறார். இந்நிலையில் நான்காமிட ஆதிபத்தியங்களான வீடு, வாகனம், தாயார், கல்வி போன்றவைகளும், புதனின் காரகத்துவங்களும் குறைவுபடும்.
சூரியனை, புதன் தன்னுடைய முதன்மை நண்பராக கருதுவதால் மிதுனம், கன்னி லக்னக்காரர்களுக்கு சூரிய தசையில் கெடுதல்கள் நடப்பதில்லை. புதன் யோகம் அளிக்கும் நிலையில் இருந்து தசை நடத்தினால் ஒருவரை உயர்நிலைக்கு கொண்டு செல்வார். அதேபோல பத்தாமிடத்தோடு சுபத்துவம் பெற்று, அவர் சம்பந்தப்படும் நிலையில் சொல்லிக் கொடுக்கும் துறையில் இருக்க வைப்பார்.
மிகப்பெரிய கல்வி நிலையங்களை நடத்துபவர்களின் ஜாதகங்களில் வலுப் பெற்ற புதன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருப்பார். அதேபோல கல்வி நிலையங்களை நடத்துபவர்கள், அவற்றில் பணிபுரிபவர்களின் ஜாதகங்களில் சொல்லிக் கொடுக்கும் காரகத்துவத்தையுடைய இன்னொரு கிரகமான குருவின் இணைவோ, பார்வையோ, சம்பந்தமோ இருக்கும்.
உறவுகளில் தாய் மாமனைக் குறிக்கும் கிரகம் புதன். ஒருவருக்கு சுபத்துவம் அடைந்த புதன் ஏழாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில் அவர் மாமன் மகளையோ, அத்தை மகளையோ வாழ்க்கைத் துணையாகப் பெற்றிருப்பார்.
தூது செல்பவர்களையும், செய்திகளைக் கொண்டு சேர்ப்பவர்களையும் புதனே குறிப்பவர் என்பதால், ஜாதகத்தில் சுபத்துவத்துடன் அவர் பெற்றுள்ள வலிமையைப் பொறுத்து ஜாதகரை மிக உயரிய வெளிநாட்டுத் தூதர் பதவி முதற்கொண்டு, சைக்கிளில் கடிதத்தைக் கொண்டு செல்லும் தபால்காரர் மற்றும் கூரியர் பாய் வரை ஈடுபடுத்துவார்.
மறைவு ஸ்தானங்களில் புதன் கெடுதல் செய்வதில்லை.. ஏன்?
புதனுக்கு மட்டும் உள்ள ஒரு சூட்சும நிலையாக அவர் லக்னாதிபதியாகி பனிரெண்டாமிடத்தில் அமரும்போது வலிமை இழக்க மாட்டார்.
இதுபற்றி விரிவாகச் சொல்ல வேண்டுமானால் ஆறு, எட்டு, பனிரெண்டாம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த மறைவிடங்கள் எனப்படுவது ஷட்பலம் எனப்படும் ஒரு கிரகத்தின் ஆறு விதமான பலங்களில் முதன்மை பலமான ஸ்தான பலத்தைக் கணக்கிட உதவுகிறது.
ஒரு கிரகம் மறைவிடங்களில் இருக்கும்போது பலவீனம் அடையும். அதே நேரத்தில் அந்த மறைவு ஸ்தானத்தில் பகை அல்லது நீச நிலை அடையும் போது முற்றிலும் வலுவிழக்கும். இதுவே ஜோதிட முக்கிய விதி. இன்னொரு முக்கிய கருத்தாக ஸ்தான பலம் இழக்கும் ஒரு கிரகம், ஷட்பலங்களில் ஸ்தான பலத்திற்கு அடுத்த நிலையான திக்பலத்தைப் பெறும்போது வலுவாக இருப்பதாகத்தான் பொருள்.
அதாவது பத்தாமிடத்தில் சூரியனோ, செவ்வாயோ நீசமாக இருந்தாலும் வலுவாகவே இருப்பார்கள். ஏனெனில் பத்தாமிடத்தில் ஸ்தான பலத்திற்கு அடுத்த வலுவான அமைப்பான திக்பலத்தை இவர்கள் பெறுவதால் வலிமை இழக்க மாட்டார்கள்.
புதன் லக்னாதிபதியாகி பனிரெண்டில் மறையும்போது மிதுன லக்னத்தை எடுத்துக் கொண்டால், அவரது இரண்டாவது நண்பரான சுக்கிரனின் வீட்டில் நட்பு நிலையிலும், லக்னத்தில் அவர் திக்பலம் அடைவார் என்பதால் திக்பலத்திற்கு வெகு அருகிலும் இருப்பார்.
கன்னி லக்னத்திற்கு பனிரெண்டில் மறையும் போது அவரது முதன்மை நண்பரான சூரியனின் சிம்ம வீட்டில் அதிநட்பு நிலையிலும், திக்பலத்திற்கு அருகிலும் இருப்பார் என்பதால் இந்த இரு நிலைகளிலும் இருக்கும் புதன் வலுவாகவே செயல்படுவார்.
ஜயா விதி கள் எழுதுங்கள்
மிதுனம் கன்னி,லக்கனதிர்க்கு 6 8 இல் புதன் இருந்தால் என்ன ஐயா
மீனம் லக்கினம் 6ல் குரு+சூரியன்+புதன், 7ல்சனி படாத பாடு ஐயா
அய்யா,
மிதுன லக்னம் சூரியனும் புதனும் இணைந்து மீனத்தில் இருந்தால் பலன் எப்படி இருக்கும். குரு 11ல்